கேள்வி
இரண்டாம் அத்தியாயத்தில் பகரத் என்ற சொல்லுக்கு மற்ற தமிழாக்கங்களில் பசு மாடு என்று மொழி பெயர்த்திருக்க நீங்கள் மட்டும் காளை மாடு என்று பொருள் செய்துள்ளீர்கள். இது அகராதி அர்த்தத்துக்கு முரணாக உள்ளது என்று சிலர் கூறுகிறார்களே? இதற்கு உங்கள் பதில் என்ன?
கா.அ.ஃபழ்லுல் இலாஹி
பதில்:
بقرة என்ற சொல்லில் ة தா உள்ளதால் அதைப் பெண்பால் என்று கருதி இக்கேள்வியைக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இது பெண்பாலைக் குறிக்கும் ة தா அல்ல.
பகரத் என்ற சொல்லின் இறுதியில் உள்ள தா என்ற எழுத்து எதற்காக சேர்க்கப்பட்டுள்ளது என்பதை முக்தாருஸ் ஸிஹாஹ் பின்வருமாறு சொல்கிறது.
مختار الصحاح
و للفرق بين الواحد و الجمع نحو بقرة و تمرة و بقر و تمر
பகர் என்றால் பன்மை. அதை ஒருமையாக்குவதற்கு தா சேர்க்கப்படும். அதாவது பகர் என்றால் மாடுகள், பகரத் என்றால் ஒரு மாடு என்று பொருள். தம்ரத் என்றால் ஒரு பேரீச்சம்பழம். தம்ரு என்றால் பேரீச்சம் பழங்கள்
ஆதாரம் : முக்தாருஸ்ஸிஹாஹ்
அதாவது பகரத் என்பதில் உள்ள தா என்பது ஒருமையின் அடையாளமாகும். பெண்பாலின் அடையாளம் அல்ல.
பகர் என்பதும் பகரத் என்பதும் பசு மாடு, காளை மாடு இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும்.
இதற்கு குர்ஆனில் நேரடியான ஆதாரமும் உள்ளது.
وَمِنَ الْإِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الْأُنْثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الْأُنْثَيَيْنِ أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ وَصَّاكُمُ اللَّهُ بِهَذَا فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا لِيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (144)6
144. “ஒட்டகத்தில் இரண்டு, (பகரில்) மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?” என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 6:144
இவ்வசனத்தில் பகர் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. பகரில் ஆண் பிராணியை அல்லாஹ் ஹராமாக்கினானா? பகரில் பெண் பிராணியை அல்லாஹ் ஹராமாக்கினானா என்று அல்லாஹ் கூறுகிறான்.
அதாவது பகர் என்பது காளை மாடு, பசு மாடு ஆகிய இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும் என்பதால் பகரில் ஆண்பிராணியா பகரில் பெண் பிராணியா என்று அல்லாஹ் கேட்கிறான். பகர் என்பதன் ஒருமைச் சொல்லான பகரத் என்பதும் இரண்டையும் குறிக்கும்.
எனவே அகராதி அடிப்படையில் பகரத் என்ற சொல்லுக்கு மாடு என்று பொதுவாக மொழி பெயர்க்க வேண்டும்.
பகரத் என்பது பசுமாட்டைத் தான் குறிக்கும் என்று யார் சொல்கிறார்களோ அவர்கள் 6:144 வசனத்துடன் மோதுகிறார்கள்.
பசுமாடு என்றோ காளைமாடு என்றோ மொழிபெயர்ப்பதாக இருந்தால் தக்க சான்று இருக்க வேண்டும்.
அப்படியானால் இரண்டுக்கும் பொதுவான சொல்லுக்கு காளை மாடு என்று நாம் ஏன் பொருள் செய்தோம்? என்ற கேள்விக்கு வருவோம்.
காளை மாடு, பசுமாடு ஆகிய இரண்டையும் பொதுவாக இச்சொல் குறிக்கும் என்றாலும் பயன்படுத்தப்படும் இடத்துக்கு ஏற்ப பொருத்தமான பொருளையே கொள்ள வேண்டும்.
பால் வியாபாரம் செய்ய மாடு வாங்கினேன் என்று சொல்லும் போது காளை மாட்டை வாங்கினேன் என்று பொருள் கொள்ள முடியாது.
உழுவதற்காக மாடு வாங்கினேன் என்று சொன்னால் பசு மாடு வாங்கினேன் என்று பொருள் கொள்ள முடியாது.
அது போல் இங்கே அந்த மாட்டைப் பற்றி மூஸா நபியின் சமுதாயம் கூடுதல் விபரம் கேட்ட போது
“அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது” என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார்.
திருக்குர்ஆன் 2:71
என்று அல்லாஹ் கூறுகிறான்.
உழவு வேலைக்கும், நீரிறைக்கவும் காளை மாடுகள் தான் பயன்படுத்தப்படும்.
மேற்கண்ட வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் வகையிலான மாடாக இருந்தும் அந்த வேலைகளுக்குப் பழக்கப்படுத்தப்படாத மாடு என்பது தான் இதன் கருத்து.
பசுமாடாக அந்த மாடு இருந்தால் பசுமாடு என்று அல்லாஹ் சொன்னாலே இக்கருத்து வந்து விடும். ஆனால் அப்படிச் சொல்லவில்லை
அறுக்கச் சொன்னது பசுமாடு அல்ல என்பதால் தான் மேற்கண்ட வேலைகளுக்குப் பழக்கப்படுத்தப்படாமல் செல்லமாக வளர்க்கப்படும் மாடு என்று அல்லாஹ் கூறுகிறான்,
எனவே இந்த இடத்தில் காளை மாடு என்பது தான் பொருத்தமானது என்பதால் நாம் அவ்வாறு பொருள் செய்துள்ளோம்.
பொதுவான சொல்லுக்கு பசுமாடு என்று யார் பொருள் செய்தார்களோ அவர்கள் அதற்கான பொருத்தமான காரணம் கூற வேண்டும்.