மறைவான விஷயங்களை இறைநேசர்களுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலம் அறிவித்து கொடுப்பானா?
மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. எனினும் நபிமார்களுக்கு வஹீயின் மூலமாகவும், இறை நேசர்களுக்கு (இல்ஹாம் எனும்) உதிப்பின் மூலமாகவும் பொதுமக்களில் சிலருக்கு சில அடையாளங்கள் மூலமாகவும் மறைவான விஷயங்களை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கின்றான் என்று சிலர் கூறுகின்றார்கள். இது மார்க்க அடிப்படையில் சாத்தியமானது தானா?
ஈ. இஸ்மாயில் ஷெரீஃப், சென்னை.
மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் தெளிவாகத் தனது திருமறையில் அறிவித்து விட்டான்.
வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 27:65
6:59, 10:20, 31:34, 34:3 ஆகிய வசனங்களும் இதே கருத்தில் அமைந்துள்ளன. இந்த வசனங்களின் அடிப்படையில் நபிமார்கள், மலக்குகள், ஜின்கள், மனிதர்கள் உள்ளிட்ட எவரும் மறைவானவற்றை அறிய முடியாது என்பது தெளிவாகிறது.
நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.
திருக்குர்ஆன் 3:179
அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.
திருக்குர்ஆன் 72:26-28
இறைத்தூதர்களில் தான் நாடியோருக்கு அல்லாஹ் மறைவானவற்றை அறிவித்துக் கொடுப்பதாக இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன. இதை வைத்து நபிமார்களுக்கு மறைவான விஷயங்கள் அனைத்தும் தெரியும் என்று சிலர் வாதிடுகின்றனர். இது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான வாதமாகும். நபிமார்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனில் உள்ளன. இறுதித் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மறைவான ஞானம் இல்லை என்று திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது.
(பார்க்க திருக்குர்ஆன் 5:109, 6:50, 7:188, 11:31, 11:49)
அப்படியானால் மறைவானவற்றை இறைத்தூதர்களில் தான் நாடியவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான் என்று மேற்கண்ட இரண்டு வசனங்களும் கூறுவதன் பொருள் என்ன?
3:179 வசனத்தில் மறைவானவற்றைத் தனது தூதருக்கு இறைவன் அறிவித்துக் கொடுப்பதாகக் கூறுவது பொதுவானதல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நயவஞ்சகர்கள் முஸ்லிம்களைப் போலவே வேடமிட்டு முஸ்லிம்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர். இத்தகைய நயவஞ்சகர்களை நபிகள் நாயகத்திற்கு அறிவித்து கொடுப்பதையே இவ்வசனம் குறிப்பிடுகிறது.
இவ்வசனத்தின் துவக்கத்தில் முஸ்லிம்களையும், நயவஞ்சகர்களையும் இரண்டறக் கலந்திருக்குமாறு இறைவன் விட்டு வைக்க மாட்டான் என கூறிவிட்டுத் தான்,மறைவானதை தான் தேர்ந்தெடுத்த தூதர்களுக்கு அறிவிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
அது போல் 72:26,27 வசனங்களில் அனைத்து மறைவான விஷயங்களையும் இறைத்தூதர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான் என்று கூறப்படவில்லை. மாறாக நம்பிக்கை கொள்ள வேண்டிய மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற மறைவானவைகளைப் பற்றி இறைத்தூதர்களுக்கு அறிவிப்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. இதைப் புரிந்து கொள்வற்கு இவ்வசனங்களிலேயே போதுமான சான்றுகள் உள்ளன.
தமக்கு அறிவிக்கப்படுகிற செய்திகளைத் தூதர்கள் மக்களுக்கு அறிவிக்கிறார்களா? என்று கண்காணிப்பதற்காக, கண்காணிக்கும் வானவர்களை தொடர்ந்து அனுப்புவதாக இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். எனவே நம்பிக்கை கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களை இறைத்தூதருக்கு அறிவித்துக் கொடுத்து அதை அவர் மக்களுக்கு அறிவிப்பார் என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
எனவே நபிமார்களுக்கு மறைவான செய்திகளை அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பான் என்பது பொதுவானதல்ல என்பதை இதிலிருந்து அறியலாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் நடைபெற்ற எத்தனையோ சம்பவங்கள் அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளதை ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.
மறைவான விஷயங்களை நபிமார்களால் கூட அறிய முடியாது எனும் போது, இறைநேசர்கள் “இல்ஹாம்’ என்ற உதிப்பின் மூலம் அறிவார்கள் என்பது மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான கருத்து என்பதை நாம் விளக்கத் தேவையில்லை.
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.
திருக்குர்ஆன் 91:7,8
மனிதனின் உள்ளத்திற்கு நன்மை, தீமையை இறைவன் அறிவித்துக் கொடுத்தான் என்று கூறுவதற்கு “இல்ஹாம்’ என்ற வார்த்தையைத் தான் இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்துகின்றான். எனவே இந்த “இல்ஹாம்’ என்பது இறைநேசர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதல்ல! எல்லா மனிதனுக்கும் பொதுவான ஒன்று தான் என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளுணர்வுகள் ஏற்படுவதுண்டு. ஏதோ சோதனை ஏற்படப்போகின்றது என்று மனதில் சில எண்ணங்கள் தோன்றும். பல சமயங்களில் அது பொய்யாகிப் போய் விடும். சில சமயங்களில் அதற்கேற்ப ஏதேனும் சோதனை ஏற்படுவதும் உண்டு. கனவுகள் தோன்றுவதும் இதே வகையைச் சேர்ந்தது தான். இது அவரவருக்கு உள்ளத்தில் ஏற்படுகின்ற உள்ளுணர்வுகள்! இவற்றை வைத்துக் கொண்டு மறைவான விஷயம் எனக்குத் தெரியும் என்று யாரும் வாதிட முடியாது.
அது போல் ஒருவருக்கு ஏற்படும் உள்ளுணர்வையோ, அல்லது கனவையோ அடுத்தவரிடத்தில் செயல்படுத்தவும் முடியாது. உதாரணமாக, உங்களுக்கு ஒருவர் பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று நீங்கள் கனவில் கண்டதன் அடிப்படையில் அவரிடம் போய் பணம் கேட்க முடியாது.
உனது வாழ்க்கையில் இது நடக்கும் என்று எனக்கு “இல்ஹாம்’ மூலம் தெரிந்தது என்று கதைகளை அவிழ்த்து விட்டு முரீது வியாபாரிகள் ஏமாற்று வேலைகளைச் செய்து வருகின்றார்கள். இது அப்பட்டமான பொய் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
3469 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّهُ قَدْ كَانَ فِيمَا مَضَى قَبْلَكُمْ مِنَ الأُمَمِ مُحَدَّثُونَ، وَإِنَّهُ إِنْ كَانَ فِي أُمَّتِي هَذِهِ مِنْهُمْ فَإِنَّهُ عُمَرُ بْنُ الخَطَّابِ “
உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில் “முன் கூட்டியே (சில செய்திகள்) அறிவிக்கப்பட்டவர்கள்’ இருந்திருக்கின்றார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 3469
“முன் கூட்டியே (சில செய்திகள்) அறிவிக்கப்பட்டவர்கள்’ என்று யாராவது எனது சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் (ரலி) தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவது இந்த உம்மத்தில் அப்படிப்பட்ட யாரும் கிடையாது என்பதையே காட்டுகின்றது.