Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 13 அர்ரஃது

மொத்த வசனங்கள் : 43

அர்ரஃது – இடி

இந்த அத்தியாயத்தின் 13வது வசனத்தில் இடியும் இறைவனைத் துதிக்கிறது என்ற சொற்றொடர் இடம் பெறுவதால் இந்த அத்தியாயம் இடி என பெயர் பெற்றது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

13:1 அலிஃப், லாம், மீம், ரா.2 இவை இவ்வேதத்தின் வசனங்கள். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்ட உண்மை. எனினும் மனிதர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
الٓمٓر ۚ تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ ۗ وَٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ٱلْحَقُّ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ

13:2 நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி240 வானங்களை507 அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான்.511 சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.241 காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை488 நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.
ٱللَّهُ ٱلَّذِى رَفَعَ ٱلسَّمَـٰوَٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِى لِأَجَلٍ مُّسَمًّى ۚ يُدَبِّرُ ٱلْأَمْرَ يُفَصِّلُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّكُم بِلِقَآءِ رَبِّكُمْ تُوقِنُونَ

13:3 அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனி வகைகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான்.242 இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
وَهُوَ ٱلَّذِى مَدَّ ٱلْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَٰسِىَ وَأَنْهَـٰرًا ۖ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ ٱثْنَيْنِ ۖ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

13:4 பூமியில் அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகளுடையதும் கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரே தண்ணீர் தான் அவற்றுக்குப் புகட்டப்படுகின்றது. (இவ்வாறு இருந்தும்) சுவையில் ஒன்றை விட மற்றொன்றைச் சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
وَفِى ٱلْأَرْضِ قِطَعٌ مُّتَجَـٰوِرَٰتٌ وَجَنَّـٰتٌ مِّنْ أَعْنَـٰبٍ وَزَرْعٌ وَنَخِيلٌ صِنْوَانٌ وَغَيْرُ صِنْوَانٍ يُسْقَىٰ بِمَآءٍ وَٰحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَىٰ بَعْضٍ فِى ٱلْأُكُلِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ

13:5 நீர் ஆச்சரியப்பட்டால் “நாங்கள் மண்ணாக ஆன பின்பும் புதுப் படைப்பாக ஆவோமா?’ என்று அவர்கள் கூறுவது (இதைவிட) ஆச்சரியமாகவுள்ளது. அவர்கள் தான் தமது இறைவனை ஏற்க மறுத்தவர்கள். அவர்களின் கழுத்துக்களில் தான் விலங்குகள் உள்ளன. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
۞ وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَءِذَا كُنَّا تُرَٰبًا أَءِنَّا لَفِى خَلْقٍ جَدِيدٍ ۗ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ وَأُو۟لَـٰٓئِكَ ٱلْأَغْلَـٰلُ فِىٓ أَعْنَاقِهِمْ ۖ وَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

13:6 நன்மைக்கு முன்னதாக தீமையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அவர்களுக்கு முன்னர் முன்னுதாரணங்கள் சென்றுள்ளன. அவர்கள் அநீதி இழைத்த போதும், உமது இறைவன் மக்களை மன்னிப்பவன்; மேலும் உமது இறைவன் கடுமையாகத் தண்டிப்பவன்.
وَيَسْتَعْجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبْلَ ٱلْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِن قَبْلِهِمُ ٱلْمَثُلَـٰتُ ۗ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلَىٰ ظُلْمِهِمْ ۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلْعِقَابِ

13:7 “இவரது இறைவனிடமிருந்து இவருக்கு தக்க சான்று அருளப்பட வேண்டாமா?” என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். நீர் எச்சரிப்பவரே. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி உண்டு.
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦٓ ۗ إِنَّمَآ أَنتَ مُنذِرٌ ۖ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ

13:8 ஒவ்வொரு பெண்ணும் (கருவறையில்) சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது.144
ٱللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنثَىٰ وَمَا تَغِيضُ ٱلْأَرْحَامُ وَمَا تَزْدَادُ ۖ وَكُلُّ شَىْءٍ عِندَهُۥ بِمِقْدَارٍ

13:9 (அவன்) மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; பெரியவன்; உயர்ந்தவன்.
عَـٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ ٱلْكَبِيرُ ٱلْمُتَعَالِ

13:10 உங்களில் இரகசியமாகப் பேசுபவரும், உரத்துப் பேசுபவரும், இரவில் மறைந்திருப்பவரும், பகலில் நடப்பவரும் (அவனைப் பொறுத்தவரை) சமமானோரே.
سَوَآءٌ مِّنكُم مَّنْ أَسَرَّ ٱلْقَوْلَ وَمَن جَهَرَ بِهِۦ وَمَنْ هُوَ مُسْتَخْفٍۭ بِٱلَّيْلِ وَسَارِبٌۢ بِٱلنَّهَارِ

13:11 மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும்போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.
لَهُۥ مُعَقِّبَـٰتٌ مِّنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ يَحْفَظُونَهُۥ مِنْ أَمْرِ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا۟ مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَآ أَرَادَ ٱللَّهُ بِقَوْمٍ سُوٓءًا فَلَا مَرَدَّ لَهُۥ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَالٍ

13:12 அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதாக மின்னலை அவனே உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான்.
هُوَ ٱلَّذِى يُرِيكُمُ ٱلْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنشِئُ ٱلسَّحَابَ ٱلثِّقَالَ

13:13 இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும்507 (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமைமிக்கவன்.
وَيُسَبِّحُ ٱلرَّعْدُ بِحَمْدِهِۦ وَٱلْمَلَـٰٓئِكَةُ مِنْ خِيفَتِهِۦ وَيُرْسِلُ ٱلصَّوَٰعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَآءُ وَهُمْ يُجَـٰدِلُونَ فِى ٱللَّهِ وَهُوَ شَدِيدُ ٱلْمِحَالِ

13:14 உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனையன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏகஇறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.
لَهُۥ دَعْوَةُ ٱلْحَقِّ ۖ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَجِيبُونَ لَهُم بِشَىْءٍ إِلَّا كَبَـٰسِطِ كَفَّيْهِ إِلَى ٱلْمَآءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَـٰلِغِهِۦ ۚ وَمَا دُعَآءُ ٱلْكَـٰفِرِينَ إِلَّا فِى ضَلَـٰلٍ

13:15 வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன.96 அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.396
وَلِلَّهِ يَسْجُدُ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَـٰلُهُم بِٱلْغُدُوِّ وَٱلْـَٔاصَالِ

13:16 “வானங்களுக்கும்,507 பூமிக்கும் இறைவன் யார்?” என்று (முஹம்மதே!) கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! “அவனையன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்” என்று கூறுவீராக! “குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? இருள்களும்,303 ஒளியும் சமமாகுமா?” என்று கேட்பீராக! “அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக படைத்தது யார்? என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்” என்று கூறுவீராக!
قُلْ مَن رَّبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ قُلِ ٱللَّهُ ۚ قُلْ أَفَٱتَّخَذْتُم مِّن دُونِهِۦٓ أَوْلِيَآءَ لَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ نَفْعًا وَلَا ضَرًّا ۚ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِى ٱلظُّلُمَـٰتُ وَٱلنُّورُ ۗ أَمْ جَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُوا۟ كَخَلْقِهِۦ فَتَشَـٰبَهَ ٱلْخَلْقُ عَلَيْهِمْ ۚ قُلِ ٱللَّهُ خَـٰلِقُ كُلِّ شَىْءٍ وَهُوَ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّـٰرُ

13:17 வானத்திலிருந்து507 அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தருவது நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான்.
أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَسَالَتْ أَوْدِيَةٌۢ بِقَدَرِهَا فَٱحْتَمَلَ ٱلسَّيْلُ زَبَدًا رَّابِيًا ۚ وَمِمَّا يُوقِدُونَ عَلَيْهِ فِى ٱلنَّارِ ٱبْتِغَآءَ حِلْيَةٍ أَوْ مَتَـٰعٍ زَبَدٌ مِّثْلُهُۥ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْحَقَّ وَٱلْبَـٰطِلَ ۚ فَأَمَّا ٱلزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءً ۖ وَأَمَّا مَا يَنفَعُ ٱلنَّاسَ فَيَمْكُثُ فِى ٱلْأَرْضِ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ

13:18 தமது இறைவனின் அழைப்பை ஏற்றோருக்கு நற்கூலி உண்டு. அவனது அழைப்பை ஏற்காதோர் பூமியில் உள்ள அனைத்தும், அது போன்ற இன்னொரு மடங்கும் தமக்கு உரியதாக இருந்தாலும் அதை ஈடாகக் கொடுத்து விடுவார்கள். அவர்களுக்குக் கடுமையான விசாரணை உண்டு. அவர்களின் தங்குமிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம்.
لِلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِرَبِّهِمُ ٱلْحُسْنَىٰ ۚ وَٱلَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا۟ لَهُۥ لَوْ أَنَّ لَهُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُۥ مَعَهُۥ لَٱفْتَدَوْا۟ بِهِۦٓ ۚ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ سُوٓءُ ٱلْحِسَابِ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمِهَادُ

13:19 உமது இறைவனிடமிருந்து அருளப்பட்டது உண்மையே என்று அறிந்திருப்பவர், குருடரைப் போல் ஆவாரா? அறிவுடையோரே படிப்பினை பெறுவார்கள்.
۞ أَفَمَن يَعْلَمُ أَنَّمَآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ٱلْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَىٰٓ ۚ إِنَّمَا يَتَذَكَّرُ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ

13:20 அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள். உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள்.
ٱلَّذِينَ يُوفُونَ بِعَهْدِ ٱللَّهِ وَلَا يَنقُضُونَ ٱلْمِيثَـٰقَ

13:21 இணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளை இட்டவற்றை (உறவினரை) இணைத்துக் கொள்வார்கள்; தமது இறைவனுக்கு அஞ்சுவார்கள்; கடுமையான விசாரணைக்கும் அஞ்சுவார்கள்.
وَٱلَّذِينَ يَصِلُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوٓءَ ٱلْحِسَابِ

13:22 அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.
وَٱلَّذِينَ صَبَرُوا۟ ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقْنَـٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِٱلْحَسَنَةِ ٱلسَّيِّئَةَ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ عُقْبَى ٱلدَّارِ

13:23 அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள்.
جَنَّـٰتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوَٰجِهِمْ وَذُرِّيَّـٰتِهِمْ ۖ وَٱلْمَلَـٰٓئِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ

13:24 நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம்159 உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).
سَلَـٰمٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى ٱلدَّارِ

13:25 அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்த பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப்போருக்கும், பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு.
وَٱلَّذِينَ يَنقُضُونَ عَهْدَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مِيثَـٰقِهِۦ وَيَقْطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ ۙ أُو۟لَـٰٓئِكَ لَهُمُ ٱللَّعْنَةُ وَلَهُمْ سُوٓءُ ٱلدَّارِ

13:26 தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். அளவோடும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை அற்பசுகம் தவிர வேறில்லை.
ٱللَّهُ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ وَفَرِحُوا۟ بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا فِى ٱلْـَٔاخِرَةِ إِلَّا مَتَـٰعٌ

13:27 “இவருக்கு, இவரது இறைவனிடமிருந்து தக்க சான்று அருளப்பட வேண்டாமா?” என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். “தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். திருந்தியோருக்கு, தன் பக்கம் வழிகாட்டுகிறான்” என்று கூறுவீராக!
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦ ۗ قُلْ إِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِىٓ إِلَيْهِ مَنْ أَنَابَ

13:28 நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.477
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ ٱللَّهِ ۗ أَلَا بِذِكْرِ ٱللَّهِ تَطْمَئِنُّ ٱلْقُلُوبُ

13:29 நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு.
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَـَٔابٍ

13:30 (முஹம்மதே!) உமக்கு நாம் தூதுச்செய்தி அறிவித்ததை அவர்களுக்கு நீர் கூறுவதற்காக இவ்வாறே உம்மை ஒரு சமுதாயத்திற்கு அனுப்பியுள்ளோம். இதற்கு முன் பல சமுதாயங்கள் சென்று விட்டன. அவர்கள் அளவற்ற அருளாளனை ஏற்க மறுக்கின்றனர். “அவனே எனது இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனை நோக்கியே என் மீளுதலும் உள்ளது” என்று கூறுவீராக!
كَذَٰلِكَ أَرْسَلْنَـٰكَ فِىٓ أُمَّةٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهَآ أُمَمٌ لِّتَتْلُوَا۟ عَلَيْهِمُ ٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ وَهُمْ يَكْفُرُونَ بِٱلرَّحْمَـٰنِ ۚ قُلْ هُوَ رَبِّى لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ مَتَابِ

13:31 குர்ஆன் மூலம் மலைகள் பெயர்க்கப்பட்டாலும், அல்லது நிலப்பரப்பு துண்டு துண்டாக்கப்பட்டாலும், அல்லது அதன் மூலம் இறந்தவர்களுடன் பேசப்பட்டாலும் (அவர்கள் நம்ப மாட்டார்கள்). அதிகாரம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை நம்பிக்கை கொண்டோர் அறியவில்லையா? (ஏகஇறைவனை) மறுப்போரின் செயல் காரணமாக அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்களைத் திடுக்கிடும் நிகழ்ச்சி பிடித்துக் கொண்டே இருக்கும். அல்லது அவர்களின் ஊருக்கு அருகில் இறங்கும். அல்லாஹ் வாக்கு மீறமாட்டான்.
وَلَوْ أَنَّ قُرْءَانًا سُيِّرَتْ بِهِ ٱلْجِبَالُ أَوْ قُطِّعَتْ بِهِ ٱلْأَرْضُ أَوْ كُلِّمَ بِهِ ٱلْمَوْتَىٰ ۗ بَل لِّلَّهِ ٱلْأَمْرُ جَمِيعًا ۗ أَفَلَمْ يَا۟يْـَٔسِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن لَّوْ يَشَآءُ ٱللَّهُ لَهَدَى ٱلنَّاسَ جَمِيعًا ۗ وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُوا۟ تُصِيبُهُم بِمَا صَنَعُوا۟ قَارِعَةٌ أَوْ تَحُلُّ قَرِيبًا مِّن دَارِهِمْ حَتَّىٰ يَأْتِىَ وَعْدُ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ

13:32 “(முஹம்மதே!) உமக்கு முன் தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். அப்போது (என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளித்தேன். பின்னர் அவர்களைப் பிடித்தேன். எனது வேதனை எவ்வாறு இருந்தது?” (என்று கவனிப்பீராக)
وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَأَمْلَيْتُ لِلَّذِينَ كَفَرُوا۟ ثُمَّ أَخَذْتُهُمْ ۖ فَكَيْفَ كَانَ عِقَابِ

13:33 ஒவ்வொருவரும் செய்பவற்றை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்க, அவர்கள் அவனுக்கு இணை கற்பிக்கிறார்களா? “அவர்களைப் பற்றி விளக்குங்கள்!” என்று கூறுவீராக! பூமியில் அவனுக்குத் தெரியாததை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அல்லது வெறும் வார்த்தைகளா? (ஏக இறைவனை) மறுப்போரின் சூழ்ச்சி அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் (நல்) வழியிலிருந்து தடுக்கப்பட்டு விட்டனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழிகாட்டுபவர் இல்லை.
أَفَمَنْ هُوَ قَآئِمٌ عَلَىٰ كُلِّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ ۗ وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ قُلْ سَمُّوهُمْ ۚ أَمْ تُنَبِّـُٔونَهُۥ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلْأَرْضِ أَم بِظَـٰهِرٍ مِّنَ ٱلْقَوْلِ ۗ بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ مَكْرُهُمْ وَصُدُّوا۟ عَنِ ٱلسَّبِيلِ ۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ

13:34 அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனை உண்டு. மறுமையின் வேதனை கடுமையானது. அவர்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவர் எவனும் இல்லை.
لَّهُمْ عَذَابٌ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَشَقُّ ۖ وَمَا لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٍ

13:35 (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதன் உணவும், நிழலும் நிரந்தரமானதாக இருக்கும். இதுவே (இறைவனை) அஞ்சுவோர்க்கான முடிவாகும். (ஏகஇறைவனை) மறுப்போரின் முடிவு நரகமே.
۞ مَّثَلُ ٱلْجَنَّةِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۖ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ أُكُلُهَا دَآئِمٌ وَظِلُّهَا ۚ تِلْكَ عُقْبَى ٱلَّذِينَ ٱتَّقَوا۟ ۖ وَّعُقْبَى ٱلْكَـٰفِرِينَ ٱلنَّارُ

13:36 (முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் உமக்கு அருளப்பட்டதில் மகிழ்ச்சியடைகின்றனர். அதில் சிலவற்றை மறுப்போரும் அக்கூட்டங்களில் உள்ளனர். “அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். என் மீளுதலும் அவனிடமே உள்ளது” என்று கூறுவீராக!
وَٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَفْرَحُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ ۖ وَمِنَ ٱلْأَحْزَابِ مَن يُنكِرُ بَعْضَهُۥ ۚ قُلْ إِنَّمَآ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ وَلَآ أُشْرِكَ بِهِۦٓ ۚ إِلَيْهِ أَدْعُوا۟ وَإِلَيْهِ مَـَٔابِ

13:37 இவ்வாறே இதனைச் சட்டமாக அரபு489 மொழியில் அருளியுள்ளோம்.227 உம்மிடம் இந்த அறிவு வந்த பின் அவர்களின் மனோஇச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து பொறுப்பாளரோ, காப்பாற்றுபவரோ உமக்கு இல்லை.
وَكَذَٰلِكَ أَنزَلْنَـٰهُ حُكْمًا عَرَبِيًّا ۚ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم بَعْدَ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِىٍّ وَلَا وَاقٍ

13:38 உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.269 ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَٰجًا وَذُرِّيَّةً ۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِىَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۗ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ

13:39 (அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான்.30 அவனிடமே தாய் ஏடு157 உள்ளது.
يَمْحُوا۟ ٱللَّهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ۖ وَعِندَهُۥٓ أُمُّ ٱلْكِتَـٰبِ

13:40 (முஹம்மதே!) அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ எடுத்துச் சொல்வதே உமது கடமை.81 விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.
وَإِن مَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَـٰغُ وَعَلَيْنَا ٱلْحِسَابُ

13:41 பூமியை, அதன் ஓரங்களில் குறைப்பதற்காக243 நாம் பூமிக்கு வருவதை61 அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்தி வைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன்.
أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا ۚ وَٱللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِۦ ۚ وَهُوَ سَرِيعُ ٱلْحِسَابِ

13:42 இவர்களுக்கு முன் சென்றோரும் சூழ்ச்சி செய்தனர். சூழ்ச்சிகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன.6 ஒவ்வொருவரும் செய்வதை அவன் அறிவான். யாருக்கு அவ்வுலகின் (நல்ல) முடிவு என்பதை (ஏகஇறைவனை) மறுப்போர் அறிந்து கொள்வார்கள்.
وَقَدْ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَلِلَّهِ ٱلْمَكْرُ جَمِيعًا ۖ يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ ۗ وَسَيَعْلَمُ ٱلْكُفَّـٰرُ لِمَنْ عُقْبَى ٱلدَّارِ

13:43 (முஹம்மதே!) “நீர் (இறைவனின்) தூதர் அல்லர்” என்று மறுப்போர் கூறுகின்றனர். “எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். வேதத்தின் அறிவு உள்ளோரும் போதுமானவர்கள்” என்று கூறுவீராக!
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَسْتَ مُرْسَلًا ۚ قُلْ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۢا بَيْنِى وَبَيْنَكُمْ وَمَنْ عِندَهُۥ عِلْمُ ٱلْكِتَـٰبِ