ஹிஜ்ரா கமிட்டியின் கிறுக்கு வாதங்கள்!

அமாவாசையை முதல் பிறையாகக் கருதும் ஹிஜ்ரா கமிட்டி எனும் கூட்டத்தின் வாதங்களுக்கு தக்க ஆதாரம் கேட்டு நாம் கேள்வி எழுப்பி இருந்தோம். இதற்கு மறுப்பாக ஒரு துண்டுப் பிரசுரத்தை அவர்கள் வெளியிட்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அக்கேள்விகளும் அதற்கு நாம் அளிக்கும் பதில்களும் இதோ!

வாதம் ஒன்று

சுன்னத் (?) ஜமாஅத் போன்ற மற்ற மற்ற இயக்கங்களை உங்கள் மேடைகளில் ஏற்ற மாட்டீர்கள், அவர்களுடன் சேர்ந்து சமுதாயப் பிரச்சனைகளுக்காக போராட மாட்டீர்கள், ஆனால் அவர்கள் பெருநாள் கொண்டாடும் தினத்தில் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவீர்களோ? இது முரண்பாடில்லையா?

அமாவாசைப் பிறையை நியாயப்படுத்த இவர்கள் எடுத்து வைக்கும் முதல் கேள்வி இதுதான்.

நமது பதில்

சுன்னத் ஜமாஅத்தினர் சில காரியங்களைச் சரியாகச் செய்தாலும் அதை எதிர்த்து தம்மை விளம்பரமாக்கிக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதுவது இக்கேள்வியில் இருந்து தெரிகிறது. ஆதாரங்கள் அடிப்படையில் இவர்கள் அணுகுவதில்லை என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.

சுன்னத் (?) ஜமாஅத்தினர் ஒரு தினத்தில் ஒன்றைச் செய்தால் அதே தினத்தில் நாமும் அதையே செய்வது இவர்கள் பார்வையில் ஒரே மேடையில் இணைந்து போராட்டங்களைச் சந்திப்பது போன்றதாகத் தெரிகிறது.

சுன்னத் (?) ஜமாஅத்தினர் ஐந்து வேளை தொழுவதால் நாம் ஆறு வேளை தொழ வேண்டும் என்று சொல்வது போல் இது அமைந்துள்ளது.

இந்த அளவுக்கு மடமையால் நிரப்பப்பட்ட இவர்களின் ஆய்வு எந்த இலட்சணத்தில் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பிறை பார்த்த அடிப்படையில் நாம் தலைப்பிறையை முடிவு செய்கிறோம். சில மாதங்கள் சுன்னத் ஜமாஅத்தினரின் தலைப்பிறையும், நமது தலைப்பிறையும் ஒத்துப் போய் உள்ளன. சில மாதங்கள் அவர்களுக்கு மாற்றமாகவும் அமைந்துள்ளன. அவர்களை அணுசரித்து நாம் பிறையைத் தீர்மானிப்பதில்லை. இந்த உண்மை பரவலாக அறியப்பட்டு இருந்தும் உண்மைக்கு மாற்றமாக இக்கேள்வியை எழுப்பியுள்ளனர்.

வாதம் இரண்டு

சுன்னத் (?) ஜமாஅத்தினரும், நாம் நடத்தும் தொழுகையில் கலந்து கொண்டால் அதிகக் கூட்டம் கூட்டலாம் என்பதற்காகவே சுன்னத் ஜமாஅத் அறிவிக்கும் நாளில் பெருநாளைக் கொண்டாடுகிறீர்கள்

என்றும் அப்பிரசுரத்தில் கேள்வி கேட்டுள்ளனர்.

நமது பதில்

இதுவும் மடமையான வாதமே! உண்மைக்கு மாறானதும் கூட.

பல தடவை சுன்னத் ஜமாஅத் அறிவிப்புக்கு மாற்றமாக நாம் பெருநாள், மற்றும் நோன்பு அறிவிப்பு செய்துள்ளதை அறிந்திருந்தும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் குல்பர்காவிலும், மாலேகானிலும் பிறை பார்த்ததாக டவுன் காஜி சொன்ன போது தமிழகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து அதாவது தத்தமது பகுதியிலிருந்து பிறை பார்க்கப்பட்டால் தான் அதை ஏற்றுக் கொள்வோம் என்று கூறி உறுதியாக நின்று தவ்ஹீத் சகோதரர்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடினார்கள்.

இந்த ஆண்டு (2016 நோன்புப் பெருநாளில்) டவுன் காஜி அறிவிப்புக்கு மாற்றமாகத் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் நோன்பு பற்றிய நிலைபாடு இருந்தது.

வாதம் மூன்று

ருஃயத் என்றால் என்ன?

பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸில் ருஃயத் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைக்கு பார்த்தல் என்கிற அர்த்தம் கொடுக்கக் கூடாது என்றும், சிந்தித்தல் என்கிற அர்த்தம் தான் கொடுக்க வேண்டும் எனவும், குர்ஆனிலும் பல இடங்களில் அந்த அர்த்தத்தில் தான் ருஃயத் என்கிற வார்த்தை பொருள் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறி, தமிழாக்கத்திலும், மொழியறிவிலும் நாம் மிகப்பெரிய தவறைச் செய்துள்ளதாக அப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

நமது பதில்

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்கிற ஹதீஸ் அமாவாசைப் பெருநாளுக்கு மரண அடி கொடுப்பதால் ஹதீஸின் அர்த்தத்தையே மாற்றி வாதிடுகின்றனர்.

ருஃயத் என்பதற்கு பார்த்தல் என்கிற அர்த்தம் மட்டும் கிடையாது; அறிவால் அறிதல், புரிந்து கொள்ளுதல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன; அகராதிப்படியும் உள்ளன; குர்ஆனிலேயே கூட ஏராளமான வசனங்களில் அறிதல் என்கிற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பிறை பார்த்து முடிவு செய்யுங்கள் என்றால் கண்ணால் தான் பார்க்க வேண்டும் என்ற அர்த்தமில்லை, அறிவால் சிந்தித்து புரிந்து கொள்வதைத் தான் குறிக்கும் என்று வியாக்கியானம் கொடுக்கின்றனர்.

பல வருடங்களுக்கு முன்பும் இதே வறட்டு வாதத்தை இவர்கள் வைத்து, அதிலுள்ள அபத்தங்களுக்கு தெளிவான முறையில் நம்மால் விளக்கமும் கொடுக்கப்பட்டது.

ஆனால் அன்று ருஃயத் என்கிற வார்த்தைக்கு சிந்தித்து அறிதல் என்று பொருள் செய்ய வேண்டும் என்பதை நிலைநாட்ட அவர்கள் வேறொரு வாதத்தை வைத்திருந்தார்கள்!

அதாவது பார்த்தல் (ருஃயத்) என்கிற வார்த்தையுடன் கண்ணால் (ஐன்) என்கிற சொல் சேர்ந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று பொருள் வரும். வெறுமனே ருஃயத் என்றால் சிந்தித்தல் என்று தான் அர்த்தம் வைக்க வேண்டும் என்பது அன்றைக்கு இவர்களது வாதமாக இருந்தது.

இந்த மடமைத் தனத்திற்கு அன்றைக்கே கீழ்க்கண்டவாறு மறுப்பு கொடுக்கப்பட்டது.

ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால் தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்ணைச் சேர்த்து பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஹதீஸில் உள்ளதா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும், வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம் தான். அது போல் பார்த்தல் என்றாலும், கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.

எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும் தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

4:153 வசனத்தில் அல்லாஹ்வைக் காட்டு என்று மூஸா நபியிடம் அவர்களின் சமுதாயம் கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.

இதில் கண்ணுக்குக் காட்டு என்று சொல்லப்படவில்லை. காட்டு என்பது மட்டும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா?

இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்குக் கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?

இப்படி அன்று நாம் கேட்ட இந்தக் கேள்விக்கு இன்று வரை விடை சொல்லவில்லை.

அது மடமை என்பது உறுதியாகிவிட்டதால் துண்டுப் பிரசுரத்தில் வேறு விதமாக வாதம் வைக்கின்றனர்.

இந்த வாதமாவது சரியா என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

لسان العرب

( رأي ) الرُّؤيَة بالعَيْن تَتَعدَّى إلى مفعول واحد وبمعنى العِلْم تتعدَّى إلى مفعولين يقال رأَى زيداً عالماً ورَأَى رَأْياً ورُؤْيَةً ورَاءَةً مثل راعَة وقال ابن سيده الرُّؤيَةُ النَّظَرُ بالعَيْن والقَلْب

ருஃயத் என்பது கண்ணால் காண்பது என்ற பொருளில் வந்தால் அதற்கு ஒரு மஃப்வூல் (OBJECT) தான் வரும் அறிதல் என்ற பொருளில் வரும்போது அதற்கு இரண்டு மஃப்வூல் (OBJECT) வரும்

நூல் : லிஸானுல் அரப், பாகம் 14, பக்கம் 291

உதாரணம்

رأيت محمدا

முகம்மதைப் பார்த்தேன்

رأيت محمدا عالما

முகம்மதை ஆலிமாகப் பார்த்தேன்

இந்த இரண்டு வாசகங்களையும் பாருங்கள்!

முதலாவது உதாரணத்தில் பார்த்தல் என்பதற்கு முகம்மத் என்ற ஒரு ஆப்ஜெக்ட்டு (செயப்படு பொருள்) தான் வந்துள்ளது.

ஒரு ஆப்ஜக்ட் வந்தால் கண்ணால் காண்பது என்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

இரண்டாவது உதாரணத்தில் பார்த்தல் என்ற செயலுக்கு 1. முகம்மத் 2. ஆலிம் என்ற இரண்டு ஆப்ஜெக்ட் (செயப்படு பொருள்) வந்துள்ளது.

இவ்வாறு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்தால் தான் அறிதல் என்ற பொருள் வரும். சில நேரங்களில் அரிதாக இரண்டு ஆப்ஜெக்ட் வரும் போது கண்ணால் பார்த்தல் என்ற பொருளும் வரலாம்.

ஆனால் பார்த்தல் என்ற சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் கண்டிப்பாக அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும் தான் கொடுக்கும்.

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பதாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

என்ற ஹதீஸில் பார்த்தல் என்பதற்கு பிறை என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது.

எனவே கண்ணால் பார்த்தல் என்பது தான் இந்த ஹதீஸின் பொருள் என்பது உறுதியாகி விட்டதால் இவர்களின் அமாவாசைப் பிறைக் கொள்கை ஹதீஸுக்கு முரணானது. இஸ்லாத்துக்கு சம்மந்தமில்லாதது என்பது உறுதி.

திருக்குர்ஆனில் பார்த்தல் என்ற வினைச்சொல் அதிகமாக இரண்டு ஆப்ஜெக்டுகளைக் கொண்டுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆப்ஜக்டுகள் வரும் போது அறிதல் என்ற பொருள்தான் பெரும்பாலும் வரும்.

யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் (பார்க்கவில்லையா?) அறியவில்லையா?

திருக்குர்ஆன் 105:1

மேற்கண்ட வசனத்தில் யானைப் படையைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் அல்லாஹ் கூறியிருந்தால் அது கண்ணால் பார்ப்பதை மட்டும் தான் குறிக்கும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளன.

யானைப்படையை (பார்த்தல்)

எப்படி அழித்தான் என்ற செயலைப் (பார்த்தல்)

எனவே இங்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளதால் இங்கு ருஃயத் என்பதின் பொருள் அறிதல் என்பதாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்ற (அற்பமான)வர்களைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் (பார்க்கவில்லையா?) அறியவில்லையா?

திருக்குர்ஆன் 17:99

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்திருந்தால் கண்ணால் பார்த்தல் என்ற பொருளைத் தான் தரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளன.

அல்லாஹ்வை (பார்த்தல்)

அவனுடைய படைப்பாற்றலைப் (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளதால் இதற்கு அறிதல் என்ற பொருள் தான் கொடுக்க வேண்டும்.

மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் (பார்க்கவில்லையா?) அறியவில்லையா?

திருக்குர்ஆன் 2:243

மேற்கண்ட வசனத்தில் ஊர்களை விட்டு வெளியேறியோரைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்திருந்தால் கண்ணால் பார்த்தல் என்று பொருள் மட்டும் தான் வரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளன.

ஊரை விட்டு வெளியேறியோரை (பார்த்தல்)

அவர்கள் மரணத்திற்கு அஞ்சுவதை (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட்கள் வந்துள்ளதால் இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் (பார்க்கவில்லையா?) அறியவில்லையா?

திருக்குர்ஆன் 89:6, 7

மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜக்டுகள் வந்துள்ளன.

ஆது, இரம் சமுதாயத்தைப் (பார்த்தல்)

அவர்களை எப்படி ஆக்கினான் என்பதை (பார்த்தல்)

எனவே இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

அதே சமயம், கீழ்க்காணும் வசனங்களைப் பாருங்கள்.

அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.

திருக்குர்ஆன் 102:5,6

மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது. எனவே இது கண்ணால் காண்பதை மட்டும் தான் குறிக்கும்.

மொத்தத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லிற்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் அதற்குக் கண்ணால் பார்த்தல் என்ற பொருள் மட்டும் தான் வரும். வேறு பொருள் வராது.

இரண்டு ஆப்ஜெக்ட்கள் வரும் போது தான் அங்கே அறிதல் என்ற பொருள் வரும். திருமறைக்குர்ஆனில் அறிதல் என்ற பொருள் கொள்வதற்கு சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்கள் அனைத்தும் இரண்டு ஆப்ஜெக்ட்டுகளுடன் வரக்கூடியவையாகும்.

பிறை பார்த்தல் பற்றிய ஹதீஸ்களில் பார்த்தல் என்ற வினைச் சொல்லிற்கு பிறை என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது. எனவே இது கண்ணால் காண்பதை மட்டும் தான் குறிக்கும்.

குர்ஆனில் கண்ணால் காணுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட சில இடங்கள்.

நட்சத்திரத்தைப் பார்த்தார் (6:76)

சந்திரனைப் பார்த்தார் (6:77)

சூரியனைப் பார்த்தார் (6:78)

ஆதாரத்தைப் பார்த்தார் (11:70)

சட்டையைப் பார்த்தார் (12:28)

இணைக் கடவுள்களைப் பார்த்தல் (16:86)

நரகத்தைப் பார்த்தல் (16:8320:10)

கூட்டுப் படையைப் பார்த்தல் (33:22)

இறை அத்தாட்சியில் மிகப் பெரியதைப் பார்த்தல் (53:18)

தெளிவான அடிவானத்தில் பார்த்தார். (81:23)

ருஃயத் என்ற சொல்லுக்கு கண்ணால் பார்த்தல் என்ற பொருளில் ஏராளமான ஆதாரங்களை குர்ஆனில் காணமுடியும்.

ஆக இவர்களது இந்த வாதமும் அறியாமை காரணமாக எழுப்பப்பட்டுள்ளது உறுதியாகிறது.

பிறையைப் பார்த்தல் என்பது கண்ணால் பார்த்தலைத் தான் குறிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகி விட்ட நிலையில் பிறையைக் கணக்கிடலாம், விஞ்ஞான ரீதியாகச் சிந்திக்கலாம் என்பன போன்ற வாதங்கள் அனைத்தும் விழுந்து நொறுங்கி விட்டன.

தங்களது இந்த வாதத்தில் தாங்களே நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை, தொடர்ந்து இவர்கள் வைக்கும் அடுத்தடுத்த கேள்விகள் நிரூபிக்கின்றன.

வாதம் நான்கு

கிராமவாசிகள் சம்மந்தமான ஹதீஸில் பிறைபார்த்தல் பற்றி கூறப்பட்டுள்ளதே, இங்கு ருஃயத் என்கிற சொல் எங்கே உள்ளது?

இந்த ஹதீஸ் முர்ஸல் வகையைச் சார்ந்தது, இதை எப்படி ஆதாரமாகக் கொள்ளலாம்?

கிராமவாசிகள் பிறை பார்த்த ஹதீஸ் குறித்து இப்படி இரு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நமது பதில்

கிராமவாசிகள் பிறைபார்த்து விட்டு வந்து நபிகள் நாயகத்திடம் சொன்னதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் குறித்து இரு கேள்விகள் கேட்கிறார்கள்.

அறிவீனர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நபியின் எச்சரிக்கையை மெய்ப்படுத்தும் வகையில் தங்களது மடமையை இக்கேள்விகள் மூலம் நிரூபித்துக் கொள்கிறார்கள்.

இக்கேள்விக்கும் அமாவாசைப் பிறைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

இவர்களுக்கு மொழியறிவும் இல்லை, அரபு இலக்கணமும் தெரியவில்லை, குர்ஆன், ஹதீஸை அணுகும் முறையும் தெரியவில்லை, ஹதீஸ் கலையும் தெரியவில்லை.

தங்களுக்கு இது பற்றிய அறிவு இல்லை என்று நிரூபிப்பதற்காகவே இது போன்ற வாதத்தை வைத்திருக்கிறார்கள் போலும்.

முர்ஸல் என்றால் என்ன என்று தெரியாமல் இந்த ஹதீஸை முர்ஸல் என்கிறார்கள்.

நபி சொன்னதாக ஒருவர் அறிவிப்பதாக இருந்தால் அவர் நபித்தோழராக இருக்க வேண்டும். நபித்தோழராக இல்லாத ஒருவர் நபி சொன்னதாக அறிவித்தால் அதன் பெயர் தான் முர்ஸல் ஆகும். நபியிடம் கேட்காமல் அறிவிப்பதால், இச்செய்தியை அவருக்கு நபித்தோழர் ஒருவர் கூறிருக்கவும் வாய்ப்பு உண்டு,  தாபியீ இவருக்குச் சொல்லி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. நபிக்கும், இவருக்கும்  மத்தியில் நபித்தோழரோ அல்லது தாபியீயும், நபித்தோழருமோ விடுபட்டிருப்பர்.

விடுபட்டவர் தாபியீயாக இருந்தால் அவர் யார் என்று தெரிய வேண்டும். அது தெரியாததால் அது பலவீனமானதாகும். இப்படி அமைந்த ஹதீஸ்கள் தான் முர்ஸல் ஆகும். 

ஆனால் அபூதாவூதில் இடம் பெற்ற கிராமவாசிகள் பற்றிய ஹதீஸ் இவ்வாறு இல்லை. நபித்தோழர் அறிவிப்பதாகவே இந்த ஹதீஸ் உள்ளது. அந்த நபித்தோழரின் பெயரைக் குறிப்பிட்டவில்லை என்பதே உண்மையாகும்.

1992 حَدَّثَنَا مُسَدَّدٌ وَخَلَفُ بْنُ هِشَامٍ الْمُقْرِئُ قَالَا حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اخْتَلَفَ النَّاسُ فِي آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ فَقَدِمَ أَعْرَابِيَّانِ فَشَهِدَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّهِ لَأَهَلَّا الْهِلَالَ أَمْسِ عَشِيَّةً فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ أَنْ يُفْطِرُوا زَادَ خَلَفٌ فِي حَدِيثِهِ وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ * رواه ابوداود

அதாவது ரிப்யீ பின் கிராஷ் (தாபியீ) என்பவர் நபித்தோழர்களில் ஒருவரிடமிருந்து அறிவிக்கிறார் என்று இதில் இடம் பெற்றுள்ளது. நபித்தோழர் தான் இதை எனக்குச் சொன்னார் என்று ரிப்யீ பின் கிராஷ் கூறுகிறார்.

எனவே இது முர்ஸல் என்று கூறுவது அறியாமையாகும்.

ஸஹாபாக்கள் அனைவரும் நீதமானவர்கள் என்பதால் அவர்களின் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் நபித்தோழரிடமிருந்து கேட்டேன் என்று நம்பகமான தாபியீ சொன்னாலே அது ஆதாரப்பூர்வமானதாகும். இது தான் ஹதீஸ் கலை விதியாகும்.

முர்ஸல் என்பதில் ஸஹாபி விடுபட்டாரா? சஹாபியும் தாபியீயும் விடுபட்டாரா என்ற சந்தேகம் இருக்கும்.

இங்கு ஸஹாபி தான் அறிவிக்கிறார் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதால் இது முர்ஸல் கிடையாது.

இதைக் கூட அறியாமல் அறிவீனர்கள் எல்லாம் ஆய்வு செய்யப் புகுந்தால் அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

அடுத்ததாக, ருஃயத் என்றால் பார்த்தல் என்று பொருள் இருப்பதாகச் சொல்பவர்கள் இந்த வாகனக் கூட்டம் ஹதீஸில் ருஃயத் என்கிற வார்த்தை எங்குள்ளது? என்று காட்டுவார்களா எனக் கேட்கிறார்கள்.

பார்த்தல் என்பதற்கு ருஃயத் என்ற ஒரே ஒரு சொல் தான் உள்ளது என்று  நாம் சொல்லவில்லை. எந்த அரபு மொழி அகராதி நூலிலும் கூறப்படவில்லை. பார்த்தல் என்பதற்கு ஏராளமான சொற்கள் உள்ளன. இது பாமர மனிதனும் தெரிந்து வைத்திருக்கும் உண்மையாகும்.

பிறையைப் பார்த்ததாக சிலர் சாட்சி கூறினால் அதை ஏற்க வேண்டும் நாம் கூறுகிறோம். இந்த நிலையில் சிலர் நம்மிடம் வந்து நாங்கள் இன்றிரவு பிறையைக் கண்டோம் என்று கூறுகிறார்கள். அப்போது இந்த மேதாவிகளும் அங்கே இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அப்போது இந்த அதி மேதாவிகள் இந்த சாட்சிகள் பிறை பார்த்தோம் என்றா சொன்னார்கள்? பார்த்தல் என்ற வார்த்தை இவர்களின் கூற்றில் இல்லையே? கண்டோம் என்று தானே உள்ளது என்று கூறினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இவர்களின் மடமை வாதம் அமைந்துள்ளது.

கிராமவாசிகள் பிறை பார்த்தது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸில் ”ருஃயத்” என்ற வார்த்தை இடம் பெறவில்லை. ஆனால் ”அஹல்ல” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

المحكم والمحيط الأعظم – (ج 2 / ص 126) وأهَلَّ الرجل: نظر إلى الهِلال. وأهلَلنا هِلال شهر كذا، واستَهْلَلناه: رأيناه

”அஹல்ல” என்று சொன்னால் ”பிறையை நோக்கிப் பார்த்தான்” ”பிறையைக் கண்களால் பார்த்தான்” என்பதாகும்.

நூல் : அல்முஹ்கம் வல் முஹீத்துல் அஃளமு. பாகம் 2 பக்கம் 126

மேற்கண்ட கிராமவாசிகள் பற்றிய ஹதீஸில் ”அஹல்லா அல்ஹிலால” என்று இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் ”அந்த இருவரும் பிறையைக் கண்களால் பார்த்தார்கள்” என்பதாகும்.

இந்த வகையிலும் இவர்களது வறட்டு சிந்தனை சந்தி சிரிப்பதைக் காணலாம்.

இதில் மேலும் சில கேள்விகளைக் கேட்கின்றனர்.

பிறையைக் கண்ணால் காண வேண்டும் என்றும், காணவில்லை என்றால் 30 ஆகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் உங்கள் கருத்துப்படி சொல்லப்பட்டு விட்டதே, பிறகு ஏன் ஸஹாபாக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது? ஏன் கருத்து வேறுபாடு கொண்டனர்? என்று கேட்டுள்ளனர்

ஒரு ஊரார் பார்த்த நாளுக்கு மறு நாள் இன்னொரு ஊரார் பிறை பார்த்தால் முப்பது எது என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வரும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இப்படிக் கேட்கின்றனர்.

தலைப் பிறை குறித்து ஸஹாபாக்கள் தங்களுக்கிடையே விவாதித்துக் கொண்டனர், அதில் கருத்து வேறுபாடு கொண்டனர் என்பதே, அவர்கள் இந்த ஹிஜ்ரா கூட்டம் கொண்டிருப்பதைப் போன்ற கொள்கையைக் கொண்டிருக்கவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

மற்றுமொரு வினோதமான கேள்வியை முன் வைக்கிறார்கள்.

அதாவது, மாதத்தின் இறுதி பற்றி மக்களுக்கு கருத்து வேறுபாடு வந்தது என்று வாகனக் கூட்டம் ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பதில் இருந்து, அவர்களுக்கு முன் கூட்டியே மாதத்தின் இறுதி தெரிந்திருக்கிறது என்று தானே அர்த்தம்? அதனால் தானே கருத்து வேறுபாடு கொள்ள நேர்ந்தது? என்று கேட்கிறார்கள்.

இவர்களின் எல்லையற்ற மடமைக்கு இந்தக் கேள்வி ஆதாரமாக உள்ளது.

மாதத்தின் இறுதி பற்றி கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றால் சர்வதேசப் பிறை என்ற கிறுக்குத்தனம் அந்த மக்களிடம் இல்லை என்பதற்குத் தான் இது ஆதாரமாக உள்ளது. ஒருவர் பார்த்து மற்றவர் பார்க்காததால் எது கடைசி என்று கருத்து வேறுபாடு வரத்தானே செய்யும்.

ஒரு மாத இறுதியில் மக்கள் முதல் பிறை குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருந்தால் அது விஞ்ஞான ரீதியாக பிறையைக் கணிக்கலாம் என்பதற்கு ஆதாரமா?

முன்கூட்டியே மாதம் முடியும் கணக்கை அறிந்திருந்தால் தானே ஒரு சாராருக்கும், மற்றொரு சாராருக்கும் கருத்து வேறுபாடு வரும்? என்று கேட்கிறார்கள்.

தங்களது சிந்தனை அடகு வைக்கப்பட்டு விட்டது என்பதற்கு இவர்களது இந்த ஒரு கேள்வியே சான்று பகர்கிறது.

தலைப்பிறையைப் பார்த்து ஒரு மாதத்தைத் துவங்கி விட்டார்கள் என்றால் ஒவ்வொரு நாளையும் எண்ணுவதற்கு ஸஹாபாக்களுக்குத் தெரியும். இது முதல் பிறை, இது இரண்டாவது பிறை என்று எண்ணி இறுதியில் 29 பிறைகள் முடிந்தால் மறு பிறை தென்பட்டதா இல்லையா? என்கிற கருத்து வேறுபாடுகள் வரும். இது ஒவ்வொரு மாதமும் பிறையைக் கண்ணால் பார்த்து மாதங்களை தீர்மானிப்பவர்களிடையே ஏற்படும். இதற்கும் பிறையை முன்கூட்டியே கணிக்க வேண்டும் என்பதற்கும் என்ன சம்மந்தம் உள்ளது?

வாதம் ஐந்து

கும்ம என்பதன் பொருள் என்ன?

அடுத்ததாக, “உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் 30 ஆகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்பதாக வரும் ஹதீஸில் மேகமூட்டம் என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் “கும்ம” என்கிற சொல் உள்ளது, இதற்கு மேகமூட்டம் என்கிற பொருள் வராது, அறிவிற்கு எட்டாத, சிந்தனை விட்டும் மறைந்த.. என்பதாகத் தான் பொருள் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

நமது பதில்

இவர்களின் இந்த வாதமும் அர்த்தமற்றதாகும்.

கும்ம என்ற சொல்லின் நேரடிப் பொருள் மறைக்கப்படுதல் என்பது தான். இது ஹிலால் என்ற வார்த்தையோடு இணைத்து கூறப்படும் போது மேகமூட்டத்தால் மறைக்கப்படுதல் என்பது பொருளாகும்.

المحكم والمحيط الأعظم – (ج 2 / ص 390) وغُمّ الهلالُ غَماًّ: ستره الغيمُ فلم يُرَ.

கும்ம அல்ஹிலாலு கம்மன் என்பதின் பொருள் பிறையை மேகம் மறைத்தது. அது பார்க்கப்படவில்லை என்பதாகும். 

நூல்: அல்முஹ்கம் வல் முஹீத்துல் அஃளம் என்ற அரபி அகராதி நூல் . பாகம் 2 பக்கம் 390

ஒரு வாதத்திற்கு மேகமூட்டம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு பிறை மறைக்கப்பட்டது என்று மட்டும் பொருள் செய்தால் கூட இது கண்பார்வைக்கு மறைந்திருப்பதைத் தான் குறிக்கும்.

அறிதலை விட்டும் மறைதல் என்று பொருள் வராது.

ஏனென்றால் பார்த்தல் என்பதற்கு ஒரு ஆப்ஜக்ட் வருமென்றால் அது கண்ணால் காண்பதை மட்டும் தான் குறிக்கும் என்பதை முன்னர் விளக்கி விட்டோம்.

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பதாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்!

என்ற ஹதீஸில் பார்த்தல் என்பதற்கு பிறை என்ற ஒரு ஆப்ஜெக்ட் மட்டும் வந்துள்ளதால் அது கண் பார்வைக்கு மறைக்கப்படுவதை மட்டும் தான் குறிக்கும்.

இதை ஏற்கனவே நாம் விளக்கியுள்ளோம்.

அந்த வகையில், கும்ம என்கிற சொல்லுக்கு இந்த இடத்தில் கண்களை விட்டும் மறைதல் என்கிற பொருள் மட்டும் தான் கொடுக்க முடியும். வானத்தில் உள்ள ஒன்றைப் பற்றி பேசுகிற பொழுது, அது கண்களை விட்டு மறையும் என்றால் மேகமூட்டம், புகை மூட்டம், பனிமூட்டம் போன்றவை மறைப்பதைத் தான் குறிக்க முடியும்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக கீழ்க்காணும் இறை வசனங்களிலும் கும்ம என்கிற சொல்லின் வேர்ச் சொல்லான கமாம் என்கிற வார்த்தை – மேகமூட்டம் என்கிற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம்.

திருக்குர்ஆன் 2:57

ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம்.

திருக்குர்ஆன் 7:160

மேகத்தால் வானம் பிளக்கப்பட்டு, வானவர்கள் உறுதியாக இறக்கி வைக்கப்படும் நாள்!

திருக்குர்ஆன் 25:25

மேற்கண்ட வசனங்களில் மேகம் என்கிற வார்த்தையைக் குறிக்க கமாம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதிலிருந்து பிறந்த சொல்லே கும்ம ஆகும்.

இந்த விளக்கமும் நாம் புதிதாகக் கொடுக்கும் விளக்கமல்ல. இதை நமது முந்தைய மறுப்புகளின் போதே தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

கமாம் என்பது கும்ம என்ற சொல்லிலிருந்து வந்தது தான். இது பல அரபி அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு நூற்களில் உள்ள ஆதாரங்கள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

உம்தத்துல் காரி என்பது புகாரியின் விரிவுரை நூல். இதே கருத்து அரபி அகராதி நூற்களிலும் உள்ளது.

قوله فإن غم عليكم أي فإن ستر الهلال عليكم ومنه الغم لأنه يستر القلب والرجل الأغم المستور الجبهة بالشعر وسمي السحاب غيما لأنه يستر السماء ويقال غم الهلال إذا استتر ولم ير لاستتاره بغيم ونحوه وغممت الشيء أي غطيته -عمدة القاري شرح صحيح البخاري – (ج 16 / ص 268)

கும்ம அலைக்கும் என்றால் சுதிரல் ஹிலாலு அலைக்கும் (பிறை உங்களுக்கு மறைக்கப்பட்டால்) என்பது பொருள். கவலைக்கு அல்கம்மு என்று கூறப்படும். ஏனென்றால் அது உள்ளத்தை மறைக்கிறது. முடியினால் நெற்றி மறைக்கப்பட்ட மனிதனுக்கு அர்ரஜூலுல் அகம்மு என்று கூறுவார்கள். மேகத்திற்கு கய்முன் என்று கூறுவார்கள். ஏனென்றால் அது வானத்தை மறைக்கிறது. கும்ம அல்ஹிலாலு என்றால் பிறை மறைக்கப்பட்டது என்பது பொருள். அதாவது மேகத்தினால் அது மறைக்கப்பட்டதினால் காணப்படவில்லை என்பதாகும்.

நூல் : உம்தத்துல் காரீ

وأما قوله فإن غم عليكم فذلك من الغيم والغمام وهو السحاب يقال منه يوم غم وليلة غمة وذلك أن تكون السماء مغيمة التمهيد – (ج 2 / ص 38)

கும்ம அலைக்கும், இதன் பொருள் உங்களுக்கு மறைக்கப்பட்டது என்பதாகும். இதில் மறைத்தல் என்பது கைம் இன்னும் கமாம் மூலம் ஏற்படுதலாகும். கைம் கமாம் என்பது மேகம் ஆகும். வானம் மேகமூட்டமாக இருக்கும் போது யவ்முன் கம்முன் (மேகமூட்டமான நாள்) லைலத்துன் கம்மத்துன் (மேகமூட்டமான இரவு) என்று கூறுவார்கள்.

நூல் : அத்தம்ஹீத் பாகம் 2 பக்கம் 38

கமாம் என்கிற வார்த்தைக்கு மேகம் என்கிற பொருள் இருக்கிறதா? கும்ம என்பதன் வேர்ச்சொல் தான் கமாமா? என்கிற கேள்விகளுக்கு விடை அறிய அகராதி நூற்களையும் அரபுப் புலமையின் தேவையும் உள்ளது.

நாளின் துவக்கம் எது?

நாளின் துவக்கம் மக்ரிபில் இருந்துதான் ஆரம்பம் ஆகிறது. சுப்ஹில் இருந்து அல்ல என்பதற்கு நாம் ஏராளமான ஆதாரங்களை முன் வைத்து விளக்கியுள்ளோம்.

இதை மறுக்கப் புகுந்த அமாவாசைக் கூட்டம் நாம் வெளியிட்ட அந்த ஆதாரங்களில் இரண்டே இரண்டை மட்டும் மறுத்து சில வாதங்களை வைத்து விட்டு நாளின் துவக்கம் சுப்ஹு என்று நிரூபித்து விட்டோம் என்று  கூறியுள்ளனர்.

வாதம் ஆறு

2:239 வசனத்தில் கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகைதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

இதைக் கொண்டு நாளின் துவக்கம் பகல் தான் என்று சிலர் புதிதாக வாதிடத் துவங்கியுள்ளனர்.

இரவில் இருந்து தான் நாள் ஆரம்பமாகிறது என்றால் மக்ரிப் முதல் தொழுகையாக ஆகிறது. இதன்படி ஸுப்ஹுத் தொழுகைதான் நடுத்தொழுகையாக ஆகும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாமல் அஸர் தொழுகையை நடுத்தொழுகை என்று கூறியுள்ளனர். நாளின் ஆரம்பம் காலை என்றால் தான் அஸர் தொழுகை, நடுத்தொழுகையாக வர முடியும். எனவே ஸுப்ஹில் இருந்து தான் நாள் ஆரம்பமாகிறது என்பதற்கு நடுத்தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் ஆதாரமாக அமைந்துள்ளது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்களைப் பாருங்கள்.

நமது பதில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை முஸ்லிம் சமுதாயத்தில் மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பது கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவர்கள் நடுத்தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விளக்கத்தைச் சான்றாகக் காட்டி, ஸுப்ஹ் தான் நாளின் துவக்கம் என்று வாதிடுகின்றனர்.

இதுவரை கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றை மறுத்து, புதிதாக ஒரு கருத்தை நிறுவ விரும்புபவர்கள், தங்களின் வாதத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்ற தெளிவான சான்றுகளைக் காட்ட வேண்டும்.

மேற்கண்ட வசனம் இவர்களின் கருத்தைத் தெளிவாக அறிவிக்கும் வகையில் இருக்கவில்லை. நடு என்று பொருள் செய்யப்படும் உஸ்தா என்ற சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

நடுத்தொழுகை என்பதில் நடு என்பது வரிசைக் கிரமத்தை மட்டும் குறிக்காது. நடுத்தரம், சிறப்பு என்ற கருத்திலும் இச்சொல் பயன்படுத்தப்படும்.

2:239 வசனத்தில் நடுத்தொழுகை என்ற சொல் சிறப்பிற்குரியது என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதை ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ தமது புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் தெளிவுபடுத்துகிறார்கள்.

ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் கூற்றுக்கு குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக உள்ளன. அல்உஸ்தா என்ற சொல்லின் மூலச்சொல்லிலிருந்து பிறந்த சொற்களுக்கு ‘நடுவில் உள்ளது’ என்ற பொருள் இருப்பது போல் ‘சிறந்தது’ என்ற பொருளும் உள்ளதை 68:282:143 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.

இரவில் தொழுகை கடமையாக்கப்பட்டது. இவ்வாறு கடமையாக்கப்பட்ட பிறகு வந்த முதல் தொழுகை ஸுப்ஹு தான். கடமையாக்கப்பட்ட வரிசைப்படி பார்த்தால் அஸர் நடுத் தொழுகையாகின்றது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

இவ்விரண்டும் எந்தச் சான்றுகளுடனும் மோதாமலும் அறிவுக்குப் பொருத்தமான வகையிலும் அமைந்துள்ளன.

ஆனால் இவர்கள் புதிதாகக் கண்டுபிடித்த மூன்றாவது கருத்து, நாளின் துவக்கம் மக்ரிப் தான் எனத் தெளிவாகக் கூறும் ஏராளமான சான்றுகளை மறுப்பதாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்ரிப் தான் ஒரு நாளின் துவக்கம் என்று கருதப்பட்டு வந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

سنن أبي داود

1379 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ عَبَّادِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ، عَنْ ضَمْرَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ فِي مَجْلِسِ بَنِي سَلَمَةَ وَأَنَا أَصْغَرُهُمْ، فَقَالُوا:: مَنْ يَسْأَلُ لَنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، وَذَلِكَ صَبِيحَةَ إِحْدَى وَعِشْرِينَ مِنْ رَمَضَانَ؟ فَخَرَجْتُ فَوَافَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْمَغْرِبِ، ثُمَّ قُمْتُ بِبَابِ بَيْتِهِ، فَمَرَّ بِي فَقَالَ: «ادْخُلْ»، فَدَخَلْتُ فَأُتِيَ بِعَشَائِهِ، فَرَآنِي أَكُفُّ عَنْهُ مِنْ قِلَّتِهِ، فَلَمَّا فَرَغَ، قَالَ: «نَاوِلْنِي نَعْلِي» فَقَامَ وَقُمْتُ مَعَهُ، فَقَالَ: «كَأَنَّ لَكَ حَاجَةً»، قُلْتُ: أَجَلْ، أَرْسَلَنِي إِلَيْكَ رَهْطٌ مِنْ بَنِي سَلَمَةَ، يَسْأَلُونَكَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، فَقَالَ: «كَمِ اللَّيْلَةُ؟» فَقُلْتُ: اثْنَتَانِ وَعِشْرُونَ، قَالَ: «هِيَ اللَّيْلَةُ»، ثُمَّ رَجَعَ، فَقَالَ: «أَوِ الْقَابِلَةُ»، يُرِيدُ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ

அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) கூறுகிறார்கள்:

“லைலதுல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது?” என்று நாங்கள் பேசிக் கொண்டோம். இது ரமளான் மாதம் 21 ஆம் காலையில் நடந்தது. நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலதுல் கத்ர் பற்றிக் கேட்டு வர என்னை பனூஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். 22ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன். இதுதான் அந்த (லைலதுல் கத்ர்) இரவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.

நூல்: அபூதாவூத் 1174

இந்த ஹதீஸ் கூறுவது என்ன?

அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) 21 ஆம் நாள் காலையில் புறப்பட்டு மக்ரிபில் நபிகள் நாயகத்தைச் சந்திக்கிறார். நாளின் ஆரம்பம் ஸுப்ஹு தான் என்றால் அவர் அடைந்த மக்ரிபை 21 ஆம் நாள் மக்ரிப் எனக் கூறி இருக்க வேண்டும். ஆனால் 22 ஆம் நாள் மக்ரிப் என்று கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதை அங்கீகரிக்கிறார்கள். இதிலிருந்து மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

21ஆம் நாள் ஸுப்ஹுக்குப் பின் வரும் மக்ரிப், 21ஆம் நாள் மக்ரிப் என்று சொல்லப்பட்டால் ஸுப்ஹிலிருந்து நாள் ஆரம்பமாகி விட்டது என்று சொல்லலாம். 21ஆம் நாள் ஸுப்ஹுக்குப் பின் வரக்கூடிய மக்ரிப் 22ஆம் நாள் மக்ரிப் என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதால் மக்ரிபில் தான் தேதி மாறுகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.

மற்றொரு ஹதீஸையும் பாருங்கள்!

தண்ணீரில் பேரீச்சம் பழத்தை ஊறவைத்து மறுநாள் அந்தத் தண்ணீரை அருந்துவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கம்.

இது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) பின்வருமாறு கூறுகிறார்கள்:

صحيح مسلم

5345 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَحْيَى الْبَهْرَانِىِّ قَالَ ذَكَرُوا النَّبِيذَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُنْتَبَذُ لَهُ فِى سِقَاءٍ – قَالَ شُعْبَةُ مِنْ لَيْلَةِ الاِثْنَيْنِ – فَيَشْرَبُهُ يَوْمَ الاِثْنَيْنِ وَالثَّلاَثَاءِ إِلَى الْعَصْرِ فَإِنْ فَضَلَ مِنْهُ شَىْءٌ سَقَاهُ الْخَادِمَ أَوْ صَبَّهُ.

திங்கட்கிழமை இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீரில் பேரீச்சம் பழத்தை நாங்கள் ஊற வைப்போம். அதைத் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமை அஸர் வரையும் அருந்துவார்கள்.

நூல்: முஸ்லிம் 4083

திங்கட்கிழமை இரவில் ஊறவைத்து திங்கள்கிழமை பகலில் அருந்துவார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

நாளின் ஆரம்பம் ஸுப்ஹ் அல்ல என்பதற்கு இது தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது. நாளின் ஆரம்பம் ஸுப்ஹ் என்றால் திங்கட்கிழமை இரவுக்கு அடுத்து வரும் காலையை செவ்வாய்க் கிழமை என்று சொல்ல வேண்டும். அப்படி இந்த ஹதீஸில் சொல்லப்படவில்லை. திங்கட்கிழமை இரவுக்குப் பின்வரக் கூடிய பகல் திங்கட்கிழமை என்றே இந்த ஹதீஸில் குறிப்பிடப்படுவதால் ஸுப்ஹ் வந்தும் கிழமை மாறவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.

மக்ரிபில் இருந்து தான் நாள் ஆரம்பமாகிறது என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்தும் அறியலாம்.

صحيح البخاري

2027 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ فِي العَشْرِ الأَوْسَطِ مِنْ رَمَضَانَ، فَاعْتَكَفَ عَامًا، حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ مِنْ صَبِيحَتِهَا مِنَ اعْتِكَافِهِ، قَالَ: «مَنْ كَانَ اعْتَكَفَ مَعِي، فَلْيَعْتَكِفِ العَشْرَ الأَوَاخِرَ، وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ مِنْ صَبِيحَتِهَا، فَالْتَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ، وَالتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ»، فَمَطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ وَكَانَ المَسْجِدُ عَلَى عَرِيشٍ، فَوَكَفَ المَسْجِدُ، فَبَصُرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَبْهَتِهِ أَثَرُ المَاءِ وَالطِّينِ، مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுவில் உள்ள பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது வழக்கம். அவ்வழக்கப்படி ஒரு ஆண்டு இஃதிகாப் இருந்தனர். 21 ஆம் இரவு வந்தபோது, – அந்த இரவுக்குரிய காலையில் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவது அவர்களின் வழக்கம் – “என்னுடன் இஃதிகாப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாப் இருக்கட்டும். அவ்விரவு எனக்குக் காட்டப்பட்டு பின்னர் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அன்று காலையில் சேற்றிலும், தண்ணீரிலும் ஸஜ்தாச் செய்வதாகக் (கனவு) கண்டேன். எனவே “கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! ஒவ்வொரு ஒற்றைப்படை நாட்களிலும் தேடுங்கள்” என்றனர். அன்றிரவு மழை பொழிந்தது. பள்ளியின் பந்தலிலிருந்து தண்ணீர் வழிந்தது. 21ஆம் நாள் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் சேற்றையும், தண்ணீரையும் என் கண்கள் கண்டன.

நூல் : புகாரி 2027

ஸுப்ஹில் இருந்து தான் நாள் ஆரம்பமாகிறது என்ற கருத்துப்படி 21ஆம் இரவுக்குரிய காலைப் பொழுதைப் பற்றிக் கூறுவதாக இருந்தால் அடுத்த நாளுக்குரிய காலை என்றோ, 22ஆம் நாளுக்குரிய காலை என்றோ கூறியிருக்க வேண்டும். அப்படிக் கூறாமல் 21 ஆம் நாளுக்கு உரிய காலைப் பொழுது என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. 21ஆம் நாளை அடுத்து வரும் காலைப் பொழுது அதே நாளுக்கு உரியது என்று சொல்லப்படுவதால் காலைப் பொழுதில் தேதி மாறவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

அடுத்து இந்த ஹதீஸில் 21ஆம் இரவு வந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை கூறினார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் முடிவில் அன்றிரவு மழை பொழிந்தது. பள்ளியின் பந்தலிலிருந்து தண்ணீர் வழிந்தது. 21 ஆம் நாள் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் சேற்றையும், தண்ணீரையும் என் கண்கள் கண்டன என்று சொல்லப்படுகிறது.

அதாவது அன்றிரவில் அதாவது 21ஆம் இரவில் மழை பொழிந்தது. அம்மழையின் காரணமாக 21ஆம் காலையில் நபிகளின் நெற்றியில் சேறு படிந்தது என்று இந்த வாசகம் கூறுகிறது.

21ஆம் இரவுக்குப் பின்னர் வரக் கூடிய காலைப் பொழுது 21ஆம் நாளாகவே இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறிகிறோம். அதாவது மக்ரிபில் எந்தத் தேதி இருந்ததோ அதே தேதி தான் ஸுப்ஹிலும் நீடித்துள்ளது. ஸுப்ஹ் நேரம் வந்தும் தேதி மாறவில்லை. நாளின் துவக்கம் காலைப் பொழுது அல்ல என்பதற்கு இதுவும் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.

நாளின் துவக்கம் ஸுப்ஹு என்றால் 21 ஆம் இரவுக்கு அடுத்து வரும் ஸுப்ஹை 22வது நாள் என்று தான் கூற வேண்டும். ஆனால் நபித்தோழரோ 21 ஆம் இரவுக்கு அடுத்து வரும் ஸுப்ஹை 21வது நாள் ஸுப்ஹ் எனக் கூறுகிறார். இதிலிருந்து நாளின் துவக்கம் இரவு தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மேலும் அன்று காலை தான் இஃதிகாபை விட்டு வெளியேறுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கம் என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது. ஸுப்ஹிலிருந்து தான் நாள் துவங்குகிறது என்றால் மறுநாள் காலையில் வெளியேறுவார்கள் என்று தான் கூற வேண்டும். அன்று காலையில் வெளியேறுவார்கள் எனக் கூற முடியாது. அன்று காலையில் என்று கூறியிருப்பதால் நாளின் துவக்கம் இரவுதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.

மற்றொரு ஹதீஸையும் பாருங்கள்!

مسند أحمد بن حنبل (2/ 483)

 10277 – حدثنا عبد الله حدثني أبي ثنا يونس بن محمد قال حدثني الخزرج يعني بن عثمان السعدي عن أبي أيوب يعني مولى عثمان عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه و سلم قال : إن أعمال بني آدم تعرض كل خميس ليلة الجمعة فلا يقبل عمل قاطع رحم

ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: அஹ்மத் 9883, அல்அதபுல் முஃப்ரத் 61 , ஷுஅபுல் ஈமான் 7966

இந்த ஹதீஸ் சொல்வது என்ன? வியாழன் மாலைக்குப் பின் வியாழன் இரவு என்று சொல்லப்பட்டால் இரவில் தேதி மாறவில்லை; காலையில் உள்ள தேதியே நீடிக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இந்த ஹதீஸில் வியாழன் மாலைக்குப் பின் வரக் கூடிய இரவு வெள்ளி இரவு என்று சொல்லப்படுகிறது. அதாவது மக்ரிப் வந்தவுடன் அடுத்த நாள் ஆரம்பித்து விட்டது என்பதற்கு இது தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு நபித்தோழர்கள் காலத்திலும் மக்ரிபில் தான் நாள் ஆரம்பிக்கிறது என்ற கோட்பாடுதான் இருந்துள்ளது என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

صحيح البخاري

(2/ 102) 1387 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلْتُ عَلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: فِي كَمْ كَفَّنْتُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ» وَقَالَ لَهَا: فِي أَيِّ يَوْمٍ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «يَوْمَ الِاثْنَيْنِ» قَالَ: فَأَيُّ يَوْمٍ هَذَا؟ قَالَتْ: «يَوْمُ الِاثْنَيْنِ» قَالَ: أَرْجُو فِيمَا بَيْنِي وَبَيْنَ اللَّيْلِ، فَنَظَرَ إِلَى ثَوْبٍ عَلَيْهِ، كَانَ يُمَرَّضُ فِيهِ بِهِ رَدْعٌ مِنْ زَعْفَرَانٍ، فَقَالَ: اغْسِلُوا ثَوْبِي هَذَا وَزِيدُوا عَلَيْهِ ثَوْبَيْنِ، فَكَفِّنُونِي فِيهَا، قُلْتُ: إِنَّ هَذَا خَلَقٌ، قَالَ: إِنَّ الحَيَّ أَحَقُّ بِالْجَدِيدِ مِنَ المَيِّتِ، إِنَّمَا هُوَ لِلْمُهْلَةِ فَلَمْ يُتَوَفَّ حَتَّى أَمْسَى مِنْ لَيْلَةِ الثُّلاَثَاءِ، وَدُفِنَ قَبْلَ أَنْ يُصْبِحَ

நான், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றபோது “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்திருந்தீர்கள்?” என்று அவர் கேட்டார். “வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ, தலைப்பாகையோ இல்லை என்றேன்’. அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்? எனக் கேட்டார்கள். நான் திங்கள் கிழமை என்றேன். “இன்று என்ன கிழமை? என்று அவர்கள் கேட்டதும் நான் திங்கள் கிழமை என்றேன். அதற்கவர்கள் “இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்.’ என்று கூறிவிட்டு, தாம் நோயுற்றிருந்தபோது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. “இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள். நான், இது பழையதாயிற்றே என்றேன். அதற்கவர்கள் “இறந்தவரை விட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத் தான் போகும் என்றார்கள். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. செவ்வாய் இரவில் தான் மரணித்தார்கள். காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1387

அபூபக்ர் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த கிழமையாகிய திங்கட்கிழமை இறக்க ஆசைப்பட்டார்கள். இன்று இரவு வருவதற்கு முன் மரணித்தால் திங்கள் கிழமை மரணித்தவராக ஆகலாம் என்று கருதினார்கள். ஆனால் அந்தப் பகலில் மரணிக்காமல் இரவு வந்த பின் தான் மரணித்தார்கள். அந்த இரவுக்குப் பெயரிடும்போது ஆயிஷா (ரலி) அவர்கள் திங்கள் இரவு எனக் கூறவில்லை. மாறாக செவ்வாய் இரவு என்று குறிப்பிடுகிறார்கள்.

அதாவது திங்கள் கிழமை பகலுக்குப் பின் வரக் கூடிய இரவைப் பற்றி திங்கள் கிழமை இரவு என்று சொல்லப்பட்டால் இரவில் கிழமை மாறவில்லை என்று கூறலாம். காலையில் தான் தேதி மாறுகிறது என்று சொல்லலாம். ஆனால் திங்கள் கிழமைக்கு பகலுக்குப் பின் வரக்கூடிய இரவை செவ்வாய் இரவு என்று இந்த ஹதீஸில் சொல்லப்படுகிறது. அதாவது திங்கள் கிழமை என்பது மக்ரிபுக்கு முன் முடிந்து விட்டது. மக்ரிப் ஆனதும் செவ்வாய்க் கிழமை ஆரம்பித்து விட்டது என்று இந்த ஹதீஸ் தெள்ளத் தெளிவாக கூறுகிறது.

மற்றொரு செய்தியைப் பாருங்கள்!

سنن الدارمي

213 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْفَزَارِيِّ، عَنْ أَسْلَمَ الْمِنْقَرِيِّ، عَنْ بِلَادِ بْنِ عِصْمَةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ، وَكَانَ إِذَا كَانَ عَشِيَّةَ الْخَمِيسِ ليْلةِ الْجُمُعَةِ، قَامَ فَقَالَ: «إِنَّ أَصْدَقَ الْقَوْلِ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّ أَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالشَّقِيُّ مَنْ شَقِيَ فِي بَطْنِ أُمِّهِ، وَإِنَّ شَرَّ الرَّوَايَا رَوَايَا الْكَذِبِ، وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلَّ مَا هُوَ آتٍ قَرِيبٌ»

[تعليق المحقق] إسناده جيد

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை இரவிற்குரிய வியாழன் மாலை ஆகும்போது எழுந்து “சொல்லில் மிக உண்மையான சொல் அல்லாஹ்வின் சொல்லாகும்….” என்று கூறுவார்.

அறிவிப்பவர்: பிலாத் பின் இஸ்மா

நூல்: தாரமீ 209

வியாழன் மாலைக்குப் பின் வருவது வெள்ளிக்கிழமை இரவு என்று இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதாவது மக்ரிப் நேரம் வந்ததும் தான் தேதி மாறுகிறது. இது தான் நபித்தோழர்கள் காலத்து நடைமுறை என்று இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) கூறுவதைப் பாருங்கள்!

مصنف ابن أبي شيبة

5114 – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِذَا أَدْرَكَتْكَ لَيْلَةُ الْجُمُعَةِ، فَلَا تَخْرُجْ حَتَّى تُصَلِّي الْجُمُعَةَ»

நீ வெள்ளிக்கிழமை இரவை அடைந்து விட்டால் ஜும்ஆத் தொழாமல் (பயணமாக) வெளியே செல்லாதே!

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா 5114

காலையில் தான் நாள் ஆரம்பமாகிறது என்ற கருத்துப் படி வெள்ளிக்கிழமை இரவுக்குப் பின் வரக் கூடிய காலை நேரம் சனிக்கிழமையாக ஆகும். ஆனால் வெள்ளிக்கிழமை இரவுக்குப் பின் வரக் கூடிய பகலும் வெள்ளிக்கிழமையாக இருப்பதால் தான் ஜும்மா தொழாமல் பயணம் போகாதே என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

ஸுப்ஹ் நேரத்தில் நாள் ஆரம்பமாகவில்லை என்பதற்கு இந்தச் செய்தியும் ஆதாரமாக அமைந்துள்ளது.

இதுபோல் இன்றும் ஏராளமான சான்றுகள் மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பதற்குச் சான்றாக உள்ளன.

பல அர்த்தம் கொண்ட நடுத்தொழுகை என்ற சொல்லை வைத்து, நாளின் துவக்கத்தை முடிவு செய்வதை விட கிழமையும், தேதியும் குறித்துப் பேசும் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.

மேற்கண்ட ஆதாரங்களில் இரு ஆதாரங்களுக்கு மட்டும் தான் இவர்கள் பதில் அளித்துள்ளனர். அந்தப் பதிலும் தவறானது என்பதைப் பின்னர் விளக்குவோம். பல ஆதாரங்களைக் கொண்டு நிறுவிய ஒரு நிலைபாட்டை மறுப்பது என்றால் அந்த அனைத்து ஆதாரங்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். இரண்டே இரண்டுக்கு மட்டும் தான் பதில் கொடுக்கிறார்கள் என்றால் மற்ற ஆதாரங்களுக்கு அவர்களிடம் பதில் இல்லை என்பது உறுதியாகி விடுகிறது.

பலகீனமான ஹதீஸ்கள் என இவர்கள் தங்களது மறுப்பில் குறிப்பிட்டிருக்கும் செய்திகள் கீழ்க்காணும் இரு ஹதீஸ்கள் ஆகும்.

லைலத்துல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக் கொண்டோம். இது ரமலான் மாதம் 21ஆம் நாள் காலையில் நடந்தது நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலத்துல் கத்ர் பற்றி கேட்டுவர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று கேட்டனர். 22 ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன் இது தான் அந்த இரவு என்று கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23 ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரழி)

நூல்: அபூதாவூத் 1171

ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: அஹ்மத்(9883), அல்அதபுல் முஃப்ரத்(61), ஷுஅபுல் ஈமான்(7966)

மேலே நாம் எத்தனை ஹதீஸ்களை எடுத்துக் காட்டியுள்ளோம். அவற்றைக் கண்டு கொள்ளாமல் பதில் சொல்லமல் அவற்றில் இரு ஹதீஸ்களை மட்டும் குறிப்பிட்டு பலவீனமானவை என்று பிரசுரத்தில் போட்டுள்ளனர். இவ்விரு ஹதீஸ்களும் பலவீனமானவை அல்ல; அதைப் பின்னர் விளக்கியுள்ளோம். பலவீனமானவை என்று வைத்துக் கொண்டாலும் இந்த இரண்டைத் தவிர மற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு என்ன பதில்? ஒரு பதிலும் அந்தப் பிரசுரத்தில் இல்லை.

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக நாம் முன்வைத்த அபூதாவூத் 1174 ஹதீஸ் புகாரியிலும் பதிவாகியுள்ளது. அதை பலவீனமானது என்று சொல்லப் போகிறார்களா? அந்த ஹதீஸ் இதோ.

صحيح البخاري

2027 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ فِي العَشْرِ الأَوْسَطِ مِنْ رَمَضَانَ، فَاعْتَكَفَ عَامًا، حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ مِنْ صَبِيحَتِهَا مِنَ اعْتِكَافِهِ، قَالَ: «مَنْ كَانَ اعْتَكَفَ مَعِي، فَلْيَعْتَكِفِ العَشْرَ الأَوَاخِرَ، وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ مِنْ صَبِيحَتِهَا، فَالْتَمِسُوهَا فِي العَشْرِ الأَوَاخِرِ، وَالتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ»، فَمَطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ وَكَانَ المَسْجِدُ عَلَى عَرِيشٍ، فَوَكَفَ المَسْجِدُ، فَبَصُرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَبْهَتِهِ أَثَرُ المَاءِ وَالطِّينِ، مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானில் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் – அந்த இரவின் காலையில் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள்- , யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் சஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். (அந்த நாட்களின்) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாசல் (பேரீச்சை ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே பள்ளிவாசல் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் சுப்ஹுத் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் ஈரமான களிமண் படிந்திருந்ததை எனது இரு கண்களும் பார்த்தன.

இந்த ஹதீஸ் நாளின் துவக்கம் எது மக்ரிப் தான் என்பதை தெளிவாகக் கூறுகிறது என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

இது தவிர, மேலும் பல சான்றுகளை நாம் எடுத்து வைத்திருந்தும் கூட அவற்றையெல்லாம் இந்தக் கூட்டம் கண்டுகொள்ளவேயில்லை.

வாதம் ஏழு

இவர்களது கீறல் விழுந்த கேள்விகளில் ஒன்று

பிறைச் செய்தியைச் சொல்வதற்கு மாலை வந்தடைந்த அந்த வாகனக் கூட்டம் நேற்று பிறை பார்த்தோம் என்று ஏன் கூறினார்கள்? நாளின் துவக்கம் பஜர் என்பதால் தானே

என்று கேள்வி கேட்கின்றனர்.

நமது பதில்:

மேலே நாம் அடுக்கியுள்ள சான்றுகள் எதுவும் இவர்களுக்கு ஒரு பொருட்டில்லையாம்! நேற்று என்று அந்த வாகனக் கூட்டம் சொன்னது தான் இவர்கள் கைவசம் உள்ள ஒரே சரக்காக உள்ளது.

இவ்வாதம் அரபி மொழியில் உள்ள சொல்லுக்குரிய சரியான பொருளை அறியாததால் வந்த வினையாகும்.

அவர்கள் நேற்று என்று மொழி பெயர்த்த இடத்தில் அரபி மூலத்தில் அம்ஸி என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

இதற்கு தமிழில் பரவலாக நேற்று என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இதனுடைய சரியான பொருள் என்ன?

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தியிருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கிற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

திருக்குர்ஆன் 10:24

இவ்வசனத்தில் நேற்று என்று மொழிபெயர்த்த இடத்தில் அம்ஸி என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. இதற்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருள் அல்ல!

கடந்த நாட்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். அதுவே இவ்விடத்தில் பொருத்தமாக அமையும். நேற்று என்ற தமிழ்ச் சொல் கடந்து விட்டவைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது போலவே அரபி மொழியில் அம்ஸி என்பதும் பயன்படுத்தப்படுகிறது.

நேற்று எப்படி இருந்தான்? இன்று எப்படி இருக்கிறான்?’ என்று தமிழ் வழக்கில் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்த நேற்றுக்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருளில்லை என்பதை நாம் அறிவோம்.

இதைப் போன்று அரபி மொழியில் அம்ஸி என்ற சொல் முந்தைய நாளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படும். பொதுவாகக் கடந்த காலத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த போன வருடங்களைக் கூட அம்ஸி என்று கூறலாம்.

இதன் அடிப்படையில் இரவில் பிறை பார்த்தவர்கள் ஒரு இரவைக் கடந்து வந்து கூறியுள்ளதால் அம்ஸி நேற்று என்று பயன்படுத்தியுள்ளனர்.

இங்கே இவர்களுக்கு சான்று எதுவும் இல்லை.

வாதம் எட்டு

அடுத்ததாக மற்றுமொரு ஹதீஸை பஜர் தான் நாளின் துவக்கம் என்பதற்கு சான்று எனக்கூறி வைத்துள்ளனர்.

அந்த ஹதீஸ் இதோ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவுகொள்வீர்கள்.

நூல் : புகாரி 5204

இந்த ஹதீஸில் இரவை அந்த நாளின் இறுதி என்று சொல்லப்பட்டிருப்பதால் ஒரு நாளின் துவக்கம் பஜர் தான் என்று வாதிடுகின்றனர்.

நமது பதில்

இதுவும் நுனிப்புல் மேய்வதால் கிடைத்திருக்கும் முடிவே!

இந்தச் செய்தி நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்பதற்கு ஆதாரமாகாது. இங்கே இறுதி என்று கூறப்படுவது இஷாத் தொழுகைக்குப் பிறகு படுக்கைக்குச் செல்லும் நேரம் தான். வேண்டுமானால் இரவு பத்து மணிக்குப் பிறகு 11 மணிக்கு நாளின் துவக்கம் என்று தான் இவர்கள் கூறவேண்டும்.

இங்கே இறுதி என்று கூறப்படுவதின் உண்மையான பொருள் ஒரு மனிதன் கண்விழித்ததிலிருந்து அவன் இறுதியாக தூங்கச் செல்லும் நேரம் என்ற கருத்தில் தான்.

ஒரு பள்ளிக் கூடம் காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு முடிகிறதென்றால் கடைசி வகுப்பை அந்த நாளின் இறுதி வகுப்பு என்று கூறுவார்கள். இதனால் மாலை ஐந்து மணி தான் நாளின் கடைசி என்றாகி விடாது.

ஜனவரி மாதம் தான் வருடம் ஆரம்பமாகிறது என்று நாம் அறிவோம். ஆனால் பள்ளிக்கூடத்தில் பாட நாட்கள் மார்ச் மாதத்தில் முடிவடையும் போது அதனை வருடத்தின் கடைசி நாள் என்பார்கள்.

மார்ச் என்பது வருடத்திற்கே கடைசி அல்ல. மாறாக அந்தப் பள்ளியின் ஆரம்பப் பாட நாட்களைக் கவனிக்கும் போது அது கடைசியாக இருக்கும்.

அது போன்று இங்கு ஒரு மனிதன் விழிப்பது அவனுக்கு ஆரம்பம், அவன் மீண்டும் படுக்கைக்குச் செல்வது அவனுக்குக் கடைசி. இதன் அடிப்படையில் தான் இங்கே நாளின் கடைசி என்று கூறப்பட்டுள்ளது.

இதே ஹதீஸ் அஹ்மதில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

مسند أحمد بن حنبل

16269 – حدثنا عبد الله حدثني أبي ثنا سفيان بن عيينة عن هشام عن أبيه عن عبد الله بن زمعة وعظهم في النساء وقال : علام يضرب أحدكم امرأته ضرب العبد ثم يضاجعها من آخر الليل

 تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط الشيخين

உங்களில் ஒருவர் தன்னுடைய மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று எதற்காக அடிக்க வேண்டும். பிறகு இரவின் கடைசியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்.

நூல் :  அஹ்மத்

இரவின் கடைசி ஃபஜ்ர் வரை உள்ளது என்பது தான் சரியானது. ஆனால் இங்கே இரவில் தூங்கச் செல்லும் நேரத்தை இரவின் கடைசி என்று கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்தே இந்த ஹதீஸில் நாளின் துவக்கத்தைப் பற்றிக் கூறப்படவில்லை. மாறாக ஒரு மனிதன் தூங்கச் செல்லும் கடைசி நேரத்தைப் பற்றிக் கூறப்படுகிறது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதே செய்தி பின்வருமாறும் இடம் பெற்றுள்ளது.

مسند أحمد بن حنبل

16266 – قال حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع عن هشام عن أبيه عن عبد الله بن زمعة قال : سمعت النبي صلى الله عليه و سلم يذكر النساء فوعظ فيهن وقال علام يضرب أحدكم امرأته ولعله ان يضاجعها من آخر النهار أو آخر الليل

قال تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط الشيخين

உங்களில் ஒருவர் தன்னுடைய மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று எதற்காக அடிக்க வேண்டும். பிறகு பகலின் கடைசியில் அல்லது இரவின் கடைசியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்.

நூல் : அஹ்மத் 16266

பகலின் கடைசி, அல்லது இரவின் கடைசி என்று இதில் கூறப்பட்டுள்ளது. பகல் இரவு ஆகியவற்றில் எது முதலாவது என்பது கூறப்படவில்லை. எனவே இந்தச் செய்தி நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்பதற்கு ஒரு போதும் ஆதாரம் ஆகாது.

வாதம் ஒன்பது

அடுத்ததாக, 17:12 இறை வசனமும் நாளின் துவக்கம் பஜ்ர் என்று சான்று பகர்கிறது என்று கூறி, தங்கள் தரப்பிலும் ஆதாரங்கள் வைக்கத்தான் செய்கிறோம் என்று காட்ட முயற்சிக்கிறது இந்த கூட்டம்.

நமது பதில்

இவர்கள் நிஜமாகவே சுய அறிவுடன் தான் இதை எழுதுகிறார்களா என்று நாம் சந்தேகம் கொள்கிறோம்.

இவர்கள் சுட்டிக்காட்டும் வசனத்திற்கும் நாளின் துவக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?

இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவு படுத்தியுள்ளோம்.

திருக்குர்ஆன் 17:12

இதுதான் இவர்கள் சுட்டிக்காட்டும் வசனம்.

இரவின் சான்றைக் குறைத்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம் என்று இதில் சொல்லப்படுகிறது. ஆகவே ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் அறிவதற்கு பகலின் சான்றை வெளிச்சமாக்கியதாக அல்லாஹ் சொல்வதிலிருந்து பகல் தான் நாளின் துவக்கம் என்று இவர்களது ஏழாவது அறிவுக்கு எட்டுகிறதாம்.

அதை விட, தங்களது இந்த மலட்டு சிந்தனை எப்படி தோன்றியது என்பதை விளக்க, அல்லாஹ்வின் மீதே பொய் கூறி இட்டுக் கட்டுகின்றனர் என்பதே இங்குள்ள உச்சகட்ட ஹைலைட்.

அதாவது, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் அறிய வேண்டும் என்று அல்லாஹ் கூறி விட்டான்.

அல்லாஹ் இப்படி மொட்டையாகச் சொல்வானா? ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் அறிய வேண்டும் என்றால் எப்படி அறிவது என்பதையும் அல்லாஹ் சொல்வான். அது தான் பகலிலிருந்து கணக்கை துவங்குவது. அதனால் தான் பகலின் அத்தாட்சியை வெளிச்சமாக்கினோம் என்கிறான்.

என்று அல்லாஹ் சொல்லாத செய்திகளை இவர்களாகத் திணித்து அல்லாஹ்வின் மீதே பொய்யுரைக்கிறார்கள் என்றால் தங்களது நிலையை நியாயப்படுத்த எத்தகைய தகுதிக்கும் இறங்குவார்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகவில்லையா?

நாளின் துவக்கத்தைச் சொல்வதற்கா அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கியுள்ளான்?

காலக் கணக்கை அறிவதற்கு சூரியனை அல்லாஹ் படைத்திருக்கிறான் என்கிற விஷயத்தைச் சொல்வதற்கு இறக்கப்பட்ட வசனம் தான் இது.

ஆகவே தான் பகலைத் தந்திருக்கிறேன் என்று சொல்லாமல் பகலின் சான்றைத் தந்திருக்கிறேன் என்கிறான். பகலின் சான்று என்பது சூரியன் ஆகும். சூரியனைப் பிரகாசமாக்கியதன் மூலம் வியாபாரம், இன்னபிற தொழில்கள் என அல்லாஹ்வின் அருளைத் தேடிச் செல்லலாம், அத்துடன் காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கருத்து தான் இவ்வசனத்திலிருந்து கிடைக்குமே தவிர, பகல் தான் முதன்மை என்பதற்கோ, ஃபஜர் தான் ஆரம்பம் என்பதற்கோ இவ்விடம் எந்த சான்றுமில்லை.

இவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய 24 பக்க நோட்டீசில், நாளின் துவக்கம் ஃபஜ்ர் தான் என்பதற்கு சான்றாக இவர்கள் வைத்த ஆதாரங்கள் மேலே உள்ள மூன்று தான். அந்த மூன்றின் லட்சணத்தை நாம் பார்த்து விட்டோம்.

அது போல், நமது நிலைபாடான மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்கிற கருத்தை முறியடிக்கிறேன் பேர்வழி என்று புகுந்த இவர்கள், இரண்டு செய்திகளை பலகீனம் என்று அறிவிப்பு செய்து செய்து விட்டு, நாம் அடுக்கிய ஏனைய சான்றுகள் குறித்து வாய் திறக்காத அவலநிலையையும் நாம் கண்டோம்.

வாதம் பத்து

நாளின் துவக்கம் தொடர்பாக நாம் வைத்த ஹதீஸில் லைல் என்பதற்கு இரவு என்று மொழியாக்கம் செய்திருந்தோம். இதை விமர்சனம் செய்த இந்தக் கூட்டம், லைல் என்றால் நாள் என்றல்லவா பல ஹதீஸ்களில் அர்த்தம் உள்ளது, நீங்கள் ஏன் இரவு என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள் ? என்று கேட்டுள்ளனர்.

நமது பதில்:

எந்த அரபி மொழி அகராதியிலும் லைல் என்ற சொல் நாள் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை.

லைல் என்ற சொல்லுக்கு நாள் என்று பொருள் இருப்பதாகக் கூறுவது அறியாமை ஆகும்.

لمعجم الوسيط

( الليل ) ما يعقب النهار من الظلام وهو من مغرب الشمس إلى طلوعها وفي لسان الشرع من مغربها إلى طلوع الفجر ويقابل النهار

லைல் என்பது பகலைத் தொடர்ந்து வரும் இருள் ஆகும். லைல் என்பது சூரியன் மறைந்ததிலிருந்து அது உதிக்கும் வரை ஆகும். ஷரியத்தின் மொழி வழக்கிலே சூரியன் மறைந்ததிலிருந்து ஃபஜ்ர் உதயமாகும் வரை ஆகும். லைல் (இரவு) என்பது நஹார் (பகல்) என்பதற்கு எதிர்ச் சொல் ஆகும்.

நூல் அல் முஃஜமுல் வஸீத் பாகம் 2 பக்கம் 619

நான் இரண்டு இரவுகளாகத் தூங்கவில்லை என்று ஒருவர் கூறுகிறார் என வைத்துக் கொள்வோம்.

இந்த வாசகத்தின் பொருள் இரண்டு இரவுகள் அவர் தூங்கவில்லை என்பதுதான்.

இரண்டு இரவுகள் என்பது தொடர்ச்சியாக வராது. ஒரு இரவிற்கு அடுத்து ஒரு பகல் அடுத்துதான் மற்றொரு இரவு வரும்.

இதன் அடிப்படையில் அதில் நாள் என்ற கருத்து அடங்கியுள்ளது என்று கூறலாம். அதாவது இரண்டு நாட்களுக்குரிய இரண்டு இரவுகளில் அவர் தூங்கவில்லை என்பது தான் அதன் பொருள். மாறாக லைல் என்பதற்கு நாள் என்று பொருள் இருப்பதாகக் கூறுவது முட்டாள் தனமாகும்.

உதரணமாக ஒருவர் நான் நெல்லையிலிருந்து சென்னை வரை சென்றேன் எனக் கூறுகிறார். நெல்லையிலிருந்து சென்னை வரை செல்லும் போது அவர் தாம்பரத்தைத் தாண்டித்தான் செல்ல முடியும். எனவே நெல்லையிலிருந்து சென்னை வரை சென்றேன் என்ற வாசகத்தில் தாம்பரமும் உள்ளடங்கியுள்ளது என்று தான் விளங்கிக் கொள்ள முடியும். மாறாக சென்னை என்ற வார்த்தைக்கே ஒருவர் தாம்பரம் என்று தான் பொருள் என ஒருவர் கூறினால் அது முட்டாள்தனமானதாகும்.

அது போன்று தான் மூஸா நபிக்கு அல்லாஹ் நாற்பது இரவுகளை வாக்களித்தான் என்றால் நாற்பது இரவு என்பது தொடர்ச்சியாக வராது. ஒவ்வொரு இரவும் ஒரு பகலைத் தாண்டித்தான் வரும் என்ற அடிப்படையில் இதில் நாற்பது நாள் அடங்கியுள்ளது.

அதாவது நாற்பது நாட்களில் அடங்கியுள்ள நாற்பது இரவுகளை அல்லாஹ் வாக்களித்தான் என்று கூறலாமே தவிர இரவு என்பதின் பொருளே நாள் என்பது தவறானதாகும்.

மேலும் மூஸா நபிக்கு அல்லாஹ் நாற்பது இரவுகளை வாக்களித்தான் என்ற வாசகத்தின் மூலம் மூஸா நபிக்கும், இறைவனுக்கும் உள்ள சம்பாசனைகள் இரவில் தான் நடந்ததே தவிர பகலில் நடந்தது என்ற பொருள் வராது.

ஒருவர் நான் நாற்பது இரவுகள் வேலை பார்த்தேன் என்று சொன்னால் அவர் பகலில் வேலை பார்க்கவில்லை என்பது தான் உண்மை. அதே நேரத்தில் நாற்பது இரவுகள் என்று சொல்வதிலிருந்து அதில் ஒவ்வொரு இரவிற்குரிய பகலும் உள்ளடங்கியிருப்பதால் நாற்பது நாட்களிலுள்ள நாற்பது இரவுகள் என்று தான் விளங்கிக் கொள்ள வேண்டுமே தவிர இரவு என்பதற்கு நாள் என்ற பொருள் உள்ளதாகக் கூறுவது தவறானதாகும்.

லைலத் என்பதற்கு நாள் என்று பொருள் செய்தால் பின்வரும் வசனங்களின் பொருளே தலைகீழாக புரண்டு விடும்.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 2:187

இங்கே லைலத் என்பதற்கு பகல் என பொருள் செய்தால் நோன்பின் பகல் காலங்களில் மனைவியுடன் கூடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று பொருள் வரும். நாள் என்று பொருள் கொண்டால் நோன்பு வைத்துக் கொண்டு பகலிலும் இரவிலும் நாள் முழுவதும் மனைவியுடன் கூடலாம்  என்ற பொருள் வரும். அப்படித்தான் இந்த அமாவாசைக் கூட்டம் சொல்லப் போகிறதா?

صحيح البخاري

1124 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَسْوَدِ، قَالَ: سَمِعْتُ جُنْدَبًا، يَقُولُ: «اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَقُمْ لَيْلَةً أَوْ لَيْلَتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது ஓர் இரவோ, அல்லது இரண்டு இரவுகளோ (தொழுகைக்காக) அவர்கள் எழவில்லை.

அறிவிப்பவர் : ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 1124

இங்கே லைலத் என்பதற்கு நாள் எனப் பொருள் செய்தால் நபியவர்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தொழுகைக்கு எழவில்லை என்ற பாரதூரமான கருத்து வரும்.

صحيح البخاري

1678 – حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ: «أَنَا مِمَّنْ قَدَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ المُزْدَلِفَةِ فِي ضَعَفَةِ أَهْلِهِ»

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மினாவுக்கு) முன் கூட்டியே அனுப்பி வைத்தார்கள். அப்படி அவர்கள் அனுப்பி வைத்தவர்களில் நானும் ஒருவன்.

நூல் : புகாரி 1678

இங்கே முஸ்தலிஃபா இரவு என்பதற்கு முஸ்தலிஃபா நாள் என்று பொருள் செய்தால் ஹஜ்ஜின் வணக்கமே தலைகீழாகிவிடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

صحيح البخاري

35 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَقُمْ لَيْلَةَ القَدْرِ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 35

இங்கே லைலத் என்பதற்கு நாள் எனப் பொருள் செய்தால் ரமலான் மாதம் பகலிலும் நின்று தொழலாம் என்று வரும். இது நபியவர்களின் நடைமுறைக்கு எதிரானதாகும்.

صحيح البخاري

465 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ «أَنَّ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ، وَمَعَهُمَا مِثْلُ المِصْبَاحَيْنِ يُضِيئَانِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ، مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ»

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இருள் கப்பிய ஓர் இரவில் நடந்துசென்றனர். அவ்விருவருடனும் இரு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளி வீசிச் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் போய்ச் சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றறொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.

நூல் : புகாரி  465

இங்கே லைலத் என்பதற்கு நாள் என்று பொருள் செய்தால் இருள் கப்பிய நாள் என்று ஆகும். பகலிலும் இருள் இருந்ததாக ஆகும்.

ஆக, லைல் என்பதன் நேரடி அர்த்தம் இரவு தானே தவிர இவர்கள் கூறுவது போல் பகல் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

வாதம் பதினொன்று

இவர்களது அழுகிப்போன கேள்விப் பட்டியலில் அடுத்ததாக வருவது,

சவூதிக்கும், இந்தியாவுக்கும் 2 1/2 மணி நேர வேறுபாடு இருக்கும் போது பிறைக் கணக்கில் மட்டும் 21 1/2 மணி நேர வேறுபாடு எப்படி வந்தது? என்கிற கேள்வி.

நமது பதில்

அவர்கள் பிறை பார்த்ததன் அடிப்படையில் அவர்களுக்கு மாதம் துவங்கியது, நாம் பிறை பார்த்ததன் மூலம் நமக்கு மாதம் துவங்கியது, பிறை பார்க்க வேண்டும் என்கிற ஹதீஸைச் செயல்படுத்தினால் இந்த வேறுபாடு வரத் தான் செய்யும்.

சவூதியில் பிறை தென்படும் போது இந்தியாவில் பிறை தென்படவும் செய்யலாம், தென்படாமலும் போகலாம். தென்படாமல் போகுமேயானால் அதே பிறையானது மறுநாள் மக்ரிபின் போது நமக்குத் தென்படும். அந்த வகையில் வேறுபாடு வரத்தான் செய்யும்.

ஒருவர் அடைந்து மற்றவர் அடையாமல் இருப்பாரா? அது எப்படி? என்று அறிவியல் அறிவு வளராத காலத்தில் கேட்கலாம். உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு கேட்கலாம். இன்றைக்குக் கேட்க முடியாது.

ஏனெனில் உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அல்லது ஒரே நாளில் ரமளானை அடைவதில்லை.

பிறையைப் பார்த்து மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

(பார்க்க: புகாரி 1906, 1909)

வானில் பிறை தோன்றி அதைக் கண்ணால் பார்க்கும்போது முதல் பிறை என்கிறோம். பிறை கண்ணுக்குத் தெரிவதற்குப் பல்வேறு அம்சங்கள் ஒருங்கிணைய வேண்டும்.

பிறை பிறந்து குறைந்தது 15 முதல் 20 மணி நேரமாவது ஆகியிருக்க வேண்டும். இதற்குக் குறைவான நேரம் கொண்ட பிறையைக் கண்களால் காண முடியாது.

சூரியன் மறைந்த பிறகு பிறை மறைய வேண்டும். சூரியன் மறைவதற்கு முன் பிறை மறைந்து விட்டால், பிறை வானில் இருந்தாலும் அதைக் காண முடியாமல் சூரிய ஒளி தடுத்து விடும்.

மேகம் இல்லாமல் வானம் தெளிவாக இருக்க வேண்டும். மெல்லிய மேகம் கூட தலைப்பிறையை மறைத்து விடும்.

சூரியன் மறைந்து சுமார் 20 – 30 நிமிடங்கள் கழித்து பிறை மறைய வேண்டும். ஏனெனில் சூரியன் மறைந்து அதன் ஒளி அடிவானத்தில் இருந்தால் அந்த வெளிச்சத்தை மீறி பிறை நம் கண்களுக்குத் தென்படாது.

பார்ப்பவரின் கண்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறிய வெண்மேகத்தைக் கூட அவர் பிறை என்று கருதி விடுவார்.

இது போன்ற பல காரணங்கள் ஒருங்கே அமைந்திருந்தால் மட்டுமே தலைப்பிறையைக் காண முடியும்.

ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் பிறையின் வயது 14 மணியாக இருக்கும் போது சூரியன் மறையும் நேரத்தை அடைகிறார்கள். இவர்களின் ஊருக்கு நேராக பிறை இருந்தாலும் உரிய நேரத்தை அப்பிறை அடையாததால் அது இவர்களின் கண்களுக்குத் தென்படாது.

உதாரணமாக சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் சூரியன் மறையும் நேரத்தை அடையும்போது பிறையின் வயது 14 மணியாக இருந்தால் அது அவர்களின் கண்களுக்குத் தென்படாது.

சென்னையை விட சிங்கப்பூர் இரண்டரை மணி நேரம் முந்தி உள்ளது. எனவே சென்னைவாசிகள் இரண்டரை மணி நேரம் கழித்தே சூரியன் மறையும் நேரத்தை அடைவார்கள். இந்த இரண்டரை மணி நேரத்தில் பிறையின் வயதும் இரண்டரை மணி நேரம் அதிகமாகி விடும். 14+2.30=16.30 மணி வயதை பிறை அடைந்து விடும். இது கண்ணால் காண்பதற்குரிய அளவாகும்.

சூரியன் மறைந்தவுடன் மாலை ஆறு மணிக்கு நாம் சென்னையில் தலைப் பிறையைப் பார்க்கிறோம். இவ்வாறு நாம் பிறை பார்க்கும் நேரத்தில் சிங்கப்பூரில் இரவு சுமார் எட்டரை மணியாக இருக்கும்.

நாம் பிறை பார்த்து விட்டதால் நாம் ரமளானை அடைந்து விட்டோம். சிங்கப்பூர்வாசிகள் பிறை பார்க்காமலே பிறை பார்க்கும் நேரத்தைக் கடந்ததால் அவர்கள் ரமளானை அடையவில்லை. மறுநாள் தான் அவர்கள் பிறையைப் பார்க்க முடியும். எனவே மறுநாள் தான் அவர்கள் ரமளானை அடைகிறார்கள். இப்படி இரண்டு ஊரைச் சேர்ந்தவர்களும் இரு வேறு நாட்களில் ரமலானை அடைகிறார்கள்.

யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் என்ற 2:185 வசனம் இதைத் தான் கூறுகிறது.

சென்னையில் பிறை பார்த்ததால் சிங்கப்பூருக்கும், ஏன் உலக முழுமைக்கும் ரமளான் பிறந்து விட்டது என்று யாரேனும் வாதிட்டால் அவர்கள் இவ்வசனத்தின் கருத்தை நிராகரித்தவர்களாகிறார்கள்.

ஏனெனில் இந்தக் கருத்துப்படி அனைவரும் ஒரு நேரத்தில் ரமளானை அடைந்து விட்டனர் என்று ஆகிறது. யார் அடைகிறாரோ என்ற அல்லாஹ்வின் வார்த்தை அர்த்தமற்றதாக ஆக்கப்படுகிறது.

உலகின் ஒரு பகுதியில் பிறை காணப்பட்டால் முழு உலகுக்கும் ரமளான் வந்து விட்டது என்ற வாதத்தை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.

உலகின் ஒரு பகுதியில் பிறை காணப்பட்ட தகவல் கிடைத்தால் முழு உலகுக்கும் ரமளான் வந்து விட்டது என்ற வாதத்தையும் இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.

உலகின் ஏதோ ஒரு பகுதியில் பிறை இன்று தோன்றும் என்று கணிக்கப்படுகிறது. அவ்வாறு கணிக்கப்பட்டால் அது அப்பகுதியில் மட்டுமின்றி அகில உலகுக்கும் தலைப்பிறையாகும் என்ற வாதத்தையும் இவ்வசனம் அடியோடு நிராகரிக்கின்றது.

எல்லோரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைய மாட்டார்கள் என்பது திருக்குர்ஆன் கருத்து.

இவ்வசனம் தலைப்பிறையை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பதைக் கூறாவிட்டாலும் ‘எவ்வாறு தீர்மானிக்கக் கூடாது’ என்பதைக் கூறுகிறது. உலகம் முழுவதும் ஒரே பெருநாள் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்றும் பிரகடனம் செய்கிறது.

வாதம் பன்னிரண்டு

அப்படியே வேறுபாடு என்றாலும் நேர வித்தியாசம் தானே ஏற்பட வேண்டும், ஒரு நாள் எப்படி மாறுபடும்? என்றும் அப்பிரசுரத்தில் கேட்டுள்ளனர்.

நமது பதில்

இதற்கு, குறைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற சிரியா – மதினா தொடர்பான ஹதீஸே இவர்களுக்குப் பதிலாகும். சிரியாவில் வெள்ளிக்கிழமை மாதம் துவங்கியதையும், மதினாவில் சனிக்கிழமை தான் துவங்கியது என்பதையும் அந்த ஹதீஸிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

முக்கியமாக, இந்த வேறுபாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்த வேறுபாடு தான் எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கியதிலிருந்து மாதம் பிறப்பதில் நாள் வேறுபாடு ஏற்படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வாதம் பதிமூன்று

சூரியனைக் கணக்கிட்டு முடிவு செய்யும் நீங்கள் சந்திரனை மட்டும் கணக்கிட மாட்டீர்களோ? என்பது இவர்களது அடுத்த கேள்வி.

நமது பதில்

சூரியன் விஷயத்தில் கணிப்பை ஏற்றுக் கொள்ளும் நாம் சந்திரன் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வேறுபடுத்திக் கூறுவது சரி தான். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துத் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

சூரியன் மறைந்தவுடன் மக்ரிப் தொழ வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். சூரியன் மறைந்தது என்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த உத்தரவையும் இடவில்லை.

மேக மூட்டமான நாட்களில் சூரியன் தென்படாத பல சந்தர்ப்பங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வந்ததுண்டு. அது போன்ற நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மக்ரிப் தொழுங்கள். இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதைக் கருதிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அது போல் சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின் தான் நோன்பு துறக்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் துஆச் செய்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்து ஆறு நாட்கள் நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை என்று புகாரியில் ஹதீஸ் உள்ளது.

(பார்க்க: புகாரி 1013, 1014)

ஆறு நாட்களும் சூரியனையோ, அது உதிப்பதையோ, மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத் தான் தொழுதிருக்க முடியும். அனேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில் தான் மக்ரிப் தொழதிருக்க முடியும்.

மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும் போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள் தான். முதல் நாள் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டனர்.

சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது. அது முப்பதாம் நாள் தான் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும் நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவு கோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வாதம் பதினான்கு

தொடர்ந்து, சூரியன் விஷயமாக தொழுகை நேரங்களை முடிவு செய்ய நிழலை வைத்து அறிந்து கொண்டார்கள். இப்போது ஏன் முன்கூட்டியே கணக்கிட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று அடுத்த பழைய சரக்கொன்றை கேள்வியாக வடித்துள்ளனர்.

நமது பதில்

முன்னர் சொன்ன பதிலில் இதற்கும் விடை உள்ளது. சூரியன் விஷயமாகக் கணிக்கலாம் என்று அனுமதி இருப்பதால் கணிப்பது பற்றி கேள்வி கேட்க முடியாது. சந்திரனைப் பார்த்துத் தான் பிறயை முடிவு செய்ய வேண்டும் என்பதால் அதைக் கணித்து முடிவு செய்யக் கூடாது.

பிறை பற்றி சொல்லப்படும் எந்தச் செய்தியிலும் பிறை உதித்தால் இதைச் செய்யுங்கள் என்று சொல்லப்படவில்லை, பிறையைக் கண்டால் இதைச் செய்யுங்கள் என்று மட்டும் தான் உள்ளது.

பிறை உதித்தால் இதைச் செய்யுங்கள் என்று சொல்வதற்கும் பிறையைப் பார்த்தால் இதைச் செய்யுங்கள் என்பதற்கும் வேறுபாடு உண்டு.

வாதம் பதினைந்து

அடுத்ததாக, தங்களது கணிப்பு சித்தாந்தம் தான் சரி என்பதை நிலைநாட்டுவதற்காக எத்தகைய தகுதிக்கும் இவர்கள் இறங்குவார்கள் என்று முன்னரே நாம் சொல்லியிருந்ததை மெய்ப்பிக்கும் வகையில் இவர்கள் வைக்கும் அடுத்த வாதமானது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தவறு செய்திருப்பதாகவும் அவர்களை விட நாங்கள் தான் சரியாக நடக்கிறோம் என்றும் கூறுகிற இவர்களது அறிவிப்பு!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரியன் தென்படாத நேரத்தில் கணித்து நேரத்தை முடிவு செய்தார்கள் என்று இவர்களே நம் சார்பாக சான்று ஒன்றை காட்டியுள்ளார்கள் என்று சொன்னோமே, அந்த சான்றைக் காட்டி விட்டு இவர்கள் அதிலிருந்து வைக்கும் வாதம் என்ன தெரியுமா?

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது.

பார்க்க : புகாரி 1959

முன்கூட்டியே கணித்துக் கொள்ளும் வசதி கொண்ட இந்தக் காலத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமா? எனக் கேட்கிறார்கள்.

நமது பதில்

முன்கூட்டியே கணித்துக் கொள்ளும் வசதி கொண்ட இந்தக் காலத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமா? எனக் கேட்கிறார்கள். ஏற்படாது தான்.

நபிகள் நாயகம் காலத்தில் சூரியனை எவ்வாறு கணிப்பது அவர்களுக்கு இயன்றதாக இருந்ததோ அவ்வாறு அவர்கள் கணித்தார்கள். இன்று எது நமக்கு இயலுமோ அதை நாம் செய்யலாம்.

அதே சமயம், பிறையை இயன்ற அளவிற்குக் கூட நபியவர்கள் கணிக்கவில்லை, நாமும் இயன்ற அளவிற்குக் கூட கணிக்கக் கூடாது.

குர்ஆன் இது பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

சூரியன் விஷயமாக பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்று ஹதீஸ்கள் இருந்தாலும், குர்ஆனில் சூரியனைக் கணிப்பது கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.

(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்’ என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான்.

திருக்குர்ஆன் 73:20

இந்த வசனத்தில் நேரத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ள இயலாத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள் எனவும், அது தவறு எனவும், அதைத் துல்லியமாக்க் கணிக்க அவர்களால் இயலாது என்பதால் அவர்களை தான் மன்னித்ததாகவும் அல்லாஹ் சொல்கிறான்.

துல்லியமாகக் கணிக்காமல் இருப்பது தவறு என்றும், அது இயலாது என்பதால் அல்லாஹ் மன்னித்தான் எனவும் அல்லாஹ் சொன்னால், அதை துல்லியமாக அறிவதற்குரிய ஆற்றலைப் பெற்றவர்கள் அவ்வாறு கட்டாயம் செய்ய வேண்டும் என்று பொருள்.

ஆக, இறை வசனங்களின் அடிப்படையில் நாம் சிந்திக்கையில், சூரியனை இன்றைய காலகட்டத்தில் கணித்து, துல்லியமான முறையில் நேரத்தைக் கணிக்க வேண்டும் என்று புரிகிறோம்.

இத்தகைய விதி எதுவும் பிறை விஷயமாக குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்படவில்லை எனும் போது, இப்போதும், சூரியனை ஏன் கணிக்கிறீர்கள், அது போல பிறையை ஏன் கணிப்பதில்லை என்கிற பாமரத்தனமான கேள்விகள் அர்த்தமற்றதாகின்றன.

குர்ஆன், சூரியனைக் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு விட்ட பிறகு, இந்தக் கட்டளைக்கு முரணில்லாத வகையிலும், இது தொடர்பாக மேலே நாம் சுட்டிக்காட்டிய இன்னபிற ஹதீஸ்களுக்கு அர்த்தம் கொடுக்கின்ற வகையிலும் தான், இவர்கள் சுட்டிக்காட்டும் நோன்பு திறத்தல் பற்றிய ஹதீஸைப் புரிய வேண்டும்.

இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!

திருக்குர்ஆன் 2:187

இரவு வரை முழுமைப்படுத்த வேண்டும், என்று தான் குர்ஆன் சொல்கிறதே தவிர இரவு வருவதைக் காண்பது வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள் என்று சொல்லப்படவில்லை. இரவு வருவதை எந்த வகையிலும் தீர்மானித்துக் கொள்வதை தடுக்கும் வகையில் இவ்வாசகம் அமையவில்லை.

ஆக, எந்த அடிப்படையில் பார்த்தாலும் சூரியனுக்குரிய பார்வை வேறு! சந்திரனுக்குரிய பார்வை வேறு என்பது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் நிரூபணம் ஆகின்றது.

வாதம் பதினாறு

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, பிறையைக் கணிக்கலாம், கணக்கிடலாம், சிந்திக்கலாம், ஆய்வு செய்யலாம் என்பதற்கு திருக்குர்ஆன் 55:510:5 மற்றும் வசனங்களை மட்டுமே இவர்கள் தங்களது ஆதாரமாகச் சமர்ப்பிக்கின்றனர்.

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன

திருக்குர்ஆன் 55:5

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். (10:5)

நமது பதில்

சந்திரன் கணக்கின் படி இயங்குகின்றது எனபதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. சந்திரன் மட்டுமின்றி எல்லா கோள்களும் கணக்கின்படியே இயங்குகின்றன என்பதும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. உலக நடப்புகளுக்காக ஆய்வுக்காக சந்திரனைக் குறித்து ஆய்வு செய்யலாம். ஆனால் நமது வணக்கங்களை நிறைவேற்ற அதைப் பயன்படுத்தலாமா என்பது தான் கேள்வி.

முன்னரே பிறை பிறந்திருந்தாலும் உங்கள் கண்களுக்குத் தெரிவதை வைத்து நாளை முடிவு செய்யுங்கள் என்ற ஹதீஸ் காரணமாகவே இந்த வணக்கத்தை செய்ய கணிப்பைப் பயன்படுத்தாதீர்கள் என்பது தான் நமது நிலைபாடு.

ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிய சூரியனும் உதவுகிறது, சந்திரனும் உதவுகிறது.

முன்கூட்டியே கணக்கிட்டாலும், இந்த வசனத்தை நீங்கள் மீறியவர்கள் ஆக மாட்டீர்கள். நான் ஒவ்வொரு மாதமும் பிறையைப் பார்த்தாலும் இந்த வசனத்தை மீறியவர்கள் ஆக மாட்டோம்.

குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள், என்ன நிலையை எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்து, அதிலிருந்து எந்த வழிகாட்டுதல் சரியானது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அந்த வழிகாட்டுல்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவான முறையில் புறக்கண்ணால் பிறையைப் பார்த்து மாதங்களைத் துவக்க வேண்டும் என்கிற சட்டத்தைத் தான் சொல்கிறது என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.