Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 57 அல் ஹதீத்
மொத்த வசனங்கள் : 29
அல் ஹதீத் – இரும்பு
இந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் இரும்பைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு அல்ஹதீத் (இரும்பு) என்று பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

57:1. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
سَبَّحَ لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

57:2. வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். அனைத்துப் பொருட்கள் மீதும் அவன் ஆற்றலுடையவன்.
لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يُحْىِۦ وَيُمِيتُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

57:3. அவனே முதலானவன்; முடிவானவன்; வெளிப்படையானவன்; அந்தரங்கமானவன். ஒவ்வொரு பொருளையும் அவன் அறிந்தவன்.
هُوَ ٱلْأَوَّلُ وَٱلْـَٔاخِرُ وَٱلظَّـٰهِرُ وَٱلْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ

57:4. வானங்களையும்,507 பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான்.511 பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானிலிருந்து507 இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்.49 நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.488
هُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۚ يَعْلَمُ مَا يَلِجُ فِى ٱلْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَا ۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

57:5. வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. காரியங்கள் (யாவும்) அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.
لَّهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ

57:6. இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். உள்ளங்களில் உள்ளவற்றையும் அவன் அறிந்தவன்.
يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ ۚ وَهُوَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

57:7. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புங்கள்! எதன் மேல் உங்களைப் பொறுப்பாளர்களாக அவன் ஆக்கியுள்ளானோ அதிலிருந்து (நல்வழியில்) செலவு செய்யுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டு (நல்வழியில்) செலவிடுவோருக்கு பெரிய கூலி உண்டு.
ءَامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَأَنفِقُوا۟ مِمَّا جَعَلَكُم مُّسْتَخْلَفِينَ فِيهِ ۖ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَأَنفَقُوا۟ لَهُمْ أَجْرٌ كَبِيرٌ

57:8. உங்கள் இறைவனை நம்புமாறு தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வை நம்பாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? உங்களிடம் அவன் (முன்னரே) உறுதிமொழியும் எடுத்துள்ளான். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் (அதை மறக்க வேண்டாம்)
وَمَا لَكُمْ لَا تُؤْمِنُونَ بِٱللَّهِ ۙ وَٱلرَّسُولُ يَدْعُوكُمْ لِتُؤْمِنُوا۟ بِرَبِّكُمْ وَقَدْ أَخَذَ مِيثَـٰقَكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ

57:9. இருள்களிலிருந்து303 ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவனே தனது அடியார் மீது தெளிவான சான்றுகளை இறக்குகிறான். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவன்; நிகரற்ற அன்புடையோன்.
هُوَ ٱلَّذِى يُنَزِّلُ عَلَىٰ عَبْدِهِۦٓ ءَايَـٰتٍۭ بَيِّنَـٰتٍ لِّيُخْرِجَكُم مِّنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ ۚ وَإِنَّ ٱللَّهَ بِكُمْ لَرَءُوفٌ رَّحِيمٌ

57:10. அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள்507 மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
وَمَا لَكُمْ أَلَّا تُنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ لَا يَسْتَوِى مِنكُم مَّنْ أَنفَقَ مِن قَبْلِ ٱلْفَتْحِ وَقَـٰتَلَ ۚ أُو۟لَـٰٓئِكَ أَعْظَمُ دَرَجَةً مِّنَ ٱلَّذِينَ أَنفَقُوا۟ مِنۢ بَعْدُ وَقَـٰتَلُوا۟ ۚ وَكُلًّا وَعَدَ ٱللَّهُ ٱلْحُسْنَىٰ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

57:11. அல்லாஹ்வுக்கு யாரேனும் அழகிய கடன்75 வழங்கினால் அதை அவருக்கு அவன் பன்மடங்காக வழங்குவான். அவருக்கு மகத்தான கூலியும் உண்டு.
مَّن ذَا ٱلَّذِى يُقْرِضُ ٱللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَـٰعِفَهُۥ لَهُۥ وَلَهُۥٓ أَجْرٌ كَرِيمٌ

57:12. நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும், வலப்புறமும் விரைவதை நீர் காணும் நாள்! இன்று சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி.
يَوْمَ تَرَى ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ يَسْعَىٰ نُورُهُم بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَـٰنِهِم بُشْرَىٰكُمُ ٱلْيَوْمَ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

57:13. “எங்களைக் கவனியுங்கள்! உங்கள் ஒளியில் நாங்களும் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறோம்” என்று நம்பிக்கை கொண்டோரிடம் நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் அந்நாளில் கூறுவார்கள். “உங்கள் பின்புறமாகத் திரும்பிச் சென்று ஒளியைத் தேடுங்கள்!” எனக் கூறப்படும். அவர்களுக்கிடையே ஒரு தடுப்புச் சுவர் அமைக்கப்படும். அதற்கு வாசலும் இருக்கும். அதன் உட்புறத்தில் அருள் இருக்கும். அதன் வெளிப்புறத்தில் இருந்து வேதனை இருக்கும்.
يَوْمَ يَقُولُ ٱلْمُنَـٰفِقُونَ وَٱلْمُنَـٰفِقَـٰتُ لِلَّذِينَ ءَامَنُوا۟ ٱنظُرُونَا نَقْتَبِسْ مِن نُّورِكُمْ قِيلَ ٱرْجِعُوا۟ وَرَآءَكُمْ فَٱلْتَمِسُوا۟ نُورًا فَضُرِبَ بَيْنَهُم بِسُورٍ لَّهُۥ بَابٌۢ بَاطِنُهُۥ فِيهِ ٱلرَّحْمَةُ وَظَـٰهِرُهُۥ مِن قِبَلِهِ ٱلْعَذَابُ

57:14. “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று அவர்களை அழைப்பார்கள். “அவ்வாறில்லை! உங்களை நீங்களே துன்பத்திலாழ்த்திக் கொண்டீர்கள். (இதை எங்களுக்கு) எதிர்பார்த்தீர்கள். சந்தேகம் கொண்டீர்கள். அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை உங்களைப் பேராசைகள் ஏமாற்றி விட்டன. ஏமாற்றுக்காரனும் (ஷைத்தான்) உங்களை அல்லாஹ் விஷயத்தில் ஏமாற்றி விட்டான்” என்று அவர்கள் கூறுவார்கள்.
يُنَادُونَهُمْ أَلَمْ نَكُن مَّعَكُمْ ۖ قَالُوا۟ بَلَىٰ وَلَـٰكِنَّكُمْ فَتَنتُمْ أَنفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَٱرْتَبْتُمْ وَغَرَّتْكُمُ ٱلْأَمَانِىُّ حَتَّىٰ جَآءَ أَمْرُ ٱللَّهِ وَغَرَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ

57:15. இன்று உங்களிடமிருந்தும் (ஏகஇறைவனை) மறுத்தோரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. உங்கள் தங்குமிடம் நரகமே. அதுவே உங்கள் துணை. அது மிகவும் கெட்ட தங்குமிடம்.
فَٱلْيَوْمَ لَا يُؤْخَذُ مِنكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ مَأْوَىٰكُمُ ٱلنَّارُ ۖ هِىَ مَوْلَىٰكُمْ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ

57:16. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும், (இறைவனிடமிருந்து) இறங்கிய உண்மையினாலும் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா? (அதற்கு) முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டோரைப் போல் அவர்கள் ஆகாமல் இருப்பதற்கும் நேரம் வரவில்லையா? காலம் நீண்டு விட்டதால் அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்களில் அதிமானோர் குற்றவாளிகள்.
۞ أَلَمْ يَأْنِ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ ٱللَّهِ وَمَا نَزَلَ مِنَ ٱلْحَقِّ وَلَا يَكُونُوا۟ كَٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ ٱلْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ فَـٰسِقُونَ

57:17. பூமி மரணித்த பின் அதை அல்லாஹ் உயிர்ப்பிக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்தினோம்.
ٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يُحْىِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

57:18. தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன்75 கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
إِنَّ ٱلْمُصَّدِّقِينَ وَٱلْمُصَّدِّقَـٰتِ وَأَقْرَضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًا يُضَـٰعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ

57:19. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புவோரே தம் இறைவனிடம் உண்மைப்படுத்தியோரும், சாட்சி கூறுவோரும் ஆவர். அவர்களுக்கு அவர்களின் கூலியும், ஒளியும் உண்டு. (நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரே நரகவாசிகள்.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦٓ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلصِّدِّيقُونَ ۖ وَٱلشُّهَدَآءُ عِندَ رَبِّهِمْ لَهُمْ أَجْرُهُمْ وَنُورُهُمْ ۖ وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَآ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَحِيمِ

57:20. “விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட்செல்வத்தையும், மக்கட்செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
ٱعْلَمُوٓا۟ أَنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَـٰدِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ ٱلْكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَـٰمًا ۖ وَفِى ٱلْـَٔاخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنٌ ۚ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَـٰعُ ٱلْغُرُورِ

57:21. உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம்507 மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
سَابِقُوٓا۟ إِلَىٰ مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ أُعِدَّتْ لِلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ ۚ ذَٰلِكَ فَضْلُ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ

57:22. இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில்157 இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍ فِى ٱلْأَرْضِ وَلَا فِىٓ أَنفُسِكُمْ إِلَّا فِى كِتَـٰبٍ مِّن قَبْلِ أَن نَّبْرَأَهَآ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ

57:23. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்).289 கர்வமும், பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
لِّكَيْلَا تَأْسَوْا۟ عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا۟ بِمَآ ءَاتَىٰكُمْ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

57:24. அவர்கள் தாமும் கஞ்சத்தனம் செய்து மக்களுக்கும் கஞ்சத்தனத்தை ஏவுவார்கள். யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவைகளற்றவன்;485 புகழுக்குரியவன்.
ٱلَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبُخْلِ ۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ

57:25. நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம்.423 அதில் கடுமையான ஆற்றலும், மக்களுக்குப் பயன்களும் உள்ளன. தனக்கும், தன் தூதர்களுக்கும் மறைவாக உதவி செய்வோரை அல்லாஹ் அடையாளம் காட்டுவான். அல்லாஹ் வலிமை உள்ளவன்; மிகைத்தவன்.
لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِٱلْبَيِّنَـٰتِ وَأَنزَلْنَا مَعَهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلْقِسْطِ ۖ وَأَنزَلْنَا ٱلْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَـٰفِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُۥ وَرُسُلَهُۥ بِٱلْغَيْبِ ۚ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ عَزِيزٌ

57:26. நூஹையும், இப்ராஹீமையும் தூதர்களாக அனுப்பினோம். அவர்களது வழித்தோன்றல்களில் நபி எனும் தகுதியையும், வேதத்தையும் அமைத்தோம். அவர்களில் நேர்வழி பெற்றவரும் உண்டு. அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا وَإِبْرَٰهِيمَ وَجَعَلْنَا فِى ذُرِّيَّتِهِمَا ٱلنُّبُوَّةَ وَٱلْكِتَـٰبَ ۖ فَمِنْهُم مُّهْتَدٍ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ فَـٰسِقُونَ

57:27. பின்னர் அவர்களின் அடிச்சுவட்டில் நமது தூதர்களைத் தொடர்ந்து அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவையும் (அவர்களைத்) தொடர்ந்து அனுப்பினோம். அவருக்கு இஞ்சீலைக் கொடுத்தோம்.491 அவரைப் பின்பற்றியோரின் உள்ளங்களில் இரக்கத்தையும், அன்பையும் ஏற்படுத்தினோம். அவர்கள், தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.
ثُمَّ قَفَّيْنَا عَلَىٰٓ ءَاثَـٰرِهِم بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيسَى ٱبْنِ مَرْيَمَ وَءَاتَيْنَـٰهُ ٱلْإِنجِيلَ وَجَعَلْنَا فِى قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ٱبْتَدَعُوهَا مَا كَتَبْنَـٰهَا عَلَيْهِمْ إِلَّا ٱبْتِغَآءَ رِضْوَٰنِ ٱللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ۖ فَـَٔاتَيْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنْهُمْ أَجْرَهُمْ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ فَـٰسِقُونَ

57:28. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனது தூதரை நம்புங்கள். அவன் தனது அருளில் இரு மடங்கை உங்களுக்கு வழங்குவான். உங்களுக்கு ஒளியை ஏற்படுத்துவான். அதன் மூலம் (நல்வழியில்) நடப்பீர்கள். உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَءَامِنُوا۟ بِرَسُولِهِۦ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِن رَّحْمَتِهِۦ وَيَجْعَل لَّكُمْ نُورًا تَمْشُونَ بِهِۦ وَيَغْفِرْ لَكُمْ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

57:29. வேதமுடையோர்27 அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் தாம் சக்தி பெற மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக (உங்களுக்கு அருள் புரிந்தான்.) அருள் அல்லாஹ்வின் கையில் உள்ளது. தான் நாடியோருக்கு அவன் அதைக் கொடுப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
لِّئَلَّا يَعْلَمَ أَهْلُ ٱلْكِتَـٰبِ أَلَّا يَقْدِرُونَ عَلَىٰ شَىْءٍ مِّن فَضْلِ ٱللَّهِ ۙ وَأَنَّ ٱلْفَضْلَ بِيَدِ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ