Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 19 மர்யம்

மொத்த வசனங்கள் : 98

மர்யம் – ஈஸா நபியின் தாயாரின் பெயர்

இந்த அத்தியாயத்தின் 16 முதல் 34 வரை உள்ள வசனங்களில் மர்யம் (அலை) அவர்கள் கணவரில்லாமல் கருவுற்று ஈஸா நபியை ஈன்றெடுத்த செய்தி கூறப்படுவதால் மர்யம் என்று இந்த அத்தியாயம் பெயர்பெற்றது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

19:1. காஃப், ஹா, யா, ஐன், ஸாத்.2
كٓهيعٓصٓ

19:2. (இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்!
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهُۥ زَكَرِيَّآ

19:3. அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார்.
إِذْ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيًّا

19:4. என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை.
قَالَ رَبِّ إِنِّى وَهَنَ ٱلْعَظْمُ مِنِّى وَٱشْتَعَلَ ٱلرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيًّا

19:5. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப் பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு உதவியாளனை உன் புறத்திலிருந்து நீ எனக்கு வழங்குவாயாக!391
وَإِنِّى خِفْتُ ٱلْمَوَٰلِىَ مِن وَرَآءِى وَكَانَتِ ٱمْرَأَتِى عَاقِرًا فَهَبْ لِى مِن لَّدُنكَ وَلِيًّا

19:6. அவர் எனக்கும், யாகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்.)
يَرِثُنِى وَيَرِثُ مِنْ ءَالِ يَعْقُوبَ ۖ وَٱجْعَلْهُ رَبِّ رَضِيًّا

19:7. “ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை467” (என இறைவன் கூறினான்)
يَـٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَـٰمٍ ٱسْمُهُۥ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُۥ مِن قَبْلُ سَمِيًّا

19:8. “என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் தோன்றுவான்? என் மனைவியோ பிள்ளைப் பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்துவிட்டேன்” என்று அவர் கூறினார்.
قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى غُلَـٰمٌ وَكَانَتِ ٱمْرَأَتِى عَاقِرًا وَقَدْ بَلَغْتُ مِنَ ٱلْكِبَرِ عِتِيًّا

19:9. “அப்படித்தான்” என்று (இறைவன்) கூறினான். “அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் உம்மைப் படைத்தேன் எனவும் உமது இறைவன் கூறுகிறான்.
قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَقَدْ خَلَقْتُكَ مِن قَبْلُ وَلَمْ تَكُ شَيْـًٔا

19:10. “என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!” என்று அவர் கேட்டார். “குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேசமாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்” என்று அவன் கூறினான்.
قَالَ رَبِّ ٱجْعَل لِّىٓ ءَايَةً ۚ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَـٰثَ لَيَالٍ سَوِيًّا

19:11. தொழுமிடத்தை விட்டு அவர் தமது சமுதாயத்திடம் வந்து “காலையிலும், மாலையிலும் துதியுங்கள்!” என்று (சைகையால்) அறிவித்தார்.
فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِۦ مِنَ ٱلْمِحْرَابِ فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ أَن سَبِّحُوا۟ بُكْرَةً وَعَشِيًّا

19:12. யஹ்யாவே! இவ்வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக! (என்று கூறினோம்) சிறுவராக இருக்கும் போதே276 அவருக்கு அதிகாரத்தை164 அளித்தோம்.
يَـٰيَحْيَىٰ خُذِ ٱلْكِتَـٰبَ بِقُوَّةٍ ۖ وَءَاتَيْنَـٰهُ ٱلْحُكْمَ صَبِيًّا

19:13.
وَحَنَانًا مِّن لَّدُنَّا وَزَكَوٰةً ۖ وَكَانَ تَقِيًّا

19:14. நம்மிடமிருந்து இரக்கத்தன்மை பெற்றவராகவும், தூய்மையானவராகவும், (நம்மை) அஞ்சுபவராகவும், தமது பெற்றோருக்கு நன்மை செய்பவராகவும் அவர் இருந்தார். பாவம் செய்பவராகவோ, அடக்குமுறை செய்பவராகவோ அவர் இருக்கவில்லை.26
وَبَرًّۢا بِوَٰلِدَيْهِ وَلَمْ يَكُن جَبَّارًا عَصِيًّا

19:15. அவர் பிறந்த நாளிலும், அவர் மரணிக்கும் நாளிலும், உயிருடன் அவர் எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது நிம்மதி உண்டு.
وَسَلَـٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا

19:16. இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.
وَٱذْكُرْ فِى ٱلْكِتَـٰبِ مَرْيَمَ إِذِ ٱنتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا

19:17. அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை444 அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.
فَٱتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَآ إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا

19:18. “நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று (மர்யம்) கூறினார்.
قَالَتْ إِنِّىٓ أَعُوذُ بِٱلرَّحْمَـٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيًّا

19:19. “நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்”161 என்று அவர் கூறினார்.
قَالَ إِنَّمَآ أَنَا۠ رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَـٰمًا زَكِيًّا

19:20. “எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?” என்று (மர்யம்) கேட்டார்.
قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِى غُلَـٰمٌ وَلَمْ يَمْسَسْنِى بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا

19:21. “அப்படித்தான்” என்று (இறைவன்) கூறினான். “இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும்,415 நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை எனவும் உமது இறைவன் கூறினான்” (என்று ஜிப்ரீல் கூறினார்.)
قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ ۖ وَلِنَجْعَلَهُۥٓ ءَايَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ وَكَانَ أَمْرًا مَّقْضِيًّا

19:22. உடனே கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
۞ فَحَمَلَتْهُ فَٱنتَبَذَتْ بِهِۦ مَكَانًا قَصِيًّا

19:23. பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. “நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.
فَأَجَآءَهَا ٱلْمَخَاضُ إِلَىٰ جِذْعِ ٱلنَّخْلَةِ قَالَتْ يَـٰلَيْتَنِى مِتُّ قَبْلَ هَـٰذَا وَكُنتُ نَسْيًا مَّنسِيًّا

19:24. “கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்”436 என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
فَنَادَىٰهَا مِن تَحْتِهَآ أَلَّا تَحْزَنِى قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا

19:25. “பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்)
وَهُزِّىٓ إِلَيْكِ بِجِذْعِ ٱلنَّخْلَةِ تُسَـٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا

19:26. நீர், உண்டு பருகி மனநிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் “நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்” என்று கூறுவீராக!277
فَكُلِى وَٱشْرَبِى وَقَرِّى عَيْنًا ۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلْبَشَرِ أَحَدًا فَقُولِىٓ إِنِّى نَذَرْتُ لِلرَّحْمَـٰنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ ٱلْيَوْمَ إِنسِيًّا

19:27. (பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். “மர்யமே! பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே?” என்று அவர்கள் கேட்டனர்.
فَأَتَتْ بِهِۦ قَوْمَهَا تَحْمِلُهُۥ ۖ قَالُوا۟ يَـٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـًٔا فَرِيًّا

19:28. “ஹாரூனின் சகோதரியே!450 உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்ததில்லை” (என்றனர்)
يَـٰٓأُخْتَ هَـٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا

19:29. அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! “தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?” என்று அவர்கள் கேட்டார்கள்.
فَأَشَارَتْ إِلَيْهِ ۖ قَالُوا۟ كَيْفَ نُكَلِّمُ مَن كَانَ فِى ٱلْمَهْدِ صَبِيًّا

19:31.
وَجَعَلَنِى مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَـٰنِى بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمْتُ حَيًّا

19:32. நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஜகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான்.278 என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.26
وَبَرًّۢا بِوَٰلِدَتِى وَلَمْ يَجْعَلْنِى جَبَّارًا شَقِيًّا

19:33. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம்159 இருக்கிறது” (என்றார்)
وَٱلسَّلَـٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا

19:34. இவரே மர்யமின் மகன் ஈஸா. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே.
ذَٰلِكَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ۚ قَوْلَ ٱلْحَقِّ ٱلَّذِى فِيهِ يَمْتَرُونَ

19:35. எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன்.10 ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு என்றே அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும்.
مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍ ۖ سُبْحَـٰنَهُۥٓ ۚ إِذَا قَضَىٰٓ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

19:36. “அல்லாஹ்வே எனது இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழி” (என்று கூறுவீராக!)
وَإِنَّ ٱللَّهَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ هَـٰذَا صِرَٰطٌ مُّسْتَقِيمٌ

19:37. அவர்களுக்கிடையே உள்ள பல்வேறு பிரிவினரும் முரண்பட்டனர். மகத்தான நாள்1 வரும்போது (ஏகஇறைவனை) மறுப்போருக்குக் கேடு உள்ளது.
فَٱخْتَلَفَ ٱلْأَحْزَابُ مِنۢ بَيْنِهِمْ ۖ فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن مَّشْهَدِ يَوْمٍ عَظِيمٍ

19:38. நம்மிடம் அவர்கள் வரும் நாளில் தெளிவாகப் பார்ப்பார்கள்; தெளிவாகக் கேட்பார்கள். எனினும் அநீதி இழைத்தோர் அன்று பகிரங்கமான வழிகேட்டில் இருப்பார்கள்.
أَسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا ۖ لَـٰكِنِ ٱلظَّـٰلِمُونَ ٱلْيَوْمَ فِى ضَلَـٰلٍ مُّبِينٍ

19:39. அவர்கள் எண்ணிப் பார்க்காமலும், நம்பிக்கை கொள்ளாமலும் இருக்கும்போது காரியம் முடிக்கப்பட்டு, நட்டம் ஏற்படுத்தும் நாளைப்1 பற்றி எச்சரிப்பீராக!
وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْحَسْرَةِ إِذْ قُضِىَ ٱلْأَمْرُ وَهُمْ فِى غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ

19:40. பூமிக்கும், அதன் மேல் இருப்போருக்கும் நாம் வாரிசாவோம். அவர்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
إِنَّا نَحْنُ نَرِثُ ٱلْأَرْضَ وَمَنْ عَلَيْهَا وَإِلَيْنَا يُرْجَعُونَ

19:41. இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
وَٱذْكُرْ فِى ٱلْكِتَـٰبِ إِبْرَٰهِيمَ ۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقًا نَّبِيًّا

19:42. “என் தந்தையே! செவியுறாததையும், பார்க்காததையும், உமக்கு எந்தப் பயனும் அளிக்காததையும் ஏன் வணங்குகிறீர்?” என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
إِذْ قَالَ لِأَبِيهِ يَـٰٓأَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِى عَنكَ شَيْـًٔا

19:43. “என் தந்தையே! உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன்” (என்றும் கூறினார்.)
يَـٰٓأَبَتِ إِنِّى قَدْ جَآءَنِى مِنَ ٱلْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَٱتَّبِعْنِىٓ أَهْدِكَ صِرَٰطًا سَوِيًّا

19:44. “என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறுசெய்பவனாவான்” (என்றும் கூறினார்.)
يَـٰٓأَبَتِ لَا تَعْبُدِ ٱلشَّيْطَـٰنَ ۖ إِنَّ ٱلشَّيْطَـٰنَ كَانَ لِلرَّحْمَـٰنِ عَصِيًّا

19:45. “என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன்” (என்றார்.)
يَـٰٓأَبَتِ إِنِّىٓ أَخَافُ أَن يَمَسَّكَ عَذَابٌ مِّنَ ٱلرَّحْمَـٰنِ فَتَكُونَ لِلشَّيْطَـٰنِ وَلِيًّا

19:46. “இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!” என்று (தந்தை) கூறினார்.
قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنْ ءَالِهَتِى يَـٰٓإِبْرَٰهِيمُ ۖ لَئِن لَّمْ تَنتَهِ لَأَرْجُمَنَّكَ ۖ وَٱهْجُرْنِى مَلِيًّا

19:47. “உங்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான்.247
قَالَ سَلَـٰمٌ عَلَيْكَ ۖ سَأَسْتَغْفِرُ لَكَ رَبِّىٓ ۖ إِنَّهُۥ كَانَ بِى حَفِيًّا

19:48. உங்களையும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றையும் விட்டு விலகிக் கொள்கிறேன். என் இறைவனிடமே பிரார்த்தனை செய்வேன். எனது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதில் துர்பாக்கியசாலியாக ஆகாமல் இருப்பேன்” (என்று இப்ராஹீம் கூறினார்.)
وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدْعُوا۟ رَبِّى عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّى شَقِيًّا

19:49. அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்தவற்றையும் விட்டு அவர் விலகியபோது அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் அன்பளிப்பாக வழங்கினோம். இருவரையும் நபியாக்கினோம்.
فَلَمَّا ٱعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَهَبْنَا لَهُۥٓ إِسْحَـٰقَ وَيَعْقُوبَ ۖ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا

19:50. அவர்களுக்கு நமது அருளையும் அன்பளிப்பாக வழங்கினோம். அவர்களுக்கு உயர்வான புகழையும் ஏற்படுத்தினோம்.
وَوَهَبْنَا لَهُم مِّن رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا

19:51. இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் தேர்வு செய்யப்பட்டவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
وَٱذْكُرْ فِى ٱلْكِتَـٰبِ مُوسَىٰٓ ۚ إِنَّهُۥ كَانَ مُخْلَصًا وَكَانَ رَسُولًا نَّبِيًّا

19:52. தூர் மலையின் வலப் பகுதியிலிருந்து அவரை அழைத்தோம். (நம்மிடம்) பேசுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம்.
وَنَـٰدَيْنَـٰهُ مِن جَانِبِ ٱلطُّورِ ٱلْأَيْمَنِ وَقَرَّبْنَـٰهُ نَجِيًّا

19:53. நமது அருளால் அவரது சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அன்பளிப்புச் செய்தோம்.
وَوَهَبْنَا لَهُۥ مِن رَّحْمَتِنَآ أَخَاهُ هَـٰرُونَ نَبِيًّا

19:54. இவ்வேதத்தில் இஸ்மாயீலையும் நினைவூட்டுவீராக! அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
وَٱذْكُرْ فِى ٱلْكِتَـٰبِ إِسْمَـٰعِيلَ ۚ إِنَّهُۥ كَانَ صَادِقَ ٱلْوَعْدِ وَكَانَ رَسُولًا نَّبِيًّا

19:55. அவர் தொழுகையையும், ஜகாத்தையும் தமது குடும்பத்தாருக்கு ஏவுபவராக இருந்தார். தமது இறைவனால் திருப்தி கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.
وَكَانَ يَأْمُرُ أَهْلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرْضِيًّا

19:56. இவ்வேதத்தில் இத்ரீஸையும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
وَٱذْكُرْ فِى ٱلْكِتَـٰبِ إِدْرِيسَ ۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقًا نَّبِيًّا

19:57. அவரை உயரமான தகுதிக்கு உயர்த்தினோம்.
وَرَفَعْنَـٰهُ مَكَانًا عَلِيًّا

19:58. அவர்கள் ஆதமுடைய வழித்தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்பலில் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித்தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, ஸஜ்தாவில்396 விழுவார்கள்.
أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِن ذُرِّيَّةِ إِبْرَٰهِيمَ وَإِسْرَٰٓءِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَٱجْتَبَيْنَآ ۚ إِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَـٰتُ ٱلرَّحْمَـٰنِ خَرُّوا۟ سُجَّدًا وَبُكِيًّا

19:59. அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள்46 வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் பின்னர் நட்டத்தைச் சந்திப்பார்கள்.
۞ فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُوا۟ ٱلشَّهَوَٰتِ ۖ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا

19:60. திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர.369 அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَـٰلِحًا فَأُو۟لَـٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ شَيْـًٔا

19:61. (அவை) நிலையான சொர்க்கச் சோலைகள்! அளவற்ற அருளாளன் அதைத் தனது அடியார்களுக்கு வாக்களித்து மறைவாக வைத்துள்ளான். அவனது வாக்கு நிறைவேற்றப்படும்.
جَنَّـٰتِ عَدْنٍ ٱلَّتِى وَعَدَ ٱلرَّحْمَـٰنُ عِبَادَهُۥ بِٱلْغَيْبِ ۚ إِنَّهُۥ كَانَ وَعْدُهُۥ مَأْتِيًّا

19:62. அங்கே ஸலாம்159 என்பதைத் தவிர எந்த வீணானதையும் அவர்கள் செவியுற மாட்டார்கள். அங்கே காலையிலும், மாலையிலும் அவர்களுக்குரிய உணவுகள் உள்ளன.
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَـٰمًا ۖ وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا

19:63. நமது அடியார்களில் (நம்மை) அஞ்சுவோரை இந்தச் சொர்க்கத்துக்கு வாரிசுகளாக்குவோம்.
تِلْكَ ٱلْجَنَّةُ ٱلَّتِى نُورِثُ مِنْ عِبَادِنَا مَن كَانَ تَقِيًّا

19:64. (முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை.279 (என்பதை இறைவன் கூறச் சொன்னதாக ஜிப்ரீல் கூறினார்.)492
وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ ۖ لَهُۥ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذَٰلِكَ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا

19:65. வானங்களுக்கும்,507 பூமிக்கும், அவற்றுக்கு இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன். எனவே அவனை வணங்குவீராக! அவனது வணக்கத்திற்காக (சிரமங்களைச்) சகித்துக் கொள்வீராக! அவனுக்கு நிகரானவனை நீர் அறிகிறீரா?
رَّبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَٱعْبُدْهُ وَٱصْطَبِرْ لِعِبَـٰدَتِهِۦ ۚ هَلْ تَعْلَمُ لَهُۥ سَمِيًّا

19:66. “நான் இறந்து விட்டால் இனி மேல் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா?” என்று மனிதன் கேட்கிறான்.
وَيَقُولُ ٱلْإِنسَـٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا

19:67. “முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்”368 என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?506
أَوَلَا يَذْكُرُ ٱلْإِنسَـٰنُ أَنَّا خَلَقْنَـٰهُ مِن قَبْلُ وَلَمْ يَكُ شَيْـًٔا

19:68. உமது இறைவன் மீது சத்தியமாக!379 அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம்.
فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَٱلشَّيَـٰطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا

19:69. பின்னர் ஒவ்வொரு கூட்டத்திலும் அளவற்ற அருளாளனுக்கு மாறுசெய்வதில் மிகக் கடுமையாக இருந்தோரைத் தனியாகப் பிரிப்போம்.
ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمْ أَشَدُّ عَلَى ٱلرَّحْمَـٰنِ عِتِيًّا

19:70. அதில் எரிவதற்குத் தகுதியுடையோர் யார் என்பதை நாம் நன்றாக அறிவோம்.
ثُمَّ لَنَحْنُ أَعْلَمُ بِٱلَّذِينَ هُمْ أَوْلَىٰ بِهَا صِلِيًّا

19:71. உங்களில் எவரும் அதைக் கடக்காமல் இருக்க முடியாது. இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் கடமை.280
وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا

19:72. பின்னர் (நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டு விடுவோம்.
ثُمَّ نُنَجِّى ٱلَّذِينَ ٱتَّقَوا۟ وَّنَذَرُ ٱلظَّـٰلِمِينَ فِيهَا جِثِيًّا

19:73. நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்படும்போது “(நம்) இரு கூட்டத்தினரில் சிறப்பான தங்குமிடத்திலும், சிறப்பான சபையிலும் இருப்போர் யார்?” என்று நம்பிக்கை கொண்டோரை நோக்கி (ஏகஇறைவனை) மறுப்போர் கேட்கின்றனர்.
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَـٰتُنَا بَيِّنَـٰتٍ قَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَىُّ ٱلْفَرِيقَيْنِ خَيْرٌ مَّقَامًا وَأَحْسَنُ نَدِيًّا

19:74. இவர்களை விட அழகிய சாதனங்களுடனும், தோற்றத்துடனும் இருந்த எத்தனையோ தலைமுறையினரை இவர்களுக்கு முன் அழித்துள்ளோம்.
وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَـٰثًا وَرِءْيًا

19:75. “வழிகேட்டில் இருப்போருக்கு அளவற்ற அருளாளன் அவகாசத்தை நீடிக்கிறான்” என்று கூறுவீராக! எச்சரிக்கப்பட்ட வேதனையை அல்லது யுகமுடிவு நேரத்தை1 அவர்கள் சந்திக்கும்போது கெட்ட தங்குமிடத்திற்குரியவரும், பலவீனமான படையுடையவரும் யார்? என்பதை அறிவார்கள்.
قُلْ مَن كَانَ فِى ٱلضَّلَـٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ ٱلرَّحْمَـٰنُ مَدًّا ۚ حَتَّىٰٓ إِذَا رَأَوْا۟ مَا يُوعَدُونَ إِمَّا ٱلْعَذَابَ وَإِمَّا ٱلسَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَأَضْعَفُ جُندًا

19:76. நேர்வழி பெற்றோருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகமாக்குகிறான். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் சிறந்த கூலிக்கும், சிறந்த தங்குமிடத்திற்கும் உரியது.
وَيَزِيدُ ٱللَّهُ ٱلَّذِينَ ٱهْتَدَوْا۟ هُدًى ۗ وَٱلْبَـٰقِيَـٰتُ ٱلصَّـٰلِحَـٰتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ مَّرَدًّا

19:77. நமது வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா? “எனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும்” என்று கூறுகிறான்.
أَفَرَءَيْتَ ٱلَّذِى كَفَرَ بِـَٔايَـٰتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا

19:78. மறைவானவற்றை இவன் கண்டுபிடித்து விட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதிமொழியைப் பெற்றானா?
أَطَّلَعَ ٱلْغَيْبَ أَمِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحْمَـٰنِ عَهْدًا

19:79. அவ்வாறு ஏதுமில்லை. அவன் கூறுவதைப் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேயடியாக நீட்டுவோம்.
كَلَّا ۚ سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُۥ مِنَ ٱلْعَذَابِ مَدًّا

19:80. அவன் எதைப் பற்றிப் பேசினானோ அதற்கு (அவனது செல்வங்களுக்கும், சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகி விடுவோம். தன்னந்தனியாக நம்மிடம் அவன் வருவான்.
وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًا

19:81. தங்களுக்கு உதவுவார்கள் என அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.
وَٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةً لِّيَكُونُوا۟ لَهُمْ عِزًّا

19:82. அவ்வாறு இல்லை. தங்களை இவர்கள் வணங்கியதை அவர்கள் மறுத்து இவர்களுக்கு எதிராவார்கள்.
كَلَّا ۚ سَيَكْفُرُونَ بِعِبَادَتِهِمْ وَيَكُونُونَ عَلَيْهِمْ ضِدًّا

19:83. ஒரேயடியாகத் தூண்டி விடுவதற்காக (நம்மை) மறுப்போரிடம் ஷைத்தான்களை அனுப்புகிறோம் என்பதை நீர் அறியவில்லையா?
أَلَمْ تَرَ أَنَّآ أَرْسَلْنَا ٱلشَّيَـٰطِينَ عَلَى ٱلْكَـٰفِرِينَ تَؤُزُّهُمْ أَزًّا

19:84. எனவே அவர்கள் விஷயத்தில் அவசரப்படாதீர்! அவர்களுக்காகத் துல்லியமாகக் கணக்கிடுகிறோம்.
فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ ۖ إِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا

19:85.
يَوْمَ نَحْشُرُ ٱلْمُتَّقِينَ إِلَى ٱلرَّحْمَـٰنِ وَفْدًا

19:86. (இறைவனை) அஞ்சுவோரை அளவற்ற அருளாளனிடம் குழுவாக ஒன்று சேர்க்கும் நாளில்1 குற்றவாளிகளை நரகை நோக்கி தாகமுள்ளோராக ஓட்டிச் செல்வோம்.26
وَنَسُوقُ ٱلْمُجْرِمِينَ إِلَىٰ جَهَنَّمَ وِرْدًا

19:87. அளவற்ற அருளாளனிடம் உறுதிமொழி பெற்றவர் தவிர பரிந்துரைக்க17 எவரும் அதிகாரம் பெற மாட்டார்.
لَّا يَمْلِكُونَ ٱلشَّفَـٰعَةَ إِلَّا مَنِ ٱتَّخَذَ عِندَ ٱلرَّحْمَـٰنِ عَهْدًا

19:88. “அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحْمَـٰنُ وَلَدًا

19:89. அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள்.
لَّقَدْ جِئْتُمْ شَيْـًٔا إِدًّا

19:90.
تَكَادُ ٱلسَّمَـٰوَٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ ٱلْأَرْضُ وَتَخِرُّ ٱلْجِبَالُ هَدًّا

19:91. அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள்507 வெடித்து, பூமி பிளந்து, மலைகள் நொறுங்கப் பார்க்கின்றன.26
أَن دَعَوْا۟ لِلرَّحْمَـٰنِ وَلَدًا

19:92. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை.
وَمَا يَنۢبَغِى لِلرَّحْمَـٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا

19:93. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.
إِن كُلُّ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ إِلَّآ ءَاتِى ٱلرَّحْمَـٰنِ عَبْدًا

19:94. அவர்களை அவன் சரியாக எண்ணிக் கணக்கிட்டிருக்கிறான்.
لَّقَدْ أَحْصَىٰهُمْ وَعَدَّهُمْ عَدًّا

19:95. அவர்கள் அனைவரும் கியாமத் நாளில்1 அவனிடம் தன்னந்தனியாகவே வருவார்கள்.
وَكُلُّهُمْ ءَاتِيهِ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ فَرْدًا

19:96. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான்.
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ سَيَجْعَلُ لَهُمُ ٱلرَّحْمَـٰنُ وُدًّا

19:97. (முஹம்மதே! நம்மை) அஞ்சுவோருக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும், பிடிவாதம் பிடிக்கும் கூட்டத்துக்கு எச்சரிக்கை செய்வதற்காகவுமே உமது மொழியில்244 இதை எளிதாக்கியுள்ளோம்.
فَإِنَّمَا يَسَّرْنَـٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ ٱلْمُتَّقِينَ وَتُنذِرَ بِهِۦ قَوْمًا لُّدًّا

19:98. எத்தனையோ தலைமுறையினரை இவர்களுக்கு முன்னர் அழித்துள்ளோம். அவர்களில் எவரையாவது நீர் காண்கிறீரா? அல்லது அவர்களது முனகலையேனும் செவியுறுகிறீரா?
وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هَلْ تُحِسُّ مِنْهُم مِّنْ أَحَدٍ أَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًۢا