அத்தியாயம் : 63 அல் முனாஃபிகூன்
மொத்த வசனங்கள் : 11
அல் முனாஃபிகூன் – நயவஞ்சகர்கள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி பேசப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
63:1. (முஹம்மதே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும்போது “நீர் அல்லாஹ்வின் தூதரே என்று உறுதி கூறுகிறோம்” என்று கூறுகின்றனர். நீர் அவனுடைய தூதர் என்பதை அல்லாஹ் அறிவான். “நயவஞ்சகர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான்.275
إِذَا جَآءَكَ ٱلْمُنَـٰفِقُونَ قَالُوا۟ نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِ ۗ وَٱللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُۥ وَٱللَّهُ يَشْهَدُ إِنَّ ٱلْمُنَـٰفِقِينَ لَكَـٰذِبُونَ
63:2. அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர்.64 அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது.
ٱتَّخَذُوٓا۟ أَيْمَـٰنَهُمْ جُنَّةً فَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِنَّهُمْ سَآءَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
63:3. அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏகஇறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ذَٰلِكَ بِأَنَّهُمْ ءَامَنُوا۟ ثُمَّ كَفَرُوا۟ فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ
63:4. நீர் அவர்களைக் காணும்போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள். அவர்களே எதிரிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
۞ وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ ۖ وَإِن يَقُولُوا۟ تَسْمَعْ لِقَوْلِهِمْ ۖ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ۖ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ ۚ هُمُ ٱلْعَدُوُّ فَٱحْذَرْهُمْ ۚ قَـٰتَلَهُمُ ٱللَّهُ ۖ أَنَّىٰ يُؤْفَكُونَ
63:5. “வாருங்கள்! உங்களுக்காக அல்லாஹ்வின் தூதர் பாவமன்னிப்புத் தேடுவார்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் தமது தலைகளைத் திருப்பிக் கொள்கின்றனர். மேலும் அகந்தை கொண்டு தடுப்போராக அவர்களைக் காண்பீர்.
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ ٱللَّهِ لَوَّوْا۟ رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُم مُّسْتَكْبِرُونَ
63:6. (முஹம்மதே!) அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புத் தேடுவதும், அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புத் தேடாமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமாகும். அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.490 குற்றம் புரியும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
سَوَآءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَن يَغْفِرَ ٱللَّهُ لَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَـٰسِقِينَ
63:7. “அல்லாஹ்வின் தூதருடன் இருப்போர் (அவரை விட்டும்) விலகாத வரை அவர்களுக்குச் செலவிடாதீர்கள்!” என்று கூறுவோர் அவர்களே. வானங்கள்507 மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனினும் நயவஞ்சகர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
هُمُ ٱلَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُوا۟ عَلَىٰ مَنْ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّوا۟ ۗ وَلِلَّهِ خَزَآئِنُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَـٰكِنَّ ٱلْمُنَـٰفِقِينَ لَا يَفْقَهُونَ
63:8. “மதீனாவுக்கு நாம் திரும்பினால் அங்குள்ள உயர்ந்தோர் இழிந்தோரை வெளியேற்றுவார்கள்” என்று கூறுகின்றனர். கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், நம்பிக்கை கொண்டோருக்கும் உரியது. எனினும் நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்.
يَقُولُونَ لَئِن رَّجَعْنَآ إِلَى ٱلْمَدِينَةِ لَيُخْرِجَنَّ ٱلْأَعَزُّ مِنْهَا ٱلْأَذَلَّ ۚ وَلِلَّهِ ٱلْعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلْمُؤْمِنِينَ وَلَـٰكِنَّ ٱلْمُنَـٰفِقِينَ لَا يَعْلَمُونَ
63:9. நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُلْهِكُمْ أَمْوَٰلُكُمْ وَلَآ أَوْلَـٰدُكُمْ عَن ذِكْرِ ٱللَّهِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ
63:10. உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான்.
وَأَنفِقُوا۟ مِن مَّا رَزَقْنَـٰكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَآ أَخَّرْتَنِىٓ إِلَىٰٓ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّـٰلِحِينَ
63:11. எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
وَلَن يُؤَخِّرَ ٱللَّهُ نَفْسًا إِذَا جَآءَ أَجَلُهَا ۚ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ