Quran Tamil Translation

குர்ஆன் அத்தியாயத்திற்குச் செல்

முந்தைய ஸுரா அடுத்த ஸுரா
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 8 அல் அன்ஃபால்

மொத்த வசனங்கள் : 75

அல் அன்ஃபால் – போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள்

எதிரிகளிடம் போரில் கைப்பற்றப்படுபவை அன்ஃபால் எனப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அன்ஃபால் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.

8:1. போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். “போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் உரியது” என்று கூறுவீராக! எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَنفَالِ ۖ قُلِ ٱلْأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَصْلِحُوا۟ ذَاتَ بَيْنِكُمْ ۖ وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِن كُنتُم مُّؤْمِنِينَ

8:2. நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ ءَايَـٰتُهُۥ زَادَتْهُمْ إِيمَـٰنًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

8:3. அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقْنَـٰهُمْ يُنفِقُونَ

8:4. அவர்களே உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُمْ دَرَجَـٰتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ

8:5. (முஹம்மதே!) உமது இறைவன் உமது வீட்டிலிருந்து உண்மையுடன் உம்மை வெளியேற்றிய (போது வெறுத்த)து போலவே, நம்பிக்கை கொண்டோரில் ஒரு சாரார் (போரை) வெறுத்தனர்.
كَمَآ أَخْرَجَكَ رَبُّكَ مِنۢ بَيْتِكَ بِٱلْحَقِّ وَإِنَّ فَرِيقًا مِّنَ ٱلْمُؤْمِنِينَ لَكَـٰرِهُونَ

8:6. உண்மை தெளிவாகத் தெரிந்த பின்பு உம்மிடம் எதிர்வாதம் செய்கின்றனர். பார்த்துக் கொண்டிருக்கும் போதே மரணத்திற்கு இழுத்துச் செல்லப்படுபவர்களைப் போல் அவர்கள் உள்ளனர்.
يُجَـٰدِلُونَكَ فِى ٱلْحَقِّ بَعْدَ مَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى ٱلْمَوْتِ وَهُمْ يَنظُرُونَ

8:7. “எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)” என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்!358 ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள்155 மூலம் உண்மையை நிலைநாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.196
وَإِذْ يَعِدُكُمُ ٱللَّهُ إِحْدَى ٱلطَّآئِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ ٱلشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ ٱللَّهُ أَن يُحِقَّ ٱلْحَقَّ بِكَلِمَـٰتِهِۦ وَيَقْطَعَ دَابِرَ ٱلْكَـٰفِرِينَ

8:8. குற்றவாளிகள் வெறுத்தபோதும் உண்மையை நிலைநாட்டி, பொய்யை அழித்திட அவன் நாடுகிறான்.
لِيُحِقَّ ٱلْحَقَّ وَيُبْطِلَ ٱلْبَـٰطِلَ وَلَوْ كَرِهَ ٱلْمُجْرِمُونَ

8:9. நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது “உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்” என்று உங்களுக்குப் பதிலளித்தான்.
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَٱسْتَجَابَ لَكُمْ أَنِّى مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ ٱلْمَلَـٰٓئِكَةِ مُرْدِفِينَ

8:10. நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்விடமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِۦ قُلُوبُكُمْ ۚ وَمَا ٱلنَّصْرُ إِلَّا مِنْ عِندِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

8:11. உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து507 தண்ணீரை உங்கள் மீது இறக்கினான்.
إِذْ يُغَشِّيكُمُ ٱلنُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُم بِهِۦ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ ٱلشَّيْطَـٰنِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ ٱلْأَقْدَامَ

8:12. “நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!” என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக!
إِذْ يُوحِى رَبُّكَ إِلَى ٱلْمَلَـٰٓئِكَةِ أَنِّى مَعَكُمْ فَثَبِّتُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۚ سَأُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ فَٱضْرِبُوا۟ فَوْقَ ٱلْأَعْنَاقِ وَٱضْرِبُوا۟ مِنْهُمْ كُلَّ بَنَانٍ

8:13. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அவர்கள் மாறுசெய்தார்கள் என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்வோரை அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
ذَٰلِكَ بِأَنَّهُمْ شَآقُّوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ ۚ وَمَن يُشَاقِقِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ

8:14. இதோ, இதனை அனுபவியுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நரக வேதனை உண்டு.
ذَٰلِكُمْ فَذُوقُوهُ وَأَنَّ لِلْكَـٰفِرِينَ عَذَابَ ٱلنَّارِ

8:15. நம்பிக்கை கொண்டோரே! முன்னேறி வரும் (ஏகஇறைவனை) மறுப்போரை நீங்கள் சந்திக்கும்போது அவர்களுக்குப் புறங்காட்டி ஓடாதீர்கள்!
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ زَحْفًا فَلَا تُوَلُّوهُمُ ٱلْأَدْبَارَ

8:16. அந்நாளில் போரிடுவதற்காக பதுங்கித் தாக்குபவராகவோ, மற்றொரு அணியுடன் சேர்ந்து கொள்பவராகவோ தவிர அவர்களுக்குப் புறங்காட்டி ஓடுபவர் அல்லாஹ்வின் கோபத்துடன் திரும்புகிறார். அவரது தங்குமிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம்.
وَمَن يُوَلِّهِمْ يَوْمَئِذٍ دُبُرَهُۥٓ إِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ أَوْ مُتَحَيِّزًا إِلَىٰ فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ ٱللَّهِ وَمَأْوَىٰهُ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ

8:17. அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். (முஹம்மதே!) நீர் எறிந்தபோது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான்.193 நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.
فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَـٰكِنَّ ٱللَّهَ قَتَلَهُمْ ۚ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَـٰكِنَّ ٱللَّهَ رَمَىٰ ۚ وَلِيُبْلِىَ ٱلْمُؤْمِنِينَ مِنْهُ بَلَآءً حَسَنًا ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

8:18. (தன்னை) மறுப்போரின் சூழ்ச்சியை அல்லாஹ் பலவீனப்படுத்துபவன் என்பதும் இதற்குக் காரணம்.
ذَٰلِكُمْ وَأَنَّ ٱللَّهَ مُوهِنُ كَيْدِ ٱلْكَـٰفِرِينَ

8:19. (ஏகஇறைவனை) மறுப்போரே! நீங்கள் தீர்ப்பைத் தேடுவீர்களானால் இதோ தீர்ப்பு உங்களிடம் வந்து விட்டது. நீங்கள் விலகிக் கொண்டீர்களானால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் மீண்டும் போரிட வந்தால் நாமும் வருவோம். உங்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோதும் அது உங்களுக்குச் சிறிதளவும் உதவாது. நம்பிக்கை கொண்டோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
إِن تَسْتَفْتِحُوا۟ فَقَدْ جَآءَكُمُ ٱلْفَتْحُ ۖ وَإِن تَنتَهُوا۟ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَإِن تَعُودُوا۟ نَعُدْ وَلَن تُغْنِىَ عَنكُمْ فِئَتُكُمْ شَيْـًٔا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُؤْمِنِينَ

8:20. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوْا۟ عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ

8:21. செவியுறாமலே ‘செவியுற்றோம்’ என்று கூறியோரைப் போல் ஆகி விடாதீர்கள்!
وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ قَالُوا۟ سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ

8:22. (உண்மையை) விளங்காத செவிடர்களும், ஊமைகளுமே அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினமாவர்.
۞ إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلصُّمُّ ٱلْبُكْمُ ٱلَّذِينَ لَا يَعْقِلُونَ

8:23. அவர்களிடம் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால்194 அவர்களைச் செவியேற்கச் செய்திருப்பான். அவர்களை அவன் செவியேற்கச் செய்திருந்தாலும் அதை அலட்சியம் செய்து புறக்கணித்திருப்பார்கள்.
وَلَوْ عَلِمَ ٱللَّهُ فِيهِمْ خَيْرًا لَّأَسْمَعَهُمْ ۖ وَلَوْ أَسْمَعَهُمْ لَتَوَلَّوا۟ وَّهُم مُّعْرِضُونَ

8:24. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குப் பதிலளியுங்கள்! உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைக்கும்போது அவருக்கும் (பதிலளியுங்கள்.) ஒரு மனிதனுக்கும், அவனது உள்ளத்திற்கும் இடையே அல்லாஹ் இருக்கிறான் என்பதையும், அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱسْتَجِيبُوا۟ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيْنَ ٱلْمَرْءِ وَقَلْبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيْهِ تُحْشَرُونَ

8:25. ஒரு சோதனையை அஞ்சுங்கள்! அது உங்களில் அநீதி இழைத்தவர்களை மட்டுமே பிடிக்கும் என்பதல்ல.409 அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
وَٱتَّقُوا۟ فِتْنَةً لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنكُمْ خَآصَّةً ۖ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ

8:26. மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சிக் கொண்டும், குறைந்த எண்ணிக்கையிலும், இப்பூமியில் பலவீனர்களாவும் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களுக்குப் புகலிடம் அளித்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.
وَٱذْكُرُوٓا۟ إِذْ أَنتُمْ قَلِيلٌ مُّسْتَضْعَفُونَ فِى ٱلْأَرْضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ ٱلنَّاسُ فَـَٔاوَىٰكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِۦ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَـٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

8:27. நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்!
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَخُونُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ وَتَخُونُوٓا۟ أَمَـٰنَـٰتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ

8:28. உங்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
وَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ أَمْوَٰلُكُمْ وَأَوْلَـٰدُكُمْ فِتْنَةٌ وَأَنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجْرٌ عَظِيمٌ

8:29. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்குத் தெளிவை அவன் வழங்குவான். உங்கள் தீமைகளை உங்களை விட்டு நீக்கி உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تَتَّقُوا۟ ٱللَّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ

8:30. (முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏகஇறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்6. சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
وَإِذْ يَمْكُرُ بِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ ٱللَّهُ ۖ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَـٰكِرِينَ

8:31. அவர்களுக்கு நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘செவியுற்றோம்’ என்றும் ‘நாங்கள் நினைத்தால் இதே போல கூறியிருப்போம்; இது முன்னோர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை’ என்றும் கூறுகின்றனர்.
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَـٰتُنَا قَالُوا۟ قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَقُلْنَا مِثْلَ هَـٰذَآ ۙ إِنْ هَـٰذَآ إِلَّآ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ

8:32. “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையாக இருந்தால் எங்கள் மீது வானத்திலிருந்து507 கல்மழையைப் பொழியச் செய்வாயாக! அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தருவாயாக!” என்று அவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள்!
وَإِذْ قَالُوا۟ ٱللَّهُمَّ إِن كَانَ هَـٰذَا هُوَ ٱلْحَقَّ مِنْ عِندِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ ٱلسَّمَآءِ أَوِ ٱئْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ

8:33. (முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை.
وَمَا كَانَ ٱللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنتَ فِيهِمْ ۚ وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ

8:34. (கஅபா எனும்) புனிதப்பள்ளிக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) அஞ்சுவோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.
وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمُ ٱللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَمَا كَانُوٓا۟ أَوْلِيَآءَهُۥٓ ۚ إِنْ أَوْلِيَآؤُهُۥٓ إِلَّا ٱلْمُتَّقُونَ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

8:35. சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில்33 அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِندَ ٱلْبَيْتِ إِلَّا مُكَآءً وَتَصْدِيَةً ۚ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

8:36. (ஏகஇறைவனை) மறுப்போர் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்காக தமது செல்வங்களைச் செலவிடுகின்றனர். இனியும் செலவிடுவர். அதுவே அவர்களுக்குக் கைசேதமாக அமையும். பின்னர், தோல்வியடைவார்கள். (ஏகஇறைவனை) மறுத்தோர் நரகத்தை நோக்கி ஒன்று திரட்டப்படுவார்கள்.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ لِيَصُدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ ۗ وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ جَهَنَّمَ يُحْشَرُونَ

8:37. நல்லவரிலிருந்து கெட்டவரைப் பிரித்து, கெட்டவரில் ஒருவர் மீது மற்றவரைப் போட்டு, அனைவரையும் குவியலாக்கி நரகத்தில் போடவே (அவர்கள் திரட்டப்படுவார்கள்). அவர்களே நட்டமடைந்தவர்கள்.
لِيَمِيزَ ٱللَّهُ ٱلْخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ وَيَجْعَلَ ٱلْخَبِيثَ بَعْضَهُۥ عَلَىٰ بَعْضٍ فَيَرْكُمَهُۥ جَمِيعًا فَيَجْعَلَهُۥ فِى جَهَنَّمَ ۚ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ

8:38. (ஏகஇறைவனை) மறுப்போர் விலகிக் கொள்வார்களானால் முன் நடந்தவை அவர்களுக்கு மன்னிக்கப்படும். மீண்டும் தொடர்ந்தார்களானால் “முன்னோர் (விஷயத்தில் கடைப்பிடித்த) வழிமுறை ஏற்கனவே சென்று விட்டது” என்று கூறுவீராக!
قُل لِّلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَنتَهُوا۟ يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ وَإِن يَعُودُوا۟ فَقَدْ مَضَتْ سُنَّتُ ٱلْأَوَّلِينَ

8:39. கலகம் இல்லாதொழிந்து அதிகாரம்54 முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!53 அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.488
وَقَـٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ ٱلدِّينُ كُلُّهُۥ لِلَّهِ ۚ فَإِنِ ٱنتَهَوْا۟ فَإِنَّ ٱللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ

8:40. அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் உங்களின் பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலன். சிறந்த உதவியாளன்.
وَإِن تَوَلَّوْا۟ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَوْلَىٰكُمْ ۚ نِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ

8:41. நீங்கள் அல்லாஹ்வை நம்பியவர்களாக இருந்தால், இரு அணிகள் சந்தித்துக் கொண்ட நாளில், வேறுபடுத்திக் காட்டிய நாளில் நமது அடியார் மீது நாம் அருளியதையும் (நம்பியவர்களாக இருந்தால்), போர்க் களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம்195 அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவரது) உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும்206 உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
۞ وَٱعْلَمُوٓا۟ أَنَّمَا غَنِمْتُم مِّن شَىْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُۥ وَلِلرَّسُولِ وَلِذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ إِن كُنتُمْ ءَامَنتُم بِٱللَّهِ وَمَآ أَنزَلْنَا عَلَىٰ عَبْدِنَا يَوْمَ ٱلْفُرْقَانِ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

8:42. (பத்ருப் போரின்போது மதீனாவுக்கு) அருகில் உள்ள பள்ளத்தாக்கில் நீங்களும், தூரமான பள்ளத்தாக்கில் அவர்களும், வியாபாரக் கூட்டத்தினர் உங்களுக்குக் கீழ்ப்புறமும் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! நீங்கள் (ஏற்கனவே) திட்டமிட்டிருந்தால் அத்திட்டத்தில் முரண்பட்டிருப்பீர்கள்.196 செய்யப்பட வேண்டிய காரியத்தைச் செய்து முடிப்பதற்காகவும், அழிந்தவர் தக்க காரணத்துடன் அழிவதற்காகவும், வாழ்பவர் தக்க காரணத்துடன் வாழ்வதற்காகவும் (இறைவன் இந்நிலையை ஏற்படுத்தினான்). அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.
إِذْ أَنتُم بِٱلْعُدْوَةِ ٱلدُّنْيَا وَهُم بِٱلْعُدْوَةِ ٱلْقُصْوَىٰ وَٱلرَّكْبُ أَسْفَلَ مِنكُمْ ۚ وَلَوْ تَوَاعَدتُّمْ لَٱخْتَلَفْتُمْ فِى ٱلْمِيعَـٰدِ ۙ وَلَـٰكِن لِّيَقْضِىَ ٱللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنۢ بَيِّنَةٍ وَيَحْيَىٰ مَنْ حَىَّ عَنۢ بَيِّنَةٍ ۗ وَإِنَّ ٱللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ

8:43. (முஹம்மதே!) உமது கனவில்122 அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண்பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.
إِذْ يُرِيكَهُمُ ٱللَّهُ فِى مَنَامِكَ قَلِيلًا ۖ وَلَوْ أَرَىٰكَهُمْ كَثِيرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَـٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَلَـٰكِنَّ ٱللَّهَ سَلَّمَ ۗ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

8:44. நீங்கள் (களத்தில்) சந்தித்துக் கொண்டபோது உங்கள் கண்களுக்கு அவர்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும், அவர்களின் கண்களுக்கு உங்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் செய்வதற்காக (இவ்வாறு காட்டினான்).466 காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.
وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ ٱلْتَقَيْتُمْ فِىٓ أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِىٓ أَعْيُنِهِمْ لِيَقْضِىَ ٱللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا ۗ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ

8:45. நம்பிக்கை கொண்டோரே! (களத்தில்) ஓர் அணியைச் சந்தித்தால் உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا لَقِيتُمْ فِئَةً فَٱثْبُتُوا۟ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

8:46. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَـٰزَعُوا۟ فَتَفْشَلُوا۟ وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَٱصْبِرُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّـٰبِرِينَ

8:47. தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தவர்களைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.
وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ خَرَجُوا۟ مِن دِيَـٰرِهِم بَطَرًا وَرِئَآءَ ٱلنَّاسِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ وَٱللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ

8:48. ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! “இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்” எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்குநேர் சந்தித்தபோது பின்வாங்கினான். “உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்” என்று கூறினான்.
وَإِذْ زَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَـٰنُ أَعْمَـٰلَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ ٱلْيَوْمَ مِنَ ٱلنَّاسِ وَإِنِّى جَارٌ لَّكُمْ ۖ فَلَمَّا تَرَآءَتِ ٱلْفِئَتَانِ نَكَصَ عَلَىٰ عَقِبَيْهِ وَقَالَ إِنِّى بَرِىٓءٌ مِّنكُمْ إِنِّىٓ أَرَىٰ مَا لَا تَرَوْنَ إِنِّىٓ أَخَافُ ٱللَّهَ ۚ وَٱللَّهُ شَدِيدُ ٱلْعِقَابِ

8:49. “அவர்களை அவர்களின் மார்க்கம் ஏமாற்றி விட்டது” என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளவர்களும் (உங்களைப் பற்றி) கூறியதை எண்ணிப் பாருங்கள்! யார் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறாரோ (அவர் வெற்றி பெறுவார். ஏனெனில்) அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
إِذْ يَقُولُ ٱلْمُنَـٰفِقُونَ وَٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ غَرَّ هَـٰٓؤُلَآءِ دِينُهُمْ ۗ وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

8:50. (ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும்போது,165 “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!”166 என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!
وَلَوْ تَرَىٰٓ إِذْ يَتَوَفَّى ٱلَّذِينَ كَفَرُوا۟ ۙ ٱلْمَلَـٰٓئِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَـٰرَهُمْ وَذُوقُوا۟ عَذَابَ ٱلْحَرِيقِ

8:51. நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம். அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்.
ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ ٱللَّهَ لَيْسَ بِظَلَّـٰمٍ لِّلْعَبِيدِ

8:52. ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.
كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ ۙ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِ ٱللَّهِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ ۗ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ شَدِيدُ ٱلْعِقَابِ

8:53. எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّعْمَةً أَنْعَمَهَا عَلَىٰ قَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا۟ مَا بِأَنفُسِهِمْ ۙ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

8:54. ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் தமது இறைவனின் சான்றுகளைப் பொய்யெனக் கருதினர். அவர்களின் பாவங்கள் காரணமாக அவர்களை அழித்தோம். ஃபிர்அவ்னுடைய ஆட்களை மூழ்கடித்தோம். அனைவரும் அநீதி இழைத்தனர்.
كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ ۙ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِ رَبِّهِمْ فَأَهْلَكْنَـٰهُم بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّ كَانُوا۟ ظَـٰلِمِينَ

8:55. (ஏகஇறைவனை) மறுப்பவர்கள் தான் உயிரினங்களில் அல்லாஹ்விடம் மிகவும் கெட்டவர்கள். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فَهُمْ لَا يُؤْمِنُونَ

8:56. (முஹம்மதே!) அவர்களிடம் நீர் உடன்படிக்கை செய்தீர்! ஒவ்வொரு தடவையும் அவர்கள் தமது உடன்படிக்கையை முறிக்கின்றனர். அவர்கள் அஞ்சுவதில்லை.
ٱلَّذِينَ عَـٰهَدتَّ مِنْهُمْ ثُمَّ يَنقُضُونَ عَهْدَهُمْ فِى كُلِّ مَرَّةٍ وَهُمْ لَا يَتَّقُونَ

8:57. எனவே போரில் அவர்களை நீர் வெற்றி கொண்டால் அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களுடன் அவர்களையும் ஓட ஓட விரட்டுவீராக! அப்போது தான் அவர்கள் பாடம் கற்பார்கள்.
فَإِمَّا تَثْقَفَنَّهُمْ فِى ٱلْحَرْبِ فَشَرِّدْ بِهِم مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ

8:58. ஒரு சமுதாயத்தவர் மோசடி செய்வார்கள் என்று நீர் அஞ்சினால் அவர்களிடம் (செய்த உடன்படிக்கையை) நீரும் சமமாக முறிப்பீராக! மோசடி செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
وَإِمَّا تَخَافَنَّ مِن قَوْمٍ خِيَانَةً فَٱنۢبِذْ إِلَيْهِمْ عَلَىٰ سَوَآءٍ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْخَآئِنِينَ

8:59. (ஏகஇறைவனை) மறுப்போர், தாம் வென்று விட்டதாக நினைக்க வேண்டாம். அவர்கள் வெல்ல மாட்டார்கள்.
وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ سَبَقُوٓا۟ ۚ إِنَّهُمْ لَا يُعْجِزُونَ

8:60. உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்!359 அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம்.197 அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்!53 அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
وَأَعِدُّوا۟ لَهُم مَّا ٱسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ ٱلْخَيْلِ تُرْهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمْ وَءَاخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ ٱللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍ فِى سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ

8:61. அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்;488 அறிந்தவன்.
۞ وَإِن جَنَحُوا۟ لِلسَّلْمِ فَٱجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

8:62. (முஹம்மதே!) அவர்கள் உமக்குத் துரோகம் செய்ய நாடினால் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவனே தனது உதவியின் மூலமும், நம்பிக்கை கொண்டோர் மூலமும் உம்மைப் பலப்படுத்தினான்.
وَإِن يُرِيدُوٓا۟ أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ ٱللَّهُ ۚ هُوَ ٱلَّذِىٓ أَيَّدَكَ بِنَصْرِهِۦ وَبِٱلْمُؤْمِنِينَ

8:63. அவர்களின் உள்ளங்களிடையே அவன் பிணைப்பை ஏற்படுத்தினான். பூமியில் உள்ள அனைத்தையும் நீர் செலவிட்டாலும் அவர்களின் உள்ளங்களிடையே உம்மால் பிணைப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது. மாறாக அல்லாஹ்வே அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தினான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنفَقْتَ مَا فِى ٱلْأَرْضِ جَمِيعًا مَّآ أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَـٰكِنَّ ٱللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُۥ عَزِيزٌ حَكِيمٌ

8:64. நபியே! உமக்கும், உம்மைப் பின்பற்றும் நம்பிக்கை கொண்டோருக்கும் அல்லாஹ்வே போதுமாவான்.
يَـٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ حَسْبُكَ ٱللَّهُ وَمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

8:65. நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக!53 உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள்.359 உங்களில் நூறு பேர் இருந்தால் (ஏகஇறைவனை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள்.198 அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
يَـٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ حَرِّضِ ٱلْمُؤْمِنِينَ عَلَى ٱلْقِتَالِ ۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَـٰبِرُونَ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌ يَغْلِبُوٓا۟ أَلْفًا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ

8:66. இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான்.359 எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் கட்டளைப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள்.198 அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான்.
ٱلْـَٔـٰنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا ۚ فَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌ يَغْلِبُوٓا۟ أَلْفَيْنِ بِإِذْنِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّـٰبِرِينَ

8:67. பூமியில் எதிரிகளை வேரறுக்கும் வரை199 சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது. நீங்கள் இவ்வுலகின் பொருட்களை நாடுகின்றீர்கள்! அல்லாஹ்வோ மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
مَا كَانَ لِنَبِىٍّ أَن يَكُونَ لَهُۥٓ أَسْرَىٰ حَتَّىٰ يُثْخِنَ فِى ٱلْأَرْضِ ۚ تُرِيدُونَ عَرَضَ ٱلدُّنْيَا وَٱللَّهُ يُرِيدُ ٱلْـَٔاخِرَةَ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

8:68. முன்னரே அல்லாஹ்வின் விதி இல்லாதிருந்தால் நீங்கள் (கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காகக் கடும் வேதனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
لَّوْلَا كِتَـٰبٌ مِّنَ ٱللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَآ أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ

8:69. போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதை உண்ணுங்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
فَكُلُوا۟ مِمَّا غَنِمْتُمْ حَلَـٰلًا طَيِّبًا ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

8:70. “உங்கள் உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால்194 உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதை விடச் சிறந்ததை உங்களுக்கு அவன் வழங்குவான். உங்களை மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று நபியே உம்மிடம் உள்ள கைதிகளிடம் கூறுவீராக!
يَـٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّمَن فِىٓ أَيْدِيكُم مِّنَ ٱلْأَسْرَىٰٓ إِن يَعْلَمِ ٱللَّهُ فِى قُلُوبِكُمْ خَيْرًا يُؤْتِكُمْ خَيْرًا مِّمَّآ أُخِذَ مِنكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

8:71. அவர்கள் உமக்குத் துரோகம் செய்ய நாடுவார்களானால் இதற்கு முன் அவர்கள் அல்லாஹ்வுக்கும் துரோகம் செய்துள்ளனர்.6 அவர்கள் விஷயத்தில் (உமக்கு) அவன் சக்தியளித்தான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
وَإِن يُرِيدُوا۟ خِيَانَتَكَ فَقَدْ خَانُوا۟ ٱللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

8:72. நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத்460 செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.385 நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத்460 செய்யாதோர், ஹிஜ்ரத்460 செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.488
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَـٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَوا۟ وَّنَصَرُوٓا۟ أُو۟لَـٰٓئِكَ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ ۚ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَمْ يُهَاجِرُوا۟ مَا لَكُم مِّن وَلَـٰيَتِهِم مِّن شَىْءٍ حَتَّىٰ يُهَاجِرُوا۟ ۚ وَإِنِ ٱسْتَنصَرُوكُمْ فِى ٱلدِّينِ فَعَلَيْكُمُ ٱلنَّصْرُ إِلَّا عَلَىٰ قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَـٰقٌ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

8:73. இதை நீங்கள் செய்யாவிட்டால் பூமியில் கலகமும், பெரும் சீரழிவும் ஏற்படும். (ஏகஇறைவனை) மறுப்போர், ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ ۚ إِلَّا تَفْعَلُوهُ تَكُن فِتْنَةٌ فِى ٱلْأَرْضِ وَفَسَادٌ كَبِيرٌ

8:74. நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத்460 செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَـٰهَدُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَوا۟ وَّنَصَرُوٓا۟ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ

8:75. இதன் பின்னர் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத்460 செய்து, உங்களுடன் இணைந்து போரிட்டோரே உங்களைச் சேர்ந்தவர்கள். இரத்த பந்தமுடையோர் ஒருவர் மற்றவருக்கு அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி நெருக்கமானவர்கள்.385 அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنۢ بَعْدُ وَهَاجَرُوا۟ وَجَـٰهَدُوا۟ مَعَكُمْ فَأُو۟لَـٰٓئِكَ مِنكُمْ ۚ وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَىٰ بِبَعْضٍ فِى كِتَـٰبِ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ