ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனில் உள்ள திக்ருகளைக் கொண்டு திக்ர் செய்யலாமா? அது எண்ணுவதற்கு எளிதாக உள்ளது.
பதில்
மார்க்க அறிவு இல்லாதவர்களின் அப்ளிகேசன்கள் பல உள்ளன. அல்லாஹ்வை திக்ரு செய்வதாக இருந்தால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் உள்ளவைகளைத் தான் திக்ரு செய்ய வேண்டும். ஆதாரமற்றவைகளையும், பலவீனமான ஹதீஸ்களில் உள்ளதையும் கொண்டு திக்ர் செய்தால் அவை திக்ராக ஆகாது.
சரியான திக்ருகள் தானா என்று உறுதி செய்து கொள்ளவும்.
இதற்கு துஆக்களின் தொகுப்பு எனும் நூல் துணை செய்யும்.
இந்த திக்ரை இத்தனை தடவை சொல்ல வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளைத் தான் எண்ணிச் சொல்ல வேண்டும்.
உதாரணமாக சுப்ஹானல்லா 33 தடவை, அல்ஹம்து லில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் 10 தடவை என்று நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை திக்ருகளைத் தான் நாம் எண்ணிச் சொல்ல வேண்டும். ஏனெனில் எண்ணிக்கை நபிகளால் சொல்லப்பட்டுள்ளதால் அதில் கூடுதல் குறைவு ஏற்படக் கூடாது.
எண்ணிக்கை குறிப்பிட்ட திக்ருகள் 33,34, 100 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளன. இதை எண்ணிட நம் விரல்களே போதும். எந்தக் கருவியும் அப்ளீகேசனும் தேவை இல்லை.
நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் லாஇலாஹ இல்லல்லாஹு என்று சொல்ல நினைக்கிறோம். அல்லது நினைக்கும் போதெல்லாம் சலவாத் கூற நினைக்கிறோம். இதை நாம் எண்ணிக் கொண்டு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அல்லாஹ் அதைக் கணக்கிட்டு நமக்கு கூலி தந்து விடுவான்.