ஆதம் நபி எந்த நாட்டில் இறக்கப்பட்டார்கள்?
ஆதம் (அலை) அவர்கள் எங்கு இறக்கப்பட்டார்கள் என்பது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்தக் குறிப்பும் இல்லை. இது குறித்து ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. இவற்றில் எதற்குமே ஆதாரம் இல்லை.
ஆனால் முதன்முதலில் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஅபா தான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
திருக்குர்ஆன் 3:96
மனித சமுதாயம் இறைவனை வழிபடுவதற்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் கஅபா என்றால் அதை ஏற்படுத்தியவர் ஆதம் (அலை) அவர்களாகத் தான் இருக்க வேண்டும். ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதராக இருந்ததால் அவர்கள் வணங்குவதற்காக நிச்சயம் ஓர் ஆலயத்தை நிர்மாணித்திருப்பார்கள். அந்த ஆலயம் மக்காவில் உள்ள கஃபா என்று இறைவன் கூறுகின்றான்.
எனவே இதை வைத்துப் பார்க்கும் போது ஆதம் (அலை) அவர்களும், அவரது துணைவியாரும் இறக்கப்பட்டது மக்காவாக இருக்கலாம் என்ற கருத்தே ஏற்புடையதாக உள்ளது.
ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறங்கியதாகச் சிலர் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.