ஆதம்ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?

கேள்வி: ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க முடியும்? சொந்தச் சகோதரியை மணப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று எனது பிற மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும்.

– எம். தவ்ஃபீக் அஹ்மத், தமாம்.

பதில்: ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர வேறு ஜோடிகள் ஏதும் இறைவனால் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்பதால் அண்ணன் தங்கைகளுக்கிடையே தான் திருமண உறவு நடந்திருக்க முடியும்.

அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்யலாமா என்று இப்போது கேட்டால் கூடாது என்று தான் விடை கூறுவோம்.

எந்த ஒரு காரியமும் குற்றமாக எப்போது ஆகும்? இறைவன் தடுத்தால் அது குற்றமாகும். தடுக்காவிட்டால் அது குற்றமாக ஆகாது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மதுபானமும், வட்டியும் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் மதுபானம் அருந்தியவர்களாகவும், வட்டி வாங்கியவர் களாகவும் யாரேனும் மரணித்திருந்தால் அவர்கள் இறைவனிடம் குற்றவாளிகளாக ஆக மாட்டார்கள். ஏனெனில், தடை செய்யப்பட்ட பின் அக்காரியங்களை அவர்கள் செய்யவில்லை.

இது பக்தியின் அடிப்படையில் கற்பிக்கும் நியாயம் அல்ல. அறிவுப் பூர்வமாக ஏற்கத்தக்க காரணமே.

பான்பராக் விற்கக் கூடாது என்று ஒரு அரசு சட்டம் போடுகிறது. இந்தச் சட்டம் போடப்படுவதற்கு முன்னால் அதை விற்பனை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மாறாக, இச்சட்டம் அமுலுக்கு வந்த பிறகு விற்பனை செய்பவர்கள் தாம் குற்றம் சாட்டப்படுவார்கள்.

ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில் படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப் பெருகிட இது தேவையாக இருந்தது. அவன் அனுமதித்த போது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.

இன்று அவ்வாறு செய்வதைத் தடை செய்து விட்டான். அதை அனுமதிப்பதற்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. தடை செய்யப்பட்ட பிறகு அதைச் செய்தால் தான் அது குற்றமாகும்.

தடை செய்யப்படுவதற்கு முன் செய்யப்பட்ட காரியத்தை தடை செய்யப்பட்ட பின் முன் மாதிரியாகக் கொள்வதை அறிவுடைய யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அர்த்தமுள்ள கேள்விகள் முழு நூலை வாசிக்க

அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்