இகாமத் சொன்ன பிறகு சுன்னத் தொழலாமா?
இகாமத் சொன்ன பிறகு எந்தத் தொழுகையும் தொழக்கூடாது என்று தடை உள்ளது.
முஸ்லிம் 565 வது ஹதீஸில் இகாமத் சொல்லப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
இந்த அடிப்படையில் சுப்ஹு தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது முன் சுன்னத்தைத் தொழுது விட்டு ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளலாமா?
பதில் :
நீங்கள் சுட்டிக்காட்டும் இரு ஹதீஸ்கள் இவைதான்.
صحيح مسلم
1678 – وَحَدَّثَنِى أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَرْقَاءَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1281
இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகை தொழக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது.
صحيح البخاري
642 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُقِيمَتِ الصَّلاَةُ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَاجِي رَجُلًا فِي جَانِبِ المَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ القَوْمُ»
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தோழர்கள் தூங்கும் வரை அந்த மனிதருடன் பேசிக் கொண்டு இருந்தார்கள். பின்னர் வந்து மக்களுக்குத் தொழுவித்தார்கள்.
நூல் : புகாரி 642
இந்த ஹதீஸ்களைத் தான் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு தொழுகையைத் தொழலாம் என்று முடிவு செய்ய எந்த ஆதாரமும் இந்த ஹதீஸில் இல்லை.
இகாமத் சொல்லப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. பேசிக் கொண்டு இருப்பதற்கு அனுமதி இருக்கும் போது சுன்னத் தொழுதால் என்ன தவறு என்று கேட்பது தவறாகும்.
இகாமத் சொல்லப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தொழுகை நடைபெறவில்லை. பேசி முடித்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று தான் தொழுவித்துள்ளார்கள். இகாமத் சொன்ன பிறகு தவிர்க்க முடியாத காரணங்களால் தொழுகையைத் தாமதப்படுத்துவதற்கு இமாமிற்கு அனுமதி உண்டு என்பதற்குத் தான் இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு தொழுகையைத் தொழக் கூடாது என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. இதற்கு மாற்றமாகக் கூறினால் அதற்கு நேரடி ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அவ்வாறு எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதித்த தடையைப் பேணுவது தான் கடமையாகும்.