உலகம் எப்போது அழியும்?

உலகம் ஒரு நாளில் அழிக்கப்படும் என்று 83:5, 69:15 வசனங்களில் கூறப்படுகிறது பிறை 1ல் உலகம் அழிக்கப்படும் என்று வைத்துக் கொண்டால் சவூதி பிறை ஒன்றிலா? அல்லது இந்தியா பிறை ஒன்றிலா?

உலகம் வெள்ளிக்கிழமை தான் அழிக்கப்படும் என்று ஹதீஸ்களில் உள்ளது. இது ஒரே கிழமையில் தான் நிகழும் எனும் போது உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் என்பதில் என்ன சந்தேகம்? என்றும் கேட்கின்றனர்.

உலகம் முடிவு நாள் வெள்ளிக்கிழமை நடக்கும் என்று ஹதீஸ் உள்ளது. ஆனால் பிறைக் கணக்கில் 1ல் தான் அழிக்கப்படும் என்றோ 2ல்தான் அழிக்கப்படும் என்றோ ஹதீஸ் இல்லை.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விஞ்ஞானத்தை உரிய முறையில் விளங்கினால் நிச்சயமாக இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியும்.

ஒவ்வொரு நாளும் தேதிக் கோட்டை பூமி கடக்கும் அந்த மைக்ரோ வினாடியில் உலகம் முழுவதும் ஒரே கிழமை. தேதியில் இருக்கும் என்பதை முன்னர் கூறியுள்ளோம். அதாவது இந்த நிலையை அடையும் போது தேதிக் கோட்டின் கிழக்குப் புறம் உள்ள பகுதி கிழமையின் துவக்கத்திலும் தேதிக் கோட்டின் மேற்குப்புறம் உள்ள பகுதி அதே கிழமையின் இறுதியிலும் இருக்கும்.

இந்த விநாடியில் மட்டுமே உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும். இது மனிதன் வரைந்த கற்பனையான கோட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை.

அல்லாஹ் பூமியைப் படைத்து நாள் கணக்கைத் துவக்கிய அந்த நேரத்தை அவன் தான் அறிவான். அல்லாஹ் அமைத்த உண்மையான அந்தத் தேதிக் கோட்டின் அடிப்படையில் ஒரு வினாடியில் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும் போது உலகத்தை அழிப்பது அவனுக்குச் சிரமமான காரியமில்லை.

ஆதம் (அலை) அவர்கள் குறித்த ஹதீஸுக்கும் இதே விளக்கத்தைக் கொடுக்க முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.