கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்
ஒருவரை அடக்கம் செய்த பின் அந்த இடத்துக்குப் போய் ஸியாரத் செய்து துஆ செய்ய வேண்டும் என்று விரும்புவது முஸ்லிம்களின் இயல்பாக உள்ளது. அடக்கம் செய்து சில நாட்கள் இவ்வாறு விரும்புவார்கள். காலாகாலத்துக்கும் அவ்வாறு விரும்ப மாட்டார்கள். இதற்காகக் கப்ரைக் கட்டுவதோ, எழுதுவதோ கூடாது. மாறாக அந்த இடத்தில் ஒரு பாராங்கல்லைப் போட்டு வைத்து அடையாளம் காண அனுமதி உள்ளது.
حدثنا عبد الوهاب بن نجدة ثنا سعيد بن سالم ح وثنا يحيى بن الفضل السجستاني ثنا حاتم يعني ابن إسماعيل بمعناه عن كثير بن زيد المدني عن المطلب قال : لما مات عثمان بن مظعون أخرج بجنازته فدفن فأمر النبي صلى الله عليه و سلم رجلا أن يأتيه بحجر فلم يستطع حمله فقام إليها رسول الله صلى الله عليه و سلم وحسر عن ذراعيه قال كثير قال المطلب قال الذي يخبرني ذلك عن رسول الله صلى الله عليه و سلم قال كأني أنظر إلى بياض ذراعي رسول الله صلى الله عليه و سلم حين حسر عنهما ثم حملها فوضعها عند رأسه وقال ” أتعلم بها قبر أخي وأدفن إليه من مات من أهلي ” . قال الشيخ الألباني : حسن
உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாறாங்கல்லை தூக்க முடியாமல் தூக்கி வந்து அவரது தலைமாட்டில் வைத்தார்கள். ‘எனது சகோதரர் உஸ்மானின் கப்ரை நான் அடையாளம் கண்டு என் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் இவருக்கு அருகில் அடக்குவதற்காக இந்த அடையாளம்’ என்றும் கூறினார்கள்.
நூல்: அபூ தாவூத் 2791
இது கப்ரைக் கட்டக் கூடாது என்பதற்கு மேலும் வலுவான சான்றாகவுள்ளது.
உஸ்மான் பின் மழ்வூன் அவர்களின் அடக்கத்தலத்தை அடையாளம் காண நபியவர்கள் விரும்பிய போதும், அந்த இடத்தில் ஒரு கல்லை எடுத்துப் போட்டார்களே தவிர நிரந்தரமாக இருக்கும் வகையில் சமாதியைக் கட்டவும் இல்லை. எழுதவும் இல்லை; கல்வெட்டு கூட வைக்கவில்லை. எனவே நாம் நினைக்கும் போது அப்புறப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பொருளை அடக்கத்தலத்தின் அருகில் அடையாளம் காண்பதற்காக வைத்தால் தவறில்லை.