களாத் தொழுகை

ஐவேளைத் தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரங்களில் தொழுது முடித்து விடவேண்டும். அதைப் பிற்படுத்துவது கூடாது. கடமையான தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல், அந்தத் தொழுகையின் நேரம் முடிந்த பின் தொழலாம் என்று சிலர் கருதுகின்றனர். இதைக் களாத் தொழுகை என்றும் குறிப்பிடுகின்றனர். இது தவறாகும்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.

திருக்குர்ஆன் 4:103

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஐவேளைத் தொழுகையின் ஆரம்ப நேரம் மற்றும் இறுதி நேரம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அந்த நேரங்களில் தொழுகைகளை முடித்துவிட வேண்டும்.

ஒருவர் மறந்து தொழாமல் இருந்து விட்டால் அவர் நினைவு வந்ததும் தொழுது விடவேண்டும். உறங்கி விட்டால் விழித்ததும் தொழ வேண்டும். இது தான் அதற்குரிய பரிகாரம்.

صحيح البخاري

597 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لاَ كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ {وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي} [طه: 14]

‘யாரேனும் ஒரு தொழுகையை மறந்து விட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர வேறு பரிகாரம் எதுவுமில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 597

மறதி, தூக்கம் இந்த இரண்டைத் தவிர வேறு காரணங்களுக்காகத் தொழுகையை விடுவதற்கு அனுமதியில்லை. அவ்வாறு தொழுகையை விட்டவர் வல்ல அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு, திருந்திக் கொள்வதே வழியாகும்.

அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நரகத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 19:59,60

இந்த வசனத்தில் பிற்காலத்தில் வரும் சிலரைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அவர்கள் தொழுகையைத் தொழாமல் இருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றான். இவர்களுக்கு மன்னிப்புக் கிடைக்க வேண்டுமானால் அவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொண்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டுமென கட்டளையிடும் இறைவன், விட்ட தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டும் என்று கட்டளையிடவில்லை. எனவே தூக்கம், மறதி அல்லாத வேறு காரணங்களுக்காகத் தொழுகையை விட்டவர் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு விட்டு, இனி வரும் காலங்களில் தொழுகையை விடாமல் தொழ முயற்சிக்க வேண்டும்.