கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?
சூரிய கிரகணத்தைக் காணும்போது தொழுங்கள் என்று ஹதீஸ் உள்ளது. கண்டால் மட்டும் தொழ வேண்டுமா? நாம் காணாமல் தமிழகத்தின் பல ஊர்களில் காணப்பட்டால் தொழக் கூடாதா?
பதில்:
صحيح البخاري
1042 – حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ كَانَ يُخْبِرُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهَا فَصَلُّوا»
எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும், சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 1042
கிரகணம் ஏற்பட்டது முதல் கிரகணம் முழுமையாக விலகும் வரை தொழ வேண்டும் இந்த ஹதீஸ் கூறுகிறது. கிரகணமே பிடிக்காத ஊரில் கிரகணம் விலகும் பேச்சுக்கே இடமில்லை. எனவே எந்த ஊரில் அல்லது பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறதோ அவர்கள் மட்டும் தான் கிரகணத் தொழுகை நடத்த வேண்டும். மற்றவர்களுக்கு இத்தொழுகை இல்லை என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
பிறையை எப்படித் தீர்மானிப்பது என்பதைப் பற்றிய ஆய்வில் கிரகணம் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகும். முதல் பிறை, பௌர்ணமி, அமாவாசை போன்றவை பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களாகும்.
இதே போல் சூரிய, சந்திர கிரகணங்களும் பூமி, சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே நிகழ்வதால் கிரகணத்தைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் பிறை விஷயத்திலும் பிரதிபலிக்கும்.
இதைக் கவனத்தில் கொண்டு கிரகணம் குறித்து ஆராய்வோம்.
கிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா? சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுவது பைத்தியக்காரத்தனம் என்று தான் கூற வேண்டும்.
விஞ்ஞான அடிப்படையிலும், சரி தகவல் அடிப்படையிலும் சரி உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக்கூடியவர்கள் அமெரிக்காவில் தோன்றும் சந்திர கிரகணத்திற்கு இந்தியாவில் தொழ வேண்டும் என்று கூற மாட்டார்கள்.
1999ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கிரகணம் முதன் முதலில் லண்டனில் தோன்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கிரகணம் என்பதால் உலகமெங்கும் இருந்து மக்கள் அந்தக் கிரகணத்தைக் காண லண்டனுக்குச் சென்றனர்.
லண்டனில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இந்திய நேரம் பிற்பகல் சுமார் 3 மணி. கிரகணத்தின் காரணமாக லண்டன் இருட்டாகி இரவைப் போல் காட்சியளித்ததை பி.பி.சி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் சென்னையில் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்தது. லண்டனிலிருந்து கிரகணம் படிப்படியாக துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இறுதியில் சென்னையில் 6 மணியளவில் கிரகணம் ஏற்பட்டு விலகியது.
இப்படி ஊருக்கு ஊர் கிரகணம் வெவ்வேறு நேரங்களில் தோன்றியதை நாம் கண்கூடாகக் கண்டோம்.
கிரகணம் ஏற்படுவதாக முன்கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் ஒரு இடத்தில் கிரகணம் ஏற்பட்டால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா?
இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும்.
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணம் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தக் கோள்விகளை நாம் எழுப்பும் போது சிலர் வீம்புக்காக கிரகணம் ஏற்பட்ட தகவலைக் கேட்டும் கிரகணத் தொழுகை தொழலாம் என்று வாதிடுகின்றார்கள். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும் என்பது போல் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கும் போது சூரிய கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
ஒரு வாதத்திற்கு அவ்வாறு கிரகணத் தொழுகை தொழ வேண்டும் என்று ஒப்புக் கொண்டாலும் எந்த நேரத்தில் தொழ வேண்டும்?
லண்டனில் ஏற்பட்டதே அந்த நேரத்திலா?
அல்லது துருக்கி, ஈரானில் ஏற்பட்டதே அந்த நேரத்திலா?
மேற்கண்ட நாடுகளில் ஒவ்வொரு ஊருக்கும் சில நிமிடங்கள் முன்பின்னாக கிரகணம் ஏற்படும். அந்த நாடுகளில் உள்ள எந்த ஊரை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்?
லண்டனில் ஏற்பட்ட கிரகணம் விலகி சில மணி நேரங்கள் கழித்து சென்னையில் கிரகணம் ஏற்பட்டது. இப்போது சென்னைவாசிகள் லண்டனில் கிரகணம் விலகியதால் தொழுகையை முடிக்க வேண்டுமா? அல்லது சென்னையில் இப்போது கிரகணம் உள்ளதால் இன்னும் தொழுகையை நீடிக்க வேண்டுமா?
இவை அனைத்துக்கும் சர்வதேசப் பிறை என்று வாதிடுவோரிடம் ஏற்கத்தக்க ஒரு பதிலும் இல்லை. சந்திரனுக்கு கிரகணம் பிடித்தால் எந்தப் பகுதியில் கிரகணம் பிடித்ததோ அந்தப் பகுதி மக்களையே அது கட்டுப்படுத்தும்.
கிரகணமே ஏற்படாத பகுதியில் உள்ள மக்கள் எப்போது தொழ வேண்டும்? லண்டனுடைய கிரகண நேரத்திலா? துருக்கியுடைய கிரகண நேரத்திலா? அல்லது லண்டனிலிருந்து சென்னை வரை கிரகணம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரமும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று கூறப் போகிறார்களா?
அமெரிக்காவில் சந்திரகிரகணம் ஏற்படும் போது அவர்கள் இரவில் கிரகணத் தொழுகையைத் தொழுவார்கள். அந்த நேரத்தில் நாம் பகலில் இருப்போம். நமக்கு கிரகணம் ஏற்படவே இல்லை. பகலில் கிரகணத் தொழுகை நடத்துமாறு எந்த அறிவுடைய மனிதனும் கூற மாட்டான்.
இப்போது என்ன செய்ய வேண்டும்?
லண்டனில் சூரிய கிரகணம் தோன்ற ஆரம்பித்து முழுமையாக விலகும் வரை அங்குள்ள மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
தங்களுடைய நாட்டில் எப்போது கிரகணம் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் துருக்கி, ஈரான் மக்கள் தொழுது கொள்வார்கள்.
இது போல் தான் தலைப்பிறை ஒருவருக்குத் தோன்றும் அதே நேரத்தில் அப்பிறை தோன்றாக முழு உலகுக்கும் தோன்றியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வாதம் எப்படி உள்ளது? நண்பகலில் சந்திரகிரகணத் தொழுகை தொழுவதற்கும், நள்ளிரவில் சூரிய கிரகணத் தொழுகை தொழுவதற்கும் சர்வதேசப் பிறைக் கோட்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லை.