குர்ஆனில் எதுவும் மனனம் இல்லாதவர்கள் எப்படி தொழுவது?
தொழுகையை துவக்கும் போது ஆரம்பமாக ஓதும் துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதன் பின்னர் அல்ஹம்து அத்தியாயமும் தெரிந்த அத்தியாயங்களும் ஓதவேண்டும். ஆனால் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உடணடியாக இவற்றைக் கற்று மனனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
அது போல் சிறுவயதில் குர்ஆன் ஓதக் கற்றுக் கொள்ளாமல் மார்க்கத்தில் ஈடுபாடு இல்லாமல் காலத்தைக் கழித்தவர்கள் தாமதமாக மார்க்கத்தில் ஈடுபாடு கொள்வார்கள். அப்போது அவர்களாலும் ஓத முடியாத நிலை ஏற்படலாம்.
இது போன்ற நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே சில நபித்தோழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஒரு மாற்று வழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். இதை பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்
سنن النسائي
924 – أَخْبَرَنَا يُوسُفُ بْنُ عِيسَى، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، عَنْ الْفَضْلِ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ إِبْرَاهِيمَ السَّكْسَكِيِّ، عَنْ ابْنِ أَبِي أَوْفَى قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ آخُذَ شَيْئًا مِنَ الْقُرْآنِ فَعَلِّمْنِي شَيْئًا يُجْزِئُنِي مِنَ الْقُرْآنِ. فَقَالَ: ” قُلْ: سُبْحَانَ اللَّهُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ “
நான் குர் ஆனில் எதையும் ஓதத் தெரியாதவனாக உள்ளேன். குர்ஆனுக்கு பகரமாக எதை ஓதுவது என்று எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்ல்ல்லாஹு வல்லாஹு அக்பர், வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று ஓது என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்பா (ரலி)
நூல்: ந்ஸாயீ
இதை மட்டும் மனனம் செய்து வைத்துக் கொண்டு ஓதினால் தொழுகை அவருக்கு செல்லுபடியாகும்.















