கூட்டுத் தொழுகை (ஜமாஅத் தொழுகை)

கடமையான ஐவேளைத் தொழுகையை ஆண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தான் தொழ வேண்டும்.

صحيح البخاري

645 – صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً»

‘தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 645

ஜமாஅத் தொழுகையின் ஒழுங்குகள்

ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் போது முதல் வரிசையில் மார்க்கச் சட்டங்கள் தெரிந்தவர்களும், பெரியவர்களும், அதற்கடுத்து சிறியவர்களும், கடைசி வரிசையில் பெண்களும் நிற்க வேண்டும்.

صحيح البخاري

380 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ

என் பாட்டி முளைக்கா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டுப் பின்னர் ‘எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்’ என்று கூறினார்கள். பயன்படுத்தப்பட்டதால் கருத்துப் போய் விட்ட எங்களுடைய ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வசிக்கும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முளைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழுகை நடத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 380

‘உங்களில் பருவம் அடைந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம் 739

ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்குக் கூடுதல் நன்மை உண்டு.

صحيح البخاري

615 – لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»

‘பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும், (தொழுகையில்) முதல் வரிசையில் நிற்பதன் நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கி எடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 615

வரிசையில் இடைவெளியின்றி நெருக்கமாக இருக்க வேண்டும்

صحيح البخاري

723 – سَوُّوا صُفُوفَكُمْ، فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاَةِ»

வரிசையை நேராக்குங்கள்! ஏனெனில் வரிசைகளை நேராக்குவது தொழுகையை நிலை நாட்டுதலில் உள்ளதாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 723

صحيح البخاري

717 – لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ، أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ»

‘உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரீ 717

இருவர் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழும் போது

இருவர் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழும் போது இமாமும் பின்பற்றித் தொழுபவரும் முன் பின்னாக நிற்காமல் சேர்ந்து நிற்க வேண்டும். பின்பற்றித் தொழுபவர் இமாமின் வலப்புறம் நிற்க வேண்டும்.

صحيح البخاري

728 – عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «قُمْتُ لَيْلَةً أُصَلِّي عَنْ يَسَارِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ بِيَدِي – أَوْ بِعَضُدِي – حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ، وَقَالَ بِيَدِهِ مِنْ وَرَائِي»

ஒரு இரவு நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இடப்புறம் நின்று தொழுதேன். அவர்கள் பின்புறமாக எனது கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 728

ஜமாஅத் தொழுகைக்கு வரும் போது நிதானமாக வருதல்

ஜமாஅத் தொழுகைக்கு வரும் போது தொழுகையில் சேர வேண்டும் என்பதற்காக அவசப்பட்டு ஓடி வரக்கூடாது. நிதானமாகவே வர வேண்டும்.

صحيح البخاري

636 – إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ، فَامْشُوا إِلَى الصَّلاَةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالوَقَارِ، وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا

‘இகாமத் சொல்வதை நீங்கள் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியான, கண்ணியமான முறையிலும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 636

கடமையான தொழுகையை நிறைவேற்றியவர் பள்ளிக்கு வந்தால்

سنن الترمذي

219 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ قَالَ: حَدَّثَنَا جَابِرُ بْنُ يَزِيدَ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّتَهُ، فَصَلَّيْتُ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الخَيْفِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ انْحَرَفَ فَإِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي أُخْرَى القَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَهُ، فَقَالَ: «عَلَيَّ بِهِمَا»، فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا»، فَقَالَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا، قَالَ: «فَلَا تَفْعَلَا، إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ، فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ»

பள்ளியில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் அங்கு வந்தால் அத்தொழுகையை வேறு இடத்தில் நிறைவேற்றியிருந்தாலும் அந்த ஜமாஅத்துடன் சேர்ந்து மீண்டும் தொழ வேண்டும்.

ஆதாரம் : திர்மிதீ

இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு தொழுகை இல்லை

கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகையைத் தொழக் கூடாது.

صحيح مسلم

إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ

‘(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1160

இமாமின் தகுதிகள்

ஜமாஅத் தொழுகையில், தொழுகை நடத்துபவர் திருக்குர்ஆனை நன்றாக ஓதக் தெரிந்தவராகவும் தொழுகையின் சட்டங்களை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுள்ளவராகத் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

صحيح مسلم

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللهِ، فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً، فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ هِجْرَةً، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ سِلْمًا، وَلَا يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ، وَلَا يَقْعُدْ فِي بَيْتِهِ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ» قَالَ الْأَشَجُّ فِي رِوَايَتِهِ: مَكَانَ سِلْمًا سِنًّا،

‘அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தொழுவிப்பார். மக்கள் அனைவரும் சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களில் நபி வழியை நன்கு அறிந்தவர் (தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் (தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அனுமதியின்றி அமர வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்ஸாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1192

சுருக்கமாகத் தொழுவித்தல்

இமாமாக இருப்பவர் தொழுவிக்கும் போது பின்பற்றித் தொழுபவரின் நிலையைக் கவனத்தில் கொண்டு தொழுகையைச் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

صحيح البخاري

702 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: سَمِعْتُ قَيْسًا، قَالَ: أَخْبَرَنِي أَبُو مَسْعُودٍ، أَنَّ رَجُلًا، قَالَ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ مِمَّا يُطِيلُ بِنَا، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ، ثُمَّ قَالَ: «إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالكَبِيرَ وَذَا الحَاجَةِ»

‘அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்திற்குச் செல்வதில்லை’ என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் எப்போதும் அடைந்திராத கோபத்தை அன்றைய தினம் அடைந்தார்கள். ‘(வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துபவர்களும் உங்களில் உள்ளனர். உங்களில் எவரேனும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக நடத்தட்டும்! ஏனெனில் மக்களில் பலவீனர்கள், முதியோர், அலுவல்கள் உள்ளவர்கள் இருக்கின்றனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)

நூல்: புகாரீ 702

பின்பற்றித் தொழுபவர் பேண வேண்டியவை

இமாமைப் பின்பற்றி தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும்; வேறு எதையும் ஓதக் கூடாது.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 7:204

صحيح مسلم

وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا

‘இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 612

இமாமை முந்தக் கூடாது

இமாமைப் பின்பற்றித் தொழுபவர், தொழுகையின் எந்தச் செயலையும் இமாமை விட முந்திச் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.

صحيح البخاري

688 – إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ، فَارْكَعُوا وَإِذَا رَفَعَ، فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا»

‘இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 688

صحيح البخاري

691 – حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أَمَا يَخْشَى أَحَدُكُمْ – أَوْ: لاَ يَخْشَى أَحَدُكُمْ – إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ، أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ، أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ ”

‘உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தமது தலையை உயர்த்துவதால் (மறுமையில்) அவருடைய தலையை கழுதையின் தலையாகவோ, அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 691

தாமதமாக வந்தால்

ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.

صحيح البخاري

636 -عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ، فَامْشُوا إِلَى الصَّلاَةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالوَقَارِ، وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»

‘நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 636

தாமதமாக வந்தாலும் தொழுகையில் நுழைவதற்கு அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னரே சேர வேண்டும்.

سنن الترمذي

3 – عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»

‘தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு தஸ்லீம் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) ஆகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல் : திர்மிதீ

ரக்அத்தை அடைவது

ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வருபவர் இமாம் தொழுகையில் ருகூஃவிலிருந்து  நிமிர்வதற்கு முன்பு இணைந்துவிட்டால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம்.

இக்கருத்தில் பலவீனமான நபிமொழிகள் இருந்தாலும் பின்வரும் நபிமொழி ஆதாரப்பூர்வமானதாகும்.

صحيح البخاري

783 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنِ الأَعْلَمِ وَهُوَ زِيَادٌ، عَنِ الحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ»

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்த போது நான் வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்து விட்டேன். இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 783

இந்தச் செய்தியில் ருகூவை அடைந்தால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம் என்ற கருத்து அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூஃவில் இருக்கிறார்கள். அப்போது, அபூ பக்ரா (ரலி) அவர்கள் வேகமாக வந்து வரிசையில் இணைவதற்கு முன்பாகவே ருகூஃவு செய்துவிட்டு பின்பு வரிசையில் வந்து இணைந்திருக்கிறார்.

ருகூஃவில் இணைந்து விட்டால் ரக்அத் கிடைத்துவிடும் என்பதால் தான் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர் வேகமாக ஓடி வந்ததைத் தான் இவ்வாறு இனிமேல் செய்யாதே என்று சொல்கின்றார்கள்.

மேலும், ருகூஃவில் இணைந்த அவருக்கு ரக்அத் தவறியிருக்குமேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ரக்அத்தை எழுந்து தொழக் கட்டளையிட்டிருப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டார்கள் என்பதும் தெரிகிறது.

அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! என்று அவருக்கு அல்லாஹ்வின் தூதர் கூறியதிலிருந்து அவர் ரக்அத்தை அடைவதற்காக வேகமாக வருகிற ஆர்வத்தைப் பற்றித் தான் இந்தச் செய்தி பேசுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

ருகூவை அடைந்தால் அந்த ரக்அத் நமக்குக் கிடைத்துவிடும் என்பது இந்தச் செய்தியிலிருந்து தெளிவாகிறது.

இமாமின் தவறைச் சுட்டிக் காட்டுதல்

தொழுகையில் இமாம் ஏதேனும் தவறு செய்து விட்டால் ஆண்கள் ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறுவதன் மூலமும், பெண்கள் கை தட்டுதல் மூலமும் சுட்டிக் காட்ட வேண்டும்.

صحيح البخاري

1203 – عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «التَّسْبِيحُ لِلرِّجَالِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ»

‘(தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட) தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 1203

குர்ஆன் ஓதுதலில் தவறு ஏற்பட்டால்

இமாமிற்கு திருக்குர்ஆன் ஓதுதலில் தவறு ஏற்பட்டால் பின்னால் தொழுபவர் அதைத் திருத்திக் கொடுக்க வேண்டும்.

سنن أبي داود

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” صَلَّى صَلَاةً، فَقَرَأَ فِيهَا فَلُبِسَ عَلَيْهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ لِأُبَيٍّ: «أَصَلَّيْتَ مَعَنَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَمَا مَنَعَكَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதில் ஓதினார்கள். அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. தொழுகை முடித்தவுடன் உபை (ரலி) அவர்களிடம், ‘நம்முடன் நீர் தொழுதீரா?’ என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்போது ‘(தவறைத் திருத்திக் கொடுப்பதற்கு) உம்மைத் தடுத்தது எது?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வினவினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத்