சூரத்துல் பாத்திஹா ஓதுதல்

தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும்.

சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: உபாதா (ரலி)

நூல்கள்: புகாரீ 756, முஸ்லிம் 595

சூரத்துல் ஃபாத்திஹாவின் வசனங்கள்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம். மாலி(க்)கி யவ்மித்தீன். இய்யா(க்)க நஅபுது வஇய்யா(க்)க நஸ்(த்)தயீன். இஹ்தினஸ் ஸிரா(த்)தல் முஸ்த(க்)கீம். ஸிரா(த்)தல்லதீன அன்அம்(த்)த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்

பொருள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே! அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன். தீர்ப்பு நாளின் அதிபதி. இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எவர்களுக்கு பாக்கியம் புரிந்தாயோ அவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக! உன் கோபத்துக்கு ஆளானவர்களின் வழியுமல்ல; நெறி கெட்டவர்களின் வழியுமல்ல.

பிஸ்மில்லாஹ் ஓத வேண்டுமா?

ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என சப்தமிட்டோ,மெதுவாகவோ கூற வேண்டும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்பது சூரத்துல் ஃபாத்திஹாவின் ஒரு வசனம் என்பதால் அதையும் ஓத வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கிராஅத் (குர்ஆன் ஓதுதல்) எவ்வாறு இருந்தது?  என அனஸ் (ரலி)யிடம் விசாரிக்கப்பட்ட போது அவர்கள் நீட்டி நிறுத்தி ஓதினார்கள்  என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான் ரஹீம் என்ற வார்த்தைகளை நீட்டி ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா,

நூல்: புகாரீ 5046

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றே தொழுகையைத் துவங்குவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரீ 743, முஸ்லிம் 229

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைச் சப்தமின்றி ஓதினார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாகும். சப்தமிட்டு பிஸ்மில்லாஹ் ஓதுவதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதேன். அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதி விட்டுப் பிறகு அல்ஹம்து சூராவை ஓதினார்கள்….  அல்லாஹ்வின் மீதாணையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது போல் நான் உங்களுக்குத் தொழுது காட்டினேன்  என்று அபூஹுரைரா (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: நுஐம் அல்முஜ்மிர்

நூல்: ஹாகிம் 1/357

பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா?

இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

அல்குர்ஆன்7:204

நாங்கள் தொழுகையில், இன்னார் மீது ஸலாம், இன்னார் மீது ஸலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம். அப்போது தான்  குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!  என்ற7:204 குர்ஆன் வசனம் வந்தது.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: தப்ஸீர் தப்ரீ, பாகம்: 9, பக்கம்: 162

இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 612

ஆமீன் கூறுதல்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும்  ஆமீன்  கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.

இமாம்  கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்  எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 782

இந்த ஹதீஸில் கூறப்படும் கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம், மெதுவாகச் சொல்வதையும் சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். இந்த வாசகத்திற்கு நபித்தோழர்கள் சப்தமிட்டுக் கூறுதல் என்று புரிந்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது. எனவே ஆமீன் என்பதைச் சப்தமிட்டும் சொல்லலாம். விரும்பினால் சப்தமில்லாமலும் சொல்லலாம்.

இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம்  கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன் எனக் கூறும் போது அந்த நபித் தோழர்களிடமிருந்து  ஆமீன்  என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அதா

நூல்: பைஹகீ