செயற்கை முறையில் கருத்தரித்தல்

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனைச் சந்திக்கவுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன் 2:223)

இந்த வசனத்தில் பெண்களை இறைவன் விளை நிலங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறான். விளை நிலங்களில் விதைக்கப்படும் விதைகளை அந்த நிலங்கள் முளைக்கச் செய்வது போல் பெண்களும், ஆண்களிடமிருந்து செலுத்தப்படும் விந்துத் துளியை குழந்தைகளாக வளரச் செய்கின்றனர்.

இந்தப் பொதுத் தன்மை கருதியே இறைவன் விளை நிலங்களுக்குப் பெண்களை ஒப்பிட்டிருக்க முடியும்.

நீங்கள் விரும்பிய விதமாக உங்கள் நிலங்களில் விதைத்துக் கொள்ளலாம் என்று இறைவன் அனுமதிப்பதால் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதை தடுக்க முடியாது.

ஆனால் கணவனுடைய விந்தை மாத்திரம் தான் ஒரு பெண்ணுடைய கருவறையில் செலுத்தலாமே தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் செலுத்தக் கூடாது.

உங்கள் மனைவியர் உங்களுக்கு விளை நிலங்கள் என்று இறைவன் கூறுவதிலிருந்து ஒருவன் தனது மனைவியைத் தவிர மற்ற எவரது கருவறையிலும் எந்த முறையிலும் விதைக்கலாகாது என்பதையும், அது போலவே ஒரு பெண் தன் கணவனது விந்தைத் தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் தனக்குள் விதைத்துக் கொள்ளலாகாது என்பதையும் தெளிவாக அறிகிறோம்