செருப்புடன் உளூச் செய்யலாமா?

ஃபயாஸ்

பதில்

செருப்பு அணிந்து உளூஉ செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இது மார்க்கச் சட்டமாக இருந்தால் இதைத் தடை செய்யும் விதமாக குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ கூறப்பட்டிருக்கும். ஆனால் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ செருப்பணிந்து உளூ செய்யக்கூடாது என்று கூறப்படவில்லை.

உளூவை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழுகைக்கே இப்படி தடை ஏதும் இல்லை.

செருப்பில் அசுத்தம் ஒட்டியிருப்பது கண்ணுக்குத் தெரியும் போது அதைக் கழற்றிவிட்டு தொழ வேண்டும். அசுத்தம் தெரியாவிட்டால் செருப்பணிந்து கொண்டே தொழலாம் என்று மார்க்கம் கூறுகின்றது. இதைப் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.

صحيح البخاري

386 – حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مَسْلَمَةَ سَعِيدُ بْنُ يَزِيدَ الأَزْدِيُّ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ؟ قَالَ: «نَعَمْ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுததுண்டா என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றனர்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் யஸீத்

நூல் : புகாரி 386

سنن أبي داود

650 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي نَعَامَةَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِأَصْحَابِهِ إِذْ خَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عَنْ يَسَارِهِ، فَلَمَّا رَأَى ذَلِكَ الْقَوْمُ أَلْقَوْا نِعَالَهُمْ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، قَالَ: «مَا حَمَلَكُمْ عَلَى إِلْقَاءِ نِعَالِكُمْ»، قَالُوا: رَأَيْنَاكَ أَلْقَيْتَ نَعْلَيْكَ فَأَلْقَيْنَا نِعَالَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ فِيهِمَا قَذَرًا – أَوْ قَالَ: أَذًى – ” وَقَالَ: ” إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَلْيَنْظُرْ: فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ قَذَرًا أَوْ أَذًى فَلْيَمْسَحْهُ وَلْيُصَلِّ فِيهِمَا “،

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது காலணிகளைக் கழற்றி தமக்கு இடப்பக்கத்தில் வைத்தார்கள். இதை (பின்னால் தொழுது கொண்டிருந்த) மக்கள் கண்டபோது அவர்களும் தங்களது காலணிகளைக் கழற்றிப் போட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன் ஏன் உங்களுடைய காலணிகளைக் கழற்றிப் போட்டீர்கள்? என்று வினவினார்கள். அதற்கு மக்கள் நீங்கள் காலணிகளைக் கழற்றுவதைக் கண்டதால் நாங்களும் எங்கள் காலணிகளைக் கழற்றினோம் என்று பதிலளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து என் காலணிகளில் அசுத்தம் அல்லது (பிறருக்கு) நோவினை தரும் பொருள் இருப்பதாகத் தெரிவித்தார்கள். (அதனால் தான் நான் கழற்றினேன்.) உங்களில் ஒருவர் பள்ளிக்கு வந்தால் (தமது காலணிகளை) அவர் பார்க்கட்டும். தனது காலணிகளில் அசுத்தத்தையோ அல்லது நோவினை தரும் பொருளையோ கண்டால் அதைத் துடைத்துவிட்டு அதனுடனே தொழுது கொள்ளலாம்.

நூல் : அபூதாவூத்

செருப்பணிந்து தொழலாம் எனில் தொழுகையின் ஒரு அங்கமாக இருக்கின்ற உளூவையும் செருப்பணிந்து கொண்டு செய்யலாம். அதில் தவறில்லை.

ஆனால் உளூவின் இறுதியில் காலைக் கழுவும் போது செருப்பைக் கழற்றி காலை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். கால்களை நன்கு கழுவ வேண்டும். சரியாகக் கழுவவில்லை எனில் தொழுகையே செல்லாது எனுமளவு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

صحيح البخاري

60 – حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ عَارِمُ بْنُ الفَضْلِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: تَخَلَّفَ عَنَّا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرْنَاهَا فَأَدْرَكَنَا – وَقَدْ أَرْهَقَتْنَا الصَّلاَةُ – وَنَحْنُ نَتَوَضَّأُ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ» مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا

குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நாசம்தான் என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லா பின் அம்ர் (ரலி)

நூல் : புகாரி 60

செருப்பு அணிந்த நிலையில் கால்களைக் கழுவும் போது சரியாக முழுமையாக்க் கழுவ முடியாமல் போகும் என்றால் அப்போது செருப்பைக் கழற்றிவிட்டு உளூ கால்களைக் கழுவவேண்டும்.