தக்பீர் தஹ்ரீமா

தொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முதலில் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும்.

… நீ தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை (கஅபாவை) முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ 6667, முஸ்லிம் 602

இரு கால்களுக்கிடையில் உள்ள இடைவெளி

நிற்கும் போது இரு கால்களுக்கிடையே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவர்களின் செயல் முறைகளிலிருந்தும் அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவரவர் இயல்புக்குத் தக்கவாறு அடுத்தவருக்கு இடையூறு இல்லாத வகையில் நடுத்தரமாக நின்று கொள்ள வேண்டும்.

இரு கைகளை உயர்த்துதல்

அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னர் இரு கைகளையும் தோள் புஜம் வரை அல்லது காதின் கீழ்ப் பகுதி வரை உயர்த்த வேண்டும். அப்போது இரு கைகளையும் மடக்காமல் நீட்டிய வண்ணம் வைத்திருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தமது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்கள்: புகாரீ 735,முஸ்லிம் 586

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறும் போது தம் இரு கைகளையும் இரு காதுகளின் கீழ்ப்பகுதி வரை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 589

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: திர்மிதீ 223, அபூதாவூத்643, நஸயீ 873, அஹ்மத் 8520