தந்தைக்காக உம்ராச் செய்யலாமா?

எனது தந்தை மரணித்து சில வருடங்கள் ஆகின்றன. நான் ஒரு முறை உம்ரா செய்து விட்டேன். இந்த ரமலானில் எனது தந்தைக்காக உம்ரா செய்யலாம் என்று இருக்கிறேன். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

ஹம்மாத்

பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அதை அவர்கள் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம்.

பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்க  மாட்டான். எனவே பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாவிட்டால் அவருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்ய ஆதாரம் இல்லை.

1852 – حدثنا موسى بن إسماعيل، حدثنا أبو عوانة، عن أبي بشر، عن سعيد بن جبير، عن ابن عباس رضي الله عنهما، أن امرأة من جهينة، جاءت إلى النبي صلى الله عليه وسلم، فقالت: إن أمي نذرت أن تحج فلم تحج حتى ماتت، أفأحج عنها؟ قال: «نعم حجي عنها، أرأيت لو كان على أمك دين أكنت قاضية؟ اقضوا الله فالله أحق بالوفاء»

என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யட்டுமா என்று ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன் தாய் மீது கடன் இருந்தால் நீ தானே நிறைவேற்றுவாய்? எனவே அவருக்காக நீ ஹஜ் செய். அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்ற அதிகத் தகுதி உள்ளது என்றார்கள்.

நூல் : புகாரி 1582, 7315

அல்லாஹ்வின் கடன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதில் இருந்து ஹஜ் கடமையாக இருந்து அதைச் செய்யாமல் தந்தை மரணித்து இருந்தால் பிள்ளைகள் அதைச் செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.

உம்ராவைப் பொருத்த வரை அது ஹஜ் போல் கடமையான வணக்கம் அல்ல. உம்ரா செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான். எனவே மற்றவருக்காக உம்ரா செய்ய முடியாது.

ஆயினும் ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா செய்வதும் ஹஜ்ஜின் வகையில் ஒன்றாக உள்ளதால் பெற்றோருக்காக ஹஜ் செய்யும் போது அதனுடன் உம்ராவையும் செய்யலாம்.

سنن الترمذي

930 – حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، أَنَّهُ أَتَى  النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ لَا يَسْتَطِيعُ الحَجَّ، وَلَا العُمْرَةَ، وَلَا الظَّعْنَ، قَالَ: «حُجَّ عَنْ أَبِيكَ وَاعْتَمِرْ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَإِنَّمَا ذُكِرَتِ العُمْرَةُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الحَدِيثِ أَنْ يَعْتَمِرَ الرَّجُلُ عَنْ غَيْرِهِ وَأَبُو رَزِينٍ العُقَيْلِيُّ: اسْمُهُ لَقِيطُ بْنُ عَامِرٍ

அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ, உம்ரா செய்யவோ, பயணிப்பதற்கோ முடியாது என்றேன். உனது தந்தைக்காக நீ ஹஜ்ஜும், உம்ராவும் செய்து கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி 852

பெற்றோருக்காக உம்ரா செய்யலாம் என்ற இந்த அனுமதி உம்ராவை மட்டும் தனித்து செய்வதற்கான அனுமதி இல்லை. மாறாக ஹஜ்ஜூடன் சேர்த்து உம்ராவை செய்யும் போது மட்டும் உள்ள அனுமதியாகும்.