பயணத் தொழுகை

கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். ஆனால் பயணத்தில் இருப்பவர் குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாகவும் சுருக்கித் தொழலாம்.

இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கு அரபியில் ஜம்வு என்றும், நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கு அரபியில் கஸ்ர் என்றும் கூறுவர்.

ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

صحيح مسلم

«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلَاثَةِ أَمْيَالٍ، أَوْ ثَلَاثَةِ فَرَاسِخَ – شُعْبَةُ الشَّاكُّ – صَلَّى رَكْعَتَيْنِ»

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்

நூல்: முஸ்லிம் 1116

மூன்று மைல் தொலைவு பயணம் செய்தால் கஸர் சலுகை உண்டா? அல்லது ஒன்பது மைல் தொலைவு பயணம் செய்தால் கஸர் சலுகை உண்டா? சந்தேகத்துடன் அறிவிப்பாளர் இதைக் கூறுவதால் இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். இதை நாம் ஆய்வு செய்து இரண்டில் எது சரியானது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

காலத்தைக் குறித்தோ, அளவைக் குறித்தோ குறிப்பிடும் போது இதையோ, அதையோ கூறினார்கள் என்று அறிவிப்பாளர் கூறினால் அந்தச் சந்தேகத்தைப் போக்கி உறுதியாக ஒரு அளவைக் குறிப்பிடும் ஹதீஸ் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு கிடைத்தால் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு சந்தேகத்துடன் அறிவிக்கப்படும் செய்தியை விட்டுவிட வேண்டும். அவ்வாறு கிடைக்காவிட்டால் இரு அளவுகளில் எது உறுதியானதோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது போல் ஒன்பது மைல் தொலைவில் கஸர் செய்தது உறுதியானது. மூன்று மைலில் கஸர் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு இடமானது. எனவே உறுதியானதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மூன்று ஃபர்ஸக் என்பதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அன்றைய கால மூன்று பர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ. ஆகும்.

ஒருவர் 25 கி.மீ. தூரமுள்ள ஊருக்குப் பயணம் செல்ல நாடி ஊர் எல்லையை அவர் கடந்து விட்டால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

صحيح البخاري

1089 – عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «صَلَّيْتُ الظُّهْرَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»

‘மதீனாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா புறப்பட்டார்கள். (இடையில் உள்ள ஊரான) துல்ஹுலைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.’

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 1089

பயணத்தில் இருப்பவர் விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் லுஹருடைய நேரத்தில் தொழலாம்.

விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் அஸருடைய நேரத்தில் தொழலாம்.

அதே போல் மஃரிப் தொழுகையையும் ,இஷா தொழுகையையும் மஃரிபுடைய நேரத்தில் தொழலாம்.

அல்லது இஷாத் தொழுகையின் நேரத்தில் தொழலாம்.

அப்போது நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர், அஸர், இஷா) இரண்டு ரக்அத்களாகச் சுருக்கியும் தொழலாம். சுப்ஹுத் தொழுகையை இரண்டு ரக்அத்தாகவும், மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்களாவும் தொழ வேண்டும்.

صحيح مسلم

فَتَوَضَّأَ ثُمَّ رَكِبَ، ثُمَّ أَتَى الْمُزْدَلِفَةَ فَجَمَعَ بِهَا بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்து தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம்

صحيح البخاري

1111 – كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ العَصْرِ، ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا، وَإِذَا زَاغَتْ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ»

சூரியன் சாய்வதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 1111

صحيح البخاري

1091 – ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ فِي السَّفَرِ يُؤَخِّرُ المَغْرِبَ، حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ العِشَاءِ» قَالَ سَالِمٌ: وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلُهُ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ ”

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 1091

இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழும் போது இரண்டு தொழுகைக்கும் சேர்த்து ஒரு பாங்கு சொல்ல வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியாக இகாமத் சொல்லியோ, அல்லது இரண்டு தொழுகைக்கும் ஒரேயொரு இகாமத் மட்டும் சொல்லியோ தொழலாம்.

صحيح مسلم

حَتَّى أَتَى الْمُزْدَلِفَةَ، فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِأَذَانٍ وَاحِدٍ وَإِقَامَتَيْنِ، وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا شَيْئًا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும், இஷாவையும் ஒரு பாங்கு இரண்டு இகாமத் சொல்லி தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

صحيح مسلم

«جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ لَيْسَ بَيْنَهُمَا سَجْدَةٌ، وَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ، وَصَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்துத் தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2268

சுருக்கித் தொழுவது கட்டாயம் இல்லை

பயணியாக இருப்பவர் தொழுகையைச் சுருக்கித் தொழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரும்பினால் முழுமையாகவும் தொழலாம்.

سنن النسائي

عَنْ عَائِشَةَ، أَنَّهَا اعْتَمَرَتْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ حَتَّى إِذَا قَدِمَتْ مَكَّةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، بَأَبِي أَنْتَ وَأُمِّي قَصَرْتَ، وَأَتْمَمْتُ، وَأَفْطَرْتَ، وَصُمْتُ، قَالَ: «أَحْسَنْتِ يَا عَائِشَةُ»، وَمَا عَابَ عَلَيَّ

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை. நான் நோன்பு நோற்கிறேன்’ என்று நான் கேட்ட போது ‘ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!’ என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸாயீ

எத்தனை நாட்கள்

ஒருவர் பயணத்தில் இருக்கிறார் என்பதற்கு இரு கருத்துக்கள் கொடுக்கலாம்.

பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கருத்து கொடுக்கலாம்.

பயணம் செய்து வெளியூரில் சில நாட்கள் தங்கினாலும் பயணம் என்று கருத்து கொடுக்கலாம்.

இந்த இரண்டாவது கருத்து தான் சரியானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்கான பயணம் செய்யும் போது போகும் வழியில் மட்டுமில்லாமல் சில நாட்கள் மக்காவில் தங்கிய போதும் கஸர் செய்துள்ளார்கள். சொந்த ஊருக்கு திரும்பும் வரை உள்ள காலம் பயணமாக கருதப்படும்.

صحيح البخاري

4298 – حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «أَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ تِسْعَةَ عَشَرَ يَوْمًا يُصَلِّي رَكْعَتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பத்தொன்பது நாட்கள் தங்கிய போது இரண்டுரக் அத்களாக தொழுதார்கள்.

நூல்; புகாரி

ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை.

சொந்த ஊரைவிட்டு வெளியூரில் எவ்வளவு காலம் தங்கினாலும் அவருக்கு இச்சலுகை உண்டு.

உள்ளூரில் ஜம்வு செய்தல்

ஒருவர் உள்ளூரில் இருக்கும் போதும் எப்போதாவது ஜம்வு செய்து (சேர்த்துத்) தொழுவதற்கு அனுமதி உள்ளது. எனினும் இதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் தொடர்ந்து ஜம்வு செய்து வந்தால் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்ற இறைவனின் கட்டளைக்குப் பொருள் இல்லாமல் போய்விடும்.

صحيح البخاري

543 – عَنِ ابْنِ عَبَّاسٍ: ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا: الظُّهْرَ وَالعَصْرَ وَالمَغْرِبَ وَالعِشَاءَ “، فَقَالَ أَيُّوبُ: لَعَلَّهُ فِي لَيْلَةٍ مَطِيرَةٍ، قَالَ: عَسَى

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும், அஸ்ரையும், மஃரிபையும், இஷாவையும் ஏழு, எட்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரீ 543

صحيح مسلم

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ، فِي غَيْرِ خَوْفٍ، وَلَا مَطَرٍ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ, பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1267