வட்டி
வட்டிக்கு அறவே அனுமதி இல்லை
இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும்.
வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. வட்டி வாங்குவோர் அல்லாஹ்வுடன் போர் செய்பவர்கள் என்றும் மேலும் வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம் எனவும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
திருக்குர்ஆன் 2:278, 279
கொடும் வட்டிதான் தடுக்கப்பட்டுள்ளது; சிறிய அளவிலான வட்டிக்குத் தடை இல்லை என்று சிலர் வாதிட்டு இதற்கு ஆதாரமாகப் பின்வரும் வசனத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.
நம்பிக்கைகொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.
திருக்குர்ஆன் 3:130
பன்மடங்கு வட்டி கூடாது என்றுதான் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்; எனவே சிறிய வட்டிக்கு அனுமதி உள்ளது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
பன்மடங்காகப் பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள் என்ற சொற்றொடர் இவர்கள் கூறும் கருத்தில் பயன்படுத்தப்படவில்லை. சிறிய வட்டியாக இருந்தாலும் பெரிய வட்டியாக இருந்தாலும் வட்டியின் தன்மையே பன்மடங்காகப் பெருகுவதுதான்.
ஒரு பொருளை ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார். அதில் அவருக்கு ஐம்பது ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஐம்பது ரூபாய் லாபத்துடன் அந்த வியாபாரம் முடிந்து விடுகிறது.
ஆனால் ஆயிரம் ரூபாயை ஒருவர் மாதம் ஐம்பது ரூபாய் என்று வட்டிக்குக் கொடுக்கிறார். மாதாமாதம் ஐம்பது ரூபாய் என்று அது பன்மடங்காகிக் கொண்டே இருக்கும். பத்து ரூபாய் வட்டி என்று வைத்தாலும் அதுவும் பன்மடங்காகப் பெருகிக் கொண்டுதான் இருக்கும். வட்டியின் தன்மையே அதுதான். எனவேதான் பன்மடங்காக பெருகிக் கொண்டுள்ள நிலையில் வட்டியை உண்ணாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். சிறிய வட்டியை அனுமதிக்கும் வகையில் இந்த வாசகம் அமையவில்லை.
மேலும் பின்வரும் வசனத்தில் “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வரவேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான். சிறிய வட்டி கூடும் என்றால் வரவேண்டிய வட்டியில் பெரிய வட்டியை விட்டு விடுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பான். வரவேண்டிய வட்டி சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் அதை விட்டுவிட வேண்டும் என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளதால் வட்டி முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
صحيح البخاري
2086 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ: رَأَيْتُ أَبِي اشْتَرَى عَبْدًا حَجَّامًا، فَسَأَلْتُهُ فَقَالَ: « نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الكَلْبِ وَثَمَنِ الدَّمِ، وَنَهَى عَنِ الوَاشِمَةِ وَالمَوْشُومَةِ، وَآكِلِ الرِّبَا وَمُوكِلِهِ، وَلَعَنَ المُصَوِّرَ»
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
நூல் : புகாரி 2086, 5347, 5945
صحيح مسلم
4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.
வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்றும் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 4177
வட்டி என்றால் என்ன?
இஸ்லாத்தில் எவை வட்டியாகக் கருதப்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளனர்.
ரொக்கமாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி ஏற்படும்.
கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி ஏற்படும்.
ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு பொருட்களுக்கு மத்தியில் பண்டமாற்று செய்யும்போது இரண்டும் சமமாக இருக்க வேண்டும். ஒன்று அதிகமாகவும் மற்றொன்று குறைவாகவும் இருந்தால் அது வட்டியாகக் கருதப்படும்.
வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த பொருட்களுக்கு மத்தியில் ரொக்கமாக நடக்கும் கொடுக்கல் வாங்கலில் வட்டி ஏற்படாது.
உதாரணமாக அரிசிக்குப் பதில் நாம் கோதுமையை வாங்கினால் இரண்டும் சமமாக இருக்க வேண்டியதில்லை. பத்து கிலோ அரிசிக்கு இருபது கிலோ கோதுமையை வாங்கலாம். அல்லது பத்து கிலோ அரிசியைக் கொடுத்து விட்டு ஐந்து கிலோ கோதுமையை வாங்கலாம். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மக்கள் இதைத் தீர்மானித்துக் கொள்வார்கள். அரிசியும் கோதுமையும் வெவ்வேறு இனம் என்பதால் இது வட்டியாகாது.
பத்து கிலோ பாசுமதி அரிசியைக் கொடுத்து விட்டு இருபது கிலோ பொன்னி அரிசியை வாங்கினால் அது வட்டியாகிவிடும். ஏனெனில் இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாகும். இரண்டு அரிசிக்கும் தரத்தில் வேறுபாடு இருப்பதால் இந்த வித்தியாசம் ஏற்பட்டு இருக்கலாம் என்றாலும் இதுவும் வட்டி என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
உணவுப் பொருட்களில் இதன் நுணுக்கம் நமக்குப் புரியாவிட்டாலும் நாணயங்களை மாற்றும்போது இதன் நுணுக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.
90 ஒரு ரூபாயைக் கொடுத்து விட்டு முழு நூறு ரூபாயை வாங்கினால் அது வட்டியாகி விடும். ரூபாய்க்கு பதிலாக ரியால் அல்லது திர்ஹத்தை மாற்றினால் அதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் வட்டியாக ஆகாது.
இதற்கான ஆதாரங்கள் வருமாறு :
صحيح البخاري
2302 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ المَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعْمَلَ رَجُلًا عَلَى خَيْبَرَ، فَجَاءَهُمْ بِتَمْرٍ جَنِيبٍ، فَقَالَ: «أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا»، فَقَالَ: إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ، وَالصَّاعَيْنِ بِالثَّلاَثَةِ، فَقَالَ: «لاَ تَفْعَلْ، بِعِ الجَمْعَ بِالدَّرَاهِمِ، ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا»، وَقَالَ فِي المِيزَانِ مِثْلَ ذَلِكَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபருக்கு அதிகாரியாக நியமித்தார்கள். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உயர் ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா?” என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; அல்லாஹ்வின் தூதரே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாஉக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாஉவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாஉக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாஉவையும் நாங்கள் வாங்குவோம் எனக் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக! எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 2202, 2303, 2321
صحيح البخاري
2175 – حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، قَالَ: قَالَ أَبُو بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ، وَالفِضَّةَ بِالفِضَّةِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ، وَبِيعُوا الذَّهَبَ بِالفِضَّةِ، وَالفِضَّةَ بِالذَّهَبِ كَيْفَ شِئْتُمْ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்.
நூல் : புகாரி 2175, 2177, 2182
ஆனால் கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலில் ஒரே இனமாக இருந்தாலும் வெவ்வேறு இனமாக இருந்தாலும் கூடுதல் குறைவு இருக்கக் கூடாது.
இன்று நூறு மூட்டை நெல் தருகிறேன்; அடுத்த மாதம் நூற்றி இருபது மூட்டை நெல்லைத்தா என்று சொன்னால் அது வட்டியாகும்.
இன்று நூறு மூட்டை நெல் தருகிறேன். அடுத்த மாதம் நூற்றி இருபது மூட்டை கோதுமை தா எனக் கூறினாலும் அதுவும் வட்டியாகும்.
தவணை முறையில் கொடுக்கல் வாங்கல் நடக்கும்போது கொடுத்ததை விட அதிகமாக வாங்கினால் அது வட்டியாகும்.
صحيح البخاري
2177 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ، وَلاَ تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ، وَلاَ تَبِيعُوا الوَرِقَ بِالوَرِقِ إِلَّا مِثْلًا بِمِثْلٍ، وَلاَ تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ، وَلاَ تَبِيعُوا مِنْهَا غَائِبًا بِنَاجِزٍ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!
நூல் : புகாரி 2177
நாணயம் மாற்றும் முறை
ஒரு நாணயத்துக்குப் பகரமாக இன்னொரு நாட்டு நாணயத்தை மாற்றும் போது எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கும். பத்து சவூதி ரியாலுக்கு நூறு இந்திய ரூபாய் என்று மாற்றினால் பத்துக்கு பதிலாக நூறு வாங்கியது போல் உள்ளது.
இந்த ஏற்றத் தாழ்வு நாணயங்களுடைய மதிப்பு வேறுபாட்டினால் வந்ததா? வட்டி என்ற அடிப்படையில் வந்ததா என்று உறுதி செய்ய வேண்டும்.
இன்று பத்து சவூதி ரியால் தருகிறேன்; அடுத்த மாதம் நூறு இந்திய ரூபாய் கொடு என்று சொன்னால் கடனாகக் கொடுப்பதால் இந்த வேறுபாடு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அப்படியானால் அது வட்டியாகி விடும்.
ஆனால் இப்போது பத்து ரியாலைக் கொடுத்து விட்டு இப்போதே நூறு ரூபாயை வங்கினால் நாணய மதிப்பில் உள்ள வித்தியாசம் தான் காரணம் என்று உறுதியாகின்றது.
صحيح البخاري 2060 –
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ أَبِي المِنْهَالِ، قَالَ: كُنْتُ أَتَّجِرُ فِي الصَّرْفِ، فَسَأَلْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنِي الفَضْلُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا الحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، وَعَامِرُ بْنُ مُصْعَبٍ: أَنَّهُمَا سَمِعَا أَبَا المِنْهَالِ، يَقُولُ: سَأَلْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ، وَزَيْدَ بْنَ أَرْقَمَ عَنِ الصَّرْفِ، فَقَالاَ: كُنَّا تَاجِرَيْنِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّرْفِ، فَقَالَ: «إِنْ كَانَ يَدًا بِيَدٍ فَلاَ بَأْسَ، وَإِنْ كَانَ نَسَاءً فَلاَ يَصْلُحُ»
அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
நான் நாணயமாற்று வியாபாரம் செய்துவந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் பின் அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்: அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம்; அதற்கு உடனுக்குடன் மாற்றிக் கொண்டால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது என அவர்கள் பதிலளித்தார்கள் என்றார்கள்.
நூல் : புகாரி 2061, 2498, 3940
வங்கிகள் மூலம் கிடைக்கும் வட்டி
வங்கிகளில் நாம் பணத்தைச் சேமித்து வைக்கிறோம். பணத்தைப் பாதுகாக்கவும், எளிதில் பணப்பரிமாற்றச் செய்யும் வசதிக்காகவும்தான் நாம் வங்கிகளில் பணத்தைச் சேமிக்கிறோம். ஆனாலும் நாம் விரும்பாவிட்டாலும் வங்கிகள் நம் கணக்கில் வட்டியை வரவு வைக்கின்றனர். இந்த வட்டியை நாம் வாங்கிக் கொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
அந்தப் பணத்தை வாங்கி நன்மையை எதிர்பாராமல் ஏழைகளுக்குக் கொடுத்து விடவேண்டும். அல்லது கழிப்பறை கட்டுதல் போன்ற காரியங்களுக்காக செலவிட வேண்டும் என்பதுதான் அதிகமான அறிஞர்களின் முடிவாக உள்ளது.
ஆனால் இம்முடிவு பல காரணங்களால் தவறாகும்.
கழிப்பறை கட்டுவதற்காக ஹராமான பணத்தைப் பயன்படுத்தலாம் என்ற சட்டத்தை எங்கிருந்து பெற்றார்களோ தெரியவில்லை. உணவுக்காகச் செய்யப்படும் செலவு எப்படி ஹலாலாக இருக்க வேண்டுமோ அது போல் கழிப்பறை கட்டும் செலவும் ஹலாலாக இருக்க வேண்டும். ஆடைகளுக்காகச் செய்யப்படும் செலவு எப்படி ஹலாலாக இருக்க வேண்டுமோ அது போல் செருப்பு வாங்கும் செலவும் ஹலாலாக இருக்க வேண்டும். இதுதான் இஸ்லாமிய பொருளாதாரத்தின் அடிப்படையாகும். இந்த அடிப்படைக்கு மாற்றமாக இவர்களின் தீர்ப்பு அமைந்துள்ளது
அல்லாஹ் நமக்கு ஒன்றை ஹராமாக ஆக்கிவிட்டால் அதை எப்படி நாம் பயன்படுத்தக் கூடாதோ அது போல் மற்றவருக்கும் கொடுக்கக் கூடாது. நமக்கு பன்றி ஹராம் என்றால் மற்றவருக்கு பன்றிக்கறி பிரியாணி செய்து கொடுக்க முடியாது. இந்த அடிப்படைக்கு மாற்றமாகவும் இவர்களின் தீர்ப்பு அமைந்துள்ளது.
அடுத்தவருக்கு நாம் கொடுக்கலாம் என்றால் அதை நாமே வைத்துக் கொள்ளலாம். மற்றவருக்குக் கொடுக்க அனுமதிக்கப்பட்ட எந்த ஒன்றையும் நாமே வைத்துக் கொள்ளவும் மார்க்கத்தில் அனுமதி உண்டு. இந்த அடிப்படைக்கு மாறாகவும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
திருடக் கூடாது என்று மார்க்கம் தடுத்துள்ளது. நாம் திருடி விட்டு அதை ஏழைகளுக்குத் தர்மம் செய்தால் திருடிய குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா?
நாம் வாங்காவிட்டால் அந்தப் பணத்தை நமக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள் என்று காரணம் சொல்லப்படுகிறது.
அது உண்மையாக இருந்தால் நம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படையில் – நிர்பந்தம் என்ற அடிப்படையில் – வங்கிகளில் விட்டு வைக்காமல் நிர்பந்தம் என்ற காரணத்துக்காக பெற்றுக் கொள்ளலாம்.
2:195 وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ وَاَحْسِنُوْا ۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். திருக்குர் ஆன் 2:195
நிர்பந்தம் என்ற காரணம் இருந்து அந்த வட்டியைப் பெறலாம் என்றால் அதை நாமே வைத்துக் கொள்வதும். மற்றவருக்கு கொடுப்பதும் சமமானவை தான்.
கழிப்பிடம் கட்ட செலவிடுவதும் அறப்பணிகளுக்கு வழங்குவதும் சமமானது தான்.
ஆனால் அந்தப் பணம் நமக்கு எதிராக நம்மை அழிக்கப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் நிர்பந்தம் என்ற நிலை ஏற்படும்.
வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா?
நம்முடைய சேமிப்புக்கு வங்கிகள் தரும் வட்டியை வாங்கக் கூடாது என்பதால் வங்கிகளில் கணக்கு வைக்கக் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது.
வங்கிகள் தங்களின் இருப்புகளை வட்டிக்குக் கொடுப்பதால் அதற்கு நாம் துணை போகக் கூடாது என்ற காரணத்தால் வங்கிகளில் கணக்கு வைக்கக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். நமது பொருளைப் பாதுகாப்பதற்காகத்தான் வங்கியில் சேமிக்கிறோம். அதை அவர்கள் வட்டிக்குக் கொடுத்தால் அந்தக் குற்றம் நம்மைச் சேராது. இப்படி இஸ்லாம் நமக்கு வழிகாட்டவில்லை.
ஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். ஒரு தங்கக்காசை நீர் நம்பி ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். “எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது” என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டி கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 3:75
யூதர்கள் வட்டித் தொழில்தான் செய்து வந்தனர் என்று திருக்குர்ஆன் சொல்கிறது. (பார்க்க 4:161)
அவர்கள் வட்டித் தொழில் செய்வதால் அவர்களிடம் எந்தப் பொருளையும் நம்பி ஒப்படைக்காதீர்கள்; அவர்கள் அதை வட்டிக்குப் பயன்படுத்துவார்கள் என்று கூறாமல் அந்த யூதர்களில் நாணயமானவர்களும் உள்ளனர்; நம்பி ஒப்படைக்கப்படும் பொருட்களை நாணயமாக திருப்பித் தருவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.
எனவே வங்கியில் நாம் சேமிக்கும் பணத்தை அவர்கள் வட்டிக்கு விடுவார்கள் என்பதால் வங்கியில் கணக்கு வைப்பது தவறு எனக் கூற முடியாது.
நம்முடைய நாட்டில் உள்ள சட்டப்படி பெரிய தொகைகளைக் கையில் வைத்திருப்பது பொருளாதாரக் குற்றமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக பெரிய தொகைகளை வங்கியில் பாதுகாத்து வைப்பது நிர்பந்தமாகவும் ஆகி விடுகின்றது.
ஒருவர் காசோலையாக அல்லது வரைவோலையாக நமக்குப் பணம் தந்தால் அந்தப் பணத்தை நம்முடையதாக ஆக்கிக் கொள்ள வங்கியில் கணக்கு வைப்பது அவசியமாகின்றது. இல்லாவிட்டால் நம்முடைய பணம் நமக்குக் கிடைக்காமல் போய் விடும். இந்தக் காரணத்துக்காகவும் வங்கியில் கணக்கு வைப்பது சிலருக்கு அவசியமாகி விடுகின்றது.
மேலும் வெளியூர்களுக்குச் செல்லும்போது அதிகமான பணத்தைக் கையில் வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல. பணமாக வைத்திருப்பது நம்முடைய உயிருக்குக்கூட கேடாக ஆகிவிடும். வங்கியில் கணக்கு வைத்திருந்தால் நமக்குத் தேவைப்படும் பணத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.
இதுபோல் மார்க்கம் அனுமதித்துள்ள பல காரியங்களை வங்கியில் கணக்கு வைத்திருப்பதன் மூலம் நாம் சாதித்துக் கொள்ள முடியும். எனவே வங்கியில் கணக்கு வைப்பதைத் தடுக்க எந்த முகாந்திரம் இல்லை.
ஷரியத் பைனான்ஸ் மற்றும் இஸ்லாமிய வங்கி
வட்டி இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதாலும் வட்டியை வெறுப்பவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் அதிகமாக உள்ளதாலும் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
வட்டி இல்லாத வங்கி நடத்துகிறோம்; ஷரீஅத் ஃபைனான்ஸ் நடத்துகிறோம் எனக் கூறிக் கொண்டு மக்களைச் சுரண்டி வருகின்றனர். ஆனால் இவர்கள் நடத்துவது ஷரீஅத் ஃபைனான்ஸ் அல்ல. ஷரீஅத்துக்கு எதிரான ஃபைனான்ஸ் ஆகும்.
வட்டியில்லாமல் கடன் தருகிறோம் எனக் கூறிக் கொண்டு இவர்கள் நிதிநிறுவனம் உருவாக்குகிறார்கள். நாம் இவர்களை அணுகி கடன் கேட்டால் ரொக்கமாகக் கடன் தர மாட்டார்கள். எதற்காகக் கடன் என்று கேட்பார்கள். வீடு வாங்க அல்லது கார் வாங்க கடன் வேண்டுமென்று நாம் கூறினால் அந்தக் காரை அந்த வீட்டை நாங்கள் வாங்கித் தருகிறோம் எனக் கூறி காரை அல்லது வீட்டை விலைக்கு வாங்கி அதைக் கடனாகத் தருவார்கள். கடன் அடையும் வரை அதைத் தங்கள் பெயரில் அடைமானமாக வைத்துக் கொள்வார்கள்.
அதாவது காரின் விலை பத்து லட்சம் என்றால் அந்தக்காரை இவர்கள் வாங்கி நமக்கு 12 லட்சத்துக்கு தருவார்கள். 12 லட்சம் தந்தால் போதும்; வட்டி தர வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால் இவர்கள் ரொக்கமாக பத்து லட்ச ரூபாய் கடனாகத் தந்தால் பத்து லட்சத்துக்கு அந்தக் காரை நாம் வாங்க முடியும். வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மூலம் அந்தக் காரை வாங்குவதாக இருந்தால் பத்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்க முடியும். ஆனால் இவர்கள் வட்டியை விட மேலும் மும்மடங்கு கொள்ளை அடிப்பதற்கு ஷரீஅத் போர்வை போர்த்தி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
சந்தையில் பத்து லட்சத்துக்குக் கிடைக்கும் காரை இவர்கள் கடனாக வாங்கித்தரும் காரணத்தால்தான் 12 லட்சத்தை நம்மிடம் கறந்து விடுகிறார்கள். இது அப்பட்டமான கொடும் வட்டி என்பதில் சந்தேகம் கிடையாது.
வீடு வாங்குவதற்காக பணமாகக் கடன் கொடுத்தால் பல இடங்களில் விசாரித்து எங்கே குறைவாக உள்ளதோ அங்கே வாங்கிக் கொள்ள முடியும். இதை விட்டுவிட்டு நாங்கள்தான் வீடு வாங்கித் தருவோம் என்று கூறி வட்டியைவிட அதிக விலைக்கு விற்பது என்ன நியாயம்? இதற்குத்தான் ஷரியத் பைனான்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். வட்டிக்கடைக்காரர்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக ஒரு கூட்டம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றது. சில ஆலிம்கள் இது ஷரீஅத் அடிப்படையிலானது என்று பத்வா கொடுத்து பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வட்டியை வேறுவடிவத்தில் வாங்குவதுடன் இவர்கள் இன்னொரு பாவமும் செய்கிறார்கள்.
இடைத் தரகராக இருந்து விலையை ஏற்றிவிடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். பத்து லட்சம் பெறுமானமுள்ள பொருளை இடையில் புகுந்து 12 லட்சமாக ஆக்கும் குற்றத்தையும் இவர்கள் செய்கிறார்கள்.
ஆபத்தான நிலையில் ஒருவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு அதற்காக வட்டியில்லா கடன் கேட்டால் ஷரீஅத் ஃபைனான்சில் தருவார்களா என்றால் தர மாட்டார்கள். வீட்டையோ வேறு சொத்தையோ அடைமானமாக வைத்துக் கொண்டு மருத்துவத்துக்குக் கடன் தாருங்கள் என்று கேட்டாலும் தர மாட்டார்கள். நாமே விலை பேசி முடித்த பொருளை அதே விலைக்கு வாங்கி அதைவிட இரண்டு மூன்று லட்சம் அதிக விலைக்கு நம்மிடம் விற்கும் இவர்கள் வட்டி வாங்குவோரை விட அயோக்கியத்தனம் செய்பவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்சூரன்ஸ்
இன்ஷ்யூரன்ஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத நவீன பிரச்சனையாகும். சமீப காலத்தில்தான் இது வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆயினும் இது குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன.
இஸ்லாம் தடுத்துள்ள வட்டி, மோசடி, ஏமாற்றுதல் போன்றவை இருந்தால் அது எந்த நவீன பிரச்சனையாக இருந்தாலும் அது தடுக்கப்பட்டதாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அனுமதிக்கப்பட்டதாகும்.
பொத்தாம் பொதுவாக இன்ஷ்யூரன்ஸ் கூடாது என்று சிலர் மார்க்கத் தீர்ப்பு அளித்து வருகின்றனர். இது தவறாகும்.
இன்ஷ்யூரன்ஸில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வட்டியை அடிப்படையாகக் கொண்டவையும் உள்ளன. அவை மட்டுமே மார்க்கத்தில் தடுக்கப்பட்டவையாகும். அவ்வாறு இல்லாத இன்ஷ்யூரன்ஸ் வகைகளைத் தடுப்பதற்கு தக்க காரணம் இல்லை.
உதாரணமாக ஆயுள் காப்பீடு என்ற வகையை எடுத்துக் கொள்வோம். ஒருவர் பத்து லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார் என்றால் இந்தத் தொகையை குறிப்பிட்ட வருடங்கள் வரை ஆண்டுக்கு இவ்வளவு என்ற விகிதத்தில் அவர் கட்டி வர வேண்டும். முழுகையாகக் கட்டி முடித்து விட்டால் கட்டிய தொகை வட்டியுடன் திருப்பித் தரப்படும். அல்லது இடையிடையே கணக்குப் பார்த்து போனஸ் என்ற பெயரில் வட்டி தருவார்கள்.
பத்து லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுத்தவர் முதல் தவணை கட்டிய உடன் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் கிடைத்து விடும்.
காப்பீடு எடுத்தவர் மரணிக்காமல் தொடர்ந்து தவணையைக் கட்டி வரும்போது காப்பீட்டு நிறுவனங்கள் வட்டி தருகிறார்கள். இது மார்க்கத்துக்கு எதிரானதாகும். இதன் காரணமாக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேரக்கூடாது என்று கூறலாம். ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் நாம் செலுத்தும் பணத்துக்கு வட்டி தரப்பட மாட்டாது என்ற வகையில் இத்திட்டம் மாற்றப்பட்டால் இதைத் தடை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இதில் சேர்பவர்கள் வருடத்துக்கு ஒரு தொகையைக் கட்ட வேண்டும். இதில் சேரக்கூடியவர்களின் வயது, ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து இத்தொகை வேறுபடும். இத்திட்டத்தில் சேர்பவருக்கு பெரிய நோய் வந்து விட்டால் அவர் ஆயிரம் ரூபாய் கட்டி இருந்தாலும் அவரது மருத்துவச் செலவுக்கு காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளும். அந்த ஒரு வருடத்துக்குள் எந்த நோயும் வராவிட்டால் அவர் கட்டிய பணம் திரும்பத்தரப்பட மாட்டாது. கட்டிய பணமே திரும்பக் கிடைக்காது என்றால் வட்டியைக் கற்பனை செய்ய முடியாது.
அதாவது பல்லாயிரம் பேர் ஆயிரம் ரூபாய் கட்டுகிறோம். எங்களுக்கு நோய் வந்தால் அதற்கு மருத்துவம் செய்ய உதவுங்கள். நோய் வராவிட்டால் எங்கள் பணம் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என்ற அடிப்படையில்தான் இதில் சேர்பவர்கள் பணம் செலுத்துகிறார்கள். இதில் வட்டியும் இல்லை. மோசடியும் இல்லை. யாரையும் ஏமாற்றுதலும் இல்லை.
இதுபோல்தான் வாகனத்திற்கான இன்ஷ்யூரன்ஸும் உள்ளது. நாம் ஒரு வாகனத்தை வாங்கினால் அதில் மூன்று விதமான பாதிப்புகள் ஏற்படலாம். விபத்துகள் ஏற்படும்போது அந்த வாகனத்துக்குச் சேதம் ஏற்படலாம். அல்லது வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்குச் சேதம் ஏற்படலாம். அல்லது வாகனத்தினால் மற்றவருக்குச் சேதம் ஏற்படலாம்.
பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவோ நமக்குரிய சிகிச்சை செய்து கொள்ளவோ வாகனத்தைச் சீர்செய்யவோ நமக்கு இயலாமல் போகலாம். இதைக் கருத்தில் கொண்டுதான் வாகனக் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வாகனத்துக்காக நாம் செலுத்தும் காப்பீட்டுத் தொகை நமக்கு திரும்பத் தரப்படாது. ஏதேனும் விபத்து அல்லது வாகனத் திருட்டு போன்றவை நடந்தால் காப்பீட்டு நிறுவனம் அதற்கான செலவை ஏற்றுக் கொள்ளும். மார்க்கத்தின் அடிப்படையில் இதைத் தடை செய்ய ஒரு முகாந்திரமும் இல்லை.
அது போல்தான் வீடுகள், கடைகள், இன்னபிற சொத்துக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. இந்தக் காப்பீட்டுத் திட்டங்களில் ஆண்டு தோறும் நாம் செலுத்தும் தொகை அந்த ஆண்டுடன் காலாவதியாகி விடும். திரும்பத் தரப்படமாட்டாது. அசலும் தரமாட்டார்கள். வட்டியும் தர மாட்டார்கள். எனவே இவற்றைக் கூடாது எனக் கூற எந்த நியாயமும் முகாந்திரமும் இல்லை.
கலவரங்களின்போது முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் இன்னபிற சொத்துக்களும் சூறையாடப்படுகின்றன. முஸ்லிம்கள் காப்பீடு செய்வதில்லை; எனவே அவர்களின் சொத்துக்களை அழித்தால் அதோடு அவர்கள் பிச்சைக்காரர்களாக ஆவார்கள் என்று எதிரிகள் நன்றாக விளங்கி வைத்துள்ளதால் திட்டமிட்டு முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடுவதை ஒரு கொள்கையாக வைத்துள்ளனர். கடைகள் மற்றும் சொத்துக்களுக்கு காப்பீடு செய்தால் இவர்களின் சொத்துக்களை அழித்தாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதால் சொத்துக்களைச் சூறையாடுவதுகூட தவிர்க்கப்படும். அப்படி சூறையாடினாலும் காப்பீட்டின் மூலம் இழப்பீட்டைப் பெற்று பழைய நிலையை அடைய முடியும்
இதைக் கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் இயன்றவரை தொழில் நிறுவனங்களைக் காப்பீடு செய்வதுதான் அறிவுடமையாகும்.
தவணை வியாபாரம்
அதைப் போல தவணை வியாபாரம் பற்றியும் நாம் விரிவாக விளங்க வேண்டியுள்ளது.
ரொக்கமாக வியாபாரம் செய்ய அனுமதி உள்ளது போல் கடனாகவும், தவணை முறையிலும் வியாபாரம் செய்ய அனுமதி உள்ளது. ஆனால் ரொக்கத்துக்கு ஒரு விலை கடனுக்கு ஒரு விலை என்று இரட்டை விலை வைத்து விற்பது வட்டி என்பதால் இதற்கு அனுமதி இல்லை.
ரொக்கமாக மட்டும் அல்லது கடனாக மட்டும் ஒருவர் வியாபாரம் செய்தால் அதில் இரட்டைவிலை வைப்பது குற்றமாகாது.
அதிக அளவில் வாங்குபவருக்கு விலை குறைவாக கொடுக்கலாம். அதுபோல் தனக்கு வேண்டியவர்களுக்கு லாபமே வைக்காமல் அசலுக்குக்கூட விற்கலாம். இதில் எந்தக் குற்றமும் இல்லை.
ஆயிரம் ரூபாய்க்கு நாம் விற்கும் பொருளை நம்முடைய உறவினருக்கு 900 ரூபாய்க்குக் கொடுப்போம். அல்லது இலவசமாகக்கூட கொடுப்போம். இது தடுக்கப்பட்ட இரட்டை விலையில் சேராது. ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்ததால் எனக்கும் இலவசமாகக் கொடு என்று மற்றவர்கள் கேட்க முடியாது.
கடனுக்கு ஒரு விலை ரொக்கத்துக்கு ஒரு விலை என்று இரட்டை விலை நிர்ணயிக்கும்போதுதான் அது வட்டியாக ஆகின்றது. அவ்வாறு இல்லாமல் வேறு காரணங்களுக்காக ஒரு பொருளுக்கு இரு விலைகள் நிர்ணயிப்பது குற்றமாகாது.
ஒரு பொருள் வாங்கினால் இன்ன விலை; பத்து பொருள் வாங்கினால் இன்ன விலை என்று சொல்லும்போது இங்கும் இரட்டை விலைதான் வருகிறது. ஆனால் இது குற்றமில்லை. ஏனெனில் கடனுக்காக நாம் விலையை அதிகரிக்கவில்லை.
ஆனால் ரொக்கமாக விற்கும்போது ஆயிரம் ரூபாய் எனவும் கடனாக விற்கும்போது 1200 ரூபாய் எனவும் விற்பனை செய்தால் கூடுதலான 200 ரூபாய் பொருளுக்கான விலை அல்ல. வியாபாரியின் பணம் வாடிக்கையாளரிடம் சில நாட்கள் இருக்கிறது என்பதற்காகத்தான் 200 ரூபாய் அதிகமாக்கப்படுகிறது. ஒருவரின் பணம் இன்னொருவரிடம் இருப்பதற்காக பெறக்கூடிய ஆதாயம் தான் வட்டியாகும். எனவே கடனுக்கு ஒரு விலை ரொக்கத்துக்கு ஒரு விலை என்று விற்பதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.
ஒத்திக்கு விடுதல் கூடாது
சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொண்டு வீட்டை ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். வீட்டை ஒப்புக் கொண்டவர் பெரிய தொகையைக் கொடுத்துள்ளதால் வாடகை ஏதும் கொடுக்காமல் வீட்டில் குடியிருப்பார். குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னர் முன்பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை ஒப்படைப்பார். இது ஒத்தி எனவும் சில பகுதிகளில் போகியம் எனவும் கூறப்படுகின்றது.
கொடுத்த பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதற்காக வீட்டை அடைமானமாகப் பெற்றுக் கொள்வது குற்றமில்லை. ஆனால் அதற்குரிய வாடகையை வீட்டின் உரிமையாளருக்குக் கொடுக்காமல் கொடுத்த பணத்துக்காக ஆதாயம் அடைவது வட்டியாகும் என்பதால் இதை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கடனாக நாம் கொடுக்கும் பணத்துக்கு உத்தரவாதம் தேவை என்றால் வீட்டின் பத்திரத்தை அடைமானமாகப் பெற்று எழுதிக் கொண்டு உரிமையாளரை வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதிக்கலாம். அல்லது வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டுக் கொள்ள உரிமையாளரை அனுமதிக்கலாம். ஒரு முஸ்லிம் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். ஒருவனுக்கு ஏற்பட்ட பண நெருக்கடியைப் பயன்படுத்தி வட்டியை வேறு பெயரில் வாங்கக் கூடாது.
ஏலச்சீட்டு
ஏலச் சீட்டு என்ற பெயரில் நடக்கும் அநியாயத்துக்கு நம் சமுதாயத்திலும் சிலர் பலியாகி உள்ளனர். அது தவறு என்ற ஞானம்கூட அவர்களுக்கு இல்லை.
ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு என்று வைத்துக் கொள்வோம். பத்து நபர்கள் சேர்ந்து மாதம் பத்தாயிரம் ரூபாய் கட்டுவார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் சேரும். பத்து நபர்களில் ஒருவருக்கு அந்தத் தொகையைக் கொடுப்பார்கள். குறிப்பிட்ட மாதத்தில் யாருக்குக் கொடுக்கலாம் என்று குலுக்கல் மூலம் நிர்ணயித்து கொடுத்தால் இதில் குற்றம் சொல்ல முடியாது. அல்லது பத்துப் பேரில் யாருக்கு முக்கிய தேவை உள்ளது என்று ஆய்வு செய்து முடிவு செய்தால் அதையும் குற்றம் சொல்ல முடியாது.
ஒவ்வொரு மாதத்திலும் யாருக்குக் கொடுப்பது என்பதை ஏலத்தின் மூலம் முடிவு செய்கிறார்கள். அதாவது ஒரு லட்ச ரூபாய்க்குப் பதிலாக யார் குறைந்த தொகையை வாங்கிக்கொள்ள முன்வருகிறார்களோ அவர்களுக்கு அந்தக் குறைந்த தொகையைக் கொடுப்பார்கள்.
ஒரு லட்சம் ரூபாய்க்குப் பதிலாக 90 ஆயிரம் தந்தால் போதும் என்று ஒருவரும் 80 ஆயிரம் தந்தால் போதும் என்று வேறு ஒருவரும் போட்டியிட்டால் 80 ஆயிரத்துக்கு ஏலம் கேட்டவருக்கு 80 ஆயிரத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இவர் மீதி ஒன்பது மாதங்களுக்கு தலா பத்தாயிரம் கட்டி வர வேண்டும். இவரிடம் வசூலிக்கப்படுவது ஒரு லட்சம். ஆனால் இவருக்குக் கொடுப்பது 80 ஆயிரம். இதை ஏலச் சீட்டு நடத்துபவர் எடுத்துக் கொள்வார். அல்லது இதில் பாதியை அவர் எடுத்துக் கொண்டு மீதியை ஏலச்சீட்டில் சேர்ந்தவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பார்.
இது அப்பட்டமான மோசடியாகும். ஒருவனின் நெருக்கடியைப் பயன்படுத்தி செய்யப்படும் சுரண்டலாகும். அவனிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாயைச் சுருட்டுவதற்கு மார்க்கம் அனுமதித்த எந்தக் காரணமும் இல்லை.
முன் கூட்டியே பணம் கொடுப்பதால் 80 ஆயிரத்துக்கு ஒரு லட்சம் என்று வாங்குவதும் வட்டியில்தான் சேரும்.
பிராவிடண்ட் ஃபண்ட்
அரசு அலுவலகங்களிலும் பெரிய நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் சிரமப்படக் கூடாது என்பதற்காக ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நமது நாட்டிலும் இன்னும் பல நாடுகளிலும் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பிடிக்கப்பட்ட தொகை ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதில் பிரச்சனை இல்லை.
ஆனால் இவ்வாறு பிடிக்கப்படும் தொகைக்கு அவ்வப்போது வட்டியைக் கணக்கிட்டு ஊழியர்கள் கணக்கில் சேர்ப்பார்கள்.. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட தொகை பத்து லட்சம் என்றால் அதற்கான வட்டியும் சேர்த்து வழங்கப்படும். இதில்தான் பிரச்சனை உள்ளது.
வட்டி மார்க்கத்தில் தடுக்கப்பட்டு இருந்தாலும் நம் விருப்பப்படி முடிவு செய்யும் காரியங்களில்தான் நாம் முடிவு எடுக்க முடியும். என்னுடைய ஊதியத்தில் பிராவிடண்ட் ஃபண்டுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்று கூறும் உரிமை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஊழியர்கள் மீது இது கட்டாயமாகத் திணிக்கப்படுவதால் இது நிர்பந்தம் என்ற வகையில் சேரும். இதற்காக ஊழியர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்.
ஆனால் ஓய்வு பெறும்போது வட்டி இல்லாமல் ஊழியரிடமிருந்து பிடித்த பணத்தை மட்டும் பெற்றுக் கொள்ள வழி இருந்தால் அந்த வழியைத் தேர்வு செய்து வட்டியில் இருந்து விடுபட வேண்டும்.
அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகளைக் கையாண்டு வட்டியை வாங்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். வட்டியுடன் சேர்த்துத்தான் அந்தப்பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் நம்முடைய ஊதியத்தில் இருந்து சேமிக்கப்பட்ட பணமே கிடைக்காது என்ற நிலை இருந்தால் அப்போது நிர்பந்தம் என்ற நிலைக்கு ஒருவர் தள்ளப்படுகிறார். அவர் மீது திணிக்கப்பட்ட வட்டியை வாங்கிக் கொண்டால் அதற்காக அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.
சக்திக்கு மீறி யாரையும் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
திருக்குர்ஆன் 2:286
வங்கிகளில் வேலை செய்யலாமா?
வங்கிகள் பெரும்பாலும் வட்டித் தொழிலுக்கான கேந்திரம் என்றாலும் மார்க்கம் அனுமதித்த காரியங்களும் அதில் நடக்கின்றன. காசோலைகளை மாற்றித் தருதல், பணப்பரிவர்த்தனை செய்தல் போன்ற பல பணிகள் வங்கியில் நடக்கின்றன.
வட்டிக்கு துணை போவது தான் மார்க்கத்தில் குற்றமாகும். அது அல்லாத பணிகள் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல.
வங்கியைச் சுத்தம் செய்வது, வங்கிக்கு பெயிண்ட் பண்ணுவது, பர்னிச்சர் செய்து கொடுப்பது போன்ற காரியங்களை ஒருவர் செய்து கொடுத்தால் அது வட்டிக்கு துணை போனதாக ஆகாது.
صحيح مسلم
4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 4177
மேற்கண்ட நான்கு பணிகளைச் செய்தால் அது வட்டிக்கு துணை போன குற்றமாக ஆகும்.
கிரெடிட் கார்டு – கடன்அட்டை
தற்போது கிரடிட் கார்டு எனும் கடன்அட்டை பயன்பாடு அதிகரித்து வருகின்றது.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த அட்டை மூலம் தேவையான பொருட்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். கடைக்காரர்கள் வங்கியில் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கடன் அட்டை வைத்திருப்பவர் 45 நாட்கள் அல்லது (குறிப்பிட்ட நாட்கள்) முடிவதற்குள் வங்கியில் பணத்தைச் செலுத்தினால் அதற்கு வட்டி இல்லாமல் செலுத்தலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் வட்டியுடன் அதைச் செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனைச் செலுத்தி விடும்போது வட்டி செலுத்தும் நிலை வராது என்பதால் இது குற்றமாகாது. வட்டி வாங்கிய குற்றம் சேராது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் நாம் கடனைச் செலுத்தத் தவறினால் வட்டி கட்டும் குற்றத்தைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் நாம் வட்டி இல்லாமல் அசலைச் செலுத்தினால் குற்றம் வராது என்றபோதும் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் கடனைச் செலுத்த இயலாமல் போகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கடனாகக் கிடைக்கிறது என்பதற்காக சக்திக்கு மீறி கடன் அட்டை மூலம் கடன் வாங்கி விட்டு அதைக் கட்ட முடியாமல் தினறக்கூடிய மக்களை நாம் அதிக அளவில் பார்க்கிறோம்.
அன்றாடம் உழைத்து வாழக் கூடியவர்களும் அதிகமான கையிருப்பு இல்லாதவர்களும் கடன் அட்டை வாங்கினால் அவர்கள் வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவர்கள் கடன் அட்டையைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் பாதுகாப்பானது.
பணம் கையிருப்பில் இருந்தும் பணத்தை எடுத்துச் செல்ல சிரமமாக உள்ளது என்பதற்காக கடன் அட்டையைப் பயன்படுத்தக் கூடியவர்கள் மட்டும்தான் குறித்த காலத்துக்குள் பணத்தைச் செலுத்தி வட்டி இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஏழைகளும், நடுத்தர மக்களும் இதை உணர்ந்து, சிரமத்தில் தள்ளி சக்திக்கு மீறிய பொருட்களை வாங்கத் தூண்டும் கடன் அட்டையில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதுதான் இம்மைக்கும் மறுமைக்கும் நல்லது.
குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைச் செலுத்தாவிட்டால் அதற்கான வட்டியைச் செலுத்துவேன் என்று ஒப்புக்கொண்டு விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட்டால்தான் கடன் அட்டை தரப்படும். நாம் குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைச் செலுத்தா விட்டால் வட்டி செலுத்துவோம் என்று ஒப்புக் கொண்டது தவறுதானே என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.
குறிப்பிட்ட காலத்துக்குள் கடனைச் செலுத்தி வட்டி கொடுக்காமல் நடந்து கொள்வேன் என்று நம்பிக்கை வைத்து ஒரு வேளை அப்படி செலுத்த முடியாவிட்டால் வட்டி செலுத்துவேன் என்று கூறுவது வட்டி வாங்கியதாகவோ, கொடுத்ததாகவோ, துணை நின்றதாகவோ ஆகாது.
மேலும் பேச்சுக்காக இது போன்ற சொற்களைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் குற்றமாக ஆகாது.
கிறித்தவர்களுடன் விவாதம் செய்யும் போது நீங்கள் பைபிளை இறைவேதம் என்று நிரூபித்து விட்டால் அதை நாங்கள் வேதமாக ஏற்றுக் கொள்வோம் என்று ஒப்பந்தம் செய்கிறோம். அவர்கள் பைபிளை இறைவேதம் என்று நிரூபிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருப்பதால் வாயளவில் இதைக் கூறுகிறோம். பைபிளை ஏற்றுக் கொள்வதாக இதற்கு நாம் அர்த்தம் செய்ய மாட்டோம்.
தர்கா கட்ட ஆதாரத்தைக் காட்டினால் நாங்களும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று கூறுவதோ எழுதுவதோ தர்காவை ஆதரித்ததாக ஆகாது. அவர்களால் ஆதாரத்தைக் காட்டவே முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே நாம் இப்படி கூறுகிறோம்.
ரஹ்மானுக்கு (அல்லாஹ்வுக்கு) பிள்ளை இருக்குமானால் முதலில் வணங்குபவனாக நான் இருப்பேன் என்று கூறுவீராக (43:81) என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லவே இல்லை என்பதில் உறுதியாக நம்பிக்கை வைத்த நிலையில் தான் இப்படி நபியைக் கூறச்சொல்கிறான்.
இஸ்லாத்தில் வட்டி தடுக்கப்பட்டதை அறிந்து, வட்டி கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக நம்பிக்கை வைத்துள்ள நாம் குறிப்பிட்ட நாளில் கடனைச் செலுத்தத் தவறினால் வட்டி செலுத்துவேன் என்று கூறுகிறோம். வட்டி செலுத்தும் நிலைக்கு போக மாட்டோம் என்ற நம்பிக்கையுடன் தான் இப்படி கூறுகிறோம். வட்டி செலுத்துவோம் என்பதற்காகக் கூறவில்லை.
எனவே இதைக் காரணமாகக் கொண்டு கடன் அட்டை கூடாது என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல.
மணி டிரான்ஸ்பர் செய்யலாமா?
ஒரே வகையான நாணயத்திற்குள் நடக்கும் நாணயமாற்றுதல். வெவ்வேறு வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதல் என மணி டிரான்ஸ்பர் இரு வகைகளில் அமைந்துள்ளன.
ஒரே வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதலில் கூடுதல் குறைவு இல்லாமல் சமமான மதிப்பில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
பத்து கிராம் தங்கக் காசைக் கொடுத்து பத்து ஒரு கிராம் தங்கக் காசுகள் வாங்கலாம். விற்கலாம். பதினொரு அல்லது ஒன்பது காசுகள் என்ற வகையில் மாற்றினால் அது ஹராமாகும்.
அது போல் ஒரு நாட்டின் ரூபாய்க்கு சில்லரை மாற்றும் போது கூடுதல் குறைவு இருக்கக் கூடாது. நூறு ரூபாயை பத்து ரூபாயாக மாற்றும் போது பத்து நோட்டுகள் வாங்கலாம். பதினொன்று அல்லது ஒன்பது நோட்டுக்கள் வாங்கக் கூடாது. அது போல் நோட்டுக்குப் பதிலாக காயன்ஸ் வாங்கும் போது அதற்குச் சமமான மதிப்பில் தான் வாங்க வேண்டும்.
நாணய வகை மாறுபட்டால் மார்கெட் நிலவரப்படி அல்லது நம் விருப்பப்படி விலை நிர்ணயிக்கலாம். மார்க்கத்தில் இது குற்றமாகாது. டாலருக்கு ரியாலை அல்லது ரூபாய்க்கு திர்ஹமை மாற்றும் போது அல்லது தங்கத்துக்கு வெள்ளியை மாற்றும் போது எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இது உடனுக்குடன் நடக்க வேண்டும். கடனாக இருக்கக் கூடாது. இன்று ஒரு நூறு டாலர் கொடு நாளை ஐந்தாயிரம் தருகிறேன் என்று வியாபாரம் நடந்தால் கடனுக்காக நாம் அதிகம் பெற்றதாக ஆகி வட்டியில் சேர்ந்து விடும்.
صحيح البخاري
2060 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ أَبِي المِنْهَالِ، قَالَ: كُنْتُ أَتَّجِرُ فِي الصَّرْفِ، فَسَأَلْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنِي الفَضْلُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا الحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، وَعَامِرُ بْنُ مُصْعَبٍ: أَنَّهُمَا سَمِعَا أَبَا المِنْهَالِ، يَقُولُ: سَأَلْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ، وَزَيْدَ بْنَ أَرْقَمَ عَنِ الصَّرْفِ، فَقَالاَ: كُنَّا تَاجِرَيْنِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّرْفِ، فَقَالَ: «إِنْ كَانَ يَدًا بِيَدٍ فَلاَ بَأْسَ، وَإِنْ كَانَ نَسَاءً فَلاَ يَصْلُحُ»
அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நாணயமாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் பின் அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்: அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம்; அதற்கு உடனுக்குடன் மாற்றிக் கொண்டால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது என அவர்கள் பதிலளித்தார்கள் என்றார்கள்.
நூல் : புகாரி 2060
صحيح البخاري
2175 – حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، قَالَ: قَالَ أَبُو بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ، وَالفِضَّةَ بِالفِضَّةِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ، وَبِيعُوا الذَّهَبَ بِالفِضَّةِ، وَالفِضَّةَ بِالذَّهَبِ كَيْفَ شِئْتُمْ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்.
நூல் : புகாரி 2175