மழையின்போது ஜம்வு செய்து தொழலாமா?

மழை நேரத்தில் மக்ரிப் இஷாத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழலாமா? அவ்வாறு சேர்த்துத் தொழும் போது அதை ஜமாஅத்துடன் தான் நிறைவேற்ற வேண்டுமா?

ஃபாஹிம்

பதில் :

உள்ளூரில் இருந்தாலும், மழை நேரத்தில் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. லுஹரையும், அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுகலாம். மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுகலாம். பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறியலாம்.

1151و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ح و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ كِلَاهُمَا عَنْ الْأَعْمَشِ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ فِي غَيْرِ خَوْفٍ وَلَا مَطَرٍ فِي حَدِيثِ وَكِيعٍ قَالَ قُلْتُ لِابْنِ عَبَّاسٍ لِمَ فَعَلَ ذَلِكَ قَالَ كَيْ لَا يُحْرِجَ أُمَّتَهُ وَفِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ قِيلَ لِابْنِ عَبَّاسٍ مَا أَرَادَ إِلَى ذَلِكَ قَالَ أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أُمَّتَه رواه مسلم

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும், அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மக்ரிபையும், இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.வகீஉ என்பவரின் அறிவிப்பில், நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

மதீனாவில் இப்படிச் செய்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளதால் பயணிகளாக இல்லாவிட்டாலும் ஜம்மு செய்து தொழலாம் என்பதை இதில் இருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை, அச்சம் போன்ற காரணங்கள் இல்லாமல் சாதாரண சூழ்நிலை உள்ள போது தொழுகையைச் சேர்த்துத் தொழுதுள்ளார்கள். இதை ஆதாரமாகக் கொண்டு இதை நாம் வழக்கமாக்கி தினமும் ஜம்மு செய்து தொழக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வழமையாகச் செய்யவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் இது எப்படி அரிதாக நடந்ததோ அது போல் நாமும் அரிதாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மழை அச்சம் போன்ற காரணம் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்மு செய்திருக்கும் போது மழை அச்சம் கலவரம் போன்ற நேரங்களில் தாராளமாக இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது போல்  காலையில் ஆரம்பிகும் பணியை சீக்க்கிரம் முடிக்க வேண்டியுள்ளது. அது முடிய மாலை மூன்று மணி ஆகிவிடும். இப்படி இருந்தால் அந்தப் பணியை முடித்து விட்டு அஸருடன் லுஹரை ஜம்வு செய்யலாம்.

போரில் எதிரிகள் தாக்கிவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் தொழுகைகைள சேர்த்துத் தொழுவதை மார்க்கம் அனுமதித்துள்ளது. மேற்கண்ட ஹதீஸில் எதிரிகளின் பயத்துடன் மழையும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. மழை நேரத்திலும் இந்த அனுமதி உண்டு என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

மழை பெய்யும் நேரத்தில் கடமையான தொழுகைகளைப் பள்ளிக்கு வந்து நிறைவேற்றாமல் வீட்டிலேயே தொழுது கொள்வதற்கும் மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.

666 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ أَذَّنَ بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ ثُمَّ قَالَ أَلَا صَلُّوا فِي الرِّحَالِ ثُمَّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ يَقُولُ أَلَا صَلُّوا فِي الرِّحَالِ  رواه البخاري

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு “ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், “(கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் “ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 666

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளியில் தான் மக்கள் கூட்டாகத் தொழுது வந்தனர். தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவே சாதாரண நேரங்களில் பள்ளிக்கு வர வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகின்றது.

மழை நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்றால் கடமையான தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டியதில்லை என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.

எனவே மழைநேரத்தில் வீடுகளில் கடமையான தொழுகைகளைத் தனியாகவும் தொழுது கொள்ளலாம். வீட்டில் உள்ள நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவும் நிறைவேற்றலாம்.