வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?
“எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு ‘சுன்னத்தான பயணம்’ என்று கூறுகிறார்கள். தாயிஃப் செல்வது சுன்னத்தாகக் கருதப்படுமா?”
அந்த உம்ரா சர்வீஸ் செய்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால்: வெறும் உம்ராவை மட்டும் செய்ய வைக்காமல், அதை ஒரு சுற்றுலாத் தொகுப்பாக (tour package) மாற்றுகிறார்கள். உம்ராவுடன் சேர்த்து நீங்கள் தாயிஃப் செல்லலாம், எகிப்து செல்லலாம் என ஒரு சுற்றுலாப் பயணம் போலப் பல நாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
- சென்னையின் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த பிலால்:
பதில்
சுற்றுலா செல்வது என்பது தனிப்பட்ட விஷயம். அதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், தாயிஃப் செல்வது ஒரு சுன்னத்தான பயணம் என்று அவர்கள் கூறும் போது, எந்த அடிப்படையில் அதை சுன்னத் என்கிறார்கள்?
உம்ரா செய்பவர்கள் தாயிஃபிற்கும் கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ எப்போதாவது கூறினார்களா? ஒருவர் உம்ரா செய்தால் அவர் தாயிஃபையும் தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்களா?
நபி ﷺ அவர்கள் தாயிஃப் தெருக்களில் நடந்தார்கள் என்ற நாகூர் ஹனீபாவின் பாட்டு கட்டுகதையாகும் நபி ﷺ அவர்கள் (அவ்வாறு) தாயிஃப் செல்லவில்லை. அவர்கள் அங்கே சென்றார்கள், அங்கே அவர் அடிக்கப்பட்டுத் துரத்தப்பட்டார்கள் என்பதெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட கதைகளே.
தாயிஃப் மக்களை நபி ﷺ அவர்கள் மக்காவிலேயே சந்தித்தார்கள். புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ், மக்கா மக்களே அவர்களைத் தாக்கினார்கள் என்பதைக் காட்டுகிறது. இது குறித்து தாயிஃப் தொடர்பான ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளைக் கொண்டு ஏற்கனவே மற்ற இடங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
நபி ﷺ அவர்கள் தாயிஃப் சென்றார்கள் என்றே நாம் வைத்துக்கொண்டாலும், நபி ﷺ அவர்கள் சென்ற ஒவ்வொரு இடத்திற்கும் நாமும் செல்வது தானாகவே சுன்னத்தாகி விடுமா? நபி ﷺ அவர்கள் செய்த அனைத்தும் சுன்னத்தாகாது. அவர்கள் மார்க்கத்தின் ஒரு பகுதியாக எதை நமக்குக் கட்டளையிட்டார்களோ அதுவே சுன்னத்தாகும்.
எனவே, தாயிஃப் செல்வது ஒரு சுன்னத்தான பயணம் என்று யாராவது கூறினால், அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். தாயிஃப் செல்வது தவறல்ல. அங்கே வரலாற்று இடங்கள் உள்ளன. “வாருங்கள் நாம் தாயிஃப் சென்று வரலாற்று இடங்களைப் பார்ப்போம்” என்று அவர்கள் மக்களை அழைக்கலாம்.
உம்ரா அல்லது ஹஜ்ஜுடன் சேர்த்து தாயிஃப் செல்வதோ அல்லது பிற இடங்களுக்குச் செல்வதோ ஒரு குற்றமல்ல. அது ஏன் குற்றமல்ல?
ஏனென்றால் அல்லாஹ் ﷻ குர்ஆனில் (6:11) கூறுகிறான்: “பூமியில் சுற்றித் திரிந்து, உண்மையை மறுத்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனியுங்கள்.” மக்கள் பயணம் செய்து சிந்திக்க வேண்டும் என்று அல்லாஹ் ﷻ ஊக்குவிக்கிறான்.
இதே போன்ற செய்திகள் 12:109, 16:36, 22:46, 27:69, 29:20, 30:9, 30:42 மற்றும் 40:44 ஆகிய வசனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த வசனங்கள் அனைத்தும் மக்கள் பூமியில் பயணம் செய்து, கடந்த கால சமுதாயங்களின் இடிபாடுகளைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுமாறு ஊக்குவிக்கின்றன. எனவே, சுற்றுலா செல்வதற்காகவும், வரலாற்றைப் படிப்பதற்காகவும், அல்லாஹ்வின் ﷻ ஆற்றலையும் வல்லமையையும் புரிந்து கொள்வதற்காகவும் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். நீங்கள் தாயிஃப், எகிப்து, ஜெருசலேம் அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த இடத்திற்கும் செல்லலாம். ஆனால் அத்தகைய பயணங்களுக்கு நீங்கள் ‘சுன்னத்’ என்று பெயரிடக் கூடாது. வரலாற்றிலிருந்து பாடம் கற்பதற்கான பயணமாக அது அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, உம்ரா பேக்கேஜ்களை ஒருங்கமைப்பவர்கள் தாயிஃப் பயணத்தைத் தவறாக சுன்னத் என்று முத்திரை குத்தக்கூடாது. “நபி ﷺ அவர்களின் வாழ்வோடு தொடர்புடைய வரலாற்று இடங்களைப் பார்ப்போம்” என்று கூறி அவர்கள் மக்களை அழைக்கலாம், ஆனால் அதற்கு ஒரு மார்க்க அந்தஸ்தை (சுன்னத் என்று) கொடுக்கக் கூடாது. அவ்வாறு தவறாகப் புனிதப்படுத்தாமல் இருந்தால், அது ஓர் அனுமதிக்கப்பட்ட சுற்றுலாவாகும். உம்ரா அல்லது ஹஜ்ஜுடன் சுற்றுலாவை இணைப்பது தவறல்ல.
ஹஜ்ஜின் போது வியாபாரம் செய்வது கூட அனுமதிக்கப்பட்டது என்று அல்லாஹ் ﷻ கூறுகிறான். ஹஜ்ஜிற்குச் செல்லும்போது ஹஜ் கடமைகளை மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. இங்கிருந்து பொருட்களை வாங்கிச் சென்று அங்கே விற்றுவிட்டு, ஹஜ்ஜை முடித்துவிட்டுத் திரும்பலாம். ஹஜ்ஜின் போது உங்கள் இறைவனின் அருளை (வியாபாரம் மூலம்) தேடுவது பாவமல்ல என்று அல்லாஹ் ﷻ கூறுகிறான். எனவே, ஹஜ்ஜின் போது வியாபாரமே அனுமதிக்கப்படும் போது, சுற்றுலாவும் அனுமதிக்கப்படும். ஆனால் அது ‘சுன்னத்’ என்று தவறாகச் சித்தரிக்கப்படக் கூடாது.



