ஸாயிதா பற்றிய விமர்சனம்
ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து வருகின்றனர்.
அவர்கள் செய்யும் விமர்சனம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன் ஹதீஸ் துறை சம்பந்தமான ஒரு விதியைப் புரிந்து கொண்டால் விளங்குவதற்கு எளிதாக இருக்கும்.
ஒரு செய்தியை சலீம் என்பவரிடமிருந்து ஐந்து பேர் அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐந்து பேரில் நால்வர் ஒரு விதமாக அறிவிக்கிறார்கள். ஒருவர் மட்டும் அந்தச் செய்தியை அதற்கு முரணாக அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் நால்வர் அறிவிப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நேர் முரணாக அறிவிப்பவர் நம்பகமானவராக இருந்தாலும் இவர் அறிவிப்பதைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவர் அறிவிப்பது ஷாத் – அரிதானது – எனக் கூறப்படும்.
ஏனெனில் ஒருவரிடம் தவறு ஏற்படுவதை விட நால்வரிடம் தவறு ஏற்படுவது அரிதாகும். எனவே தங்கள் ஆசிரியர் கூறியதாக நால்வர் கூறியதை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரியர் கூறியதாக ஒருவர் கூறுவதை மறுத்து விட வேண்டும்.
விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸில் இந்த அம்சம் உள்ளது என்பதே இவர்களின் விமர்சனம்.
அதாவது நபிகள் நாயகம் தொழுத முறையை வாயில் பின் ஹுஜ்ர் அறிவிக்கிறார்.
வாயில் பின் ஹுஜ்ர் கூறியதாக குலைப் அறிவிக்கிறார்.
குலைப் கூறியதாக அவரது மகன் ஆஸிம் அறிவிக்கிறார்.
ஆஸிம் கூறியதாக
சுப்யான்
காலித் பின் அப்துல்லாஹ்
இப்னு இத்ரீஸ்
ஸாயிதா
ஆகிய நால்வர் அறிவிக்கின்றனர்.
இவர்களில் ஸாயிதா மட்டுமே விரல் அசைத்தலைப் பற்றிக் கூறுகிறார். மற்ற மூவரின் அறிவிப்பில் விரல் அசைத்ததாகக் கூறவில்லை.
காலித் பின் அப்துல்லாஹ், சுஃப்யான் ஆகியோர் இதைப் பற்றிக் கூறும் போது “இஷாரா (சைகை) செய்தார்கள்’ என்றே கூறுகிறார்கள்.
இப்னு இத்ரீஸ் அறிவிக்கும் போது “விரலை உயர்த்தினார்கள்’ என்று கூறுகிறார்.
ஆனால் ஸாயிதா மட்டும் விரலை அசைத்ததாகக் கூறுகிறார்.
ஆஸிமுடைய நான்கு மாணவர்களில் மூவர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஸாயிதா அறிவிப்பதால் இது ஷாத் என்ற தரத்திற்கு இறங்கி விடும். எனவே இது பலவீனமானதாகும் என்பது இவர்களின் விமர்சனம்.
ஹதீஸ் கலையை மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டும். மேலோட்டமாக ஆராய்ந்தால் விபரீதமான முடிவுக்குத் தள்ளி விடும் என்பதற்கு இவர்களின் இந்த விமர்சனம் சான்றாகும்.
ஒரு ஆசிரியரின் மாணவர்களில் பலர் அறிவிப்பதற்கு நேர் முரணாக ஒரு சிலர் அறிவிப்பது தான் ஷாத் ஆகும்.
ஒரு ஆசிரியரின் பல மாணவர்கள் அறிவித்ததை விட ஒரே ஒருவர் கூடுதலாக அறிவித்தால் அது ஷாத் என்ற தரத்திற்கு இறங்காது.
முரணாக அறிவிப்பது வேறு! கூடுதலாக அறிவிப்பது வேறு! இந்த நுணுக்கமான வேறுபாட்டைக் கவனிக்காமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.]
“15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார்’ என்று ஐந்து பேர் கூறுகிறார்கள்.
“15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிடவில்லை’ என்று ஒருவர் மட்டும் கூறுகிறார்.
இவ்விரு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகும். இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்.
ஒன்று உண்மையானால் மற்றொன்று தானாகவே பொய்யாகி விடும்.
இது தான் முரண்பாடு! இவ்வாறு வரும் போது அதிகமானவர்கள் கூறுவதை ஏற்க வேண்டும்.
“15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார்’ என்று ஐந்து பேர் கூறுகிறார்கள்.
ஒருவர் மட்டும் “15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழி வறுவல் சாப்பிட்டார்’ என்று கூறுகிறார்.
இவ்விரு செய்திகளும் முரண்பட்டவை அல்ல. ஒன்றை ஒன்று மறுக்கும் வகையில் இது அமையவில்லை.
கோழிக்கறி என்று பொதுவாகச் சிலர் கூறுகின்றனர். ஒருவர் மட்டும் உன்னிப்பாகக் கவனித்து அந்தக் கோழிக்கறி எந்த வகை என்பதையும் சேர்த்துக் கூறுகிறார். ஒன்றை ஏற்றால் இன்னொன்றை மறுக்கும் நிலை இங்கே ஏற்படாது. கோழி வறுவல் சாப்பிட்டதை ஏற்கும் போது கோழிக்கறி சாப்பிட்டதையும் சேர்த்தே ஏற்றுக் கொள்கிறோம்.
மூஸா இறந்து விட்டார் என்பதும், மூஸா இறக்கவில்லை என்பதும் முரண்!
மூஸா இறந்து விட்டார் என்பதும், கடலில் மூழ்கி இறந்தார் என்பதும் முரண் அல்ல!
இந்த அடிப்படையில் மேற்கண்ட அறிவிப்பைக் கவனித்தால் ஸாயிதா கூறுவதும், மற்றவர்கள் கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல!
அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் கூறும் போது “விரலை உயர்த்தினார்கள்’ என்று மட்டும் கூறுகிறார்.
ஸாயிதா கூறும் போது “விரலை உயர்த்தி அசைத்தார்கள்’ என்று கூறுகிறார். அந்த இரண்டுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை.
இது போல் ஸுஃப்யான், காலித் ஆகியோர் அறிவிக்கும் போது “இஷாரா செய்தார்கள்’ என்று அறிவிக்கின்றனர்.
ஸாயிதா கூறும் போது “அசைத்தார்கள்’ என்கிறார்.
இவ்விரண்டும் முரண் அல்ல!
இஷாரா என்பது விரிந்த அர்த்தம் கொண்டது. வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைச் சொல்வதே இஷாரா எனப்படும்.
அசைவுகளைக் கொண்ட இஷாராவும் உள்ளது.
அசைவுகள் இல்லாத இஷாராவும் உள்ளது.
ஒருவரை எச்சரிக்கும் போது ஆட்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்துக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவுடன் கூடிய இஷாரா ஆகும்.
சிறுநீர் கழிக்கப் போவதைக் குறிப்பிட ஆட்காட்டி விரலை அசைக்காமல் நிறுத்திக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவு இல்லாத இஷாரா ஆகும்.
எனவே இஷாரா என்பதில் அசைத்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. அசைக்காமல் சைகை செய்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. இவ்வாறு விரிந்த அர்த்தம் உள்ள சொல்லை இவ்விருவரும் பயன்படுத்துகிறார்கள். இவர்களது வார்த்தையிலிருந்து அந்த இஷாரா அசைவுடன் கூடியதா? அசைவு இல்லாததா? என்பது தெளிவில்லை.
ஸாயிதா இதைத் தெளிவுபடுத்துகிறார்; முரண்படவில்லை.
மனிதன் வந்தான் என்று இவ்விருவரும் கூறுகிறார்கள்; உயரமான மனிதன் வந்தான் என்று ஸாயிதா கூறுகிறார் என்று வைத்துக் கொண்டால் இரண்டும் முரண் என்று யாருமே கூற மாட்டோம்.
மனிதன் என்பதில் உயரமானவரும் இருக்கலாம்; உயரம் குறைந்தவரும் இருக்கலாம். அதை மற்ற இருவர் தெளிவுபடுத்தவில்லை. உயரமான மனிதர் என்று ஒருவர் தெளிவாகக் கூறி விட்டார் என்று புரிந்து கொள்வதைப் போல் இதையும் புரிந்து கொண்டால் இந்த ஹதீஸை ஷாத் என்று கூற மாட்டார்கள்.
இஷாரா என்பது அசைத்தல் என்பதற்கு முரணானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளப் பின்வரும் ஹதீஸை சான்றாகக் கொள்ளலாம்.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலால் அசைத்து இஷாரா செய்தார்கள்” என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது.
இது அத்தஹியாத்தில் விரல் அசைப்பது பற்றிய ஹதீஸ் அல்ல! அதற்கு ஆதாரமாக இதை நாம் எடுத்துக் காட்டவில்லை.
அசைப்பதும், இஷாராவும் முரண் என்றால் முரண்பட்ட இரண்டை இணைத்துப் பேச முடியாது. அசைத்து இஷாரா செய்தார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் பயன்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டும் முரண்பட்டதல்ல என்று அறியலாம்.
“செத்து சாகவில்லை” என்று கூற முடியாது. “சாப்பிட்டு சாப்பிடவில்லை” என்று கூற முடியாது. “அசைத்து இஷாரா செய்தார்கள்” என்று கூற முடியும்.
எனவே இந்த நுணுக்கத்தை இவர்கள் அறியாததால் இந்த வாதத்தை முன் வைக்கின்றனர்.
ஒருவர் அறிவிப்பதை விட மேலதிகமாக அறிவிக்கும் போது என்ன நிலை? ஒருவர் அறிவிப்பதற்கு எதிராக அறிவிக்கும் போது என்ன நிலை? என்பதைக் கூறும் ஹதீஸ் விதிகளைக் காண்க!
مقدمة فتح البارى –
وأما المخالفة وينشأ عنها الشذوذ والنكارة فإذا روى الضابط والصدوق شيئا فرواه من هو أحفظ منه أو أكثر عددا بخلاف ما روى بحيث يتعذر الجمع على قواعد المحدثين فهذا شاذ وقد تشتد المخالفة أو يضعف الحفظ فيحكم على ما يخالف فيه بكونه منكرا
முரணாக அறிவிக்கும் போது ஷாத் என்ற நிலை ஏற்படும். நம்பகமானவர் அல்லது உண்மையாளர் ஒருவர் ஒன்றை அறிவிக்க, அவரை விட உறுதியானவரோ, அல்லது அவரை விட அதிக எண்ணிக்கை உடையவர்களோ இரண்டையும் இணைக்க முடியாத அளவுக்கு முரண்பட்டு அறிவித்தால் அது தான் ஷாத் ஆகும்.
ஃபத்ஹுல் பாரி முன்னுரையில் இப்னு ஹஜர்
மனன சக்தி உடைய, நம்பிக்கைக்குரிய அறிவிப்பாளர் (மற்ற அறிவிப்பாளரை விட) கூடுதலாக அறிவிப்பது ஏற்றுக் கொள்ளப்படும். ஷாத் மற்றும் நிராகரிக்கப்பட்ட (முன்கரான) அறிவிப்பாளர் கூடுதலாக அறிவிக்கும் போது அது நிராகரிக்கப்படும்.
நூல்: நவவீயின் முஸ்லிம் விரிவுரை
எனவே அத்தஹிய்யாத்தில் விரலை அசைக்க வேண்டும் என்ற ஹதீஸ் எந்த வகையிலும் பலவீனமாக்க முடியாத, வலுவான ஹதீஸ் என்பதே நமது மறு ஆய்விலும் உறுதியாகின்றது.