வெளியூரிலிருந்து வந்த தகவல்
سنن ابن ماجه
1653 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، قال:حَدَّثَنِي عُمُومَتِي مِنْ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالُوا: أُغْمِيَ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ، فَأَصْبَحْنَا صِيَامًا، فَجَاءَ رَكْبٌ مِنْ آخِرِ النَّهَارِ، فَشَهِدُوا عِنْدَ النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَنَّهُمْ رَأَوا الْهِلَالَ بِالْأَمْسِ، فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَنْ يُفْطِرُوا، وَأَنْ يَخْرُجُوا إِلَى عِيدِهِمْ مِنْ الْغَدِ
மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமைர்
நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீயின் அல்குப்ரா, பைஹகீ, தாரகுத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான், நஸயீ, அஹ்மத்
தலைப்பிறை சம்பந்தமான ஆதாரங்களில் இதுவும் முக்கியமான ஆதாரமாகும். மேலே நாம் எடுத்துக்காட்டிய இரண்டு ஆதாரங்களின் கருத்தை இந்த ஹதீஸ் அப்படியே பிரதிபலிக்கிறது.
இந்த ஹதீஸ் கூறுவதென்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன் இந்த ஹதீஸிலிருந்து நீண்ட காலமாக எடுத்துக் வைக்கப்பட்டு வரும் தவறான வாதத்தை முதலில் தெரிந்து கொள்வோம்.
பிறையைப் பார்த்துவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு கூட்டத்தினர் தெரிவிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தினர் மதீனாவுக்கு அருகில் உள்ள ஊரிலிருந்து நிச்சயம் வந்திருக்க முடியாது.
அருகில் உள்ள ஊரிலிருந்து வந்திருந்தால் பிறை பார்த்தவுடன் அன்றிரவே வந்திருக்க முடியும். இரவில் ஓய்வு எடுத்துக் கொண்டால் கூட அதிகாலையில் புறப்பட்டு முற்பகலில் வந்திருக்கலாம். ஆனால் இக்கூட்டத்தினர் பகலின் கடைசி நேரத்தில் வந்ததாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. அஸரிலிருந்து மக்ரிபுக்குள் உள்ள நேரம் தான் பகலின் கடைசிப் பகுதியாகும்.
இவ்வளவு தாமதமாக வந்துள்ளார்கள் என்றால் அதிகமான தொலைவிலிருந்து பயணம் செய்து தான் இவர்கள் வந்திருக்க வேண்டும். நடந்து வந்த காரணத்தால் தாமதமாக வந்திருப்பார்களோ என்றும் கருத முடியாது. வாகனக் கூட்டம் என்று ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுகிறது. வாகனத்தில் வந்திருந்தும் மாலை நேரத்தில் தான் மதீனாவை வந்தடைகிறார்கள் என்றால் அவர்கள் மிகவும் அதிகமான தொலைவிலிருந்து தான் மதீனாவுக்கு வந்துள்ளனர் என்பது உறுதியான விஷயமாகும்.