வெளியூரில் மரணிப்பதற்கு சிறப்பு உண்டா?

கேள்வி :

அந்நிய ஊரில் மரணிப்பது சிறப்பு என்று பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்த சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு -அந்தளவு இடம்- அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)

நூற்கள் : அஹ்மத் 6369, நஸாயீ, இப்னுமாஜா

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸா?

முஹம்மது அலி ஜினாஹ்

பதில் :

நீங்கள் குறிப்பிடுவது போல் ஹதீஸ் உள்ளது. மேற்கண்ட ஹதீஸில் மூன்றாவது அறிவிப்பாளராக ஹுயை பின் அப்துல்லாஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார்.

أخبرنا يونس بن عبد الأعلى قال أنبأنا ابن وهب قال أخبرني حيي بن عبد الله عن أبي عبد الرحمن الحبلي عن عبد الله بن عمرو قال مات رجل بالمدينة ممن ولد بها فصلى عليه رسول الله صلى الله عليه وسلم ثم قال يا ليته مات بغير مولده قالوا ولم ذاك يا رسول الله قال إن الرجل إذا مات بغير مولده قيس له من مولده إلى منقطع أثره في الجنة

இந்த ஹுயை பின் அப்துல்லாஹ் என்பார் நம்பகமானவர் அல்ல. இவரைப் பற்றி தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் உள்ள விமர்சனத்தைக் கீழே தருகிறோம்.

تهذيب التهذيب – ابن حجر (3/ 63)

140 – الأربعة حيي بن عبد الله بن شريح المعافري الحبلي أبو عبد الله المصري روى عن أبي عبد الرحمن الحبلي وغيره وعنه الليث وابن لهيعة وابن وهب وهو آخر من حدث عنه وغيرهم قال أحمد أحاديثه مناكير وقال البخاري فيه نظر وقال النسائي ليس بالقوي وقال بن معين ليس به بأس وقال بن عدي أرجو أنه لا بأس به إذا روى عنه ثقة وقال بن يونس توفي سنة 143 قلت وذكره بن حبان في الثقات

இவரைப் பற்றி அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை எனக் கூறுகிறார்கள்.

இவர் விஷயத்தில் விமர்சனம் உள்ளது என்று புகாரி கூறுகிறார்கள்.

இவர் பலமான அறிவிப்பாளர் அல்லர் என்று நஸாயீ அவர்கள் கூறுகிறார்கள்.

இவர் மீது குற்றம் இல்லை என்று இப்னு மயீன் கூறுகிறார். இப்னு அதீயும் இவ்வாறே கூறுகிறார்.

தஹ்தீபுத் தஹ்தீப்

ஒரு அறிவிப்பாளர் பற்றி குறையும், நிறையும் சொல்லப்பட்டால் குறையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவர் மீது குறை சொல்லாதவர்கள் கூட இவரது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை. ஓரளவு பரவாயில்லை என்ற கருத்தைத் தரும் வாசகத்தையே பயன்படுத்தியுள்ளனர்.இந்த அறிவிப்பாளர் காரணமாக இது பலவீனமான ஹதீஸாகி விடுகிறது.

இது தவிர இதன் கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக்கும், குர்ஆனுக்கும் மாற்றமாக இருப்பதால் இது இட்டுக்கப்பட்ட செய்தி என்ற நிலைக்கு இறங்கி விடுகிறது.

ஒருவர் எங்கே மரணிப்பார் என்பது அவரது கையில் உள்ள விஷயம் அல்ல. ஒரு இடத்தில் மரணித்தால் அதில் அவரது பங்கு எதுவும் இல்லை.

மனிதனின் கைவசத்தில் இல்லாத ஒன்றை அல்லாஹ்வின் தூதர் ஆர்வமூட்ட மாட்டார்கள்.

மரணம் நேரம் குறிக்கப்பட்டதாக உள்ளது. ஒரு வினாடி முந்தவோ பிந்தவோ முடியாது.

இது போன்ற இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு மாற்றமாக உள்ளதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லி இருக்க மாட்டார்கள் என்று தான் நாம் கருத வேண்டும்.

மரணம் குறித்த இஸ்லாத்தின் அடிப்படைகளை ஜனாசாவின் சட்டங்கள் என்ற நூலில் விளக்கியுள்ளோம். அதையும் உங்கள் கவனத்துக்காக கீழே தந்துள்ளோம்.

பல்வகை மரணங்கள்

ஒருவர் எப்படி மரணிக்கிறார்? எந்த நேரத்தில் மரணிக்கிறார்? எந்த இடத்தில் மரணிக்கிறார்? என்பதன் அடிப்படையில் அவரை நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ முடிவு செய்யும் மனநிலை பரவலாக மக்களிடம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும், அவர்கள் காலத்தில் மரணித்த பலரது மரணங்களையும் ஆய்வு செய்யும் போது இந்த மனநிலை முற்றிலும் தவறானது என்று அறிந்து கொள்ளலாம்.

சிறு வயது அல்லது இளம் வயது மரணம்

ஒருவர் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இளம் வயதில் மரணித்து விட்டால் அவர் நல்லவர் அல்ல என்று சிலர் நம்புகின்றனர்.

சிறு வயதில் ஒருவர் மரணித்தால் அவரது பெற்றோர்கள் கெட்டவர்கள் என்பதால் தான் பிள்ளையைப் பறிகொடுத்துள்ளனர் எனவும் பேசுகின்றனர்.

எப்போது மரணம் ஏற்படும் என்று இறைவன் திட்டமிட்டபடி தான் ஒருவர் மரணிக்கிறார். ஒருவரது நற்செயல்கள் காரணமாக மரணம் தள்ளிப் போவதுமில்லை. அவரது தீய செயல்கள் காரணமாக மரணம் முன்கூட்டியே வருவதும் இல்லை. இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 7:34

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லைஎன்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 10:49

எந்தச் சமுதாயமும் தனது காலக் கெடுவை முந்தாது; பிந்தாது.

திருக்குர்ஆன் 15:5

மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:61

மனிதர்களை அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாகக் குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும் போது அல்லாஹ் தனது அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 35:45

அவனே உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியேற்றுகிறான். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். பின்னர் முதியோராக ஆகின்றீர்கள். இதற்கு முன்பே கைப்பற்றப்படுவோரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட காலக் கெடுவை நீங்கள் அடைகின்றீர்கள். நீங்கள் விளங்குவதற்காக (இதைக் கூறுகிறான்)

திருக்குர்ஆன் 40:67

அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 63:11

ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக அமைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகள்? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு குழந்தைகளும் தான் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

நூல்: புகாரி 102, 1250, 7310

சிறுவயதிலேயே ஒருவர் மரணிப்பது அவரது பெற்றோரின் தீய செயல்களின் காரணமாக இல்லை என்பதை இந்த நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்த போது, இவருக்குச் சொர்க்கத்தில் பாலுட்டும் அன்னை உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 1382, 3255, 6195

பால் குடிக்கும் பருவத்தில் இப்ராஹீம் மரணித்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். பெற்றோரின் தவறுகள் காரணமாகவே குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால் இப்ராஹீம் நிச்சயம் குழந்தைப் பருவத்தில் மரணித்திருக்க முடியாது.

இளம் வயதில் அல்லது நடுத்தர வயதில் ஒருவர் மரணித்தால் அதற்குக் காரணம் அவரது தீய செயல்கள் கிடையாது. எத்தனையோ நன்மக்கள் இளம் வயதில் மரணம் அடைந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான்கு புதல்விகளை அல்லாஹ் கொடுத்தான். நான்கு பேரும் மிகவும் இளம் வயதில் தான் மரணித்தார்கள். மூன்று புதல்விகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே மரணித்து விட்டார்கள்.

ருகையா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) மரணிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி 2ஆம் ஆண்டில் மரணித்தார்கள்.

ஸைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி 9ஆம் ஆண்டு மரணித்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து ஆறு மாதங்களில் மரணித்தார்கள். (புகாரி 4241)

நடுத்தர வயதைக் கூட அடையாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு புதல்விகளும் மரணித்திருப்பதால் இளமை மரணம் துர்மரணம் அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.

தள்ளாத வயதில் மரணித்தல்

சிலர் தள்ளாத வயது வரை வாழ்ந்து பெரும் அவதிக்கு ஆளாகி மரணிப்பார்கள். படுக்கையிலேயே மலஜலம் கழித்து, பெற்ற பிள்ளைகளாலேயே ஓரம் கட்டப்பட்டு மரணிப்பார்கள். சிலர் சுய நினைவை இழந்த பின்னர் மரணிப்பார்கள். இப்படியெல்லாம் ஒருவர் மரணிப்பது தீயவர் என்பதற்கு ஆதாரமாக அமையாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயது வரை வாழ்வதை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

(புகாரி 2822, 6365, 6370, 6374, 6390,)

இதை அடிப்படையாகக் கொண்டு தள்ளாத வயதில் மரணம் அடைவது துர்மரணம் என்று கருதக் கூடாது. ஏனெனில் ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இவ்வுலகில் துன்பங்களைச் சந்தித்தால் இதன் காரணமாக அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மறுமையில் அவர் தண்டிக்கப்படாமல் தப்பிக்க உதவும்.

ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்கள்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435

ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்தால் அதுவும் நன்மை தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மூமின்களின் காரியங்கள் வியப்பாக உள்ளன. அவரது அனைத்துக் காரியங்களும் அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றன. மூமினைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலை இல்லை. அவருக்கு மகிழ்ச்சி ஏற்படால் நன்றி செலுத்துகிறார். எனவே அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்கிறார். எனவே அதுவும் அவருக்கு நன்மையாகி விடுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)

நூல்: முஸ்லிம் 5318

எனவே முதுமையில் மரணித்தாலும், இளமையில் மரணித்தாலும் இரண்டுமே நன்மையில் தான் முடியும்.

தள்ளாத வயது வரை வாழ்ந்து அதனால் மற்றவர்களுக்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியிருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முதுமையில் பார்வை போன பின்பு தான் மரணித்தார்கள். (முஸ்லிம் 1543)

இப்னு உமர் (ரலி) அவர்களும் தள்ளாத வயதில் பார்வை போன பின்பு தான் மரணித்தார்கள்.

கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் தமது முதுமையில் பார்வையிழந்த நிலையில் தான் மரணித்தார்கள். (புகாரி 3889, 4676, 6690, 7225)

எனவே தள்ளாத வயதில் அனைவராலும் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒருவர் மரணிப்பதால் அவருக்கு ஏற்பட்டது துர்மரணம் என்று கூற முடியாது.

திடீர் மரணம்

சிலர் மரணத்தின் எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று மரணித்து விடுவார்கள். வெள்ளம், மழை, சுனாமி, தீ விபத்து, வாகன விபத்து என்று பல வகையிலும் மனிதர்கள் மரணிக்கிறார்கள்.

திடீர் என்று மரணம் அடைவது துர்மரணம் என்று பரவலாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கும் ஆதாரம் இல்லை.

திடீர் மரணத்தை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியதாக சில ஹதீஸ்கள் உள்ளன. இது துர்மரணம் என்பதற்காகக் கூறப்பட்டதாக நாம் புரிந்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் திடீர் மரணம் என்பதும் நல்ல மரணமே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

பிளேக் நோயில் இறந்தவர்கள், வயிற்றுப் போக்கில் இறந்தவர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், இடிபாடுகளில் இறந்தவர்கள், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் உயிர் தியாகிகள் (ஷஹீத்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 654, 721, 2829

ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு நபித் தோழர்கள் யார் போருக்குச் சென்று கொல்லப்படுகிறாரோ அவர் தான் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர் தியாகிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

நூல்: அஹ்மத் 17129, 21627, 21628, 21644, 21694

பிளேக் நோய் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஷஹாதத் (உயிர் தியாகி) என்ற நிலையைத் தரும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 2830, 5732

மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் திடீர் மரணங்கள் தாம். ஈமானுடன் வாழும் ஒருவருக்கு இது போல் ஏற்படும் திடீர் மரணம் நன்மையைத் தான் தரும் என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பல நபித்தோழர்களுக்குத் திடீர் மரணம் நிகழ்ந்துள்ளது. அதைத் துர்மரணம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதவில்லை.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் திடீரென்று மரணித்து விட்டார். அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார். எனவே அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அவருக்கு அதன் நன்மை கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1388, 2760

இது போல் திடீர் மரணம் அடைந்த எவரது மரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துர்மரணம் என்று கூறியதில்லை.

கடுமையான வேதனையுடன் மரணித்தல்

சிலர் எவ்வித வேதனையையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாக மரணித்து விடுவார்கள்.

மற்றும் சிலரது உயிர் போகும் போது கடுமையாக வேதனைப்பட்டு துடிதுடித்து மரணமடைவார்கள். இவ்வாறு ஒருவர் மரணமடைந்தால் அவருக்கு துர்மரணம் ஏற்படுவதாகப் பலரும் எண்ணுகின்றனர். இந்த எண்ணமும் தவறானதாகும்.

மரணத்தின் கடுமையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அனுபவித்த பின், வேறு எவருக்கும் மரணம் கடுமையாக இருப்பதை நான் வெறுக்க மாட்டேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 4446

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கடுமையான வேதனையுடன் தான் மரணத்தைத் தழுவியுள்ளார்கள். எனவே இத்தகைய வேதனையை ஒருவர் அனுபவிப்பதால் அதைத் துர்மரணம் எனக் கூற முடியாது.

மக்காவிலும், மதீனாவிலும் மரணித்தல்

மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது ஒரு பாக்கியம் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது.

இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.

(மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை கட்டாயமாகி விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் தப்ரானியின் அல்கபீர் (6/240) நூலில் உள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் அப்துல் கபூர் பின் ஸஅது என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.

இரண்டு புனிதத் தலங்களில் ஒன்றில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவராக எழுப்பப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் தப்ரானியின் அல்அவ்ஸத் (6/89) நூலில் உள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் மூஸா பின் அப்துர் ரஹ்மான் அல்மஸ்ரூகி இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார்.

பைத்துல் முகத்தஸில் யார் மரணிக்கிறாரோ அவர் ஆகாயத்தில் மரணித்தவர் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக பஸ்ஸார் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளரான யூசுப் பின் அதிய்யா அல்பஸரி என்பவர் பலவீனமானவர். வானத்தில் மரணித்தவர் என்பன போன்ற சொற்களில், நபிமார்களின் சொற்களில் காணப்படும் கருத்தாழம் எதுவும் இல்லை.

இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பலவீனமானவையாக இருப்பதுடன் இதன் கருத்தும் ஏற்புடையதாக இல்லை.

இரண்டு புனிதத் தலங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எத்தனையோ எதிரிகள் மரணித்துள்ளனர். முனாஃபிக்குகள் எனப்படும் வேடதாரிகள் பலரும் மதீனாவில் தான் இறந்தனர்.

அது போல் எத்தனையோ நபித்தோழர்கள் இரண்டு புனிதத் தலங்களை விட்டு வெளியேறி உலகின் பல பாகங்களிலும் மரணித்தனர். நபித்தோழர்களில் பெரும்பான்மையினர் புனிதத் தலங்களில் மரணிக்கவில்லை.

குறிப்பிட்ட இடத்தில் மரணமடைவது எவரது அதிகாரத்திலும், விருப்பத்திலும் உள்ளது அல்ல. நல்லவர் கெட்டவர் என்ற அடிப்படையில் மரணிக்கும் இடம் தீர்மானிக்கப்படுவதில்லை.

மேற்கண்ட காரணங்களால் இதன் பலவீனம் மேலும் அதிகரிக்கின்றது.

வெள்ளிக்கிழமையன்று மரணித்தல்

வெள்ளிக்கிழமை மரணிப்பதை சிறந்த மரணம் என்று நம்புகின்றனர். இந்தக் கருத்தில் சில நபிமொழிகளும் பதிவாகியுள்ளன. அவை பலவீனமாகவே உள்ளன.

யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ யஃலா (7/146) எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை யஸீத் அர்ரகாஷீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பலவீனமானவர்.

இது போன்ற கருத்தில் மற்றொரு ஹதீஸ் திர்மிதீ 994வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பலவீனமானது என்பதை திர்மிதீ அவர்களே இந்த ஹதீஸின் கீழே தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளனர்.

இதே கருத்தில் அஹ்மத் நூலில் இரண்டு ஹதீஸ்கள் உள்ளன. 6294வது ஹதீஸை ஹிஷாம் பின் ஸஅது என்பார் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். 6359வது ஹதீஸை முஆவியா பின் ஸயீத் என்பார் அறிவிக்கிறார். இவர் யாரென்று அறியப்படாதவர்.

எனவே இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பலவீனமாக உள்ளதால் வெள்ளிக்கிழமை மரணித்தால் அது சிறப்பானது என்பது தவறாகும்.

ஒரு மனிதர் எந்த நாளில்,எந்த மாதத்தில், எந்த வயதில், எந்த இடத்தில் மரணிக்கிறார் என்பதற்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

ஜனாசாவின் சட்டங்கள் என்ற நூலில் நாம் எழுதிய இந்த ஆதாரங்களுக்கு முரணாக நீங்கள் சுட்டிக்காட்டிய ஹதீசும் அமைந்துள்ளதை நீங்கள் விளங்கலாம்.