வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?
துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
صحيح مسلم
قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ ».
துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உமர் (ரலி),நூல்: முஸ்லிம் (2151)
முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிப்பதற்கு காரணமாக இருக்கும் இந்த அரஃபா நோன்பு இந்த வருடம் வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது முந்தைய ஒரு நாள் அல்லது பிந்தைய ஒரு நாள் சேர்த்து வைக்க வேண்டுமா? என்று ஐயம் பின்வரும் நபிமொழிகளை பார்க்கும் போது எழலாம்.
صحيح البخاري
1985- حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا الأَعْمَشُ ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلاَّ يَوْمًا قَبْلَهُ ، أَوْ بَعْدَه.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்!அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),நூல்கள் புகாரி (1985), முஸ்லிம் (2102)
صحيح البخاري
1986- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ شُعْبَةَ (ح) وَحَدَّثَنِي مُحَمَّدٌ ، حَدَّثَنَا غُنْدَرٌ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَبِي أَيُّوبَ ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا يَوْمَ الْجُمُعَةِ وَهْيَ صَائِمَةٌ فَقَالَ أَصُمْتِ أَمْسِ قَالَتْ لاَ قَالَ تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا قَالَت لاَ قَالَ فَأَفْطِرِي.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றிருந்த போது என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை! என்றேன். நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கும் இல்லை! என்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் நோன்பை முறித்துவிடு! என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்துவிட்டேன்! என்று ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்.அறிவிப்பவர்: ஜுவைரியா (ரலி),நூல்: புகாரி (1986)
இது போன்ற நபிமொழிகள் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக் கூடாது என்று அறிவிப்பது. நாமாக தேர்வு செய்து வைக்கும் உபரியான நோன்பை பற்றியதுதான்.
ஒருவர் உபரியான நோன்பு நோற்க நாடி வெள்ளிக்கிழமையை மட்டும் தேர்வு செய்யக்கூடாது. ஒன்று வியாழன், வெள்ளி நோன்பு நோற்க வேண்டும். அல்லது வெள்ளி,சனி நோன்பு நோற்க வேண்டும். நாமாக தேர்வு செய்து வைக்கும் உபரியான நோன்புக்குத்தான் இந்த தடவை பொருந்தும்.
صحيح مسلم
وَحَدَّثَنِى أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا حُسَيْنٌ – يَعْنِى الْجُعْفِىَّ – عَنْ زَائِدَةَ عَنْ هِشَامٍ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه – عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِى وَلاَ تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الأَيَّامِ إِلاَّ أَنْ يَكُونَ فِى صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ ».
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),நூல் முஸ்லிம் (2103)
“வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்” என்ற நபிகளாரின் கட்டளை, நாம் தேர்வு செய்து வைக்கும் உபரியான நோன்பைத் தான் குறிக்கிறது என்பதை தெளிவாக அறிவிக்கிறது.
அரஃபா நோன்பு வைக்க நாம் வெள்ளிக்கிழமையைத் தேர்வு செய்யவில்லை. பிறை 9 வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டது. எனவே இந்த தடை நமக்குப் பொருந்தாது.
صحيح البخاري
1914- حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا هِشَامٌ ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : لاَ يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ ، أَوْ يَوْمَيْنِ إِلاَّ أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாளில் நோன்பு நோற்கலாம்.அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),நூல்கள் புகாரி (1914), முஸ்லிம் (1976)
இந்த நபிமொழியும் நாம் சொன்ன கருத்தையே தருகிறது.
ஒருவர் திங்கள் நோன்பு நோற்பவராக இருந்து ரமலான் ஒரு நாளுக்கு முன்பாக திங்கள் வந்துவிட்டால் இந்த நபிமொழியில் உள்ள ரமலான் ஒருநாள்,இரண்டு நாள் முன்பாக நோன்பு நோற்கக்கூடாது என்ற தடை வராது.
ஏனெனில் இவராக அந்த நாளை தேர்வு செய்யவில்லை. எதார்த்தமான ரமலான் மாதத்திற்கு முந்தைய நாளாக அமைந்து விடுகிறது. எனவே இவர் நோன்பு வைத்தால் தடையை மீறியவராக மாட்டார். எனவே அரஃபா நோன்பை வெள்ளிக்கிழமை நோற்கலாம். எந்தத் தடையும் இல்லை.