ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா?
ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி. ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது?
அப்துர் ரஜாக்
பதில் :
பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிவாசல்களில் தொழக்கூடாது என அல்லாஹ் கூறுகிறான்.
وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 9:107
- இறைவனை மறுத்தல்,
- பிறருக்குத் தீங்கிழைத்தல்,
- பிரிவை ஏற்படுத்துதல்,
- அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக நடப்பவர்களுக்கு புகலிடம் அளித்தல்
ஆகிய நான்கு தன்மைகள் உள்ள பள்ளிவாசலில் தொழக்கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்த நான்கு அம்சங்களில் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் பள்ளிவாசலைப் பராமரிக்க வேண்டும்.
எந்தப் பள்ளிவாசலில் இந்த நான்கு அம்சங்களும் ஒரு சேர அமைந்துள்ளதோ அந்தப் பள்ளிவாசலில் தொழக் கூடாது என்று மேற்கண்ட வசனத்தின் மூலம் சந்தேகமற அறியலாம்.
ஆனால் இந்த நான்கு அம்சங்களில் ஓரிரு அம்சங்கள் இருந்தால் அதில் தொழக் கூடாது என்ற முடிவை எடுக்கக் கூடாது. நான்கும் சேர்ந்து இருந்தால் தான் புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் நான்கு அம்சங்களும் சேர்ந்து இருந்தால் தான் அந்தப் பள்ளிகளில் தொழக் கூடாது என்று மேற்க்ண்ட வசனங்கள் கூறுகின்றன.
நான்கு அம்சங்களில் முன்று அம்சங்கள் இல்லாமல் இருந்து அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் காரியங்கள் மட்டும் நடக்கும் பள்ளிகளிலும் தொழக் கூடாது என்று சிலர் வாதம் செய்து வருகின்றனர்.
இதற்கு பின்வரும் வசனத்தை ஆதாரமாக முன் வைக்கின்றனர்.
{وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا (18) } [الجن: 18، 19]
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன. எனவே அல்லாஹ்வுடன் யாரையும் அழைக்காதீர்கள்
திருக்குர்ஆன் 72:18
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்பதால் பள்ளிவாசலில் அல்லஹ்வுடன் யாரையும் அழைக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மவ்லிது போன்ற இணை கற்பிக்கும் பாடல்களைப் பள்ளிவாசலில் பாடுகின்றனர். இதன் மூலம் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கின்றனர். எனவே அது பள்ளிவாசலாக ஆகாது என்று காரணம் கூறி ஷிர்க் வைக்கும் காரியங்கள் நடக்கும் பள்ளிவாசல்களில் தொழக்கூடாது என்பது அவர்களின் வாதம்.
ஆதாரம் என்று ஒரு குர்ஆன் வசனத்தை யாராவது சொன்னால் அந்த வசனத்தில் அந்தக் கருத்து இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். குருட்டுத்தனமாக ஏற்கக் கூடாது. இது பற்றி அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்
தமது இறைவனின் வசனங்கள் மூலம் அவர்களுக்கு அறிவுறை கூறப்பட்டால் அதன் மீது குருடர்களாகவும், செவிடர்களாகவும் விழ மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 25:73
அல்லாஹ் சொல்கிறான் என்று ஒரு வசனத்தைக் காட்டி அவ்வசனத்தில் இல்லாத கருத்தைத் தினித்தால் குருட்டுத் தனமாக விழக் கூடாது என்று இவ்வசனம் மூலம் அல்லாஹ் எச்சரிக்கிறான்.
இவர்கள் ஆதாரமாகக் காட்டும் வசனம் சொல்வது என்ன? அல்லாஹ்வுடன் வேறு யாரையும் நீங்கள் அழைக்கக் கூடாது என்பது தான் இவ்வசனம் சொல்லும் கருத்தாகும். பள்ளிவாசலில் மற்றவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்தால் அந்த இடத்தில் தொழாதீர்கள் என்ற கருத்துக்கு இதில் கடுகளவும் இடமில்லை.
நாம் ஒரு பள்ளிவாசலுக்குச் செல்கிறோம். அங்கே சென்று அல்லாஹ்வை மட்டும் நாம் அழைக்கிறோம்.
சிலர் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கிறார்கள்.
அல்லாஹ் அல்லாதவர்களை ஏன் அழைத்தீர்கள் என்று அவ்வாறு அழைத்தவர்களை நோக்கி கேள்வி கேட்கலாம்.
அல்லாஹ்வை மட்டும் அழைத்த நம்மை நோக்கி இக்கேள்வியை நம்மை நோக்கி எழுப்ப முடியுமா?
அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கும் இடத்தில் நீங்கள் தொழாதீர்கள் என்று இவ்வசனத்தில் இருந்து எவ்வாறு கருத்து எடுக்க முடியும்?
அல்லாஹ் அல்லாதவர்களை மற்றவர்கள அழைத்தாலும் நாம் அல்லாஹ்வைத் தான் அழைக்க வேண்டும். மற்றவர்களும் அல்லாஹ்வைத் தான் அழைக்க வேண்டும். இந்தக் கருத்து மட்டுமே இதில் அடங்கியுள்ளது.
ஆனால் 9:107,108 வசனங்களில் நான்கு அம்சங்கள் இருந்தால் அங்கே தொழாதே என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வசனங்கள் தெளிவாகச் சொல்லும் கருத்துக்கு மாற்றமாக 72:18 வசனத்துக்கு அதில் இல்லாத கருத்தைக் கொடுப்பது அறிவீனமாகும். குருட்டுத்தனமாகவும் செவிட்டுத்தனமாகவும் வீழ்வதாகும்.
அல்லாஹ்வின் பள்ளிவாசலில் செய்யக் கூடாத பல காரியங்கள் உள்ளன. அந்தக் காரியங்களை யாரேனும் பள்ளிவாசலில் செய்தால் அது பள்ளிவாசல் இல்லை என்ற கருத்து வருமா? பள்ளிவாசலில் அவற்றைச் செய்யாதீர்கள் என்ற கருத்து வருமா?
பள்ளிவாசலில் விற்பனை செய்யக் கூடாது; வாங்கக் கூடாது; காணாமல் போன பொருளைத் தேடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்
ஒரு பள்ளிவாசலில் விற்பதோ வாங்குவதோ செய்யப்பட்டால் பள்ளிவாசலில் செய்யத் தகாத காரியங்களை செய்து விட்டார்கள் என்று சொல்வதில் அர்த்தம் உண்டு. அதனால் அப்பள்ளியில் தொழக் கூடாது என்ற அர்த்தம் இதில் உள்ளதா?
ஷிர்க்கும் வியாபாரமும் ஒன்றா என்ற விதண்டாவாதம் செய்யக் கூடாது. ஷிர்க் கொடும் குற்றம் என்பது தனி விஷயம்.
பள்ளிவாசலில் வியாபாரம் செய்யக் கூடாது என்று தடை உள்ளது. அப்படி தடை செய்யப்பட்ட காரியங்கள் நிகழ்ந்தால் அது பள்ளிவாசல் இல்லை என்று ஆகுமா என்பதற்காகவே இதை எடுத்துக் காட்டுகிறோம்
குளிப்பு கடமையானவர் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தடை உள்ளது. குளிப்பு கடமையான சிலர் ஒரு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள் என்று நமக்கு தெரிய வருகிறது. பள்ளிவாசலில் செய்யத் தகாத காரியம் செய்யப்பட்டதால் அது பள்ளிவாசல் இல்லை என்று யாராவது சொல்வார்களா? அல்லது அந்தக் காரியத்தைப் பள்ளிவாசலில் செய்தவர்கள் குற்றம் செய்துள்ளார்கள் என்று கருதுவார்களா?
ஹரம் எல்லையில் வேட்டையாடக் கூடாது; புல் பூண்டுகளைப் பறிக்கக் கூடாது என்று தடை உள்ளது. ஹரமில் மேற்கண்ட காரியங்களைச் சிலர் செய்து விட்டால் அது பள்ளிவாசல் தகுதியை இழந்து விட்டது; எனவே அங்கே தொழக் கூடாது என்று புரிந்து கொள்ள முடியுமா? அந்தக் காரியங்களை அங்கே செய்யக் கூடாது என்று மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும்.
பூண்டு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வரக் கூடாது என்று தடை உள்ளது. யாரோ சிலர் பூண்டு சாப்பிட்டு விட்டு பள்ளிவாசலுக்கு வந்து விட்டால் பள்ளியில் செய்யக் கூடாத காரியம் செய்து விட்டதால் இது பள்ளி அல்ல என்று அறிவுள்ள யாராவது சொல்வார்களா?
அல்லாஹ்வுடன் யாரையும் அழைக்காதீர்கள் என்றால் அவ்வாறு செய்யக் கூடாது என்ற அர்த்தம் தான் அதற்கு உண்டு. யாரோ அங்கே இணை கற்பிக்கும் காரியங்களைச் செய்வதால் அது பள்ளிவாசலே அல்ல என்ற கருத்து அதில் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய மஸ்ஜிதுன்னபவியில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் வாசகங்கள் இன்றும் எழுதப்பட்டுள்ளன. அதை அழித்தால் குழப்பம் ஏற்படும் என்று சவூதி அரசு அதில் கை வைக்காமல் உள்ளது. எனவே அல்லாஹ்வுக்கு இனை கற்பிக்கும் பாடல் எழுதப்பட்டுள்ளதால் மஸ்ஜிதுன்னபவியில் தொழக் கூடாது என்பார்களா?
கப்ருகள் மீது கட்டடம் கட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அவர்கள் தடை செய்த கட்டடம் மஸ்ஜிதுன்னபிக்குள் கட்டப்பட்டுள்ளதால் மதீனா பள்ளியில் தொழக் கூடாது என்று சொல்வார்களா?
எனவே 9:107,109 வசனங்களில் கூறப்பட்டதன் அடிப்படையில் அதில் கூறப்பட்ட நான்கு காரியங்கள் ஒரு சேர இருந்தால் மட்டுமே அந்த பள்ளியில் தொழக் கூடாது. அவற்றில் ஒன்று விடுபட்டால் கூட அதில் தொழலாம் என்பதே சரியான கருத்தாகும்
.இது குறித்து விரிவாக அறிய
தொழக்கூடாத பள்ளிகள் உண்டா என்ற் ஆக்கத்தைப் பார்க்கவும்