ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களின் வரலாறு

இமாம் புகாரீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பூர்வமான செய்திகளுடன் தொகுத்தவர்களில் முதலிடம் பெற்றவர்.

இயற்பெயர் : முஹம்மத்

தந்தை பெயர் : இஸ்மாயீல்

பிறந்த ஊர் : ரஷ்யாவில் உள்ள புகாரா, இந்த ஊரில் பிறந்ததால் புகாரீ (புகாரா என்ற ஊரைச் சார்ந்தவர்) என்று அழைக்கப்படுகிறார்.

பிறந்த நாள் : ஹிஜ்ரி 194, ஷவ்வால் 13, வெள்ளிக்கிழமை

கல்விக்காக பயணம் செய்த ஊர்கள் : குராஸான், பஸரா, கூஃபா, பக்தாத், மக்கா, மதீனா, சிரியா, மிஸ்ர்

இமாம் புகாரியின் மாணவர்கள் : இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதீ, இமாம் இப்னு ஹுஸைமா, இமாம் அபுதாவூத் மற்றும் பலர்

தற்போது நடைமுறையில் புகாரீ என்று குறிப்பிடப்படும் ஹதீஸ் நூலுக்கு இமாம் புகாரீ அவர்கள் வைத்த பெயர் : ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் ஹதீஸி ரஸுலில்லாஹி வ ஸுனனிஹி வஅய்யாமிஹி (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் வழிமுறைகள் தொடர்பாக அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளருடன் வந்துள்ள செய்திகளின் தொகுப்பு)

ஆனால் அந்தப் பெயர் மக்களிடம் சென்றடையவில்லை. புகாரி என்பதே அந்த நூலின் பெயராக ஆகி விட்டது.

இவர் தொகுத்த மற்ற நூல்கள் : அல்அதபுல் முஃப்ரத், அத்தாரிகுல் கபீர், அல்லுஃபவுஸ் ஸகீர் இன்னும் பல நூல்கள் தொகுத்துள்ளார்.

இறப்பு : ஹிஜ்ரீ 256, நோன்புப் பெருநாள் அன்று சனிக்கிழமை

இமாம் முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆதாரப்பூர்வமாக தொகுத்தவர்களில் இரண்டாம் இடத்தை இமாம் முஸ்லிம் பெற்றுள்ளார்.

இயற்பெயர் : முஸ்லிம்

தந்தை பெயர் : ஹஜ்ஜாஜ்

பிறந்த ஊர் : குராஸான் பகுதியில் உள்ள பெரிய பட்டணமான நைஸாபூர்

பிறந்தநாள் : ஹிஜ்ரீ 204 அல்லது ஹிஜ்ரீ 206

கற்றமுறை : இமாம் முஸ்லிம் அவர்கள் பிறந்த ஊர் அதிகமான அறிஞர்களைப் பெற்றிருந்தது. முஸ்லிம் அவர்கள் ஹதீஸ் கலையில் வல்லுனராக ஆவதற்கு ஏற்ற சிறந்த சூழ்நிலை அங்கு காணப்பட்டது. தனது 14 ஆம் வயதிலே இந்த அறிஞர்களிடமிருந்து கற்க ஆரம்பித்தார்கள்.

கல்விக்காக பயணம் செய்த ஊர்கள் : நைசாபூரைச் சுற்றியுள்ள சில ஊர்கள், ரய், இராக்கில் உள்ள கூஃபா, பஸரா, மற்றும் பக்தாத், ஹிஜாஸ், ஷாம், மிஸ்ர்

இவருடைய ஆசிரியர்களில் சிலர் : இமாம் புகாரி, அஹ்மத் பின் ஹம்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, யஹ்யப்னு மயீன், அபூபக்கர் பின் அபீ ஷய்பா

இவரது மாணவர்களில் சிலர் : முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப், அபூஹாதிம், இமாம் திர்மிதி, இப்னு ஹு ஸைமா, மற்றும் இப்னு அபீ ஹாதம்

இறப்பு : இமாம் முஸ்லிம் அவர்கள் ஹிஜ்ரி 261 ஆம் ஆண்டு ரஜம் மாதம் ஞாயிற்றுக்கிழமையன்று நைசாபூர் என்ற தமது ஊரிலே மரணம் அடைந்தார்கள்.

இமாம் திர்மிதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களில் இமாம் திர்மிதியும் ஓருவராவார்.

இயற்பெயர் : முஹம்மத்

குறிப்புப் பெயர் : அபூ ஈஸா

தந்தைபெயர் : ஈஸா

கோத்திரம் : சுலமி கூட்டத்தாரைச் சார்ந்தவர்

பிறந்த ஊர் : ஈரான் நாட்டின் கிழக்கில் அமைந்துள்ள திர்மித் என்னும் ஊரிலே பிறந்தார். இமாம் புகாரி புகாரா என்ற ஊரில் பிறந்த காரணத்தால் அவர்களை புகாரி என அழைப்பதைப் போன்று இமாம் திர்மிதி, திர்மித் என்ற ஊரிலே பிறந்தமையால் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு : திர்மிதி இமாம் பிறந்த வருடத்தை வரலாற்று ஆசிரியர்கள் யாரும் அறுதியிட்டுச் சொல்லவில்லை. சிலர் ஹிஜ்ரீ 209 வது ஆண்டு என்று கூறுகின்றனர். இமாம் தஹபீ அவர்கள் ஹிஜ்ரீ 210 வது ஆண்டு என்று கூறியுள்ளார்கள்.

கல்வி : இருபது வயது பூர்த்தியான பின் இமாம் திர்மிதி அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். தாமதமாகக் கற்க ஆரம்பித்தமையால் பெரும் பெரும் அறிஞர்களிடத்தில் ஹதீஸை நேரடியாகக் கற்கும் வாயப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. இவர் தொகுத்த ஜாமிஉத்திர்மிதி இவர் மாபெரும் ஹதீஸ்கலை மேதை என்று சான்று பகர்கின்றது.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள் : ஹுராஸான், பஸரா, கூஃபா, வாசித், ஈராக், பக்தாத், மக்கா, மதீனா.

இவரது ஆசிரியர்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், குதைபா, அலீ பின் ஹஜர், அஹ்மத் பின் மனீஃ, தாரமீ, அபூ சுர்ஆ, மற்றும் பலர்.

இவரது படைப்புகள் : ஜாமிஉத்திர்மிதி, இலல், ஷமாயில், அஸ்மாஉ ஸ்ஸஹாபா.

இதைத் தவிர அத்தாரீஹ், அஸ்ஸுஹ்த், அல்அஸ்மாஉ வல்குனா ஆகிய நூற்களைத் தொகுத்துள்ளார். ஆனால் இவை நம் கைக்குக் கிடைக்கவில்லை.

மரணம் : அவர் பிறந்த ஊரான திர்மிதில் ஹிஜ்ரீ 279 ஆம் ஆண்டு ரஜப் மாதம் பதிமூன்றாம் நாளான திங்கட்கிழமை மரணித்தார்.

இமாம் அபூதாவூத்

ஹதீஸ்களைத் தொகுத்து மார்க்கத்திற்குப் பெரும் தொண்டாற்றிய அறிஞர்களில் இமாம் அபூதாவூதும் ஒருவர்.

இயற்பெயர் : சுலைமான்

குறிப்புப் பெயர் : அபூதாவூத்

தந்தை பெயர் : அஷ்அஸ்

பிறப்பு : சஜஸ்தான் என்ற ஊரிலே ஹிஜ்ரீ 202வது வருடத்தில் பிறந்தார். ஆகயால் தான் மக்கள் மத்தியில் அபூதாவூத் சஜஸ்தானீ என்று பிரபலமாகியுள்ளார்.

கல்வி : இமாம் அபூதாவூத் வாழ்ந்த காலம் அறிஞர்கள் நிறைந்த காலம். இத்துடன் அவர்கள் சிறுவயதிலேயே பத்திசாலியாகவும் திகழ்ந்தார்கள். இக்காலச் சூழ்நிலை அபூதாவூத் கல்வி கற்க மிக ஏதுவாக இருந்தமையால் சிறு வயதிலேயே ஹதீஸ் துறையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஹதீஸ் துறையில் துரிதமாகச் செயல்பட்டதால் அரும்பெரும் அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இமாம் அபூதாவூதிற்குக் கிடைத்தது. ஹதீஸ் துறையிலும் மார்க்கச் சட்டத் துறையிலும் பெரும் பங்கு வகித்தார்கள்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள் : தன்னுடைய 18 வது வயதிலே கல்விக்காக பல ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பித்தார்கள். ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், ஜஸீரா, ஹிஜாஸ், எகிப்து, ஹுராஸான், சஜஸ்தான், ரய் ஆகிய ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளார்கள்.

இவரது மாணவர்கள் :இமாம் திர்மிதி, நஸயீ, இப்னு அபித்துன்யா, அபூ உவானா, இப்ராஹிம் பின் ஹம்தான் மற்றும் பலர்.

இவரது ஆசிரியர்கள் : இமாம் அஹ்மத், அலீ பின் மதீனி, யஹ்யா பின் மயீன், முஹம்மத் பின் பஷ்ஷார் மற்றும் பலர்.

மரணம் : பஸராவில் எழுபத்து மூன்று வயது நிறைவுற்றவராக ஹிஜ்ரீ 275 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் பதினாறாம் நாள் வெள்ளிக்கிழமையன்று மரணித்தார்.

இமாம் நஸாயீ

இயற்பெயர் : அஹ்மத்

குறிப்புப் பெயர் : அபூ அப்திர் ரஹ்மான்

தந்தை பெயர் : ஷுஐப்

பிறப்பு : ஹிஜ்ரீ 215 ஆம் ஆண்டில் நஸா என்ற ஊரில் பிறந்தார்கள். இவர் பிறந்த ஊரான நஸா என்பதுடன் இணைத்து நஸாயீ என்று இவர் மக்களால் அழைக்கப்படுகிறார்.

கல்வி : ஹிஜ்ரி 230ஆம் ஆண்டு பதினைந்தாவது வயதை அடைந்த போதே குதைபா பின் சயீத் அவர்களிடம் பயிலுவதற்காக பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அவரிடம் 14 மாதங்கள் தங்கினார்கள். இவர் எழுதிய அல்அஹாதீசுல் லிஆஃப் (பலகீனமான ஹதீஸ்கள்) என்ற புத்தகம் ஹதீஸ் துறையில் இவர் பெற்றிருந்த பாண்டித்துவத்தைக் காட்டுகிறது.

இது மட்டுமின்றி மார்க்கச் சட்ட வல்லுனராகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர் காலத்தில் வாழ்ந்த அறிஞர்களை விட இமாம் நஸாயீ அவர்களே மார்க்கச் சட்டத்தை அதிகம் அறிந்தவராக இருந்தார் என இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார். எகிப்து நாட்டிலும் ஹிமஸ் நாட்டிலும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள் : ஹுராஸான், ஈராக், ஜஸீரா, ஷாம், ஸஹுர், ஹிஜாஸ், எகிப்து

மாணவர்கள்: இப்னு ஹிப்பான், உகைலீ, இப்னு அதீ, அத்தவ்லாபீ, அத்தஹாவீ, அபூஉவானா, அத்தப்ரானி, இப்னு சின்னீ போன்ற பெரும் பெரும் அறிஞர்கள் இமாம் நஸயீ அவர்களிடம் மாணவர்களாகப் பயின்றுள்ளார்கள். இவர்களன்றி இன்னும் பலரும் உள்ளனர்.

ஆசிரியர்கள் : குதைபா, இஸ்ஹாக பின் ராஹவைஹி, அஹ்மத் பின் மனீஃ, அலீ பின் ஹஜர், அபூதாவூத், திர்மிதி, அபூஹாதம், அபூசுர்ஆ, முஹம்மத் பின் யஹ்யா, முஹம்மத் பின் பஷ்ஷார் ஆகியோர். இவர்களில் பெரும்பாலோர் இமாம் புகாரி மற்றும் முஸ்லிமின் ஆசிரியர்கள்.

படைப்புகள்: அஸ்ஸுனனுஸ் சுஹ்ரா, அஸ்ஸுனனுல் குப்ரா, அல்குனா, அமலுல் யவ்மி வல்லய்லா, அத்தஃப்சீர், அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், தஸ்மியது ஃபுகஹாயில் அம்ஸார், இஷ்ரதுன்னிஸா ஆகியவை.

மரணம் : இமாம் நஸயீ பாலஸ்தீனத்தில் இறந்தார் என சில அறிஞர்கள் கூறுகின்றனர். தாரகுத்னீ போன்ற சில அறிஞர்கள் மக்காவில் இறந்ததாகக் கூறுகின்றனர். ஹிஜ்ரீ 303வது வருடம் ஸஃபர் மாதம் 13 ஆம் நாள் திங்கட்கிழமை மரணித்தார்.

இமாம் இப்னுமாஜா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைத் தொகுத்து இம்மார்க்கத்திற்கு தொண்டாற்றிய இமாம்களில் இமாம் இப்னுமாஜா ஒருவராவார்.

இயற்பெயர் : முஹம்மத் பின் யஸீத்

குறிப்புப் பெயர் : அபூ அப்தில்லாஹ்

தந்தை பெயர் : யஸீத்.

இவரது பிரபலமான பெயர் : இப்னு மாஜா

கோத்திரம் : ரபயீ கோத்திரத்தைச் சார்ந்தவர்.

பிறப்பு : ஹிஜ்ரீ 209 ஆம் ஆண்டு.

வளர்ந்த இடம் : கஸ்வீன் என்ற ஊர்

கல்வி : இப்னு மாஜா அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரில் ஏறத்தாழ 20ஆவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தொகுத்த இப்னு மாஜா என்ற ஹதீஸ் புத்தகம் ஹதீஸ் கலையில் இவர்கள் பெற்றிருந்த பாண்டித்துவத்தை எடுத்துரைக்கிறது. அறிவிப்பாளர்களின் வரலாறுகள் தொடர்பாக இவர் எழுதிய அத்தாரீஹ் என்ற நூலும் இவரது அந்தஸ்தை உயர்த்துகிறது. மேலும் இவர் குர்ஆனிற்கு விளக்கம் அளிப்பதிலும் மார்க்கச் சட்டங்களிலும் தலை சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார் என இமாம்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள் : குராசான், ஈராக், ஹிஜாஸ், மிஸ்ர், ஷாம் மற்றும் பல ஊர்கள்.

இவரது ஆசிரியர்கள் : அப்துல்லாஹ் பின் அபீஷைபா, அலீ பின் முஹம்மத், முஸ்அப் பின் அப்தில்லாஹ் உஸ்மான் பின் அபீஷைபா, மற்றும் பலர்.

இவரது மாணவர்கள் : அலீ பின் இப்ராஹீம் அல்கத்தான், சுலைமான் பின் யஸீத், முஹம்மது பின் ஈஸா மற்றும் அபூபக்கர் ஹாமித்.

இறப்பு : ஹிஜ்ரீ 273 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மரணித்து புதன் கிழமை அடக்கம் செய்யப்பட்டார்.

இமாம் அஹ்மத்

இயற்பெயர் : அஹ்மத்

குறிப்புப்பெயர் : அபூ அப்தில்லாஹ்

குலம் : இவரது தாயும் தந்தையும் அரபு குலத்தைச் சார்ந்தவர்கள்.

பிறப்பு : இமாம் அஹ்மத் அவர்கள் பக்தாதில் ஹிஜ்ரீ 164 வது வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள்.

கல்வி : இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் கல்வி கற்க ஆரம்பித்தார். அப்போது இவருக்கு பதினான்கு வயதாக இருந்தது. குர்ஆனை மனனம் செய்து எழுதப்படிக்க கற்றுக் கொண்ட பின் இமாம் அஹ்மத் அவர்கள் பக்தாதில் உள்ள ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸ்கலை தொடர்பான விஷயங்களைக் கற்றார்.

இவர் முதன் முதலாக அபூஹனீஃபா இமாமின் மாணவரான அபூயூசுஃப் அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கற்றார். இவர் காலத்தில் இருந்த பல கல்வித் துறைகளில் சிறந்து விளங்கினார். குறிப்பாக இவர் எழுதிய முஸ்னத் அஹ்மதும் அறிவிப்பாளர்களைப் பற்றி நல்லவரா கெட்டவரா என்று பிரித்தறிவதற்கு இவர் எழதிய நூலும் இவர் ஹதீஸ் கலையில் மாபெரும் மேதையாகத் திகழ்ந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. ஹதீஸ்களில் எளிதில் கண்டுபிடிக்க இயலாத குறைகளுக்கு இல்லத் என்று சொல்வார்கள். இக்குறைகளை ஆராய்ந்து இது தொடர்பாக விளக்கியுள்ளார்.

கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : இவர் பஸரா, கூஃபா, மக்கா, யமன், தர்சூஸ், ரிகா, அபாதான், எகிப்து, ரய் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள்ளார்.

இவரது ஆசிரியர்கள் : இமாம் ஷாஃபி, அபூயூசுஃப் சுஃப்யான் பின் உயைய்னா, அப்துர்ரஸ்ஸாக், வகீஃ, இப்ராஹிம் பின் சஃத், ஹுஷைம் பின் பஷீர், யஹ்யா பின் சயீத், இப்னு நுமைர், யசீத் பின் ஹாரூன், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்தார்கள்.

இவரது மாணவர்கள் : இமாம் ஷாஃபி, யஹ்யா, அப்துர்ரஸ்ஸாக், அப்துர்ரஹ்மான், மஹ்தீ, வகீஃ, போன்ற இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து பல ஹதீஸ்களைத் தெரிந்து கொண்டு இவருக்கு மாணவராக இருந்துள்ளார்கள். இன்னும் பிரபலமான புத்தகங்களின் ஆசிரியரான இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதி, இமாம் இப்னுமாஜா, இமாம் அபூதாவூத், இமாம் நஸாயீ, ஆகியோர் இவரிடம் பயின்ற மாணவர்கள். இன்னும் அலீ பின் அல்மதீனீ, யஹ்யா பின் மயீன், அஹ்மத் பின் சாலிஹ் போன்றோரும் இவரிடம் பயின்ற மாணவர்கள்.

படைப்புகள் : இவர் எழுதிய முஸ்னத் அஹ்மத் என்ற புத்தகம் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ளது. இன்னும் அல்இலல், அன்னாஸிக் வல்மன்சூக், அஸ்ஸுஹ்த், அல்அஷ்ரிபத், அல்ஃபளாயில், அல்ஃபராயில், அல்மனாசிக், தாஅதுர்ரசூல், அல்முகத்தமு வல்முஅஹ்ஹர், ஜவாபாத்துல் குர்ஆன், ஹதீஸு சுஃபா, நஃப்யுத்தஷ்பீஹ், அல்இமாமா, கிதாபுல் ஃபிதன், கிதாபு ஃபளாயிலி அஹ்லில் பைத், முஸ்னது அஹ்லில் பைத், அல்அஸ்மாஉ வல் குனா, கிதாபுத்தாரீஹ் ஆகிய புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

மரணம் : இவர் ஹிஜ்ரீ 241 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமையன்று மரணித்தார்.

இமாம் மாலிக்

இயற்பெயர் : மாலிக்

குறிப்புப் பெயர் : அபூஅப்தில்லாஹ்

தந்தை பெயர் : அனஸ் பின் மாலிக்

குலம் : இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு : ஹிஜ்ரீ 93 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார்.

வளர்ப்பு: சவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி : பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயனம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

இவரது ஆசிரியர்கள் : தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது. நாஃபிஃ, ஹிஷாம் பின் உர்வா, யஹ்யா பின் சயீத், அப்துல்லாஹ் பின் தீனார், சைத் பின் அஸ்லம், முஹம்மத் பின் முஸ்லிம், அப்துல்லாஹ் பின் அபீபக்கர், சயீத் பின் அபீ சயீத் ஆகியோர் இவருடைய ஆசிரியர்கள்.

மாணவர்கள் : முஹம்மத் பின் முஸ்லிம், யஹ்யா பின் சயீத், நாஃபிஃ பின் மாலிக் ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள். இன்னும் இமாம் அபூஹனீஃபா, சுஃப்யான் சவ்ரீ, அல்லைஸ் பின் சஃத், ஷுஃபா, அப்துல் மலிக், மஃமர் பின் ராஷித், யஹ்யா பின் சயீத், இப்னுல் முபாரக், வகீஃ மற்றும் இமாம் ஷாஃபீ ஆகியோர் இவருடைய மாணவர்கள்.

படைப்புகள் : புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முவத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள். ரிஸாலத்துன் ஃபில் கத்ர், ரிசாலத்துன் ஃபின்னஜ்ம், ரிசாலத்துன் ஃபில் அக்ளியா, ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான், ரிசாலத்துன் இலல்லைஸ், ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர், கிதாபுஸ் ஸிர், ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.

மரணம்: இவர் ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது என்பத்து ஆறாகும்.

இமாம் தாரமீ

இயற்பெயர் : அப்துல்லாஹ்

குறிப்புப்பெயர் : அபூமுஹம்மத்

குலம் : இவர் தமீமீ அல்லது தாரமீ என்ற கூட்டத்தைச் சார்ந்தவர். இவர் சமர்கன்த் என்ற ஊரில் தங்கிய காரணத்தினால் சமர்கன்தீ என்றும் இவர் கூறப்படுகிறார்.

தந்தைப் பெயர் : அப்துர் ரஹ்மான்

பிறப்பு : இவர் ஹிஜ்ரீ 181 ஆம் ஆண்டு சமர்கன்த் என்ற ஊரில் பிறந்தார்.

கல்வி : இமாம் தாரமீ அவர்கள் நன்கு புத்திக் கூர்மையுள்ளவராக இருந்தார். பல ஆசிரியர்களைச் சந்தித்து கற்றார். இவர் எப்பொழுது கல்வி கற்க ஆரம்பித்தார் என்பது நமக்கு சரியாக தகவல்கள் மூலம் கிடைக்கவில்லை. இவர் பெரியவர் சிறியவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் தன்னை விட வயதில் கீழ் உள்ளவர்களிடமிருந்தும் கற்றுள்ளார். இவர் தொகுத்துள்ள சுனனுத் தாரமீ என்ற ஹதீஸ் தொகுப்பு நூல் இவரை ஹதீஸ் வல்லுனராக காட்டுக்கிறது. அறிவிப்பாளர்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். பல அறிஞர்கள் இவரை சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : ஹுராசான், ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், பக்தாத், வாசித், திமஷ்க், ஹிமஸ், ஜசீரா, சஃர், ஹிஜாஸ் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள்ளார்.

ஆசிரியர்கள் : யசீத் பின் ஹாரூன், யஃலா பின் உபைத், ஜஃபர் பின் அவ்ன், பிஷ்ர் பின் உமர், முஹம்மத் பின் பிக்ர், வஹப் பின் ஜரீர், அன்னள்ர் பின் ஷுமைர், உஸ்மான் பின் உமர், சயீத் பின் ஆமிர் மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்துள்ளார்கள்.

மாணவர்கள் : இமாம் முஸ்லிம், இமாம் அபூதாவூத், இமாம் திர்மிதி, அப்து பின் ஹ மைத், அல்ஹசன் பின் சப்பாஹ், முஹம்மத் பின் பஷ்ஷார், முஹம்மத் பின் யஹ்யா இன்னும் பலர் இவருடைய மாணவராக உள்ளார்கள்.

தொகுப்புகள் : சுனனுத் தாரமீ என்ற சிறந்த ஹதீஸ் தொகுப்பு நூலை இமாம் தாரமீ அவர்கள் தொகுத்துள்ளார்கள். இன்னும் அல்ஜாமிஃ, அத்தஃப்சீர் என்ற நூலையும் தொகுத்துள்ளார். எனினும் இவை காணாமல் போய்விட்டன.

மரணம் : இமாம் தாரமீ அவர்கள் ஹிஜ்ரீ 255 ஆம் ஆண்டு இறந்தார்கள். அப்போது இவருடைய வயது 75 ஆக இருந்தது. வெள்ளிக்கிழமையன்று அடக்கம் செய்யப்பட்டார்.

இப்னு ஹுசைமா

இயற்பெயர் முஹம்மத் பின் இஸ்ஹாக்

குறிப்புப் பெயர் அபூபக்கர்

தந்தை பெயர் இஸ்ஹாக் பின் ஹுசைமா

குலம் சுலமி கோத்திரத்தைச் சார்ந்தவர்.

பிறப்பு ஹிஜ்ரீ இருநூற்று இருபத்து மூன்றாம் ஆண்டு நைசாபூர் என்ற ஊரில் பிறந்தார்.

ஆசிரியர்கள் இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், முஹம்மத் பின் முஸன்னா, முஹம்மத் பின் பஷ்ஷார் மற்றும் பலர்.

படைப்புகள் :கிதாபுத் தவ்ஹீத் (ஏகத்துவத்தைப் பற்றிய புத்தகம்) ஷஃனுத் துஆ வ தப்சீரு மற்றும் சஹீஹு இப்னி ஹஸைமா ஆகிய மூன்று புத்தகங்கள்.

மரணம் : ஹிஜ்ரீ 311 வது வருடம் துல்கஃதா மாதத்தில் சனிக்கிழமை இரவு அன்று இவர் மரணித்தார்.

இப்னு ஹிப்பான்

இயற்பெயர் : முஹம்மத் பின் ஹிப்பான்

குறிப்புப்பெயர் : அபூஹாதிம்

தந்தையின் பெயர் : ஹிப்பான்

குலம் : பனூ தமீம் குலத்தைச் சார்ந்தவர்

பிறப்பு : ஆப்கானிஸ்தானில் உள்ள புஸ்த் என்ற ஊரில் ஏறத்தாழ ஹிஜ்ரீ 280 ல் பிறந்தார்.

கல்வி : ஹிஜ்ரீ 300 ல் கல்வி கற்க ஆரம்பித்தார். சஜஸ்தான் நைசாபூர், ஷாம், மிஸ்ர், ஹிஜாஸ், போன்ற ஊர்களுக்குக் கல்வியைத் தேடி பயணம் செய்தார். இந்தப் பிரயாணத்தின் மூலம் 2000 க்கும் மேலான ஆசிரியர்களைப் பெற்றார். ஹதீஸ் கலையிலும் சட்டத் துறையிலும் சிறந்து விளங்கியதால் நஸா, சமர்கன்த், புல்தான் போன்ற இடங்களில் தீர்ப்பு வழங்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இல்லாமல் மருத்துவம் வாணியல் ஆகிய கலையிலும் சிறந்து விளங்கினார். இவர் காலத்தில் இவருக்கும் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களுக்கும் அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். இமாம் அபூஹனீஃபாவை விமர்சித்து பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

ஆசிரியர்கள் : அபூ யஃலா இப்னு ஹுஸைமா, ஹசன் பின் சுஃப்யான், அபூ அரூபா இன்னும் பலர்.

இவரது மாணவர்கள்: இவர் கல்விக் கடலாக அந்தக் காலத்தில் விளங்கியதால் பெரும் பெரும் அறிஞர்களான இமாம் தாரகுத்னீ, இமாம் ஹாகிம், இப்னு முன்தஹ், இன்னும் பல மேதைகள் இவரிடம் கற்று இவருக்கு மாணவராகத் திகழ்ந்தார்கள்.

படைப்புகள் : இவர் அனைத்து அறிவிப்பாளர்களைப் பற்றிய விபரங்களை மக்களுக்குத் தருவதற்கு அத்தாரீஹ் (வரலாறு) என்ற பெரும் புத்தகத்தைத் தொகுத்தார். பின்பு கிதாபுஸ்ஸிகாத் (நம்பகமானவர்கள்) என்ற பெயரில் சரியான அறிவிப்பாளர்களைப் பட்டியலிட்டார். பிறகு கிதாபுல் மஜ்ரூஹீன் மினல் லுஅஃபாயி வல்மத்ரூகீன மினர்ருவாத் (பலஹீனமானவர்கள் மற்றும் குறை காணப்பட்டவர்கள்) என்ற பெயரில் பலஹீனமான அறிவிப்பாளர்களைப் பட்டியலிட்டார். இந்த இரண்டு புத்தகமும் அவருடைய அத்தாரீஹ் என்ற பெரும் நூலின் சுருக்கம் தான். இமாம் புகாரி, முஸ்லிம், இப்னு ஹுஸைமா ஆகியோரைப் போல் ஆதாரப்பூர்வமான செய்திகளை மட்டும் தொகுக்கும் பாணியில் சஹீஹு இப்னி ஹிப்பானை தொகுத்தார். இது ஹதீஸ்களை உள்ளடக்கிய நூல். அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள் அறியாமையால் பலஹீனமான ஹதீஸ்களைக் கடைபிடித்ததைக் கண்டு உத்வேகத்துடன் இப்புத்தகத்தைத் தொகுத்தார். இன்னும் மஷாஹீரு உலமாயில் அம்சார், மற்றும் ரவ்ளதுல் உகலாயி வ நுஸ்ஹதுல் ஃபுளலாயி ஆகிய புத்தகங்களையும் நமக்குக் கிடைக்காத பல புத்தகங்களையும் படைத்துள்ளார்.

குறைகள் : நல்லவரா கெட்டவரா என்று அறியப்படாத அறிவிப்பாளர்களையெல்லாம் இவர் நல்லவர் என்று சான்று தந்துள்ளார். ஒருவரைப் பற்றி நிறை வராவிட்டாலும் குறையில்லாமல் இருந்தால் அவரை நல்லவர் என்று முடிவுகட்டி விடுவார். நல்ல அறிவிப்பாளர்கள் விஷயத்தில் தேவையில்லாத குறைகளையும் கூறியுள்ளார்.

மரணம்: ஹிஜ்ரீ 354 வது வருடத்தில் புஸ்த் என்ற ஊரில் இறந்தார்.

இமாம்  ஹாகிம்

இயற்பெயர் : முஹம்மத் பின் அப்தில்லாஹ்

குறிப்புப்பெயர் : அபூ அப்தில்லாஹ்

பட்டப்பெயர் : இவர் குறிப்பிட்ட காலம் நீதிபதியாக இருந்ததால் ஹாகிம் (நீதிபதி) என்றழைக்கப்பட்டார்.

தந்தைபெயர் : அப்துல்லாஹ்

குலம் : அள்ளப்பீ குலத்தைச் சார்ந்தவர்

பிறப்பு : நைசாபூர் என்ற ஊரில் ஹிஜ்ரீ 321 வது வருடம் பிறந்தார்.

கல்வி 9 வது வயதிலே கற்க ஆரம்பித்தார். 20 வது வயதை அடைந்திருக்கும் போது ஈராக் குராஸான் இன்னும் நாடுகள் பல கடந்து கற்றுள்ளார். நைசாபூர் போன்ற ஊர்களில் 2000 ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸைக் கற்றுள்ளார்.

ஆசிரியர்கள் : இப்னு ஹிப்பான், முஹம்மத் பின் யஃகூப், அஹ்மத் பின் சுலைமான், தஃலஜ் பின் அஹ்மத் இன்னும் பல ஆசிரியர்கள் இவருக்கு உள்ளனர். ஹதீஸ் கலை அறிஞர்களின் ஆசிரியர் என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார். இவர் மார்க்கப் பற்று மற்றும் பேணுதல் உள்ளவராக இருந்தார் என இப்னு கசீர் கூறியுள்ளார்.

மாணவர்கள் : இமாம் பைஹகி, அபூ யஃலா, அபூதர் அல்ஹர்வீ போன்ற கல்விச் செம்மல்கள் இன்னும் பலர் இவருடைய மாணவர்கள் ஆவார்கள்.

அறிஞர்களின் கூற்று : இவர் சிறப்புக்குரியவர். கல்வி ஞானம் வழங்கப்பட்டவர். ஹதீஸ் கலையில் பல தொகுப்புகள் இவருக்கு உள்ளது என்று இமாம் ஹதீப் பஹ்தாதீ கூறியுள்ளார். இவர் தன்னுடைய காலத்தில் ஹதீஸ் கலை இமாமாகவும் அதை உண்மையான அடிப்படையில் விளங்கியவராகவும் இருந்தார் என அப்துல் ஹஃப்பார் என்பார் கூறியுள்ளார்.

குறைகள் : இமாம் ஹாகிம் அவர்கள் அறிவிப்பாளர்களை எடைபோடும் போது பல பலஹீனமான அறிவிப்பாளர்களை நம்பகமானவர்கள் என்று கவனக் குறைவாக கூறியுள்ளார்கள். பல பலஹீனமான ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமான செய்தி என்று குறிப்பிடுவதால் இவர் அலட்சியப் போக்குடையவர் என்ற அறிஞர்களால் வர்ணிக்கப்படுகிறார்.

படைப்புகள் : கிதாபுல் அர்பயீன், அல்அஸ்மாஉ வல்குனா, அல்இக்லீலு ஃபீ தலாயிலுன் நுபுவ்வா, அமாலில் அஷிய்யாத், அல்அமாலி தாரீஹு நய்சாபூர், கிதாபுத் துஆ, அல்லுஅஃபா, இலலுல் ஹதீஸ், ஃபளாயிலு ஃபாத்திமா, ஃபவாயிது ஷுயூஹ், அல்மத்ஹல், அல்முஸ்தத்ரக், மஃரிஃபது உலூமில் ஹதீஸ், மனாகிபுஷ் ஷாஃபி இன்னும் பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

மரணம் : இவர் ஹிஜ்ரீ 405 வது வருடத்தில் மரணித்தார்.