ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்பதன் பொருள் என்ன?

கேள்வி:

ஹுசைன் என்னைச் சேர்ந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் அதனால் தான் ஷியா கொள்கையில் தான் இருப்பதாகவும் ஒரு ஷியா பிரிவைச் சேர்ந்தவர் கூறுகிறார். இதற்கு என்ன விளக்கம்?

முகவை சம்சுத்தீன்

பதில்

ஹுசைன் என்னைச் சார்ந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் நூற்களில் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.

ஹுசைன் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது இதன் பொருள். நபியவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு மட்டும் இவ்வாறு கூறவில்லை. பல நபித்தோழர்களுக்கும் இவ்வாறு கூறியுள்ளார்கள்.

2486حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ عَنْ بُرَيْدٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الْغَزْوِ أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ بِالسَّوِيَّةِ فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.

இதை அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல் : புகாரி 2486

இப்படி பலரைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ளார்கள். எனவே இது ஷியா கொள்கை சரியானது என்பதற்கு ஆதாரமாகாது.

ஷியாக்கள் செய்து கொண்டிருக்கும் காரியத்துக்கும் அவர்கள் குறிப்பிடும் மேற்கண்ட ஹதீஸிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நபித்தோழர்களை ஏசுவது, பல ஹதீஸ்களைக் காரணமின்றி மறுப்பது, தங்களுடைய கொள்கைக்கு மாற்றமாக இருந்தால் அது குர்ஆனாக இருந்தாலும் ஏற்க மறுப்பது, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு காட்டி இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறி தனி மதமாகக் காட்சி தருவது ஆகிய விஷயங்களை இவர்களிடம் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகள் ஃபாத்திமா (ரலி), மருமகன் அலீ (ரலி), பேரக் குழந்தைகள் ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரின் பெயரில் இணைவைப்புக் காரியங்களையும், அநாச்சாரங்களையும் இவர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.

இவர்களின் தொழுகை, நோன்பு, வணக்க வழிபாடுகள், சட்ட திட்டங்கள் ஆகியவை அனைத்தும் முற்றிலும் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான முறையிலேயே அமைந்திருக்கும்.

இப்படி இஸ்லாத்தின் அடிப்படையை விட்டும் வெளியே நிற்கும் இவர்கள் தாங்களுடைய அனைத்து செயல்பாடும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் அமைந்துள்ளது என்பதை இவர்களால் நிரூபிக்க முடியாது. இதை நிரூபிக்க இவர்களை அழைத்தாலும் அதற்கு ஒத்து வரமாட்டார்கள். காரணம் குர்ஆன் ஹதீஸின் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.