100. அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பங்கு இல்லை
இஸ்லாமின் ஏகத்துவக் கொள்கையை உரத்துச் சொல்லும் வசனங்களில் இது (3:128) முக்கியமான வசனமாகும்.
உஹதுப் போரின் போது இவ்வசனம் அருளப்பட்டது. இப்போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு தாடையும் பிளக்கப்பட்டது. அவர்களின் முகத்திலிருந்து இரத்தம் பீறிட்டு ஓடியது.
“தமது நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்” என்று வேதனை தாள முடியாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது தான் “அதிகாரத்தில் உமக்குப் பங்கில்லை” என்ற இவ்வசனம் (3:128) அருளப்பட்டது.
நூல் : முஸ்லிம் 3667
தாங்க முடியாத துன்பம் ஏற்படும் போது மனிதர்கள் இது போன்ற வார்த்தைகளைக் கூறி விடுவதுண்டு. நீ உருப்பட மாட்டாய் என்று சாபம் இடுவார்கள். பாதிக்கப்பட்டவனின் வாயில் இத்தகைய வார்த்தைகள் வெளிவருவதை அல்லாஹ்வும் மன்னிப்பான் என 4:148 வசனம் கூறுகிறது.
ஆனால் இறைவனின் தூதர்கள் இவ்வாறு கூறினால் ஒருவரை வெற்றிபெற வைக்கவும், தோல்வியுறச் செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதோ என்ற கருத்தை அது தந்து விடும். எனவே தான் “எனக்கு இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்?” என்று வேதனை தாளாமல் இறைவனின் தூதர் கூறியதை இறைவன் கண்டிக்கிறான்.
“நான் நினைத்தால் உம்மைத் தாக்கியவர்களுக்குக் கூட வெற்றியளிப்பேன்; அல்லது அவர்களை மன்னித்தும் விடுவேன்; எனது அதிகாரத்தில் தலையிட நீ யார்?” என்ற தொனியில் இவ்வசனம் அமைந்துள்ளது.
இறைவனின் அதிகாரம் தமக்கு இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்க மாட்டார்கள் என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இது போன்ற வார்த்தைகள் கூட இறைவனுக்குக் கோபம் ஏற்படுத்துகிறது. அப்படியானால் மகான்கள், பெரியார்கள் எனக் கருதப்படும் மற்றவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்க முடியும்?
இவ்வசனத்தைச் சிந்தித்துப் பார்த்தால் உயிருள்ளவரையோ, இறந்தவரையோ, இன்ன பிற பொருட்களையோ வணங்குவோரும், பிரார்த்திப்போரும், தாம் எத்தகைய தவறான கொள்கையில் இருக்கிறோம் என்பதை உணர்வார்கள்.
இதில் மற்றொரு முக்கியமான செய்தியும் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக இல்லாமல் தாமாகத் திருக்குர்ஆனைக் கற்பனை செய்திருந்தால் இவ்வளவு கடுமையாக தம்மைக் கண்டிக்கின்ற, தம்மை மதிப்பற்றவராகக் காட்டும் வசனத்தைக் கற்பனை செய்து தமது மதிப்பைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வளவு துன்பப்படும் நேரத்தில், யுத்த களத்தில், எதிரிகளின் கை ஓங்கியுள்ள நிலையில் இப்படி யாரும் கற்பனை செய்ய முடியாது. எனவே இது இறைவாக்கு என்பதற்கும், அவர்கள் இறைத்தூதர் என்பதற்கும் சான்றாக உள்ளது.
தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!