109. வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு
வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று இவ்வசனங்கள் (4:11, 4:176) கூறுகின்றன.
சொத்துரிமையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே பாகுபாடு காட்டுவது நியாயமில்லை என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் சொத்துரிமையில் வேற்றுமை காட்டுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
1, இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான் அதிகச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. மற்ற சமூகங்களிலும் கூட பெரும்பாலும் இதே நிலை தான்.
2, பெற்றோர்கள் தள்ளாத வயதில் ஆண் மக்களால் தான் பராமரிக்கப்படுகின்றனர். பெண்கள் தமது கணவனின் பெற்றோர்களைத் தான் பராமரிக்க முடியும். பெற்றோர் பொருள் திரட்ட முடியாத நிலையை அடையும் போது அவர்களைக் கவனிப்பதும் ஆண் பிள்ளைகள் தான். எனவே அவர்களுக்கு இரு மடங்கு அளிப்பது நியாயமே!
3, ஒரு பெண் தனது புகுந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டால் தனது சகோதரனின் தயவில் வாழும் நிலை ஏற்படும். “எனக்குக் கிடைத்த அளவு சொத்து உனக்கும் தானே கிடைத்தது; எனவே உன்னை நான் ஏன் பராமரிக்க வேண்டும்” என்று சகோதரன் நினைக்காமல் அன்புடன் அவளை அரவணைக்க இந்த வேற்றுமை அவசியமாகிறது.
4, ஆண்களுக்குக் கிடைக்கும் அளவு சொத்துக்கள் பெண்களுக்கும் வழங்கப்பட்டால் அதைப் புகுந்த வீட்டில் தந்திரமாகவும், மிரட்டியும், ஏமாற்றியும் பறித்துக் கொள்வர். அனைத்தையும் புகுந்த வீட்டில் பறிகொடுத்து விட்டு, பிறந்த வீட்டுக்கு வந்தால் அவளுக்கு மரியாதை இருக்காது.
5, ஆணுக்குக் கிடைப்பதில் பாதி அளவு அவளுக்குக் கிடைத்தாலும் சகோதரன் வழியாக வேறு விதத்தில் அவளுக்கே திரும்பக் கிடைக்கின்றது.
6, ஒவ்வொருவரும் தமது சொத்துக்கள் தமது குடும்பத்துக்குள்ளேயே சுற்றி வர வேண்டும் என ஆசைப்படுவர். பெண்களுக்குச் சம அளவில் சொத்துக் கிடைக்கும் போது அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடும்.
7, தந்தையின் சொத்துக்களைப் பெருக்குவதில் பெண்களை விட ஆண்களே பெரிதும் பங்காற்றி வருகின்றனர். தந்தை விட்டுச் சென்ற சொத்துக்களில் அவர் சம்பாதித்ததை விட அவரது ஆண் பிள்ளைகளின் உழைப்பால் அதிகம் பெருகியிருக்கும். பெண் பிள்ளைகள் பெரும்பாலும் சொத்தை வளர்ப்பதில் பங்கெடுக்க மாட்டார்கள். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
8, இவை தவிர பெண்களுக்காக தந்தை நகைகளையும், ஆபரணங்களையும் செய்து போடுகிறார். இவை அலங்காரப் பொருட்களாக மட்டுமின்றி பெரிய சொத்தாகவும் உள்ளது. இது போன்ற பொருட்களை ஆண் மக்களுக்காக தந்தை வழங்குவதில்லை. இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
9, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வழங்கினால், பெற்றோரை முதிய வயதில் நாம் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆண் மக்களுக்குத் தோன்றும். புகுந்த வீட்டில் வாழும் பெண்களால் பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போகும்.
இதனால் முதியோர் இல்லங்கள் பெருகும். பெற்றோர் நாதியற்று விடப்படுவார்கள். இவற்றைக் கவனத்தில் கொண்டே இஸ்லாம் இதில் வேற்றுமை காட்டியுள்ளது.
2.8.2001 தினமணி நாளேட்டில் (சென்னை பதிப்பு) சொத்தில் சமபங்கு! கடமையில்? என்ற கட்டுரை வெளியானது. சுதந்திர தயாகான் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சத்தைச் சிந்தித்தால் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் எவ்வளவு அறிவுப்பூர்வமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ…
…எனவே, சொத்தில் சம உரிமை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல. எனினும் சொத்தில் சம உரிமை கொடுக்கப்படும் போது, கடமையிலும் பெண் குழந்தைகள் பங்கு கொள்கிறார்களா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நல்ல வரண் பார்த்து, ஒரு லட்சத்திற்கு நகை, ஒரு லட்சம் திருமணச் செலவு எனப் பெற்றோர் மணம் முடித்து வைக்கிறார்கள். பேறு காலம் பார்த்து, விருந்துக்கு அழைத்து, விடுமுறைக்கு அழைத்து மகிழ்விக்கின்றனர். பின், ஆண் பிள்ளைகளுக்குக் கொடுப்பது போல், பணம், வீடுவாசல் என சொத்திலும் சமபங்கு அளிக்கின்றனர். அவ்வாறு செய்யும் பெற்றோர், வயதான காலங்களில், முடியாத காலங்களில், பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி, அவர்கள் கண்காணிப்பில் இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.
கிடைத்த வரை பெற்றுக் கொண்டு, கொடுத்தவர்களுக்கு முடியாத காலங்களில் அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு மட்டுமே என்ற நடைமுறை மாற வேண்டும்.
தன் மனைவி வீட்டில் சகலமும் அனுபவிக்கும் மருமகன், தன் மாமனார், மாமியாரை, அவர்களின் வயதான காலங்களில் தம்முடன் வைத்துப் பராமரிக்க முன் வரவேண்டும். உரிமை மகளுக்கு கடமை மகனுக்கு என்ற நிலை வரும் போது மகனும் மருமகளும் சற்று சோர்வடைவதில் வியப்பில்லை.
ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். சொத்தில் சம உரிமை பெறுவதால், தம் சகோதரியும் பெற்றோரைக் கவனித்தால் என்ன? என்று சகோதரர்கள் நினைப்பது இயற்கை. சகோதரிகளுக்கும், பெற்றோருக்கும் கடமை செய்ய மாத்திரமே ஆண் மகன் என்ற நிலை மாற வேண்டும். உரிமையில் சமம் எனில், கடமையிலும் சமபங்கு வகிக்கப் பெண் குழந்தைகள் நிர்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒருவேளை, பெண் குழந்தைகளுக்கு உரிமை (மட்டும்) சமபங்கு கொடுக்கப்படுவதால் ஏற்பட்ட கால மாற்றத்தின் விளைவோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
இவ்வாறு அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இந்த தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும்.
பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது; பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!