11. மனிதருக்கு ஸஜ்தாச் செய்யலாமா?
முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என இவ்வசனங்களில் (2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72) கூறப்பட்டுள்ளது.
இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் இத்தகைய வழக்கம் அறவே இருந்ததில்லை. இது குறித்து தெளிவாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
முதலில் ஸஜ்தா என்ற சொல்லின் பொருள் என்ன என்று பார்ப்போம்.
ஸலாத் – தொழுகை, ஸவ்ம் – நோன்பு, ஜகாத் போன்ற சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே அரபுகளிடம் வழக்கத்தில் இருந்தன. ஆயினும், இப்போது நாம் பயன்படுத்துகின்ற பொருளில் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.
தொழுகையைக் குறிப்பிட ‘ஸலாத்’ என்னும் வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த வார்த்தையின் நேரடிப் பொருள் பிரார்த்தனையாகும். இப்பொருளில் தான் அரபுகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய குறிப்பிட்ட வணக்கத்திற்கு ‘ஸலாத்’ என்ற வார்த்தையை இஸ்லாம் பயன்படுத்தியது.
‘ஸவ்ம்’ என்ற வார்த்தை நோன்பைக் குறிப்பிடுவதற்கு இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் “கட்டுப்படுத்திக் கொள்ளுதல்” என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து வணக்கங்களுக்கு இஸ்லாம் பெயர் சூட்டவில்லை. மாறாக நடைமுறையில் இருந்த வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டியது.
இது போலவே ஸஜ்தா என்ற சொல்லும் அரபு மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது.
நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில்படும் வகையில் பணிவது ‘ஸஜ்தா’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இவ்வார்த்தைக்கு இவ்வாறு பொருள் இல்லை. “நன்றாகப் பணியுதல்” என்பதே இவ்வார்த்தையின் பொருளாக இருந்தது. பணிவைக் காட்டும் எல்லாக் காரியங்களும் ‘ஸஜ்தா’ எனக் குறிப்பிடப்பட்டன.
அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும் “நன்றாகப் பணியுதல்” என்ற பொருளில் இவ்வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் இவ்வூரில் ஸஜ்தாச் செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள் என்று 2:58, 4:154, 7:161 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
அகராதியில் உள்ள பணிவு என்ற பொருளைத் தான் இவ்வசனங்களில் உள்ள ஸஜ்தா என்ற சொல்லுக்குக் கொடுக்க முடியும். இஸ்லாமிய வழக்கில் உள்ள ‘ஸஜ்தா’வுக்குரிய பொருளை இங்கே கொள்ள முடியாது. ஏனெனில் இந்த ஸஜ்தாவைச் செய்து கொண்டு வாசல் வழியாக நுழைய இயலாது.
மனிதர்கள் மட்டுமின்றி சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம், ஊர்வன, மலை உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று திருக்குர்ஆன் 22:18 வசனம் கூறுகிறது.
இவற்றுக்கு முகமோ, மூக்கோ, கைகளோ, மூட்டுக் கால்களோ கிடையாது. குனிந்து மரியாதை செய்வதற்கான முதுகும் கிடையாது. மலைகளோ, மரங்களோ இருக்கின்ற இடத்தை விட்டு நகர்வது கூட இல்லை. ஆனாலும், இவை தனக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான்.
சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தாவாகும். மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்குவது அவற்றுக்குரிய ஸஜ்தா ஆகும்.
இப்பூமியைத் தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை அல்லாஹ்வின் கட்டளைப்படி மலைகள் செய்து வருகின்றன. இது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும்.
மொத்தத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் இறைவனது உயர்வையும், தங்களது தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்து வருகின்றன. பணிந்து நடப்பது தான் இங்கே ஸஜ்தா எனப்படுகிறது.
திருக்குர்ஆன் 12:4, 13:15, 16:48,49 ஆகிய வசனங்களிலும் பணியுதல் என்ற பொருளிலேயே ஸஜ்தா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைத் தெளிவாக அறியலாம்.
வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்ததாகக் கூறும் மேற்கண்ட வசனங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதை வலுப்படுத்தும் இன்னும் பல காரணங்களும் உள்ளன.
வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர். அவர்களுக்கு என திட்டவட்டமான உருவம் ஏதும் இல்லை. சில நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ‘ஜிப்ரீல்’ என்னும் வானவர் மனித வடிவத்தில் வந்துள்ளார். அதுவே அவரது வடிவம் என்று கூற முடியாது. ஏனெனில், வானத்தையும், பூமியையும் வியாபித்த வடிவத்திலும் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காட்சி தந்துள்ளார். (பார்க்க : புகாரீ 4)
வானவர்களுக்குச் சிறகுகளும் உள்ளன என்று 35:1 வசனம் கூறுகிறது.
எனவே, வானவர்களை நம்மைப் போன்றவர்களாகக் கருத முடியாது. அவர்களால் பணிவை எவ்வாறு வெளிப்படுத்த முடியுமோ அவ்வாறு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும்.
நாம் இப்போது செய்வது போலவே அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அதை நாம் பின்பற்ற முடியாது. காரணம் ஸஜ்தாச் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் தான் வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்தனர்.
“பெரியவர்களுக்குச் ஸஜ்தாச் செய்யுங்கள்” என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாகத் தடை விதித்துள்ளனர்.
இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!
திருக்குர்ஆன் 41:37
படைக்கப்பட்டவற்றுக்கு ஸஜ்தாச் செய்யக் கூடாது. படைத்தவனுக்குத் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்பதே நமக்கு இடப்பட்ட கட்டளை.
நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்துக்குள் நுழைந்தார்கள். அங்கே இரு ஒட்டகங்கள் நடுங்கிக் கொண்டு மூட்டுக்களை தரையில் வைத்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தவர்கள் ஒட்டகங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று பேசிக் கொண்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவரும் எவருக்கும் ஸஜ்தாச் செய்வது கூடாது. ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்யலாம் என்று இருந்தால் பெண்கள் தமது கணவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். ஏனெனில் மனைவியின் மீது கணவனுக்குள்ள உரிமையை அல்லாஹ் முக்கியத்துவப்படுத்தியுள்ளான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : இப்னுஹிப்பான்
அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது என்பதற்கு தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல்படுத்த முடியாது. பெரியவர்களிடம் பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் கால்களில் விழுவதையும், அவர்களுக்கு ஸஜ்தாச் செய்வதையும் இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.
பிறப்பால் அனைவரும் சமமே! நடத்தையால் மட்டுமே ஒருவனை விட மற்றவன் உயர முடியும் என்பதையும், இஸ்லாம் கூறும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் அறிய 32, 49, 59, 141, 168, 182, 227, 290, 368, 508 ஆகிய குறிப்புகளைக் காண்க!
