112. விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள்

இவ்வசனங்களில் (4:15, 24:4, 24:13) பெண்களின் கற்புக்கு எதிராக நான்கு சாட்சிகள் இருந்தால் மட்டுமே தண்டிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளையும், பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் மக்கள் ஆர்வத்துடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.

“இருந்தாலும் இருக்கும்” என்று கூறி அதை ஆமோதிக்கின்றனர். இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூன்யமாகி விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தங்கள் மகளைப் பற்றியோ, சகோதரிகள் பற்றியோ மற்றவர்கள் இப்படிப் பேசினால் அவர்கள் அதை ரசிப்பார்களா?

செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம் குறித்து ஆராயாமல் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் இஸ்லாம் பெண்களின் கற்பொழுக்கம் பற்றி அவதூறு பேசுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகின்றது. ஒரு பெண் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தினால் குறைந்தபட்சம் நான்கு நேரடி சாட்சிகள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நான்கு சாட்சிகள் இல்லாமல் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர்களுக்கு 80 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இவ்வசனம் (24:4) கூறுகிறது.

ஒரு பெண் தவறாக நடப்பதை மூன்று ஆண்கள் பார்த்தாலும் அதை அவர்கள் பரப்புவது அவதூறாகவே கருதப்படும். அவர்களுக்கு எண்பது கசையடிகள் அடிக்கப்படும். நான்கு நபர்கள் நேரடியாகப் பார்த்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்படும்.

பெண்களைப் பற்றி வதந்தி பரப்புவோருக்கு எதிராக உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற கடுமையான சட்டங்களைப் பார்க்க முடியாது. பெண்களின் மானத்தையும், மரியாதையையும் காப்பதில் இஸ்லாம்  காட்டும் அக்கறையை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்துவோர் விபச்சாரம் செய்ததைக் கண்ட நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கூறுவது பொய் என எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இவ்வசனத்தில் அல்லாஹ் வழிகாட்டுகிறான்.

அதாவது விச்சாரம் செய்ததை நான்கு பேர் பார்க்க வேண்டும். அப்போது தான் இஸ்லாம் வழங்கும் தண்டனையை அளிக்க முடியும். ஒரு ஆணும், பெண்ணும் தனித்து இருந்ததை நாற்பது பேர் பார்த்தாலும் அது விபச்சாரத்துக்கான சாட்சியமாக ஆகாது. தனித்து இருந்தார்கள் என்பதற்குத் தான் அது சாட்சியமாகும்.

ஒரு வீட்டுக்குள் ஒரு ஆணும், பெண்ணும் தனித்திருப்பதை நான்கு பேர் பார்த்தாலும்,

ஒரு ஆண் மட்டும் இருக்கும் வீட்டுக்குள் ஒரு பெண் நுழைவதையும் சில மணி நேரங்கள் கழித்து வெளியேறுவதையும் பார்த்தாலும்

அதுவும் விபச்சாரத்துக்கான சாட்சியமாகாது. தனித்து இருந்தார்கள் என்பதற்குத் தான் அது சாட்சியமாகும்.

இது  நடைமுறை சாத்தியமற்றதாகத் தோன்றலாம். இப்னு தைமிய்யா போன்ற அறிஞர்கள் கூட இது சாத்தியமில்லாதது எனக் கூறியுள்ளனர்.

சாட்சிகள் மூலம் விபச்சாரத்தை நிரூபிப்பது சாத்தியமற்றதாகும். ஏனெனில் ஆணுடைய உறுப்பு பெண்ணின் உறுப்பில் நுழைவதைப் பார்க்கும் சாட்சிகள் இருப்பது சிரமமான காரியமாகும்.

இஸ்லாம் துவங்கிய காலம் முதல் எனது காலம் வரை சாட்சிகள் கூறியதன் அடிப்படையில் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதில்லை. ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே விபச்சாரத்துக்காக தண்டிக்கப்பட்டனர். ஏனெனில் இதற்கு சாட்சிகள் இருப்பது சிரமமாகும் என்று இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதை சமகால சவூதி அறிஞர் உஸைமீன் அவர்களும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆணும், பெண்ணும் இருவரும் ஆடையின்றி இருந்ததை நாங்கள் பார்த்தோம் என்று நான்கு பேர் கூறினாலும் இது ஏற்கப்படாது.

ஒரு கணவன் தன் மனைவியிடம் எப்படி இருப்பானோ அப்படி இருக்கக் கண்டோம் என்று கூறினாலும் அந்த சாட்சியமும் போதாது.

இவனது உறுப்பு அவளது உறுப்புக்குள் இருப்பதைப் பார்த்தோம் என்று சொல்ல வேண்டும். இது முற்றிலும் சிரமமானதாகும் என்றும் கூறுகிறார்.

மனைவியுடன் கணவன் இருப்பது போல் கண்டோம் என்று நால்வர் சாட்சி சொன்னாலும், அவர்கள் நேர்மையான சாட்சிகளாக இருந்தாலும் அவர்கள் அவதூறுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்.

இது சாத்தியமற்றதாக இருந்தும் நான்கு சாட்சிகளை அல்லாஹ் விதியாக ஆக்கியுள்ளதன் நுணுக்கமான ஞானத்தை அல்லாஹ்வே அறிவான். நாலு பேர் பார்க்கும் படி வெளிப்படையாக விபச்சாரம் பெருகக் கூடாது என்பதற்காக அல்லாஹ் இப்படிக் கூறி இருக்கலாம்.

நூல் : முஹம்மத் சாலிஹ் அல்முனஜ்ஜித் எழுதிய மவ்கிவுல் இஸ்லாம்.

இமாம் இப்னு தைமியா அவர்களின் மரணம் ஹிஜ்ரி 728 ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் 728 ஆண்டுகளில் நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரம் நிரூபிக்கப்பட்டு ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.

நாம் வாழும் 2018 வரை ஒரே ஒருவர் கூட நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

இவ்வசனம் அருளப்பட்ட காலம் முதல் இன்று வரை ஒருவர் கூட நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரத்துக்காக தண்டிக்கப்பட்டதே இல்லை. இது கண் முன்னே தெரியும் உண்மையாகும். இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு தான் அல்லாஹ்வின் வசனத்தை நாம் விளங்க வேண்டும்.

ஒரு ஆணும், பெண்ணும் தனித்து இருப்பதை நால்வர் பார்த்து விபச்சாரம் செய்தார்கள் என்று சாட்சி கூறினால் அது குற்றமாகும். தனித்து இருந்ததைப் பார்த்தோம் என்று மட்டும் கூறினால் அது குற்றமில்லை. எதைப் பார்த்தார்களோ அதை மட்டும் கூறலாம்.

உண்மையில் அவர்கள் விபச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போது நான்கு பேர் கதவைத் தட்டி அவர்கள் கதவைத் திறந்தார்கள் என்றால் அப்போது கூட விபச்சாரம் செய்தார்கள் என்று சாட்சி கூற முடியாது. ஏனெனில் இவர்கள் பார்க்கும் போது விபச்சாரம் செய்து கொண்டு இருக்கவில்லை.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு தான் மேற்கண்ட அறிஞர்கள் இது சாத்தியமற்றது ஆனாலும் இதன் காரணத்தை அல்லாஹ்வே அறிவான் என்று முடிக்கின்றார்கள்.

இவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை மறுத்தவர்களாக மாட்டார்கள்.

யாரும் இந்த அடிப்படையில் தண்டிக்கப்பட்டதில்லை என்ற உண்மையைத் தான் சொல்கிறார்கள்.

அதே நேரம் அல்லாஹ் தவறாகக் கூறிவிட்டான் என்று இந்த அறிஞர்கள் சொல்லவில்லை. நமது அறிவு குறைவானது. அல்லாஹ் சொன்னால் அதற்கு உரிய அர்த்தம் இருக்கத் தான் செய்யும். நமக்கு விளங்காத ஏதோ ஒரு நுணுக்கமான விஷயத்துக்காக அல்லாஹ் கூறியிருப்பான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் வசனங்களை இப்படித்தான் அணுக வேண்டும்.

ஒரு காலம் வரலாம். அப்பட்டமாக உலகமே பார்க்கும் படி விபச்சாரம் நடக்கலாம். அப்போது இது சாத்தியமாகும். அல்லாஹ்வின் கூற்று பொய்யாகாது.

மேலும் யாருக்கும் தெரியாமல் விபச்சாரம் செய்தாலும் நான்கு பேர் பார்த்து விட்டால் மரண தண்டனைக்கு உள்ளாக நேரும் என்று அஞ்சி விபச்சாரம் செய்வதை விட்டு விலகக் கூடும் என்பதற்காக அல்லாஹ் இச்சட்டத்தைக் கூறி இருக்கலாம். நமக்குத் தெரியாத வேறு காரணமும் இருக்கலாம்.