118. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்த போது இவ்வசனம் (73:20) அருளப்படுகிறது.

பாதி இரவோ, மூன்றில் ஒரு பகுதி இரவோ தொழுதால் போதும் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.

இப்படிக் கூறும் போது “உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் இனிமேல் உருவாவார்கள் என்பதை அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான்” எனக் கூறுகிறான்.

நோயாளிகள் உருவாவதை யாரும் சொல்லி விட முடியும். முஸ்லிம்களாக வாழ்வதே சிரமமாக இருந்த காலகட்டத்தில் இந்தச் சமுதாயத்தில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்கள் உருவாவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

அவ்வாறு போரிடும் போது தொழுகையில் முழு நேரமும் ஈடுபட முடியாமல் போகும் என்பதால் குறைந்த அளவு நேரம் தொழுகையில் ஈடுபட்டால் போதும் என்பது இதன் கருத்து.

அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்பது ஒரு ஆட்சியை அமைத்து படைதிரட்டி போர் புரிவதைக் குறிக்கும்.

இப்படி போர் புரிவோர் உருவாவார்கள் என்பதை அன்றைய சூழ்நிலையில் கணிக்கவே முடியாது. ஆனாலும் இறைவன் கூறியவாறு மிகச் சில வருடங்களிலேயே மாபெரும் இஸ்லாமிய ஆட்சி அமைந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர் உருவானார்கள்.

இவ்வாறு முன்னறிவிப்புச் செய்திருப்பது, திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்குரிய சான்றுகளில் ஒன்றாகும்.