138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது

இவ்வசனம் (திருக்குர்ஆன் 5:5) வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது.

இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

பொதுவாக யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்சீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன. இதை 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாக 3:49, 5:72, 43:59, 61:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்சீல் ஆகிய வேதங்கள் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேல் சமுதாயப் பெண்களை மணக்கலாம் என்பதே இதன் பொருளாகும். இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவப் பெண்களை மணக்க அனுமதி இல்லை.

இனை கற்பித்தலுக்கு எதிராகக் கடும் போக்கை கொண்டுள்ள இஸ்லாம் திருமண விஷயத்தில் கடுமையைக் குறைத்துள்ளது. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அப்பட்டமாக இணை கற்பித்தாலும் அவர்களின் பெண்களை மணக்கலாம்.

வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் யூத கிறித்தவர்கள் மட்டுமே அன்று இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் முஸ்லிம்களாக இருப்பவர்களில் சிலர் இணை கற்பிக்கலானார்கள். சமாதிகள் வழிபாடு, ஷைகுமார்கள் வழிபாடு, கொடிமர வழிபாடு,  தாயத்து, சூனியம் உள்ளிட்ட இணைகற்பிக்கும் போக்கு நிலைபெற்றுள்ளது.

இவர்கள் இணை கற்பித்தாலும் வேதக்காரர்கள் என்ற சொல்லில் இவர்களும் அடங்குவார்கள். குர்ஆன் என்ற வேதத்தை நம்புகிறார்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்து அல்லது இணைந்து சில இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்தாலும் அவர்களின் பெண்களை மணக்கலாம்.

வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்பது வரலாற்றுப்படி நபிகள் காலத்தில் இருந்த யூத, கிறித்தவர்களைத் தான் குறிக்கும். ஆனாலும் அந்தச் சொல்லின் பொருளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேதத்தை நம்புபவர்கள் என்பது யூத கிறித்தவர்களுக்குப் பொருந்துவதை விட  முஸ்லிமாக இருந்து கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடியவர்களுக்கு அதிகம் பொருந்தும்.

யூதர்கள் வேதத்தை மாற்றி மறைத்து சிதைத்தது போல்  முஸ்லிமாக இருந்து கொண்டு இணை கற்பிப்போர் குர்ஆனைச் சிதைக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட வேதத்தை நம்புகிறார்கள். எனவே வேதமுடையோர் என்ற சொல்லுக்குள் நிச்சயம் இவர்கள் அடங்குவார்கள்.

நபிகள் நாயகம்  (ஸல்) காலத்தில் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை கற்பித்தவர்கள் இருக்கவில்லை. இருந்திருக்க முடியாது. அவர்கள் காலத்தில் இந்தக் கேள்விக்கு இடமிருக்கல்லை. பிற்காலத்தில் இஸ்லாமில் இருந்து கொண்டே இணை கற்பிப்பவர்கள் உருவானார்கள். இவர்களையும் உள்ளடக்கும் விதமாகவே வேதம் கொடுக்கப்பட்டோர் என்ற சொல் அமைந்துள்ளது.

இதனால் அவர்கள் இணை கற்பிக்கவில்லை என்று ஆகாது.

ஆயினும் இணை கற்பிக்காமல் சரியான மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் பெண்களை மணப்பதில் தான் வெற்றி உள்ளது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளது அழகிற்காக.

4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 5090

மேலும் விபரத்திற்கு 27, 137 ஆகிய குறிப்புகளையும் காண்க!