144. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை
இந்த வசனங்கள், (13:8, 22:5) மிகப்பெரும் அறிவியல் உண்மையைக் கூறுகின்றன.
பொதுவாக மனித உடலுக்கு என சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே கண்கள் முயற்சிக்கும்.
இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உயிரைத் தனக்குள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் அதை வளர்த்து திடீரென அதை வெளியேற்ற முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகின்றது. இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ்வசனம் கூறுகிறது.
“ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட கால நிர்ணயப்படியே அவனிடத்தில் உள்ளன” என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இயற்கைக்கு மாறாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் ஏன் வெளியேற்றுகிறது என்பதற்கு இன்றுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
அன்னியப் பொருளைக் கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கும் இது வரை விடையில்லை.
இயற்கைக்கு மாறாக இறைவன் தனது வல்லமையைப் பயன்படுத்தி ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயத்தின்படியே நீண்டகாலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.
எலும்புகள் முறிந்து விட்டால் ஸ்டீல் தகடுகளை வைக்கிறார்கள். அது வெளியே வருவதில்லை. அன்னியப் பொருளை உடல் ஏற்றுக் கொள்ளும் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளதே? இது எப்படி என்று கேள்வி எழலாம். இதற்குக் காரணம் வெளியே வராத வகையில் உள்ளே வைத்து தோலைத் தைத்து விடுவது தான். அவ்வாறு இல்லாவிட்டால் உள்ளே வைக்கப்பட்டவைகளை உடல் வெளியே தள்ளிவிடும்.
திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகளில் இவ்வசனமும் ஒன்றாக அமைந்துள்ளது.