16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்
2:47, 2:122 45:16 ஆகிய வசனங்களில் “இஸ்ரவேலர்களை அகிலத்தாரை விடச் சிறப்பித்திருந்தேன்” என்று இறைவன் கூறுகிறான்.
பிறப்பின் அடிப்படையில் எவரும் எந்தச் சிறப்பும் பெற முடியாது என்பது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இதை 2:111, 3:75, 49:13 ஆகிய வசனங்களில் காணலாம். இந்த அடிப்படைக் கொள்கைக்கு ஏற்பவே இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே பிறப்பால் இஸ்ரவேலர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்தில் இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. இஸ்ரவேலர்களுக்கு வழங்கிய ஆட்சி, அதிகாரம், பொருள் வசதி போன்ற சிறப்புக்களையே இது குறிக்கிறது.
யஃகூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், தாவூத், ஸுலைமான், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா உள்ளிட்ட அதிகமான இறைத்தூதர்கள் இஸ்ரவேலர்களில் தான் அனுப்பப்பட்டனர். இந்தச் சிறப்பு மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை.
திருக்குர்ஆனின் 5:20 வசனம் இதைத் தெளிவாகவே கூறுகிறது. மேற்கண்ட வசனங்களும் இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்படிருந்த அதிகாரத்தைத் தான் குறிப்பிடுகிறது.
இந்தச் சிறப்பு கூட என்றென்றும் நிலைத்திருக்கும் எனக் கூறப்படவில்லை. 2:47, 2:122, 45:16 ஆகிய வசனங்களில் ‘சிறப்பித்திருந்தேன்’ என்ற இறந்த கால வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அவர்களுக்குச் சில வசதிகள் வழங்கப்பட்டதை இது குறிக்குமே தவிர காலாகாலத்துக்கும் அவர்கள் சிறப்புற்று விளங்குவார்கள் என்ற கருத்தைத் தராது.
ஆன்மிக நிலையைப் பொறுத்த வரை நன்மையை ஏவி தீமைகளைத் தடுக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டு சிறந்த சமுதாயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் திகழ்வதாக 2:143, 3:110 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இந்தச் சிறப்பு இஸ்ரவேலர்களுக்கு இல்லை.
அதிகாரம் கொடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் பின்னர் இறைவனின் கடுமையான கோபத்துக்கும், சாபத்துக்கும் ஆளானதாகவும் திருக்குர்ஆன் 2:88, 2:159, 4:46-47, 5:13, 5:60, 5:64, 5:78 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.