27. அனைத்து கிறித்தவர்களும் வேதம் கொடுக்கப்பட்டவர்களா?
வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தின் பெண்களை முஸ்லிம்கள் மணந்து கொள்ளலாம் என்றும், அவர்களின் உணவுகள் முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டவை என்றும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
“வேதம் கொடுக்கப்பட்டோர்” என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இந்தச் சொல் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆனில் வேதக்காரர்கள் எனக் கூறும் வசனங்கள் யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் பற்றியதாகவே உள்ளன.
யூதர்களையும், கிறித்தவர்களையும் வேதக்காரர்கள் என்று குறிப்பிடுவதை அனைத்து யூதர்களையும், அனைத்து கிறித்தவர்களையும் குறிப்பதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அனைத்து யூதர்களும், கிறித்தவர்களும் வேதக்காரர்கள் ஆக மாட்டார்கள்.
ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட மூஸா நபி உள்ளிட்ட எல்லா நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள்.
தவ்ராத், இஞ்சீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன.
இஸ்ரவேலர்களுக்கு நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாக 3:49, 5:72, 43:59, 61:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இஸ்ரவேலர் அல்லாதவர்கள் கிறித்தவர்களாக மாறியிருந்தாலும் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் இஞ்சீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள். இன்னும் சிலர் அவ்வாறு அனுப்பப்பட்டு இருக்கலாம். அதிகமான நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், குறிப்பிட்ட சமுதாயத்துக்கும் மட்டுமே அனுப்பப்பட்டார்கள்.
மூஸா நபியவர்கள் ஃபிர்அவ்னுக்கும் தூதராக அனுப்பப்பட்டார்களே? அவன் இஸ்ரவேல் சமுதாயத்தைச் சேர்ந்தவனல்லவே என்ற சந்தேகம் ஏற்படலாம்.
மூஸா நபியவர்கள் ஆரம்பத்தில் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமின்றி ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்பது உண்மையே!
ஆனால் ஃபிர்அவ்னும், அவனது கூட்டத்தினரும் அழிக்கப்படும் வரை மூஸா நபியவர்களுக்கு தவ்ராத் வேதம் அருளப்படவில்லை. ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட பின்பே தவ்ராத் வேதத்தை அல்லாஹ் அருளினான். அவ்வாறு அருளும் போது, தவ்ராத் இஸ்ரவேலர்களுக்கு உரியது என்று கூறியே அருளினான். இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
மூஸா நபியையும், ஹாரூன் நபியையும் அல்லாஹ் ஃபிர்அவ்னிடம் அனுப்பும் போது எந்த வேதத்தையும் அவர்களுக்குக் கொடுத்து அனுப்பவில்லை. சில அற்புதங்களைக் கொடுத்து பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு அனுப்பி வைத்தான்.
மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும் பிரச்சாரம் செய்கின்றார்கள். மூஸா நபிக்கும், மந்திரவாதிகளுக்கும் போட்டி நடத்தப்படுகிறது.
அப்போது தவ்ராத் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.
இஸ்ரவேல் சமுதாயத்தை ஃபிர்அவ்ன் கொடுமைப்படுத்துகின்றான். மூஸா நபியும் அவர்களின் சமுதாயமும் அதைத் தாங்கிக் கொள்கின்றனர். ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் பஞ்சம், கன மழை, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் போன்றவற்றால் பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போதும் தவ்ராத் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.
பின்னர் மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டே ஓடுகின்றனர். ஃபிர்அவ்ன் விரட்டி வருகின்றான். முடிவில் மூஸா நபியும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்படுகின்றார்கள். ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.
அப்போதும் தவ்ராத் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.
இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்த பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான்.
ஏழாவது அத்தியாயம் 103 முதல் 150 வரையுள்ள வசனங்களை வாசித்தால் இதை விளங்கலாம்.
103வது வசனம் முதல் 141வது வரை உள்ள வசனங்களில் மூஸா நபியின் பிரச்சாரம், சோதனை, ஃபிர்அவ்னுடைய அழிவு போன்றவற்றைக் கூறிவிட்டு 142 முதல் 145 வரை உள்ள வசனங்களில் அவருக்கு வேதம் வழங்கப்பட்டதை அல்லாஹ் கூறுகின்றான்.
எவ்வித வேதமும் இல்லாமல் நீண்ட நெடுங்காலம் மூஸா நபியும், ஹாரூன் நபியும் பிரச்சாரம் செய்து வந்தனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.
மூஸா நபிக்கு வழங்கப்பட்ட தவ்ராத் இஸ்ரவேலர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டது என்பதை 3:93, 17:2, 32.23, 40:53, 5:43,44, 61:6 ஆகிய வசனங்களைச் சிந்திக்கும் போது அறியலாம்.
இதே போன்று ஈஸா நபிக்கு அருளப்பட்ட இஞ்சீல் வேதமும் இஸ்ரவேலர்களுக்காகவே அருளப்பட்டது என்பதை 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6 ஆகிய வசனங்களில் காணலாம்.
இஸ்ரவேல் அல்லாத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது.
எனவே “வேதம் கொடுக்கப்பட்டவர்களைத் திருமணம் செய்யலாம்; அவர்கள் அறுத்ததை உண்ணலாம்” என்ற சட்டம் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்ரவேலர்கள் அல்லாத யூத, கிறித்தவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோர் என்ற பட்டியலில் இடம் பெற மாட்டார்கள்.
(மேலும் விபரங்களுக்கு 137, 138 ஆகிய குறிப்புகளையும் காண்க.)