360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. (இதற்கான விளக்கத்தை 69வது குறிப்பில் காண்க!)

கணவன் மரணிக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் கடைப்பிடிக்க வேண்டிய இத்தாவின் சட்டம் இவ்வசனத்தில் (65:4) கூறப்பட்டுள்ளது. கணவன் மரணிக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் காலம் வரை மறுமணம் செய்யக் கூடாது என்பது தான் கர்ப்பிணிகளுக்கான இத்தா என்பதை இவ்வசனம் கூறுகிறது.

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது.

கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.

இவ்வசனத்திலிருந்து (65:4) இந்தச் சட்டத்தை அறியலாம்.

இத்தா குறித்த மேலதிக விபரங்களை அறிந்திட 69, 404, 424 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.