369. களாத் தொழுகை

இவ்வசனத்தில் (19:60) தொழுகையை விட்டவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றிக் கூறப்படுகிறது.

பல வருடங்களாக, பல மாதங்களாக தொழுகையை விட்டவர்கள் திடீரென்று திருந்தி வாழ விரும்புவார்கள். இவர்கள் விட்டுவிட்ட பல வருடங்களின் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா? அல்லது இவர்கள் வேறு என்ன செய்ய வேண்டும்?

தொழுகையைப் பாழாக்கியவர்கள் திருந்தி பாவமன்னிப்புக் கேட்டு இனிமேல் முறையாகத் தொழுது வந்தால் அதுவே போதுமானது; அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள் என இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. விட்ட தொழுகைகளைக் களாச் செய்ய வேண்டும் எனக் கூறப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறு கட்டளையிடவில்லை.

எனவே அவர்கள் தவ்பாச் செய்து விட்டு எதிர்காலத்தில் சரியாக நடந்து கொண்டால் போதுமானது.

20 வருடங்களாகத் தொழாத ஒருவர், விட்ட 20 வருடத் தொழுகையையும் நிறைவேற்ற வேண்டும் என்று எந்தச் சான்றுமின்றி கூறும் போது அவர் வந்த வழியே திரும்பிச் சென்று விடுவதை நாம் காண்கிறோம். எனவே மார்க்கத்தில் இல்லாத இது போன்ற தீர்ப்புகள் அளிப்பதைத் தவிர்த்தால் திருந்த விரும்புவோருக்கு அது எளிதாக இருக்கும்.

களாத் தொழுகை என்பது இஸ்லாமில் இல்லை என்பதைத் தக்க ஆதாரங்களுடன் அறிந்து கொள்ள 479வது குறிப்பைக் காண்க!