386. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்
இவ்வசனத்தில் (65:2) விவாகரத்துக்குரிய முக்கிய நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த நிபந்தனை.
தொலைபேசியில் விவாகரத்து, தபாலில் விவாகரத்து என்று முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் விவாகரத்துச் செய்வதையும், அதைச் சில மார்க்க அறிஞர்கள் சரிகாண்பதையும் நாம் காண்கிறோம்.
இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தபால் எழுதி, அல்லது இரண்டு சாட்சிகளின் முன்னால் தொலைபேசியில் பேசி தலாக் என்பதைத் தெரிவித்தால் இந்த நிபந்தனையைப் பேணி விட்டதாகவும் சிலர் நினைக்கின்றனர்.
விவாகரத்துச் செய்பவனையும், செய்யப்பட்டவளையும், இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குச் சாட்சியாக இருக்க முடியும்.
எனவே எதிர்த்தரப்பில் உள்ள பெண் யார் என்பது தெரியாமல், அவள் இவனுக்கு மனைவி தானா என்பதையும் அறியாமல், தன் மனைவியுடன் தான் தொலைபேசியில் பேசுகிறானா என்பதையும் அறியாமல் எவரும் சாட்சியாக முடியாது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் இரண்டு சாட்சிகளை வைத்து விவாகரத்துச் செய்தால் செல்லுமா என்ற சந்தேகமும் சிலருக்கு உள்ளது. வீடியோ மூலம் ஒருவன் விவாகரத்துச் செய்வதையும் அதற்கு இரண்டு பேர் சாட்சிகளாக இருப்பதையும் இங்கிருந்து கொண்டே பார்க்க முடிகிறது; எனவே இது செல்லும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இது தவறாகும். ஏனெனில், இதை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்யவில்லை.
ஒரு திரையில், தலாக் சொல்பவனையும், அதற்குச் சாட்சியான இருவரையும் தான் நாம் பார்க்கிறோம். அவர்கள் எந்தப் பின்னணியில் இருக்கிறார்கள்? திரையில் தென்படாத வகையில் யாரேனும் மிரட்டுவதால் அவ்வாறு சொல்கிறார்களா? சுயநினைவுடன் அதைச் சொல்கிறார்களா? அல்லது கிராபிக்ஸ் மூலம் அதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? அது நேரடி ஒளிபரப்பா? அல்லது பதிவு செய்யப்பட்டதை ஒளிபரப்புகிறார்களா? என்பது போன்ற பல சந்தேகங்கள் இதில் இருப்பதால் இந்த தலாக்கும் செல்லத்தக்கதல்ல.
எவ்வித நிர்ப்பந்தமுமின்றி நேரிடையான இரு சாட்சிகளுக்கு முன்னால் தான் விவாகரத்துச் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது தலாக் சொன்னதாக ஆகாது.
தற்காலிகமாகப் படுக்கையைப் பிரித்தல், அறிவுரை கூறுதல், இரு குடும்பத்து நடுவர்கள் மூலம் நல்லிணக்கத்துக்கு முயற்சி செய்தல் ஆகியவற்றைச் செய்த பிறகு தான் விவாகரத்து செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் ஒருவன் செய்தானா என்பதை அறிந்தவர் தான் சாட்சியாக இருக்க முடியும்.
இரு குடும்பத்துக்கும் நெருக்கமானவன் அல்லது இரு குடும்பத்துடனும் இது குறித்து பேசியவனுக்குத் தான் மேற்கண்ட நடைமுறைகளை அவன் செய்தானா என்பதை அறிய முடியும்.
மேலும் விவாகரத்துக்குப் பின்னர் மனைவிக்கு நியாயமான ஈட்டுத் தொகை வழங்கும் கடமை விவாகரத்துச் செய்தவனுக்கு உள்ளது. இது குறித்து 74வது குறிப்பில் விளக்கியுள்ளோம். இதை இஸ்லாமிய அரசு அல்லது ஜமாஅத்துகள் தான் பெற்றுத் தர முடியும். எனவே ஜமாஅத்தார் முன்னிலையில் தான் இரு சாட்சிகள் சாட்சி சொல்ல வேண்டும்.
தபால் மூலமோ, எஸ் எம் எஸ் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ, வீடியோ கான்பரன்சி மூலமோ தலாக் சொல்லுதல் அல்லாஹ்வின் சட்டத்தைக் கேலிக்குரியதாக்குவதாகும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
தலாக்குக்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை ஒருவன் கடைப்பிடித்தானா இல்லையா என்பதை அறியாமல் சாட்சி சொல்பவன் அநியாயத்துக்குத் தான் சாட்சி கூறுகிறான். எனவே இருவரின் பிரச்சினைகள் பற்றி அறியாத ஒருவன் தலாக்குக்கு சாட்சியாக இருக்கக் கூடாது.
ஒரு மகனுக்கு மட்டும் சொத்தைக் கொடுத்து மற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருந்த நபித்தோழர் ஒருவர் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்கிய போது நான் அநியாயத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். (பார்க்க : புகாரீ 2650
ஒரு ஆண் மார்க்கத்தின் நெறியைப் பேணாமல் தலாக் சொல்லும் போது அதற்கு சாட்சியாக இருப்பதும் இது போன்றது தான்.
எனவே இந்த விதியைக் கவனத்தில் கொண்டால் அவசரப்பட்டுச் செய்யும் பல விவாகரத்துக்கள் தவிர்க்கப்படும்.
விவாகரத்து தொடர்பாக மேலும் அறிய 66, 69, 70, 74, 402, 424 ஆகிய குறிப்புகளைக் காண்க!