389. நாடோடிகளான மூஸா நபியின் சமுதாயம்
இவ்வசனத்தில் (2:61) மூஸா நபியின் சமுதாயத்தவர்களை நோக்கி, “ஒரு ஊரில் தங்குங்கள்” என்று கூறப்படுகிறது.
எல்லா மனிதர்களும் ஒரு ஊரில் தானே தங்கி இருப்பார்கள்? அப்படி இருக்கும் போது ஒரு ஊரில் தங்குங்கள் என்று கட்டளையிடுவது பொருளற்றதாக உள்ளதே என்று சிலர் நினைக்கலாம். இதற்குக் காரணம் உள்ளது.
மூஸா நபி சமுதாயத்தினர் எந்த ஊரிலும் தங்காமல் ஊர் ஊராக நாடோடிகளாகச் சுற்றித் திரிந்தனர். இதன் காரணமாகவே அவர்களுக்கு வானிலிருந்து உணவை அல்லாஹ் இறக்கியருளினான்.
ஆனால் பூமியில் விளையும் உணவுகள் தான் வேண்டும் என அவர்கள் கேட்ட போது ஏதாவது ஒரு ஊரில் நிலையாகத் தங்கி அங்கே விவசாயம் செய்து நீங்கள் கேட்ட உணவை அடைந்து கொள்ளுங்கள் என அல்லாஹ் கட்டளையிட்டான். ஏதாவது ஒரு ஊரில் தங்குங்கள் என்பதன் கருத்து இது தான்.