4. முன்னர் அருளப்பட்டவை
இவ்வசனங்களில் (2:4, 4:60, 4:136, 4:162, 5:59, 10:94) முன்னர் அருளப்பட்டவை குறித்து கூறப்படுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எனும் இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன என்று நம்ப வேண்டும்.
முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவது என்றால் அவற்றை நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி எல்லா இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று நம்ப வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
ஏனெனில் முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41 ஆகிய வசனங்களில் அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன; மாற்றப்பட்டன; மறைக்கப்பட்டன; திருத்தப்பட்டன எனவும் கூறுகிறது.
மேலும் திருக்குர்ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்ப வேண்டும்.
வேதங்களைக் குறித்து முஸ்லிம்களிடம் சில தவறான நம்பிக்கைகள் உள்ளன.
“தவ்ராத், ஸபூர், இஞ்சீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்கள் மட்டுமே இறைவனால் வழங்கப்பட்டுள்ளன” என்பதும் அந்த தவறான நம்பிக்கையில் ஒன்றாகும்.
தவ்ராத், ஸபூர், இஞ்சீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால் இந்தத் தவறான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.
எல்லா இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று 2:213, 14:4, 19:12, 57:25, 87:18,19 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. எனவே வேதங்கள் நான்கு மட்டுமே என்பது தவறானதாகும்.
திருக்குர்ஆன், தவ்ராத், இஞ்சீல், ஸபூர் ஆகிய நான்கும் முறையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மூஸா நபி, ஈஸா நபி, தாவூத் நபி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இவை மட்டுமே கிதாப் எனும் பெரிய வேதங்கள். மற்ற இறைத்தூதர்களுக்கு ஸுஹுஃப் எனும் சிறிய ஏடுகள் வழங்கப்பட்டன என்றும் சிலர் கூறுகின்றனர்.
இது வேதம் குறித்து முஸ்லிம்களிடம் காணப்படும் மற்றொரு தவறான நம்பிக்கையாகும்.
இதற்குத் திருக்குர்ஆனிலோ, ஏற்கத்தக்க நபிமொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆன் 98:2 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஸுஹுஃபை ஓதிக் காட்டுவார்கள்” என்று கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தைப் பற்றி, கிதாப் என்று பல வசனங்களில் கூறப்படுவது போல் இவ்வசனத்தில் (98:2) ஸுஹுஃபு என்றும் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து கிதாப் என்பதும், ஸுஹுஃபு என்பதும் ஒரே கருத்தைக் கொண்டவை என்பது தெளிவாகின்றது.
வேதம் என்ற அடிப்படையில் இவ்விரு சொற்களும் ஒரே கருத்தைத் தருபவை தான் என்றாலும், தொகுக்கப்படும் விதத்தைப் பொறுத்து இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
தனித்தனி ஏடுகளாக இருக்கும் போது ஸுஹுஃபு என்றும், அந்த ஏடுகள் அனைத்தையும் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கும்போது கிதாப் என்றும் சொல்லப்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திருக்குர்ஆன் ஸுஹுஃபு என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது. அதனால் ஸுஹுஃப் என்று சொல்லப்படுகிறது. இந்தக் குர்ஆன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்து ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் கொண்டு வரப்பட்டதால் இது கிதாப் என்றும் சொல்லப்பட்டது.