415. குளோனிங் சாத்தியமே!
இன்றைய மனிதன் கண்டுபிடித்துள்ள குளோனிங் குறித்து நாம் எந்த முடிவை எடுப்பது என்பதற்கு இவ்வசனங்கள் (3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50) வழிகாட்டுகின்றன.
ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை வெறும் வரலாறாக மட்டும் திருக்குர்ஆன் கூறாமல் ‘இது ஓர் அத்தாட்சியாக உள்ளது’ என்று கூறி, இது குறித்து இவ்வசனங்களில் சிந்திக்கத் தூண்டுகிறது.
மனிதர்கள் முயற்சி செய்தால் இது சாத்தியமாகாது என்றால் இதைச் சிந்திக்கத் தூண்டுவதில் பொருள் இருக்காது. முயன்றால் முடியும் என்பதால் தான் இது குறித்து சிந்திக்குமாறு இவ்வசனம் கூறுகிறது.
இன்றைய நவீன உலகில் உயிரினங்களின் உயிரணுவுக்கு மாற்றாக மரபணுவைப் பயன்படுத்தி உயிரினங்களை உண்டாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
உதாரணமாக ஓர் ஆடு குட்டி போட்டால் அந்தக் குட்டி எல்லா வகையிலும் தாயைப் போலவோ, அக்குட்டி உருவாவதற்குக் காரணமான கிடாவைப் போலவோ இருப்பதில்லை. சில விஷயங்களில் தாயை ஒத்ததாகவும், சில விஷயங்களில் தந்தையை ஒத்ததாகவும் இருக்கும். சில சமயங்களில் பெற்றோருக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத தோற்றத்திலும் இருக்கும்.
ஆனால் ஓர் ஆட்டின் மரபணு மூலம் உருவாக்கப்படும் குட்டியானது, அந்த மரபணுக்குச் சொந்தமான ஆடு அல்லது கிடாவை எல்லா வகையிலும் ஒத்ததாக இருக்கும். இவ்வாறு மரபணு மூலம் இன உற்பத்தி செய்வதற்குக் குளோனிங் எனப்படுகின்றது.
மரபணுவில் உருவாக்கப்படும் குட்டி, அச்சு அசலாக தாயைப் போல் பிறப்பதற்குரிய காரணத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆணுடைய உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையும் இணைந்து கரு உருவாகி வளரும் போது அதில் அதற்கான மரபணுக்கள் தோன்றுகின்றன.
இரண்டும் கலந்த ஒரு கலவையாக மரபணு அங்கே புதிதாக உருவாவதால் அது பெற்றோரை எல்லா வகையிலும் ஒத்ததாக இருப்பதில்லை.
அதே சமயம், உயிரினங்களின் உடல் முழுவதும் ஒவ்வொரு தசையிலும் மரபணுக்கள் வியாபித்துள்ளன. சிறிய அளவு தசையை எடுத்து அதிலிருந்து மரபணுவை மட்டும் பிரிக்கின்றனர். இந்த மரபணு 25 வயதுடைய ஒருவனின் மரபணு என்றால் அந்த மரபணுவின் வயதும் 25 தான்.
இதன் காரணமாகத் தான் யாருடைய மரபணுவிலிருந்து குழந்தை உருவாக்கப்படுகின்றதோ அவரைப் போலவே அச்சு அசலாக அந்தக் குழந்தை இருக்கிறது.
ஆணுடைய உயிரணுவையும், பெண்ணுடைய கருமுட்டையையும் சோதனைக் குழாயில் வைத்து வளர்க்கிறார்கள். இரண்டும் கலந்து புதிய மரபணுக்கள் அதில் உருவாகியிருக்கும். குறிப்பிட்ட காலம் வரை குழாயில் வளர்த்து, அதில் உருவான மரபணுவை நீக்கி விட்டு, யாரை குளோனிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவருடைய மரபணுவை அந்த இடத்தில் வைக்கிறார்கள். இதன் பிறகு சோதனைக் குழாயில் வளர்த்ததை பெண்ணின் கருவறையில் வைத்து கரு வளர்ச்சி ஏற்படுத்துகின்றனர். சாதாரணமாகக் குழந்தையைப் பெற்றெடுப்பது போல் அக்குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது.
மனிதனிடம் இது சோதித்துப் பார்த்து நிரூபிக்கப்படாவிட்டாலும் ஆடு, எருமை, பன்றி போன்ற உயிரினங்களில் இதைச் சோதித்து விஞ்ஞானிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.
மனிதனைப் பொறுத்த வரை அவனைக் குளோனிங் செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.
25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொறுத்த வரை அதன் வயது 25 ஆகும். எனவே 25 வயதுடையவனின் அறிவும், சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
இந்த விபரங்களைக் கவனத்தில் வைத்து, ஈஸா நபியின் பிறப்பு பற்றிக் திருக்குர்ஆன் கூறுவதைச் சிந்தித்துப் பார்ப்போம்.
தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால், ஆகு என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் இறைவன் ஒரு வானவரை மனித வடிவில் அனுப்பி, அந்த வானவர், ஈஸா நபியின் தாயாரான மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட ஒரு மரபணுவை அந்த வானவர் மர்யம் (அலை) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என்பதையும், எந்த முறையில் குழந்தை உருவாவதாக இருந்தாலும் முடிவில் தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகின்றது.
அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய விஷயம், ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே பேசியதாக இதில் கூறப்படுகின்றது. தந்தையில்லாமல் பிறந்ததால் அற்புதம் என்ற அடிப்படையில் பிறந்தவுடன் சில வார்த்தைகளைப் பேசி விட்டு அதன் பிறகு குழந்தைத் தன்மையுடையவராக அவர் இருக்கவில்லை. அவர் குழந்தையாக இருக்கும் போது பேசினார் என்பதுடன் அவரை அப்போதே இறைத்தூதராக ஆக்கியதாகவும் இங்கு கூறப்படுகிறது.
இறைத்தூதர் என்றால், இறைச் செய்திகளைச் சரியாக விளங்க வேண்டும், அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை அறிவோம்.
பிறந்தவுடனேயே ஈஸா நபியவர்கள் பேசியதுடன், இறைச் செய்திகளை விளங்கி, மக்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு முதிர்ச்சி உடையவர்களாக இருந்தது மனிதக் குளோனிங் பற்றிய விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்ததாக இருக்கின்றது.