428. குற்றவாளிகளின் இல்லம் என்பது எது?

இவ்வசனத்தில் (7:145) ‘குற்றவாளிகள் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்’ எனக் கூறப்பட்டுள்ளது.

‘குற்றவாளிகளின் இல்லம் என்பது நரகம்; அதைக் காட்டுவேன் என்பது தான் இதன் கருத்து’ என்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்கத்தக்கதாக இல்லை.

மறுமையில் நரகத்தை அல்லாஹ் அனைவருக்கும் காட்டுவான். சொர்க்கவாசிகள் கூட அதைக் கடந்து தான் செல்ல முடியும்.

எனவே இவ்வாறு பொருள் கொள்வதில் அர்த்தம் ஏதும் இல்லை.

மூஸா நபியும், அவரது சமுதாயத்தினரும் ஃபிர்அவ்னுக்கு அஞ்சி வீடு வாசல்களைத் துறந்து ஓடினார்கள். அல்லாஹ்வின் அருளால் அவர்கள் காப்பாற்றப்பட்டு எதிரிகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.

கடல் கடந்து ஊரை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் எகிப்து செல்வார்கள் என்ற கருத்தில் தான் இவ்வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘எதிரிகள் வசித்த ஊரை, வீடுகளை உங்களுக்கு நான் காட்டுவேன். அங்கே உங்களைச் சேர்ப்பேன்’ என்று பொருள் கொள்வது தான் பொருத்தமாக உள்ளது.

7:137, 17:103,104, 44:23,28, 26:57-59 ஆகிய வசனங்களில் அவர்கள் மீண்டும் எகிப்தில் குடியேறியதாகக் கூறப்படுவது இக்கருத்தை வலுப்படுத்துகிறது.